அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு! -சத்குரு ஜக்கி வாசுதேவ் அறைகூவல்

[responsivevoice_button voice=”Tamil Female” buttontext=”இந்த செய்தியை கேளுங்கள்”]

கோவை ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி விழா நடந்தது. இதில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசியதாவது:

தமிழ் மண், தமிழ் கலாச்சாரம், தமிழிசை, தமிழ் நாட்டியம், தமிழ் கலை, தமிழ் மொழி என்று எதை எடுத்தாலும் பக்தி உண்டு. பக்தியில்லாமல் தமிழ் கலாச்சாரம் இல்லை. குழந்தை பிறந்தாலும் பக்தி, காது குத்தினாலும் பக்தி, வாழ்ந்தாலும், திருமணம் நடந்தாலும், இறந்தாலும் பக்தி என பக்தியிலேயே ஊறி வளர்ந்துள்ளது தமிழ்நாடு. குறிப்பாக தமிழ்நாடு பக்தியால் உருவானது. நம் நாட்டின் கலச்சாரம், பல ஆயிரம் வருடங்களாக மிகவும் வளமான கலாச்சாரமாக வளர்ந்து வந்துள்ளது. மற்ற நாடுகள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு வளமான கலாச்சாரம் உருவாக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டின் வடபகுதிக்கு வந்த படையெடுப்பின் அளவிற்கு தென் மாநிலங்கள் படையெடுப்புகளை சந்திக்கவில்லை. இங்கு சேர, சோழ, பாண்டியர்கள், பல்லவர்கள் பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்கள். அவர்கள் அனைவரும் அடிப்படையில் பக்தர்களாகவே இருந்துள்ளனர். இந்த நாட்டின் வரலாறு வெறும் அரசர்கள் பெயரை வைத்து மட்டும் எழுதப்படவில்லை. நாயன்மார்கள், ஆழ்வார்கள், ஔவையார், பூசலார் போன்ற ஞானிகளின் வரலாற்றை வைத்தே எழுதப்பட்டுள்ளது.

பக்தி தான் நம் மூலம். தமிழகத்தின் இதயமாக இருந்ததும் பக்தி தான். அதனால் தான் இங்கு அற்புதமான ஆலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயங்கள் வெறும் வழிபாட்டு தலங்களாக மட்டும் உருவாக்கப்படவில்லை. மனிதன் உயிர்ப்போடு பக்தி என்ற சாதனத்தோடு வாழ உதவும் மையங்களாக விளங்கின. மனச்சோர்வு இல்லாமல் வாழ்வதற்கு வழி பக்தனாக வாழ்வது. பக்தி தான் மனிதனை உயிர்ப்போடு வாழ உதவுகிறது.

பக்தி மணக்கிற நாடாக இந்த நாடு இருந்திருக்கிறது. பக்தி பிரவாகம் எடுத்து பொங்கியதால் இசை, கலை, நாட்டியம், கைவிணைப்பொருட்கள் அனைத்தும் வந்தன.

இந்த நாட்டின் வளம் மற்ற நாட்டவர்களால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு இருந்தது. கடற்கரையும், சுற்றுலாத்தலங்களை தேடியும், அன்போடும் ஐரோப்பியர்கள் இங்கு வரவில்லை. இந்த தேசத்தின் பொருளாதார வளம் அவர்களை ஈர்த்தது. ஆனால் நாம் பொருளாதார வளத்தை பெரிதாக நினைக்கவில்லை. மனிதனின் உண்மையான நல வாழ்வு எது என்று பார்த்து, அவற்றில் தான் இந்த நாடு கவனம் செலுத்தியது.

ஐரோப்பாவிலிருந்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு தொடர்ந்து நம் பாரதத்தை நோக்கி வந்து கொண்டிருந்தன. 2 ஆயிரம் ஆண்டிற்கு முன்பு ரோம், கிரேக்கநாட்டு கப்பல்கள் நம் நாட்டில் மிளகு வாங்குவதற்காக வந்தன. உப்புசப்பில்லாத சாப்பாட்டை சாப்பிட்ட ஐரோப்பியர்கள், காரசாரமான சாப்பாடு சாப்பிடுவதற்காக வந்தனர். மிளகை நாடி அவர்கள் அடுத்தடுத்து வந்தனர். மிளகு மற்றும் ஆடைகள் வாங்க அவர்களுடைய பெரும் சொத்து இந்தியாவிற்கு செல்கின்றது என்று ஐரோப்பாவில் புகார் கூறும் அளவிற்கு இந்திய வணிகம் நடந்தது.

