இலவசம் மூலம் ஓட்டு அறுவடை..! டாஸ்மாக் மூலம் உயிர் அறுவடை..! -தமிழக மக்கள் சிந்திப்பார்களா?

56

1967 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், அன்றைய தி.மு.க. முதல்வர் வேட்பாளராக இருந்த, அண்ணாதுரை, தாங்கள் ஆட்சிக்கு வந்தால், ‘ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி” என்ற வாக்குறுதியை அளித்தார். தி.மு.க வெற்றி பெற்றதும், ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசியை கொடுத்து, மூன்று படி லட்சியம், ஒரு படி நிச்சயம் என்று சமாளித்தார்.

அன்று முதல், தற்போது 2021ல் நடைபெற இருக்கும், சட்டமன்ற தேர்தல் வரை, தமிழகத்தில் நடக்கும், எல்லா தேர்தல்களிலும், ‘இலவசங்கள்‘ பெரும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

2006 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் :

2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், ‘இலவச வண்ண தொலைக்காட்சி , ரேஷன் கடைகளில் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய், நிலம் இல்லாதவர்களுக்கு இலவசமாக இரண்டு ஏக்கர் நிலம், இலவச சமையல் எரிவாயு, வேலை இல்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 300 ரூபாய், கர்ப்பமாக உள்ள தாய்மார்களுக்கு 6 மாதத்திற்கு தலா ஆயிரம் ரூபாய்… என பல இலவசங்களை, தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது.

திமுக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சிக்கு வந்தது. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ப. சிதம்பரம் , ‘இந்த தேர்தலின் முக்கிய ஹீரோவே, திமுக தேர்தல் அறிக்கை தான்‘, என கூறினார்.

2011 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் :
ஆட்சியைப் பிடிக்க துடித்த அதிமுக, 2006 ல் திமுக செய்தது போல, இலவசங்களை வாரி வழங்க தீர்மானித்தது.
திமுக, ரேஷன் கடைகளில், வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 35 கிலோ இலவச அரிசி என்றவுடன், அதிமுக, குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும், 20 கிலோ இலவச அரிசி என தேர்தல் அறிக்கையில் வெளியிட்டது.
கல்லூரியில் படிக்கும் மாணவ – மாணவியர்களுக்கு திமுக இலவச மடிக் கணினி என்றவுடன், அதிமுக 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ – மாணவியர்களுக்கு இலவச மடிக்கணினி என அறிவித்தது.

திமுக இலவச மிக்ஸி அல்லது கிரைண்டர் என்றது, அதிமுக இலவசமாக மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறியை சேர்த்தே தருவோம், என்றது.

பள்ளி மாணவ – மாணவியர்களுக்கு இலவசமாக சீருடை, இலவச காலணி என நிறைய இலவசங்களை, இரண்டு பிரதான கட்சிகளும், தங்களுடைய தேர்தல் வாக்குறுதியில் அள்ளித் தெளித்தன. அ.தி.மு.க வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது.

2016 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் :

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும், அதிமுக பல இலவசங்களை அறிவித்தது. முதல் 100 யூனிட் பயன்பாட்டிற்கு இலவச மின்சாரம், பெண்களுக்கு 50 சதவீத மானிய விலையில் இரண்டு சக்கர வாகனம், திருமணம் செய்ய இருக்கும் மணமகளுக்கு ஒரு சவரன் தங்கம் என நிறைய இலவசங்களை அறிவித்து, அந்த தேர்தலிலும், அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் அமோகமாக வெற்றி பெற்றது.

2019 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்:

தி.மு.க, கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள 5 பவுன் நகைக்கடன் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தது. பலரும் தங்கள் வீட்டிலிருந்த நகைகளையெல்லாம் வங்கியில் அடமானம் வைத்த கையோடு தி.மு.க. கூட்டணிக்கு ஓட்டுப்போன்றனர். 39 ல் 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது தி.மு.க கூட்டணி. நகைக்கடன்களை ரத்து செய்ய தி.மு.க எந்த முயற்சியும் செய்யவில்லை. விளைவு, பலரது நகைகள் முழுகிவிட்டன.

