உருவாகியுள்ள இந்து வாக்குவங்கி! தேர்தல் சொல்லும் பாடம்!!

2021 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. திமுகவின் பாரம்பரிய ஆட்சி ஜனநாயக ரீதியாக ஆட்சிக்கட்டிலில் ஏற்றப்பட்டுள்ளது. இந்த வெற்றியின் பின்னால் பிரசாந்த் கிஷோரின் திட்டமிடுதல் உள்ளது. பிரசாந்த் கிஷோருக்கு கட்டணம் செலுத்தி அவரை களமிறக்குவதற்கு முன்னரே திமுகவின் பிரச்சாரம் ஜல்லிக்கட்டு கிளர்ச்சியின் போதே தொடங்கிவிட்டது.

ஜல்லிக்கட்டை தடை செய்தது காங்கிரஸ் கூட்டணி என்ற போதிலும் அதில் திமுக இடம் வகித்தது என்ற போதிலும் அதனை ஏதோ மோடி செய்தது போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி மோடி மீது வெறுப்பை ஏற்படுத்த முடியுமென அந்த கிளர்ச்சி காட்டியது. பின்னர் இதைப் போன்ற பொய்கள் மீண்டும் மீண்டும் பரப்பப்பட்டன.

திமுகவின் கூட்டணியில் மிகவும் பலமான அங்கத்தினர்கள் ஊடகங்கள்தாம். அவை வெளியே அரசியல் சார்பற்ற முகமூடியை போட்டுக்கொண்டு உள்ளே கடும் பாஜக எதிர்ப்பு பிரச்சாரத்தை இடைவிடாமல் செய்தார்கள். ஊடக அறமாவது உரித்த வெங்காயமாவது என திமுகவுக்காக அவர்கள் செய்த பிரச்சாரம் தமிழக ஊடக வரலாற்றின் அபாரமான இருண்ட பக்கம்.

ஆனால் எல்லாவற்றுடன் ஸ்டாலினின் கடும் உழைப்பையும் சொல்ல வேண்டும். ஏறக்குறைய ஒவ்வொரு பஞ்சாயத்தையும் தொட்டு பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து செய்தார். ஏதோ காரில் வந்து போய் செய்யப்பட்ட பிரச்சாரம் அல்ல. என்னதான் அவரை கிண்டல் செய்து ஆயிரம் மீம்கள் வந்தாலும் அவர் செய்த ஊர் மன்ற கூட்டங்கள் நிச்சயம் திமுகவின் இந்த வெற்றிக்கு ஒரு அடிப்படை காரணம்.

பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த போதிலும் அதிமுக அலை போன்ற எதிர்ப்பின்றி ஒரு வலிமையான எதிர்கட்சியாக அமர்ந்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பொய்யாக்கப்பட்டுள்ளன.
இதற்கு ஒரு முக்கிய காரணம் ஓரளவுக்காவது இந்து வாக்கு வங்கி தமிழ்நாட்டில் உண்டாகியுள்ளது என்பதுதான்.

தமிழ்நாட்டின் சட்டசபையில் நான்கு பாஜக மக்கள் பிரதிநிதிகள் நுழைந்துள்ளனர். அதிமுக கடும் எதிர்ப்பிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் இந்த இந்து ஒற்றுமை ஒரு முக்கிய காரணம். ஒரே காரணமல்ல. மிக வலிமையானதும் அல்ல. ஆனால் முக்கியமான ஒன்று. ஓரளவு வலுவான ஒன்று.

தமிழக சட்டசபையில் ஒரு ஹிந்துத்துவ எம் எல் ஏ என்பது அப்படி புதிதான விஷயமல்ல. 1984 இல் வை. பாலச்சந்தர் இந்து முன்னணி ஆதரவுடன் எம்.எல்.ஏ ஆனார். பதம்நாபபுரம் சட்டமன்ற தொகுதியிலிருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுயேச்சை. ஆனால் நான் ஒரு இந்து என சொல்லி வென்றார். 1996 இல் அதே சட்டமன்ற தொகுதியிலிருந்து பாஜகவின் வேலாயுதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.எல்.ஏ.

