அனுமனை போற்றும் வகையில் பக்தி பரவசத்தோடு அவருக்காக பாடப்பட்ட 40 பாடல்களையே நாம் அனுமன் சாலிசா என்கிறோம். இந்த பாடல்கள் அனைத்தும் அவாதி என்னும் மொழியில் துளசிதாசரால் பாடப்பட்டவை ஆகும். ராமசரிதமனசாவை விட இந்த பாடல்கள் சிறப்பானவை என்று கூறப்படுகிறது.
இதில் உள்ள நாற்பது பாடல்களும் தனி தனியாக ஒரு வரத்தினை நல்குகிறது. அனுமன் சாலிசா 40 பாடல்களின் தமிழாக்கம் இதோ..
(1)ஜெய ஹனுமானே! ஞானகுணக் கடலே!
உலகத்தின் ஒளியே வானரர் கோனே.
(2)ராமதூதனே! ஆற்றலின் வடிவமே!
அஞ்சனை மைந்தனே! வாயு புத்திரனே..
(3)மாபெரும் வீரனே! பெருந்திறல் வடிவே!
ஞானத்தை அருள்வாய், நன்மையை தருவாய்.
(4)தங்க மேனியனே, பட்டாடை அணிபவனே!
மின்னும் குண்டலமுடன் அலைமுடியும் கொண்டவனே.
(5)இடி,கொடிமிளிரும் கரங்கள் கொண்டோனே!
முஞ்சைப் பூணூல் தோ ளணிவோனே!
(6)சிவனின் அம்சமே ! கேசரி மகனே!
உனதொளி வீரத்தை உலகமே வணங்குமே!
(7)பேரறி வாளியே! நற்குண வாரியே!
ராமசேவைக்கென மகிழ்வுடன் பணிவோனே!
(8)உன் மனக் கோவிலில் ராமனின் வாசம்!
ராமனின் புகழை கேட்பது பரவசம்!
(9)நுண்ணிய உருவாய் அன்னைமுன் தோன்றினாய்!
கோர வுருவினில் இலங்கையை எரித்தாய்!
(10)அசுரரை அழித்த பெரும்பல சாலியே !
ராம காரியத்தை முடித்த மாருதியே !
(11)சஞ்சீவி கொணர்ந்தே இலக்குவனை எழுப்பிட விஞ்சிய அன்புடன் ராமனுனைத் தழுவினார்!
(12)ராமன் உன்னை பெரிதும் புகழ்ந்து
பரதனைப் போல நீ உடனுறை என்றார்!
(13)ஆயிரம் நாவுடை ஆதி சேஷனுன்
பெருமையைப் புகழ்வதாய் அணைத்தே சொன்னார்!
(14)சனகாதி முனிவரும் பிரம்மாதி தேவரும்
ஈசனும் நாரதர் கலைமகள் சேஷனும்
(15)எமன், குபேரன், திசைக் காவலரும், புலவரும்
உன் பெருமை தனை சொல்ல முடியுமோ?
(16)சுக்ரீவனுக்கு அரசை அளித்திட
ராமனின் நட்பால் உதவிகள் செய்தாய்!
(17)உன் அறிவுரையை வீடணன் கொண்டதால்
அரியணை அடைந்ததை இவ்வுலகு அறியும்!
(18)தொலைவினில் ஒளிரும் ஞாயிறைக் கண்டே
சுவைதரும் கனியெனப் பிடித்து விழுங்கினாய்!
(19)வாயினில் ராமனின் மோதிரம் கவ்வியே
ஆழியைக் கடந்ததில் வியப்பெதும் உண்டோ!
(20)உலகினில் முடியாக் காரியம் யாவையும்
நினதருளாலே முடிந்திடும் எளிதாய்!
(21)ராமராச்சியத்தின் வாயிற் காவலன்நீ!
நுழைந்திட வியலுமோ நின்னருள் இன்றி!
(22)உனைச் சரணடைந்தால் இன்பங்கள் நிச்சயம்!
காவலாய் நீவர ஏதிங்கு எமக்கு அச்சம்!
(23)நின்னால் மட்டுமே நின்திறல் அடங்கும்!
மூவுலகும் அதன் முன்னே நடுங்கும்!
(24)பூதப் பிசாசுகள் நெருங்கிட வருமோ!
மஹாவீர னுன் திருநாமம் சொல்வாரை!
(25)நோய்களும் அகலும் துன்பங்கள் விலகும்!
பலமிகு நின்திரு நாமம் சொல்லிட!
(26)தொல்லைகள் தொலைந்திட அனுமன் அருள்வான்!
மனம், வாக்கு, செயலால் தியானிப் பவர்க்கே!
(27)தவம்புரி பக்தர்க்கு வரங்கள் நல்கிடும்
ராமனின் பணிகளை நீயே செய்தாய்!
(28)வேண்டிடும் பக்தர்கள் ஆசைகள் நிறைவுறும்!
அழியாக் கனியாம் அனுபூதி பெறுவார்!
(29)நான்கு யுகங்களும் நின்புகழ் பாடிடும்!
நின்திரு நாமமே உலகினில் சிறந்திடும்!
(30)ஞானியர் நல்லோரைக் காப்பவன் நீயே!
தீயவை அழிப்பாய்! ராமனின் கனியே!
(31)எட்டு ஸித்திகளும் ஒன்பது செல்வங்களும்
கேட்டவர்க்கு அருள்வரம் சீதையுனக் களித்தார்!