நம் நாட்டு மக்கள் குடிசையில் வாழ்ந்தாலும் மக்கள் மகத்தான கோயில்களை கட்டினார்கள். ஆயிரம் ஆண்டிற்கு முன்பு போக்குவரத்து வசதியில்லாத காலத்தில் கூட, அற்புதமான கோயில்களை கட்டியுள்ளனர். பக்தர்கள் என்றால் தங்கள் நலனை பெரிதாக கருதாதவர்கள்.

கோயில்களைப்பற்றி பேசத்தொடங்கினாலே பல விவாதங்கள் நடக்கின்றன. சிலர் எதிர்மறையாக பேசத்தொடங்குகிறார்கள். நான் கோயில் என்றாலே சிலர், வருமானம் என்கின்றனர். ஒருவகையில் பார்த்தால் இது பொருத்தம் தான். வெள்ளைக்காரர்கள் வருவாய்த்துறை கீழ் தான் வெள்ளையர்கள் நம் கோயில்களைக் கொண்டு வந்தனர். நம் கோயில்கள் ஆங்கிலேயே அரசின் கீழ் இருந்ததில்லை. கிழக்கிந்திய கம்பெனி என்ற நிறுவனத்தின் கீழ் இருந்தது. இப்போதும் நாம் அதையே செய்து கொண்டிருக்கிறோம். கோயில் என்றால் வருமானம் என்கின்றனர்.

அம்மா, மனைவி, குழந்தைகள் என்று பேசினால் வருமானம் என்று யாரும் சிந்திப்பதில்லை. அப்போதெல்லாம் வராத சிந்தனை கோயில் என்றபோது மட்டும் வருகிறது என்றால் இது வெட்கப்பட வேண்டிய விஷயம். 1817 ம்ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி வருவாய்த்துறையின் கீழ் கோயில்களை கொண்டு வந்தனர். அதன் பிறகு இங்கிலாந்தின் கிருஸ்தவ மிஷனரிகள், நம் தெய்வங்கள் மீது நம்பிக்கையில்லாததால், கோயில்களை நிர்வகிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள். கோயில்களில் கொட்டிக்கிடக்கும் தங்கத்தை பார்த்து அவற்றை விட்டுவிட கிழக்கிந்திய கம்பெனிக்கு மனமில்லை. கிருஸ்தவ மிஷனரிகளின் எதிர்ப்பால், அரைமனதாக திரும்ப கொடுத்தனர். இப்போது பக்தர்கள் கையில் கோயிலை ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டால், மசூதி, சர்ச்,சமணர், ஜெயின் கோயில்களை அரசு எடுக்கக்கூடாதா என்று கேட்கின்றனர். நிச்சயம் எடுக்கக்கூடாது. ஒரு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. இதை தீர்க்க வேண்டுமே தவிர அநீதிகளை பெருக்கிக் கொண்டிருக்கக்கூடாது. எந்த வழிபாட்டு த்தலத்திலும் கைவைக்க அரசுக்கு உரிமை இல்லை. இந்த நாட்டின் 87 சதவீத மக்களின் கோயில்கள் அரசின் கையில் இருக்கின்றன. எ

கோயில்களை அரசின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று நான் கோருவது, மனிதர்களின் அடிப்படை உரிமை குறித்து தான். மதச்சார்பற்ற தன்மை குறித்து பேசுகிறேன். உண்மையான மதச்சார்பின்மை என்றால், அரசு மதவிஷயங்களை கையாளக்கூடாது, மதம் அரசு விஷயங்களில் தலையிடக்கூடாது. இது தான் உண்மையான மதச்சார்பின்மை என்பதை நான் அழுத்தமாக நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

கோயில்களை உருவாக்குவது, பிரதிர்ஷ்டடை என்பது நுட்பமான தன்மையில் நடக்கக்கூடியது. நம் ஆலயங்களை அகஸ்தியர், பதஞ்சலி போன்ற ஞானிகள், முனிவர்கள்பிரதிர்ஷ்டை செய்திருக்கின்றனர். நாயன்மார்கள் ஆழ்வார்கள் பாடல் பெற்ற ஸ்தலங்கள் உள்ளன. கோயில்கள் சக்தி மையங்கள் உள்ளன. பிரபஞ்சத்தை பார்ப்பதற்கான சாதனங்கள்.

தமிழகத்திலும், ஆந்திராவிலும் பஞ்ச பூதங்களுக்கு 5 ஸ்தலங்கள் உள்ளன. இந்த கோயில்களை அரசுகள் நிர்வாகம் செய்கின்றன. நான் ஒரு அதில் ஒரு கோயிலுக்கு சென்றிருந்தேன். அங்கு நிர்வாகத்தில் இருந்தவர்களிடம், பஞ்ச பூத ஸ்தலங்களுக்கும் தொடர்பு இருக்கிறதே தெரியுமா என்று கேட்டேன். அங்கு நிர்வாகத்தில் இருந்தவர், அப்படியெல்லாம் இல்லை, 5 கோயில்களும் தனித்தனி நிர்வாகத்தில் உள்ளன என்றனர்.

