என்ன செய்ய போகிறார் ஸ்டாலின்?

புதிய அரசுக்கு ஆயிரம் தலைவலிகள் ஸ்டாலினின் நிர்வாக திறமைக்கு சவால்

தமிழகத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில், திமுக 125 இடங்களில் வெற்றிபெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது. 7ம் தேதி முதல்வராக பதவியேற்கும் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வதில் மகிழ்கிறோம். எந்தக் கட்சியினர், யாராக இருந்தாலும், இன்னும் 5 ஆண்டுகளுக்கு அவர்தான் முதல்வர் என்பதால், அரசு இயந்திரத்தின் செயல்பாட்டில், ஆளும் கட்சிக்கு மட்டுமின்றி, ஒவ்வொரு குடிமகனுக்கும் பங்கேற்பு உண்டு.
அதேநேரத்தில், புதிய அரசு எதிர் கொண்டிருக்கும் இமாலய சவால்களை எதிர் கொள்வது, அவ்வளவு சுலபமான ஒன்றல்ல என்பதை இங்கே சுட்டிக்காண்பிக்க விரும்புகிறோம். காரணம், எந்தக் காரணங்களைக் காண்பித்து பாஜ சர்வாதிகார கட்சி, அதிமுக ஆட்சி அடிமை ஆட்சி என்று திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் 2017ம் ஆண்டு முதல் மக்கள் மனதில் அச்சத்தையும், வெறுப்பையும் விதைத்து வந்தார்களோ, அதற்கான விடை தேடும் படலத்தின் தொடக்கமாக இருந்த ஆட்சி இருக்கப்போகிறது.
ஆனால், இதெல்லாம் எந்தளவுக்கு சாத்தியம்? ஒரு சிறிய அலசல்தான் இது…

 • நீட் தேர்வு

  தமிழகத்தில் 1996ம் ஆண்டு வரை, மருத்துவம், இன்ஜினீயரிங் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு இருந்தது. இதன்பின், அதிக மார்க் பெற்றால், டாக்டர், இன்ஜினீயர் படிப்பு என்ற நிலையை, 1996ல் முதல்வராக பதவியேற்ற கருணாநிதி உருவாக்கினார். இந்தக் காலகட்டத்தில், தமிழகத்தில் புற்றீசல்கள் போல் இன்ஜினீயரிங் கல்லுாரிகள் வளரத் தொடங்கின. இன்ஜினீயர்கள் வளர்ந்தார்கள், தரம் குறைந்தது. டாக்டர்களும் வளர்ந்தனர்.
  இந்தச் சூழலில், ‘மருத்துவப் படிப்புக்கு தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்யும் வகையில் நுழைவுத் தேர்வு அவசியம்’ என்று தேசிய மருத்துவக் கவுன்சில் மற்றும் சுப்ரீம் கோர்ட் ஒப்புதலுடன் இந்த நீட்தேர்வு சட்டம் 2008 –09ல், திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது.
  இதுசுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கொண்டு வரப்பட்டது, எதுவும் செய்ய முடியாது என்று புரிந்து கொண்ட திமுக, அமைதியாக இருந்தது. ஆனால், 2011ல் ஆட்சிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா, நீட் தேர்வு கூடாது என்று முதலில் குரல் கொடுத்தார். ஆனால், சுப்ரீம் கோர்ட் பிடிவாதம் காரணமாக, இதை தமிழகத்தில் அமல்படுத்த சில ஆண்டுகள் அவகாசம் கோரினார் என்பது மட்டுமே உண்மை.
  காலம் கடத்தினாலும், இதுதேசிய அளவிலான நுழைவுத் தேர்வு என்பதால் அமல் படுத்தியே தீரவேண்டும் என்ற நிலை, பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு ஏற்பட்டது. இதனால், தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. இதில், ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.

நீட் நீக்க முடியுமா?