2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் :

ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற, அரசியல் கட்சிகள், பல இலவச அறிவிப்புகளை, அறிவித்து வருகின்றது. குடும்பப் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், அனைத்து வீடுகளுக்கும் இலவச கணினி தருவதாக, மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் அறிவித்தார். பிறகு,

திமுக, மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாதம் தோறும், ஆயிரம் ரூபாய் தருவதாக, ஸ்டாலின் அறிவித்தார். தற்போது தேர்தல் அறிக்கையில் கொரோனா நிவாரணமாக ரூ.4000, பெண்களுக்கு டவுன்பஸ்களில் இலவச பயணம், சிலிண்டருக்கு மானியம் என்று பல இலவசங்களை அறிவித்துள்ளார்.

அ.தி.மு.கவோ ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 1500 ரூபாய் தருவதாகவும், வருடம் தோறும் ஆறு சிலிண்டர்கள் இலவசம் எனவும் அறிவித்துள்ளது. இனிவெளியாகும் அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில், மேலும் பல கவர்ச்சிகரமான இலவசங்களை எதிர்பார்க்கலாம்.

இந்த வருடம், தைப் பொங்கல் அன்று, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும், இரண்டு ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், தமிழக அரசால், வழங்கப் பட்டது.
1.8 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு, மாதம் தோறும் அரிசி மற்றும் இதர பொருட்கள் வழங்குவதற்காக, தமிழக அரசு, ஆயிரத்து 800 கோடியை, மாதம் தோறும், செலவு செய்கின்றது. இதுவே, வருடத்திற்கு 21,600 கோடி ரூபாய் செலவாகிறது.

ஆனால் இந்த இலவசங்கள் எப்படி கொடுக்கப்படுகிறது? நாம் தீப்பட்டி வாங்கும் போது கூட அளிக்கும் வரிப்பணத்திலிருந்தே இந்த சூறையாடல் நடக்கிறது. இதுதவிர இலவசங்களை அள்ளிக் கொடுப்பதால், அரசு கஜனாவில் பணம் இல்லை. அதை சரிகட்ட மதுக்கடைகளை வீதி தோறும் திறந்துவிட்டு மக்களின் ரத்தத்தை உறிஞ்சி பணம் சேர்க்கின்றனர். அதிலிருந்து பங்குத்தொகையை இலவசம் என்ற பெயரில் நமக்கு தருகின்றனர்.

தமிழக கடன் தொகை

நகை கடன் தள்ளுபடி, கூட்டுறவு சங்கம் கடன் தள்ளுபடி போல பல கடன் தள்ளுபடிகள் மூலம், தமிழகத்தின் நிதி சுமை பெருமளவில் பாதிக்கப்படும். 2011 – 12 ஆம் ஆண்டு தமிழகத்தின் கடன், 1.18 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது, 2021 – 22 ஆம் ஆண்டு, 5.7 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது.

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்…
இங்கு இல்லாதோர் இல்லாத நிலை வேண்டும்…
என்ற எண்ணம் நிச்சயமாக நம் அனைவரின் மனதிலும் இருக்கும். உண்மையிலேயே, பணம் கொடுத்து பொருட்கள் வாங்க முடியாதவர்களுக்கு, உதவி செய்யலாம். அதில், யாரும், எந்தத் தவறும், கூற முடியாது. ஆனால், தமிழகத்தில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது, மிகுந்த அதிர்ச்சி ஏற்படுகின்றது.
தமிழக அரசு தைப் பொங்கல் அன்று இலவசமாக 2000 ரூபாய் தருவதாக, அறிவித்த உடன், நிறைய பேர் வாங்க, கூட்டமாக கடைகளில் நின்று இருந்தனர், அப்போது, அந்த வழியே சென்ற போது, பார்த்த சம்பவம், மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒருவர் காரில் இருந்து இறங்கி வந்து, வரிசையில் நின்று, பணத்தைப் பெற்றுக் கொண்டு, திரும்பவும் அவருடைய சொந்த காரில் ஏறி சென்றார்.
காலுக்கு செருப்பு வாங்க கூட, வசதி இல்லாத நிலையில் இருப்பவர்களுக்கு உதவி செய்யலாம். ஆனால், சொந்தமான காரில் செல்லும் வசதி படைத்தவர்களுக்கு, அதே இலவசங்களை வாரி வழங்க வேண்டுமா.