(32)ராம பக்தியின் சாரமே நின்னிடம்!
என்றும் அவனது சேவகன் நீயே!
(33)நின்னைப் பற்றியே ராமனை அடைவார்!
தொடர்வரும் பிறவித் துன்பம் துடைப்பார்!
(34)வாழ்வின் முடிவினில் ராமனடி சேர்வார்!
ஹரியின் பக்தராய்ப் பெருமைகள் பெறுவார்!
(35)மறுதெய்வம் மனதில் நினையா பக்தரும் அனுமனைத் துதித்தே அனைத்தின்பம் பெறுவார்!
(36)துன்பங்கள் தொலையும் துயரங்கள் தீர்ந்திடும்!
வல்லிய அனுமனை தியானிப் பவர்க்கே!
(37)ஆஞ்ச நேயனே! வெற்றி! வெற்றி! வெற்றி!
விஞ்சிடும் குருவே! எமக்கருள் புரிவாய்!
(38)நூறுமுறை இதைத் துதிப்பவர் எவரோ
அவர் தளை நீங்கியே ஆனந்தம் அடைவார்!
(39)அனுமனின் நாற்பதைப் படிப்பவர் எல்லாம்
சிவனருள் பெற்றே ஸித்திகள் அடைவார்!
(40)அடியவன் துளஸீ தாஸன் வேண்டுவான்
அனைவர் உள்ளிலும் திருமால் உறையவே!
இந்து மதத்தை சார்ந்த பலரும் தற்போது தினம்தோறும் ஹனுமான் சாலிசா பாடலை துதிக்க துவங்கி உள்ளனர். தினம் தோறும் துதிக்க முடியாதவர்கள் அனுமனுக்கு உகந்த நாளான செவ்வாய் கிழமைகளில் துதிக்கின்றனர். இதை ஜெபிக்கும் பக்தர்கள் அனுமன் மீது எந்த அளவிற்கு பக்தியை கொண்டுள்ளனரோ அந்த அளவிற்கு அவர்களுக்கு பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
அனுமனை போற்றும் எத்தனையோ பாடல்களும் மந்திரங்களும் இருந்தாலும் அனுமன் சாலிசா தான் மிகவும் சக்தி மிக்கதாக கருதப்படுகிறது.
இந்த பாடல்கள் உருவானதற்கு பின்பு ஒரு அற்புதமான வரலாறும் உள்ளது..
டெல்லியை முகலாயர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்தபோது துளசிதாசரை மன்னர் ஔரங்கசீப் சந்தித்தார். அப்போது துளசிதாசர் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் புகழை மன்னர் ஒளரங்கசீப்பிடம் கூறியுள்ளார்.
அதோடு ராம தரிசனம் குறித்தும் அவர் பல தகவல்களை கூறியுள்ளார். இதனை கேட்ட மன்னன் ஔரங்கசீப், ராமனை தனக்கு தரிசனம் தர வழி செய்யும்படி துளசிதாசரிடம் கேட்டுள்ளார். அதற்கு துளசிதாசர், உண்மையான பக்தியை வெளிப்படுத்தினால் மட்டுமே ஒருவருக்கு ராமதரிசனம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
அதை ஒப்புக்கொள்ளாத மன்னன் ஔரங்கசீப், துளசிதாசரை சிறையில் இட்டான்.
சிறையில் இருந்தபடியே துளசிதாசர் அனுமன் சாலிசா என்னும் இந்த 40 பாடலையும் எழுதி அதை ஜபிக்க துவங்கியுள்ளார்.
உடனே டெல்லி நகரம் முழுக்க குரங்குகள் சூழ்ந்தன. மக்களாலும் மன்னனாலும் குரங்குகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த முடியவில்லையாம். சிறையில் இருக்கும் துளசிதாசரிடம் இது குறித்து மன்னன் உரையாடியுள்ளான். அப்போது துளசிதாசர், இது வானர படைகளின் ஒரு சிறு பகுதியே. படை முழுவதும் வந்த பிறகு ராமன் வருவார் உமக்கு தரிசனம் தருவார் என்றாராம்.
இதை கேட்டு அதிர்ந்த மன்னன் ஔரங்கசீப் தன் தவறினை உணர்ந்து துளசிதாசரை விடுவித்ததாகவும், உடனே குரங்குகள் அனைத்தும் அங்கிருந்து சென்றன எனவும் கூறுகின்றனர்.
துளசிதாசர் (கிபி.1532}1623) நாற்பது பாக்களைக் கொண்டு “அனுமன் சாலிசா’ எழுதியபோது அந்தப் புத்தகம் இந்து மதத்தின் மிக முக்கிய நூலாக விளங்கும் என்று நினைத்திருக்க மாட்டார். இன்று அனுமனை வணங்க, இந்திய மக்கள் இனம், மொழி, எல்லைகள் கடந்து, சமூக மற்றும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் மறந்து அனுமன் சாலிசாவைப் பல மொழிகளில் படிக்கின்றனர்.
இந்து மக்கள் அனைவராலும் ஏற்கப்பட்ட அவரது பாடல்கள் பெரும்பாலானவை அவர் ஒளரங்கசீப்பின் சிறைச்சாலையில் இருக்கும் பொழுது எழுதப்பட்டது.
**வாசகர் பகிர்ந்து**