அரசாங்க பண பரிவர்த்தனைகளில் தனியார் வங்கிகளுக்கு அனுமதியளிப்பது நல்லதா?

மத்திய அரசு அண்மையில் அதிரடியாக அரசு துறை சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு தனியார் வங்கிகளுக்கு இருந்து வந்த தடையை நீக்கியுள்ளது. அரசு பரிவர்த்தனையில் தனியார் வங்கிகளுக்கு அனுமதிப்பது, அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளின் முக்கியத்துவத்தை குறைப்பதாகும் என்று ஒரு தரப்பினர் குறை கூறினாலும், வங்கித்துறையில் அனைத்து வங்கிகளுக்கும் சமமான வாய்ப்பு இதன் மூலம் உருவாகியுள்ளது. ஓய்வூதியம், பல்வேறு திட்டங்களின் மானியம் போன்றவை மக்களுக்கு வழங்கும் சேவை மேலும் தரமடையும் என்ற வலுவான வாதம் முன்வைக்கப்படுகிறது.

1955 ஆம் ஆண்டில், அரசுக்கு சொந்தமான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உருவானதிலிருந்து தேசியமயமாக்கப்பட்ட முதல் வங்கி சிறந்த பொதுத்துறை வங்கியாக இருந்தும் வருகிறது.

1969 ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் 14 தனியார் வங்கிகள் மொத்தமாக தேசிய மயமாக்கப்பட்டது. இதனால் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.

ஆனாலும் பொதுத்துறை வங்கிகளின் சேவையை பெருவது என்பது சாமானியர்களுக்கு குதிரைக் கொம்பாகவே இருந்தது. வங்கிப்பணியாளர்கள் வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ளும் முறையும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தது.

தாரளமயமாக்கலுக்கு பின்னர் வெளிநாட்டு தனியார் வங்கிகள் நம் நாட்டிற்குள் வந்தன. காலை முதல் இரவு வரை வங்கி இயங்கியது, தேடிச் சென்று வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வது என்று புதிய அனுபவத்தை அந்த வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளித்தன. இதற்கு பொதுமக்களுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, உள்நாட்டைச் சேர்ந்த தனியார் வங்கிகளும் வாடிக்கையாளர்களை ஈர்க்கத் தொடங்கின. இதைத்தொடர்ந்தே அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படத்தொடங்கியது.

அரசாங்க வணிகத்தை தனியார் வங்கிகளுடன் இணைப்பது குறித்த முயற்சி 2012ஆம் ஆண்டில் மின்னல் வேகத்தில் வந்தும் போனது.
2012இல் கைவிடப்பட்ட அந்த திட்டத்தை தான் இப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் அறிவித்துள்ளார்.

அனைத்து வங்கிகளுக்கும் சரிசமமான உரிமை என்ற அவருடைய கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதே. இதனால் வங்கி கணக்குகளில் ஏற்படும் குளறுபடிகள் குறையும். வங்கிகள் கட்டுப்பாட்டுடன் இயங்கக்கூடும் என்பதால் மக்களுக்கு பல நன்மைகளை அளிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்பு பணியாளர்கள் ஓய்வு ஊதியம், அரசு ஊழியர்கள் பென்ஷன் தொடர்புடைய ஓய்வு ஊதியம், கேஸ் மானியம், வருமானவரி செலுத்துதல், திரும்ப பெறுதல் போன்ற பணிகளில் தனியார் வங்கிகள் பங்களிப்போடு சிறந்த சேவையை அளிக்க முடியும். தற்போது மனிதசக்தியைவிட தொழில்நுட்பத்தை தான் நாம் அதிகம் நம்பி இருக்கிறோம். இதனை பொதுத்துறையுடன் இணைந்து தனியார் துறையும் செய்யும்போது மக்களுக்கு இன்னும் பலனளிக்கிறது. மேலும் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளின் பணிச்சுமையும் ஓரளவிற்கு குறையும் வாய்ப்புள்ளது.

தனியார் வங்கிகளின் சேவைகளில் குறைபாடு ஏற்பட்டால், ஒப்பந்தம் கைவிட்டு போகும் என்று அஞ்சி மக்களுக்கு சிறந்த சேவையை அவை அளிக்கும்.
மாற்றம் ஒன்றே மாறாதது. எனவே மத்திய அரசின், இந்த தைரியமான நடவடிக்கை, அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைய வாய்ப்பாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here