பதிவு சுருக்கம்:
- ஜிஎஸ்டி என்ற ஒருங்கிணைந்த வரி விதிப்பு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான ஒன்று.
- கொரோனா தடுப்பு மருந்துகளுக்கான வரி விலக்கு விலையை அதிகரிக்குமே தவிர குறைக்காது.
- திமுக சிறிய மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் குறைந்த வாய்ப்பும் பெரிய மாநிலங்களுக்கு அதிக வாய்ப்பும் கொடுக்க வேண்டும் என சொல்வது எப்படி நியாயமாகும்?
ஒரு அரசு தன் மக்களுக்கான கட்டமைப்பை உருவாக்க, நிர்வகிக்க விதிக்கப்படுவதே வரிகள். நேரடி மற்றும் மறைமுக வரிகள் ஆகிய இருவகை வரிகளில், நிதி சுமையை அனைத்து மக்களும் பகிர்வது மறைமுக வரியிலிருந்து மட்டுமே. நேரடி வரிகளின் மூலம் குறைந்த அளவு மக்களே பங்களிக்க முடியும். இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் மறைமுக வரி விதிப்பே நடைமுறை சாத்தியம். அரசு இயந்திரம் மக்களின் பொது நலனிற்காக தான் வரிவிதிப்பை செய்து கட்டமைப்பை சீரமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. அதற்குண்டான வரி கட்டமைப்பை, யாரும் மீறாத வண்ணம் திட்டமிடுவது அரசின் கடமை.பொருளாதாரம் என்பது எவ்வளவு வருவாய்?, எவ்வளவு செலவு? சேமிப்பு எவ்வளவு? அதன் மூலம் உருவாக்கிய சொத்துக்கள் அல்லது கட்டமைப்புகள் என்ன என்பதை திட்டமிட்டு செயல்படுத்துவதே அரசின் கடமை.
சுதந்திர இந்தியாவில் பல்வேறு வரிவிதிப்புகள் இருந்திருந்தாலும், விற்பனை வரி உட்பட அனைத்துமே ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபட்டே இருந்தன. மத்திய கலால் வரி, நுழைவு வரி, மறுவிற்பனை வரி என்ற ரீதியில் பல்வேறு வரிகளை நாம் கொண்டிருந்தோம்.உலக தாராளமயமாக்கல் கொள்கையின் உள்ளே இந்தியா நுழைந்த பின்னர், மிக பெரிய மாற்றத்தை நாம் எதிர்பார்த்தோம். இயற்கை வளங்களும், மனிதவளங்களும் இந்தியாவில் மிக அதிகமாக இருந்தும், நிதி முதலீடு இல்லாத காரணத்தால் தொழில் துறை முன்னேற்றமடையாத நிலை நீடித்தது. அதனால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது. பல்வேறு நாடுகள் இந்தியாவின் மனித வளத்தை பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்று எண்ணிய போதிலும், தொழில் தொடங்க, தொடர, முன்னேற்ற இந்தியாவின் வர்த்தக சூழ்நிலை, கொள்கை இடம் கொடுக்கவில்லை. இதனாலேயே மேலை நாடுகள் இந்தியாவில் தொழில் தொடங்க தயங்கின.
மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் வரிவிதிப்பை நீக்கி, ஒரே வரியை அமல்படுத்தி நாடு முழுதும் வரி சீர்திருத்தத்தை கொண்டு வரவேண்டும் என 2000 ம் ஆண்டு அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் முடிவெடுத்ததன் அடிப்படையில் அன்றைய மேற்கு வங்காள நிதியமைச்சர் அசிம் தாஸ் குப்தா அவர்களின் தலைமையில் பொருள் மற்றும் சேவை வரிக்கான குழு(GST) அமைக்கப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றத்தையடுத்து வந்த காங்கிரசின் பத்து வருட ஆட்சியில் ஜி எஸ் டி யை அமல்படுத்த முடியவில்லை.
ஆனால், பல்வேறு சவால்களோடு துணிவோடு 2017 ம் ஆண்டு பொருள் மற்றும் சேவை வரியை அமல்படுத்தியது பாஜக ஆட்சி. “ஒரே நாடு ஒரே வரி” என்ற முழக்கத்தோடு தொடங்கிய நிலையில், பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ‘ஒரே நாடு ஒரே வரி’ என்பது அனைத்து மக்களுக்கும் ‘ஒவ்வொரு பொருளுக்கும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே வரி’ என்பதை தவறாக புரிந்து கொண்டு அல்லது வேண்டுமென்றே ‘அனைத்து பொருட்களுக்கும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே வரி’ என்பது தான் ஜி எஸ் டி என்ற தவறான பிரச்சாரத்தை முன்வைத்து குழப்பினர் எதிர்க்கட்சியினர். பல தசாப்தங்களுக்கு பின் வந்த புரட்சிகர மாற்றமே ஜி எஸ் டி. இதில் மலிவு அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எதிர்க்கட்சிகளுக்கு ஏன் ஏற்பட்டது?
