ஆதரவிழக்கும் விவசாயிகள் போராட்டம்!அதிரடி முடிவெடுக்குமா அரசு?

124

ஆதரவிழக்கும் விவசாயிகள் போராட்டம்!அதிரடி முடிவெடுக்குமா அரசு?

குடியரசு தினத்தன்று டில்லியில் நடந்த டிராக்டர் முற்றுகை போராட்டம், தேசத்திற்கு மிகப்பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தியதுடன், போராட்டக்காரர்களின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியது. அதுவரை விவசாயிகள் போராட்டம் என்று கருதி ஆதரவு அளித்து வந்த பொதுமக்கள், போரட்டக்காரர்களுக்கு எதிராக முணுமுணுக்க துவங்கினர். பின்னர் இந்த முணுமுணுப்பு போராட்டக்காரர்கள் மீது அதிருப்தியமாக மாறியது. போராட்டத்தால் மாதக்கணக்கில் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் தெருவில் இறங்கி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.

நிலமை மாறத்தொடங்கியதும், போராட்டக்களத்திலிருந்து அணிஅணியாய் பலர் வெளியேறத்தொடங்கினர்.  விவசாய யூனியன் சங்கத் தலைவரும், போராட்டத்தை ஒருங்கிணைப்பவருமான ராகேஷ் திகாயத் புலி வாலை புடித்த கதையாக சிக்கித் திணறி வருகிறார். ஆனாலும், போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்று இவர் எடுத்து வரும் முயற்சிகள் மேலும் மேலும் தோல்வியையும், பொதுமக்களிடம் வெறுப்பையும் அளித்து வருகிறது.
மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால், பயிர்களை அழித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என்று மிரட்டல்விடுத்தார். இதன் மூலம் நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படுத்த தங்களால் முடியும் என்று மத்திய அரசை அச்சுறுத்துவதே இவரது நோக்கம். 

சில நாட்களுக்கு பிறகு, ஹரியானாவின் ஜிந்த்தில் உள்ள சில விவசாயிகளும் உத்தர பிரதேசத்தின் சில கிராமங்களில் உள்ள விவசாயிகளும் அவர்களுடைய பயிரை பிடுங்கி நாசம் செய்தனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழவே,  உடனே திகாயத், போராட்டத்துக்கு ஒரு முடிவு கிடைக்காத வரை இப்படி நடந்துக்கொள்ள வேண்டாம் என கூறி நிலமையை சமாளிக்க முயன்றார்.

 இங்கே எந்த போராட்டம் வெற்றிப்பெற வேண்டும், தோல்வியடைய வேண்டும் என்பதை ஒரு தரப்பே முடிவு செய்கிறது.
காசுக்காக மீடியாக்கள் கூட, கொஞ்சம் விஷயங்களை மட்டுமே தெரிந்துக்கொண்டு மத்திய அரசை மட்டம் தட்டினால் டி.ஆர்.பி எகிறும் என்ற பார்முலாவை வைத்துக்கொண்டு செயல்பட்டது, ஆனால் இப்போது மீடியாவும் ஆர்வத்தை இழந்துள்ளது. நகரத்தில் உள்ளவர்களுக்கு, தங்கள் வேலையை பார்க்கவே நேரம் சரியாக இருப்பதால், இந்த மாதிரியான செய்திகளில் தொடர்ந்து ஆர்வம் காட்டவில்லை.

இதனால் இந்த போராட்டம் வலுவிழந்து உள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போராட்டத்தின் நோக்கம் என்னவென தெரியாமல் போராடும்போது இப்படி தான் ஏற்படும் என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். அதோடு குடியரசு தினத்தை இலக்காக வைத்தே டிராக்டர் பேரணி நடந்திருப்பதாகவும், போராட்ட நோக்கத்துக்காக  நடைபெறவில்லை எனவும் தெரியவருகிறது. வரம்பு மீறி நடந்துக்கொண்டதால், சாதாரண குடிமக்களின் வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து கிடைத்த அனுதாபத்தையும் தற்போது இவர்கள் இழந்துள்ளனர்.

