ஃபோர்ப்ஸ் பத்திரிகை உலகின் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயர் இடம்பெற்றுள்ளது.
ஃபோர்ப்ஸ் பத்திரிகை 17வது ஆண்டாக சக்தி வாய்ந்த பெண்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 30 நாடுகளைச் சேர்ந்த நான்கு தலைமுறை பெண்கள் தொடர்பான பட்டியல் சேகரிக்கப்பட்டது. இதையடுத்து உலகின் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அமெரிக்க துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ், பயோகான் நிறுவனர் கிரண் மசும்தார்-ஷா, ஹெச்.சி.எல் நிறுவன சி.இ.ஓ ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் முதலிடத்தில் உள்ளார். இவர் தொடர்ந்து 10வது ஆண்டாக முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மனியை பொருளாதார நெருக்கடியில் இருந்து வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றிருக்கிறார்.
பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் தொண்டு நிறுவனத்தின் தலைவர் மெலிண்டா கேட்ஸ் 5வது இடத்தில் உள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி 7வது இடத்தில் இருக்கிறார். பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஷெரில் சேண்ட்பெர்க் 22வது இடத்தில் காணப்படுகிறார். நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிண்டா அர்டர்ன் 32வது இடத்தில் உள்ளார்.
தைவான் அதிபர் சாய் இங்-வென் 37வது இடத்தில் உள்ளார். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா 39வது இடத்தில் இருக்கிறார். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் 46வது இடத்திலும், பிரபல கலைஞர்கள் ரிஹானா 69வது இடத்திலும், பேயான்ஸ் 72வது இடத்திலும் இருக்கின்றனர்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 41வது இடத்திலும், நாடார் மல்ஹோத்ரா 55வது இடத்திலும், மசும்தார் ஷா 68வது இடத்திலும் ரேணுகா ஜக்தியானி 98வது இடத்திலும் இருக்கின்றனர். நடப்பாண்டு பட்டியலில் புதிதாக 17 பேர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை நிர்வாகம் கூறுகையில், எங்களது பட்டியலில் மாகாணங்களின் 10 தலைவர்கள், 38 சி.இ.ஓக்கள், பொழுதுபோக்கு துறைகளைச் சேர்ந்த 5 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் வயது, நாடு, வேலை ஆகியவற்றில் மாறுபட்டவர்களாக விளங்குகின்றனர். ஆனால் தங்களது துறை சார்ந்த சவால்களை எதிர்கொள்வதில் ஒரே மாதிரியான அணுகுமுறையை கையாண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.