1999 பாராளுமன்ற தேர்தலில் பாஜக திமுக கூட்டணி ஏற்பட்டது. 2001 சட்டமன்ற தேர்தலிலும் அக்கூட்டணி நீடித்தது. அதில் திமுக தோல்வி அடைந்தது. ஆனால் அப்போதும் நான்கு எம் எல் ஏக்கள் பாஜக கட்சியினர் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இப்போது ஒரு கேள்வி வரலாம். இன்றைக்கு 2021 இல் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் 2001 இல் திமுக தோல்வி அடைந்தது போலவே இப்போது அதிமுக தோல்வி அடைந்துள்ளது என்பதுடன் அதே போல பாஜகவின் நான்கு எம். எல். ஏக்கள் சட்டசபைக்கு சென்றுள்ளனர்.

ஆனால் இங்கு ஒரு முக்கிய விஷயம் உள்ளது. 2001 சட்ட மன்ற தேர்தலுக்கு முன்னர் 1999 இல் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் திமுக பாஜக கூட்டணி 39 தொகுதிகளில் 26 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் 2004 இல் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்த போது 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி தோல்வி அடைந்தது என்பதுடன் தொடர்ந்து அதிமுக பாஜக கூட்டணியும் முறிந்தது. 2019 இல் ஏறக்குறைய அதே சூழல். 39 தொகுதிகளில் பாஜக அதிமுக கூட்டணி தோல்வி அடைந்தது. ஆனால் 2021 இல் இந்த கூட்டணி தொடர்ந்தது.

2001 க்கும் 2021 க்கும் இடையிலுள்ள மிக முக்கிய வேறுபாடு 2001 இல் இந்து அரசியல் ஒற்றுமை என்பது ஒரு மாயையாக இருந்தது, ஆனால் பத்து ஆண்டு ஆட்சிக்கு பிறகு அதிமுக இத்தனை இடங்களுடன் திகழ இந்து ஒற்றுமை என்பது முக்கிய காரணமாக உள்ளது.

பாஜகவுக்கும் திராவிட கட்சிகளில் அதிமுக-திமுகவுக்குமிடையேயான கூட்டணிகளுக்கும் இருக்கும் வேறுபாட்டை அறிந்து கொள்ள அய்ன்ராண்ட் (அதூண கீச்ணஞீ) எனும் மேற்கத்திய சிந்தனையாளர் ஒருவர் சமரசம் குறித்து உருவாக்கிய ஒரு கோட்பாட்டை நாம் பயன்படுத்தலாம்.

இருவர் கூட்டணி அமைக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அதில் ஒருவர் நல்லதுக்கு துணை நிற்பவர். மற்றவர் நல்லதல்லாததற்கு துணை நிற்பவர். இவர்கள் இருவரும் சமரசம் செய்து கொண்டால் அதில் பயனடைபவர் நல்லதல்லாதவற்றுக்கு துணை நிற்பவராகவே இருப்பார்.

திமுகவும் பாஜகவும் செய்த கூட்டணியால் பலனடைந்தவர் திமுக. அதனால் பலம் இழந்தவர் பாஜக.
அதிமுக அப்படி அல்ல. ஜெயலலிதா அவர்களின் வெப்பமானித்தன்மை கொண்ட உணர்ச்சி வேக செயல்பாடுகளால் அதிமுக பாஜக உறவு அத்தனை சோபிக்கவில்லை. ஆனால் அதிமுகவின் ஸ்தாபகரான எம்.ஜி.ஆர் அவர்கள் அடிப்படையில் சில இந்துத்துவ கோட்பாடுகளில் கடும் பற்று கொண்டவர்.
உதாரணமாக கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் குறித்து தமிழ்நாட்டில் முதலில் சிந்தித்தவர் அவரே. அதே போல குடும்பக் கட்டுப்பாடு இந்துக்கள் மட்டுமே செய்து கொள்வது மாற்று மதத்தவர்கள் எண்ணிக்கையில் அதிகரிக்க இடம் கொடுத்துவிடும் என்று கருதியவர் எம்,ஜி.ஆர். எந்த காலத்திலும் எம்.ஜி.ஆர் அவர்களோ அல்லது அதிமுகவின் தலைவர்களோ இந்துக்களை இகழ்ந்து கிண்டலடித்து திமுகவின் தலைமை பீடங்கள் போல் வக்கிர மனசுகம் கண்டதில்லை. எனவே பாஜக அதிமுக கூட்டணி என்பது இயற்கையானது. இயல்பானது. சரியானது.