அதனால் தான் போராட்டக்குழுவினர், தங்களின் பயிர்களை சேதப்படுத்தி, அதன் மூலமாக அனுதாபத்தை பெற முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது போன்று செய்து வீடியோக்கள் வெளியிடும்போது, நிச்சயமாக அது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் நிரூபணமாகியுள்ளது. இது, முகம் பார்க்க அழகாக இல்லை என்பதற்காக, தன்னுடைய மூக்கையே வெட்டிக்கொள்வது போன்றது.

 இப்போராட்டங்களால் பணக்கார விவசாயிகளுக்கு கொஞ்சம் கூட பாதிப்பு ஏற்பட போவது இல்லை. சட்டம் நடைமுறைக்கு வந்தால் அளவுக்கதிகமாக வருவாய் ஈட்ட முடியாது என்று இடைத்தரகர்களும், சில பணக்கார விவசாயிகளும் கருதுவது தான் இந்த போராட்டத்தின் பின்னணி என்கின்றனர் வல்லுனர்கள்.
அண்மையில் நடந்த நிதி ஆயோக், மாநில வேளாண் அமைச்சர்களுடனான மாநாட்டில், எந்த மாநிலமும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையில், வேளாண் சட்டங்களை குறித்து, மாநில அதிகாரிகளுடனும், தனியார் மண்டி உரிமையாளர்களுடனும், மாநிலம் முழுவதிலும் உள்ள விவசாய சங்கங்களுடனும், எதிர்கட்சிகளுடனும் உச்ச நீதிமன்றம் அமைத்த குழு ஆலோசனை செய்துள்ளது. இது தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் முன்பு, போராட்டம் நடத்தும் சங்கங்கள் உட்பட  160 சங்கங்களை சந்திக்க திட்டமிட்டுள்ளது. 

இந்த குழு, தன்னுடைய பொறுப்பை அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு அறிந்திருக்கிறது என்பதை நம்புவோம். வேளாண் சட்டங்களில் எந்தவிதமான மாறுதல்களை கொண்டு வந்தால், விவசாயிகளுக்கு இன்னும் நன்மைகள் கிடைக்கும் என்பதை இக்குழு பரிந்துரைக்கலாம். இல்லையெனில், இதில் காணப்படும் உண்மையான குறைகளை விளக்கி அந்த குறைகளை சரி செய்யவும் கோரலாம்.

தற்போது, போராட்டம் வலுவிழந்து உள்ள நிலையில், டெல்லியை இனிமேலும் முற்றுகையிட்டு மற்றவர்களின் வாழ்க்கை சுழற்சியை பாதிப்பதை தடுத்து, போராட்டக்காரர்கள் ஊர் திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக  பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரின் மூலம் பேச்சு வார்த்தை உள்ளிட்ட எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்க வேண்டும்.

உண்மையாகவே, பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகளுக்கு இச்சட்டம் எதிரானது அல்ல. இது ஒட்டுமொத்த நாட்டில் இருக்கும் விவசாயிகளுக்கு நன்மையை அளிக்கவே கொண்டுவரப்படுகிறது. பசுமை புரட்சி கிழக்கு பகுதி (கிழக்கு உத்தர பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்காளம், ஒடிசாவில்) மற்றும் இந்தியாவின் மத்திய பகுதிக்கு (மத்திய பிரதேசம், சட்டிஸ்கார் போன்ற மாநிலங்கள் நோக்கி) நகர்ந்துள்ளது. அரிசி மற்றும் கோதுமை உற்பத்தியின் எதிர்காலத்தை இந்த மாநிலங்களே சார்ந்துள்ளது. இதனால் தான் பஞ்சாப் போன்ற மாநிலங்களின் பணக்கார விவசாயிகளை இது அச்சுறுத்துகிறது.

நரேந்திர மோடி, போராட்டக்காரர்களுக்கு எதிராக ஒரு சில விவேகமான அரசியல் முடிவை எடுக்க வேண்டிய நேரமிது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

Source : Swarajya

0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here