இந்தியாவில் மாநிலத்திற்கு மாநிலம் வரி விதிப்புகள் வேறுபட்டாலும், வரி ஏய்ப்புகள் அதிகம் இருந்தன. ஒரு பொருளின் உற்பத்தி துவங்கி கடைசி நுகர்வோரிடம் செல்லும் வரை முறையாக வரிவிதிப்பு பெரும்பாலான பொருட்களில் கடைபிடிக்கப்பட்டதில்லை. ஆனால், ஜி எஸ் டி யின் வரவிற்கு பின், மூலப்பொருட்களில் துவங்கி இறுதி நுகர்வோர் வரையிலான அந்த சங்கிலி தொடர் தடைபடாமல் இருப்பதை இது நாள் வரை கணக்கில் காட்டாமல் வர்த்தகம் செய்து கொண்டிருந்தவர்களை உறுத்தியது. இது போன்ற கரும்புள்ளிகள் ஏராளம்
உதாரணத்திற்கு, ஜி எஸ் டி க்கு முன் ஒரு கடைக்காரருக்கு ஒரு நிறுவனம் இரும்பு பீரோவை எந்த வரியுமின்றி (பில் இல்லாமல்) ரூபாய்.5000/- திற்கு விற்று வந்தது. அதை 1000 ரூபாய் லாபம் வைத்து ரூபாய் 6000/- திற்கு விற்று வந்தார் கடைக்காரர். அதே போன்ற ஒரு பீரோவை வேறு ஒரு நிறுவனத்திடம் உரிய வரி செலுத்தி (பில்லுடன்) ரூபாய் 6000/- திற்கு வாங்கி ரூபாய் 7000/-த்திற்கு விற்று வந்தார் கடைக்காரர். விலை குறைவானதே அதிகமாய் விற்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆனால் ஜி எஸ் டி க்கு பின் மூல பொருட்கள் அனைத்தும் வரி கணக்கில் வந்தபடியால் இனி 1000 ரூபாய் அதிகமாகும் என தெரிவித்தார் முதலாமவர். அதாவது 5000 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டிருந்த பீரோவின் விலை ரூபாய்.6000 ஆகி விட்டது. ஆனால், முறையாக வரி வசூலித்து பீரோ விற்பனை செய்து கொண்டிருந்தவரோ “ஐயா, ஜி எஸ் டி வந்த பின் பீரோவிற்கான வரி விதிப்பு குறைந்து விட்டது. எங்கள் நிறுவனத்தின் பீரோ விலை தற்போது ரூபாய்.5000 /- மட்டுமே என்றார். அதாவது இது நாள் வரை மத்திய கலால் வரி + மதிப்பு கூடுதல் வரி மற்றும் இதர வரிகளினால் அதிக வரி செலுத்தி கொண்டிருந்த நிலையில், நாடு முழுதும் இரும்பு பீரோவின் வரி விகிதம் 18 % க குறைந்து விட்டது. பீரோவின் விலையும் குறைந்தது என்றார். அதாவது முறையான வியாபாரத்தை செய்து வந்தவர்களின் விலை குறைந்தது. முறையற்று கணக்கில் காட்டாமல் வியாபாரம் செய்து வந்தவர்களின் பொருட்கள் விலை ஏறியது என்பதோடு இது வரை அதிக லாபத்தில் விற்று வந்தவர் முறையற்ற வகையில் சட்ட விரோதமாக வியாபாரம் செய்தவர் என்பது புலனாகியது.
மேலும், ஜி எஸ் டி என்பது நுகர்வின் அடிப்படையில் செலுத்தப்படும் வரி விதிப்பு என்பது புரிந்தவர்கள் ஒரே சீரான வரி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த செய்வதோடு அனைவருக்கும் சமமான விலையை உறுதி செய்கிறது. இது நுகர்வோருக்கு பொருட்களின் விலையை குறைப்பதோடு, வரி ஏய்ப்பை தடுத்து அரசின் வருவாயை உறுதி செய்கிறது. உற்பத்தி மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளை ஐந்து வருடங்களுக்கு ஈடுகட்டுவதோடு, விலை குறைப்பால் வருங்காலங்களில் நுகர்வு அதிகரிப்பதால் வரியும் அதிகரிக்கும் என்பதையும் உணர்த்தியது.மிக பெரிய சீர்திருத்தம் என்பதால் பொருட்களின் வரிவிகிதத்தை மாநிலங்களின் ஆலோசனைக்கு இணங்க, ஜி எஸ் டி குழுவின் அறிவுரைக்கேற்ப அவ்வப்போது மாற்றிக்கொள்ளலாம் என்ற முடிவுக்கேற்ப பல்வேறு பொருட்கள் மீதான வரி விகிதத்தை குறைத்து கொண்டே வருகிறது. தேவைப்படும் நேரத்திலெல்லாம் மாற்றங்களை கொண்டு வருகிறது.