இந்த தேர்தலில் வானதி ஸ்ரீனிவாசனின் வெற்றி முக்கியமானது. கமலஹாசன் மிக பிரபலமான நடிகர். ஆழ்வார் பேட்டை ஆளடா என தன்னைத்தானே தன் பட பாடல்களில் சிலாகிக்க வைத்து புளகாங்கிதம் அடையும் சுயதுதி விரும்பி. ஆனால் அவர் திடீரென ஆழ்வார் பேட்டையை துறந்து கோவை வந்தார். வானதி ஸ்ரீனிவாசன் காலமெல்லாம் கோவைக்கு சேவை செய்தவர். அவரது அரசியல் போராளி. அரசியல் என்பதைத் தாண்டி நீர் மேலாண்மை இயற்கை பாதுகாப்பு என பல களங்களில் பணியாற்றி வருபவர். பெருந்தொற்று பேரிடர் காலகட்டத்தில் அவர் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு உணவளிக்கும் சேவையை செய்து வந்தார்.

வானதி ஸ்ரீனிவாசனை எதிர்த்து களமிறக்கப்பட்டார் கமல்ஹாசன். ஆம் களமிறக்கப்பட்டார் என்று கருத இடமிருக்கிறது. இது கமலஹாசன் எடுத்த முடிவு என்பது வெளியில் தெரிவது. ஆனால் வானதி ஸ்ரீனிவாசனை சட்ட சபைக்குள் வரவிடாமல் தடுக்க வேறு ஏதோ மூளையின் சூழ்ச்சியின் விளைவாக இருக்கவும் வாய்ப்புகள் உண்டு.

சிறந்த அரசியல்வாதியும் களப்பணியாளருமான வானதி ஸ்ரீனிவாசன் ஒரு தொடக்கநிலை அரசியல் நடிகரால் சொந்த தொகுதியில் தோற்கடிக்கப்படுவது எப்படிப்பட்ட மனச்சோர்வை ஏற்படுத்தும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

ஆனால் வானதி ஸ்ரீனிவாசனின் வெற்றி இங்கு எதிரணி போட்ட வியூகத்தை அப்படியே மாற்றிவிட்டது. கமலஹாசன் என்கிற மாபெரும் சுயதுதி விரும்பியும் தன்னகங்கார சிறுமையும் பிரம்மாண்டமாக நிரம்பிய நடிகர் எளிய கிராமம் ஒன்றில் தோன்றி தன் முயற்சியால் மட்டுமே போராடி வளர்ந்த ஒரு பெண்ணால் தோற்கடிக்கப்பட்டார். பெண்களையே வெறும் போக பொருட்களாகக் காட்டும் சினிமாக்களில் நடித்து பொருளீட்டிய ஒரு நடிகர் தன் அரசியல் சகுனித்தனங்களெல்லாம் தோற்று நின்றது அறிவினாலும் கடும் உழைப்பினாலும் தன்னை முன்னிறுத்தி போராடிய ஒரு பெண்ணின் முன்.
ஈவெராவினை விதந்தோதிய கமலஹாசன் ஹிந்துத்துவ பெண் போராளியின் முன் தேர்தலில் தோல்வியடைந்து மண்டியிட்டார்.

