ஆன்லைன் செயலிகள் மூலம் கடன் பெற வேண்டாம் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை.

25
RBI

சென்னை:-

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பழையனுார் சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் விவேக் (27). இவர் மாமண்டூரில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். தனது தந்தையின் மருத்துவ செலவுக்காக GET RUPEE DOT COM என்ற ஆன்லைன் செயலியில் நான்காயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். 

இந்தக் கடனுக்கு 300 ரூபாய் வட்டி சேர்த்து நான்காயிரத்து 300 ரூபாய் அவர் செலுத்த வேண்டும்; ஆனால் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதமாகியுள்ளது.

அதனால், கடன் கொடுத்த செயலியில் இருந்து, விவேக்கின் நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதில், விவேக் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றும், கடனைத் திருப்பிச் செலுத்தாவிடில் விவேக் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு ஆளாக வேண்டி வரும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. 

அதோடு, இந்த நபர் உங்கள் செல்போன் எண்ணை வைத்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைப் பார்த்த நண்பர்கள், விவேக்கை அழைத்து விசாரித்துள்ளனர். இதனால் அவமானமடைந்த விவேக், பழையனூர் சாலை கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனையடுத்து ஆன்லைன் செயலிகளை தடை செய்ய வேண்டும் என்றும் அவற்றிற்கெதிராக நடவடிக்கை எடுக்கும் படியும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அங்கிகரிக்கப்படாத ஆன்லைன் செயலிகள் மூலம் கடன் பெற வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

தனிநபர்கள் அல்லது சிறு வணிகங்கள் விரைவாக கடன்களைப் பெறுவதற்காக அங்கீகரிக்கப்படாத டிஜிட்டல் கடன் தளங்கள் / மொபைல் செயலிகளில் கடன் பெறுகின்றனர். அவ்வாறு கடன் வாங்குவோர்களில் சிலர், அதிக வட்டி தொந்தரவு, மறைக்கப்பட்ட பிற கட்டணங்கள் போன்ற தொந்தரவிற்கு பலியாகின்றனர்.

மேலும், பல அங்கிகரிக்கப்படாத செயலிகளில் பதிவேற்றப்படும் வாடிக்கையாளர்களின் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுகின்றது. இதுபோன்ற தவறுகளை தடுக்க, ரிசர்வ் வங்கியிடம் முறையான அனுமதி பெற்று இயங்கும் செயலிகளில் மட்டுமே கடன் பெற வேண்டும். 

அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கடன் வாங்குவது சட்டத்திற்கு புறம்பானது என்றும் அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் செயலிகள் மீது https://sachet.rbi.org.in/ லிங்க் மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஆன்லைன் செயலி மூலம் கடன் வழங்கி வாடிக்கையாளர்களை சட்டவிரோதமாக மிரட்டிய செயலிகளுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவின் பெங்களூரு நகர இணை ஆணையர் சந்தீப் பட்டீல் தெரிவித்தார்.

இதுகுறித்து இணை ஆணையர் சந்தீப் பட்டீல் கூறுகையில்,

ஆன்லைன் மூலம் அதிக வட்டிக்கு கடன் வழங்கி, அதை திரும்ப பெறுவதற்காக சட்டத்திற்கு விரோதமாக வாடிக்கையாளர்களை மிரட்டி பணத்தை பெறும் செயலிகள் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அந்த செயலியில் பதிவேற்றப்படும் வாடிக்கையாளர்களின் புகைப்படம் மற்றும் தகவல்கள் தவறான முறையில் பயன்படுத்தி உள்ளார்கள் எனத் தெரிவித்தார்.

0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here