இதற்கிடையில், கொரோனா தடுப்பிற்கு எதிரான மருந்துகள் மற்றும் பொருட்களுக்கு விலக்களிக்க வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், சில பொருட்களுக்கான வரியை நீக்கினால் அந்த பொருட்களின் விலை உயரும் என்பதை பலமுறை எடுத்து கூறியும் செவி மறுக்க மறுக்கின்றன எதிர்க்கட்சிகள்.
மூல பொருட்களை வாங்கும் போதே வரி செலுத்தி விடுகிற நிலையில், அந்த பொருள் உற்பத்தியாகி விற்கும் போது உள்ளீட்டு வரி வரவின் மூலம் செலுத்திய வரியை சமன் செய்து கொள்ளும் தொடர்புடைய பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள். ஒரு வேளை, வரி விலக்களித்தால், உள்ளீட்டு வரியும் உற்பத்தியாகும் செலவில் சேரும் என்பதும் அதனால் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்பது ஜி எஸ் டி அடிப்படை.
ஆனால், இது புரியாமல் மக்களின் உணர்வுகளை தூண்டி, கொரோனா தடுப்பு பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்பது தரம் தாழ்ந்த அரசியல் மட்டுமல்ல, பொறுப்பற்ற செயலும் கூட.
மேலும், கொரோனா மீட்பு பொருட்களுக்கான வரி விலக்கு மற்றும் சலுகைகளுக்கான ஜிஸ்டி குழுவில் தமிழகம் இடம்பெறாதது குறித்து சில அரசியல்வாதிகளும், சில அமைப்புகளும் விமர்சனம் செய்து வருவது வியப்பை அளிக்கிறது. பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க, ஆய்வு செய்ய ஜிஎஸ்டி அமைப்பினால் அவ்வப்போது அமைச்சர்கள் அல்லது அதிகாரிகள் குழுக்களை அமைப்பது வழக்கம். இந்த குழுக்களை அமைப்பதற்கென்று ஒரு நடைமுறை, விதிமுறை உள்ளது. அதன் அடிப்படையிலேயே தற்போதைய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என்பதும், ஒவ்வொரு குழுக்களிலும் அனைத்து மாநிலங்களும் இடம் பெற முடியாது என்பதும் பொது அறிவு அல்லது சட்ட அறிவு உள்ளவர்களுக்கு புரியும்.
இந்த குழுவில் மேகாலயா, குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கேரளா, தெலுங்கானா, ஒடிஸா, உத்திரபிரதேசம் ஆகிய எட்டு மாநிலங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ள நிலையில், மற்ற மாநிலங்கள் தாங்களும் இடபெற வேண்டும் என்று அடம்பிடிக்க முடியுமா? கடந்த மே 24ம் தேதியன்று, சூதாட்ட விடுதிகள், ஆன் லைன் விளையாட்டுகள், குதிரை பந்தயங்கள் குறித்த குழுவில் தமிழகம் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தின் பிரதிநிதியாக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏழு மாநிலங்கள் கொண்ட குழுவில் மற்ற மாநிலங்கள் ஏன் நியமிக்கப்படவில்லை என கேட்டாரா தியாகராஜன் அல்லது தமிழகம் இடம்பெற முடியாது என்று மறுத்தாரா? ஐ ஜி எஸ் டி குழுவில் கூட தமிழகம் உள்ளது என்பது இந்த விமர்சனங்களை முன்வைப்போருக்கு தெரியுமா?
மேலும், சிறிய மாநிலங்கள் குறைந்த அளவு பேச வேண்டும், பெரிய மாநிலங்களுக்கு அதிக நேரம் பேச அனுமதிக்க வேண்டும், உற்பத்தி மாநிலங்களுக்கே முன்னுரிமை என்றெல்லாம் தமிழக நிதியமைச்சர் பேசியிருப்பது மாநில உரிமைகள் குறித்து பேசும் திமுக வின் மற்றொரு முகமாகவே கருதப்படும். மாநிலங்கள் இல்லாமல் மத்திய அரசு இல்லை என்ற பேச்சும் வன்மையாக கண்டிக்கத்தக்கதே. கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணாக பேசிக்கொண்டிருக்கிறார் பழனிவேல் தியாகராஜன். மாநில உரிமைகள் என்ற பெயரில் மற்ற மாநிலங்களை அவமதிக்க அவருக்கு உரிமையில்லை. தமிழ்நாடு என்ற மாநிலத்தையே உருவாக்கியது சுதந்திர இந்திய நாடு தான் என்பதை அவர் புரிந்து கொள்வது நலம்.
அனைத்து மாநிலங்களும் ஏற்று கொண்ட விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை ஏற்று கொண்டு ஒத்துழைப்பு அளிப்பதே மாநில நலனுக்கும், நாட்டு நலனுக்கும் சிறப்பையளிக்கும். அதை விடுத்து தன் மாநிலத்தை சேர்க்கவில்லை என்று மலிவு அரசியல் செய்வது சிறுபிள்ளைத்தனமே.
*