எல்லாம் அரசியலா..?
ஐந்து வருடம் நம்மை ஆட்சி செய்ய இருக்கும் ஆட்சியாளர்கள், நம்மிடம் எதிர்பார்ப்பது, நமது ஓட்டுகளை மட்டும் தான். அந்த ஓட்டு மட்டுமே, நமக்கு ஆயுதமாகும். அந்த ஓட்டின் மூலம், நல்ல தரமான சாலை, குடிப்பதற்கு நல்ல தரமான குடிநீர், சுகாதார உயர் தரமான மருத்துவமனைகள், அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன பள்ளிக் கூடங்கள், நல்ல போக்குவரத்து வசதிகள், நல்ல முறையில் பராமரிக்கப்படும் கழிவு நீர் வடிகால், போன்ற மக்களுக்கு அவசியமானவற்றை கேட்டுப் பெற வேண்டும்.

இலவசமாக தரும் பொருட்களை அரசு நிறுத்தினாலே, வரிகளை குறைக்க முடியும், டாஸ்மாக் கடைகளை மூடிவிட முடியும். அத்யாவசியப் பொருட்களின் விலை குறையும்.

இலவச பொருட்களுக்கு மயங்கி, வாக்கு அளிப்பதன் மூலமாகவும், கேள்வி கேட்கும் நிலையில் இருந்து, நாம் தவறி விடுகின்றோம். கேட்டு பெற நிலையில் இருந்து, எது கிடைத்ததோ அதை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு, நாம் தள்ளப்படுகிறோம்?

வாக்கு என்பது, நமது நாடு, நமக்கு அளித்த மிகப் பெரும் கௌரவம். அந்த கௌரவத்தை முறையாக பயன் படுத்தி, சரியான நபர்களை தேர்ந்து எடுக்க வேண்டியது, நமது அனைவரின் கடமையாகும்.

இலவசங்களை அள்ளிவிட்டு வெற்றி பெற்ற தி.மு.க தலைவர் கருணாநிதி தான் அரசே சாராயம் விற்கும் என்று அறிவித்து டாஸ்மாக் கடைகளை துவக்கினார். தற்போது தமிழத்தில் 5,192 கடைகள் உள்ளன. இதில் ஆண்டிற்கு 37,000 கோடி வருமானம் அரசுக்கு கிடைக்கிறது. அதில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க அரசியல் கட்சியின் பின்னணியினர் நடத்தும் மதுபான தொழிற்சாலைகளுக்கு மட்டும் 20,000 கோடி ரூபாய் கிடைக்கிறது. மிக அபாயகரமான மதுவால், ஒவ்வொரு வீதியிலும் குறைந்தது இரண்டு மூன்று விதவைகள் இருக்கின்றனர். ஐந்து அல்லது ஆறு தந்தையில்லா குழந்தைகள் உள்ளனர். தற்போது டாஸ்மாக் மதுவிற்கு பெண்களும் அடிமையாகி வருகின்றனர் என்பது அதிர்ச்சி தகவல். பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டத்திற்கு மக்களை சேர்க்கவும், ஓட்டுக்காகவும் குவார்ட்டர், பிரியாணி இலவசமாக கொடுக்கும் கலாச்சாரம் தமிழகத்தில் பல ஆண்டுகளாக உளளது. இதில் தங்கள் வாக்குகளை மட்டுமல்ல உயிரியையும் மதுவிற்காக தமிழன் இழக்கிறான் என்பது கொடுமை.

+1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here