எம். ஆர்.காந்தி நாகர்கோவிலில் வெற்றி அடைந்தார். அதுவும் சாதாரணமான வெற்றி அல்ல. சென்ற முறை அவருக்கு எதிராக சுரேஷ் ராஜன் பலவிதமான பிரச்சாரங்களை செய்தார். ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்களின் வீடுகளுக்கு ஒரு சாதி சங்கத்தின் பெயரால் எம். ஆர்.காந்தியின் சாதியைக் குறிப்பிட்டு அதற்கு எதிராக வாக்களிக்கும் கடிதங்கள் வந்தன. இந்த அளவுக்கான கீழ்தரமான முயற்சிகள் செய்யப்பட்டன.
எம்.ஆர்.காந்தி தனக்கென எதையும் வைத்திராத எளிய மனிதர். நேர்மையானவர். செருப்பு கூட அணியாமல் ஒவ்வொரு இடமாக சென்று களப்பணி செய்பவர். எங்கு மக்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் வந்து போராடுபவர். அரசியல் பின்னணி இல்லாத எளிய மக்கள் அல்லல் படும் போது அங்கே எம்.ஆர்.காந்தி நிற்பார். இதில் அவருக்கு கட்சி மதம் சாதி மொழி என்கிற பேதமெல்லாம் இல்லை. ஆனால் அவரும் கூட ஜிகாதி கொலைவெறித்தாக்குதலுக்கு ஆளாகத்தான் செய்தார். அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். இன்று எம்.ஆர். காந்தி வென்றிருக்கிறார். இது அரசியல் நேர்மைக்கும் எளிமைக்கும் கிடைத்த வெற்றி.

திருநெல்வேலியில் கிடைத்த நயினார் நாகேந்திரனின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெரும் சமூக சமரச நல்லிணைப்பு இருக்கிறது. மிக முக்கியமாக அங்கே கிடைத்தது தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினரின் வாக்குகள். இதே சமுதாய மக்கள் ஒரு கால கட்டத்தில் காவல்துறை கொடுமையினாலும் இதர சமுதாயத்தவரினால் ஏற்பட்ட மோதல்களாலும் இந்து மதத்தை விட்டு இஸ்லாமியத்தை தழுவிய மீனாட்சிபுரம் மதமாற்றம் இங்குதான் நிகழ்ந்தது. ஆனால் தேவேந்திர வம்சாவழியினரான இம்மக்களின் சுயகௌரவத்தை மீட்டெடுப்பதில் இந்து இயக்கங்களுடன் இணைந்து முழு ஆதார சக்தியாக இருந்தவர் மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்கள்.

இன்று அவர் கூட்டணியில் இல்லை. என்ற போதிலும் அவர் உருவாக்கிய மனநிலை மாற்றம் மகத்தானது. சமுதாயத்தில் அவருக்கு போட்டியணியில் இருக்கும் ஜான் பாண்டியனும் இந்த நயினார் நாகேந்திரன் அவர்களின் வெற்றியில் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருக்கிறார். சமூக நல்லிணைப்பின் மூலம் கடும் உழைப்பின் மூலமும் தாமிரபரணி ஆற்றில் அடைந்த இந்த வெற்றி மேலும் பல வெற்றிகளுக்கும் சமூக சமரஸ இணைப்புகளுக்கும் வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.

எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்த மற்றொரு வெற்றி டாக்டர். சரஸ்வதி அவர்களுடையது. முப்பது ஆண்டு காலம் மருத்துவ கல்வி சேவைகளை செய்த சங்க பாரம்பரிய குடும்பத்தில் உள்ளவர். பார்க்க எளியவர். பழக இனிமையானவர். இந்த எளிய அன்பான பெண்மணி மோதி வீழுத்தியதோ திமுகவின் பெரும் தலைகளில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசனை. அவர் சாதாரணமானவர் அல்ல. கருணாநிதிக்கு வேண்டியவர். ஈழ இயக்க போராளி பத்மநாபா கொலை வழக்கின் போது கைதாகி காவல்துறையால் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாமல் வெளியே வந்தவர். இதை குறித்து முன்பு எழுதிய ’சண்டே’ பத்திரிகை ‘நீதிமன்றத்தில் எதையும் நிரூபிக்க முடியாது’ என கருணாநிதியிடம் அவரது அப்போதைய சட்ட அமைச்சரான ஆலடி அருணா கூறியதாக எழுதியது. ’குற்றம் செய்யவில்லை’ என்பதை விட குற்றத்தை நிரூபிக்க முடியுமா என்பது திமுகவின் ’விஞ்ஞான’ பாணி. பின்னர் திமுக அவரை மத்திய அமைச்சராக ஆக்கியது. இப்படிப்பட்ட சுப்புலட்சுமி ஜெகதீசனைத்தான் தோற்கடித்திருக்கிறார் டாக்டர். சரஸ்வதி.