பஞ்ச பூத ஸ்தலங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புக்கொண்டுள்ளவை என்பது கூட அக்கோயில் நிர்வாகிகளுக்கு தெரியவில்லை.
பஞ்ச பூதஸ்தலங்களை தனித்தனியாக கையாளுவது என்பது சரியானதல்ல. ஒரு விளக்குமாறை எடுத்து கோயிலை சுத்தம் செய்துவிட்டால், அது கோயிலை நிர்வகிப்பது என்று எண்ணுகின்றனர். அல்லது
இரண்டு கால பூஜை நடந்துவிட்டால் கோயில் நிர்வாகம் நடந்துவிடுகிறது என்று நினைக்கிறார்கள். அது தவறு.

கோயில்களை அரசின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று நான் சொன்னால், நான் அரசியலில் ஆர்வம் காட்டுகிறேனா, வருமானத்தில் ஆர்வம் காட்டுகிறேனா என்று கேள்வி எழுப்புகின்றனர். கோயில்களில் அரசே வேண்டாம் என்று சொல்லும்போது, அங்கு அரசியலை எதற்காக நான் பார்க்கப்போகிறேன்?

இந்த நாட்டை வளமாக்குவதற்கும், பண்பாடு வளர்ப்பதற்கும், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் உருவாக்கிய இந்த கோயில்களின் நிலையை பார்த்து என் இதயத்தில் ரத்தம் வடிகிறது. அதனால் இந்த குரலை நான் எழுப்பியுள்ளேன்.

கோயில்களை காக்க வேண்டும் என்று இங்கு ஆயிரக்கணக்கானவர்கள் பதாகைகளை ஏந்தி காண்ப்பித்திருக்கிறார்கள். ஆனால் நாங்கள் போராளிகள் இல்லை. போராட்டம், ரோடு மறியல், ரயில்மறியல் செய்யக்கூடியவர்கள் இல்லை. இந்த நாடு ஒரு மிகப்பெரிய பண்பாட்டை தன்னிடம் கொண்டிருக்கிறது. அதற்கு இடையில் ஒரு மிகப்பெரிய சரிவு வந்திருக்கிறது. அதை சரி செய்ய வேண்டும்.

இந்த மாநிலம் தேர்தலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் மக்களின் இந்த கோரிக்கையை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

கோயில்களை பற்றி நான் பேசும் போது, ஏன் ஏழைகளுக்கு சாப்பாடு போடலாமே என்று கேட்கின்றனர். உண்மைதான், ஏழைகள் எவ்வளவோ பேர் இன்னும் பசியோடு இருக்கின்றனர். ஏன் பசியோடு இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்புவது மிக முக்கியம். 200 ஆண்டுகளுக்கு முன்பு வளமான நாடாக இருந்த இந்த நாடு, சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கு பிறகும் வளம் குறைந்து காணப்படுகிறதே, ஏன் என்று யோசித்தால் விடை கிடைக்கும்.

இந்தியர்களின் உயிர்ப்புத்தன்மை உடைந்துவிட்டது. எங்கே மனிதர்கள் உயிர்ப்போடு இருக்கின்றார்களோ, அங்கே வளம் இருக்கும், வளர்ச்சி இருக்கும். வாழ்க்கை இருக்கும், வெறுமனே பாலங்கள் அமைப்பதும், ரோடுகள் போடுவது மட்டுமே நாட்டை வளமுடையதாக்கிவிடாது.
எனவே தமிழக மக்கள் உயிர்ப்புத்தன்மையுடன் இருப்பதற்காக தமிழகத்தில் கோயில்களை மீட்க வேண்டும் என்றும், கோயில் அடிமையை நிறுத்து என்ற இயக்கம் இப்போது முன்னெடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார். மகாசிவராத்திரி விழாவில் லட்சக்கணக்கானோர் நேரிலும், நேரலையிலும் பங்கேற்றனர்.

1 COMMENT

  1. அருமையான அர்த்தம் உள்ள உரை. இதை ஹிந்து மக்கள் உணர்வார்கள்.காரணம் சொல்லுபவர் சமய தலைவர்,சமுதாய வழிகாட்டி.
    அவரது எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் நமது ஹிந்து உணர்வினை தேர்தலில் ஹிந்து ஆதரவாளர்களுக்கு வாக்களித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here