உயிர்போகும் நிலையில் கூட கொடியை காத்த வீரர் – திருப்பூர் குமரன் நினைவு தினம் இன்று

கொடிகாத்த குமரன் என்று அனைவராலும் அறியப்படும் திருப்பூர் குமரன் இந்திய விடுதலை போராட்ட வீரர் ஆவார். ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், நாச்சிமுத்து – கருப்பாயி தம்பதியினருக்கு முதல் மகனாக 1904-ஆம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி பிறந்தார்.

குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை ஆரம்ப பள்ளியிலேயே முடித்துக் கொண்டு நெசவுத் தொழிலை செய்து வந்தார். ராமாயி என்ற பெண்ணுடன் குமரனுக்கு அவரது 19-வது வயதில் திருமணம் முடித்து வைக்கப்பட்டது.

இளம் பருவம் முதலே நாட்டுப் பற்று மிக்கவராக திகழ்ந்த குமரன், காந்தியக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். திருப்பூரில் நடக்கும் அறப் போராட்டங்களில் கலந்து கொண்ட அவர், பல போராட்டங்களுக்கு தலைமை ஏற்றும் நடத்தினார்.

இந்நிலையில், 1932- ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவியது. அச்சமயம், தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் திருப்பூரில் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டிருந்தார் குமரன்.

1932- ஆம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று ஆர்வமுடன் அணிவகுத்துச் சென்றார் திருப்பூர் குமரன். தடையை மீறி ஊர்வலம் சென்ற போது, காவலர்கள் தடியடி நடத்தினர்.

இளைஞர் கூட்டம் வந்தே மாதரம்!! வந்தே மாதரம்!! என்ற முழக்கங்களை எழுப்பி முன்னோக்கிச் சென்றது.

அப்போது, காவலர்களால் தாக்கப்பட்டு, தடியடிபட்டு மண்டை பிளந்து வந்தே மாதரம்!! வந்தே மாதரம்!! என்று வீர முழக்கம் இட்டு கீழே சரிந்து விழுந்தார் குமரன். வீதியெங்கும் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருந்தது. உயிருக்கு போராடிய அந்த நிலையிலும், கரத்தில் பற்றியிருந்த தேசியக் கொடியை அவரது விரல்கள் பற்றியே இருந்தன.

அதன்பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமரன், மறுநாளான ஜனவரி 11-ம் தேதி அதிகாலையில் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இன்று திருப்பூர் குமரன் நினைவு தினம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here