பாராட்டப்பட வேண்டிய வெற்றிகள்தான். ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் இருப்பது எவ்வித அரசியல் தந்திரமும் அல்ல. உழைப்பும் நேர்மையும்தான்.

ஆனால் அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன. குறிப்பாக சொன்னால் இன்றைய சூழலில் இனிமேல் இந்துத்துவ சக்திகள் செய்ய வேண்டியது என்ன?
முக்கியமாக இரண்டு விஷயங்கள்.

ஒன்று: திமுக ஆட்சியில் இருக்கும் போது பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறையில் இருப்பவர்கள் நன்னடத்தை அல்லது அண்ணா பிறந்த தினம் (இனி கருணாநிதியின் பிறந்த தினமும் சேர்க்கப்படலாம்) என்கிற சாக்கில் விடுவிக்கப்படுவது நடக்க பெரும் வாய்ப்பு உள்ளது. இதை இந்து அமைப்புகளும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் கவனிக்க வேண்டும். இப்படிப்பட்ட விடுதலைகள் திட்டமிடப்படும் பட்சத்தில் அதற்கு எதிராக கடுமையான பொதுவெளி போராட்ட எதிர்ப்புகள் காட்டப்பட வேண்டும். சட்ட ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் அவை தடுக்கப்பட வேண்டும்.

இரண்டு: பயங்கரவாத கொலை வழக்குகளில் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காத சூழல் இப்போது ஏற்பட்டிருப்பதாக நாம் கருதலாம். எனவே பாஜகவும் இந்து அமைப்புகளும் பயங்கரவாத செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்களும் ஒருங்கிணைந்து இந்த வழக்குகள் தமிழகத்துக்கு வெளியே மாற்றப்பட வேண்டுமென்றும் வழக்குகள் அனைத்துமே மத்திய புலனாய்வு அமைப்புகளிடம் ஒப்படைக்கப் பட வேண்டுமென்றும் கோரிக்கை எழுப்ப வேண்டும்.

மூன்று: திமுக அடிப்படையில் இந்து எதிர்ப்பு அரசியலை கொண்ட கட்சி. எனவே அதற்கு மதமாற்ற அமைப்பினர்களின் ஆதரவு உண்டு. ஏற்கனவே மதம் பரப்பும் நிலையங்களை (கிறிஸ்தவ சபைகளை) அதிக அளவில் அமைக்க அனுமதி அளிக்கப்பட திமுக உதவ வேண்டுமென்று சொல்லி திமுகவுக்கு ஆதரவாக மதமாற்ற மதத்தினர்கள் பிரச்சாரம் செய்தது நினைவிருக்கலாம். இப்படி இந்துக்கள் அதிகமாக வாழும் இடங்களில் அமைக்கப்படும் கிறிஸ்தவ சபைகள் மத வழிபாட்டு இடங்கள் அல்ல அவை மத பரப்பு நிலையங்கள். இவை இந்துக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானவை. இவை அமைவதை தடுக்க ஒவ்வொரு இடத்திலும் உள்ள இந்து அமைப்புகள் மாவட்ட ரீதியாக இந்து மனித உரிமை அறிக்கைகளை ஆண்டு தோறும் வெளியிட வேண்டும். அவை மத்திய மாநில உள்துறை அமைச்சகங்களிடம் அளிக்கப்பட வேண்டும்.

திமுக ஆட்சி என்பது அடிப்படையில் இந்து விரோத ஆட்சி என்பதையும் அதில் இந்துக்கள் மக்கள் தொகை பெரும்பான்மையாக இருந்தாலும் அதிகார சிறுபான்மையினர் என்பதையும் நம் பாரம்பரிய ஆதினங்களை விட ஜீயர்களைவிட வெறுப்பு பணியாளர்களான ஜெகத் கஸ்பர் போன்றவர்களும் வெறுப்பு பிரச்சாரகர்களான மோகன் சி லாசரஸ் போன்றவர்களும் அதிக அதிகார பலத்துடன் செயல்படுகிறார்கள் என்பதை நினைவில் கொண்டு ஒரு விடுதலை போராட்டமாகவே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் திமுக ஆட்சியை அகற்றுவதை திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

+8

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here