இந்தக் கேள்விக்கான பதிலை, காங்., முன்னாள் மத்திய அமைச்சரின் மனைவியும், சிவகங்கை தொகுதியின் காங்கிரஸ் எம்பி கார்த்திக்கின் தாயாருமான, வக்கீல் நளினி சிதம்பரம் மிகவும் திட்டவட்டமாக கூறிவிட்டார். அவர் சொன்ன இடம் சுப்ரீம் கோர்ட் வாசல். கூறியது தமிழ் மீடியாவிடம். ‘‘திமுக, அதிமுக அல்ல. இனி யார் வந்தாலும், நீட் தேர்வு நடந்தே தீரும். தேசிய அளவில் நடக்கும் பொது நுழைவுத் தேர்வு. இதை யாரும் ரத்து செய்ய முடியாது’’ என்று கூறினார்.
ஆனால், இப்படி தங்கள் கூட்டணிக் கட்சி எம்பி மனைவி திட்டவட்டமாக கூறியும், திமுக நீட் அரசியல் மிகப் பெரிய அளவில் நடத்தி, தமிழர்களின் உணர்ச்சியைத் துாண்டி, அதில் குளிர் காய்ந்தது என்றே சொல்ல வேண்டும். எந்த தமிழர்களின் உணர்ச்சியைத் துாண்டி, நீட் அரசியல் நடத்தினார்களோ, அதே அரசியல் இப்போது இருமுனை கத்தியாக திரும்பியிருப்பது, புதிய அரசின் மிகப் பெரிய சிக்கல் என்றே சொல்ல வேண்டும்.

கரோனா கட்டுப்படுத்தல்?

2020 மார்ச் மாதத்தில் இருந்து தமிழகம் கரோனாவால் சந்தித்துக் கொண்டிருக்கும் இடர்பாடுகளை சொல்லி மாளாது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது, கம்ப்யூட்டர் முன் அமர்ந்து ஆலோசனைகள் வழங்கியுள்ள முதல்வர் ஸ்டாலின், இப்போது தானே களமாட வேண்டிய நிலையில் உள்ளார். வருமானம் இல்லாத நிலையில், அரசுக்கான செலவினங்களை சமாளித்து, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. ஏசி அறையில் இருந்து அறிவுறுத்திய விஷயங்களை, இப்போது களத்தில் செயல்படுத்திப் பார்க்கும் அற்புதமான வாய்ப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைத்துள்ளது.

ஜிஎஸ்டி?

மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டியை, பழனிசாமி அரசு ஏற்றுக் கொண்டது தவறு, ஜிஎஸ்டியால் மாநில உரிமை பறிபோய்விட்டது என்றும், அநியாய வரி வசூலிக்கப்படுகிறது என்றும் திமுக தலைவர் மேடைகள் தோறும் முழங்கினார். ஆனால், உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், வரி ஆலோசகர்கள் மற்றும் ஆடிட்டர்களிடம் கேட்பது நல்லது.
ஜிஎஸ்டியில் கிடைக்கும் மாதாந்திர வரி வசூல், அதன் விகிதாச்சார அடிப்படையில், அந்தந்த மாநில அரசுகளுக்கு பிரித்துக் கொடுக்கப்படுகிறது. அதேநேரத்தில், ஜிஎஸ்டியை அமல்படுத்துவதால், மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீடு தொகை, ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில், கையில் இருக்கும் நிதியின் அடிப்படையில், மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படுகிறது என்பதே உண்மை. இதுவும் 2022 வரை மட்டுமே பிரித்துக் கொடுக்கப்படும்.
இந்த இழப்பீடு தொகை வழங்கப்படமாட்டாது என்று காங்., கட்சி கொண்டு வந்த ஜிஎஸ்டியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை மாற்றி, இழப்பீடு தொகையை 5 ஆண்டுகளுக்கு ஈடு செய்வதாக, பாஜ கொண்டு வந்த ஜிஎஸ்டி சட்டத்தில் குறிப்பிடப்பட்டது. இழப்பீடு இல்லாத ஜிஎஸ்டியை எதிர்த்துதான், குஜராத் முதல்வராக இருந்த மோடி, கொந்தளித்தார். மற்ற மாநிலங்களுக்கு இந்த பாதிப்பு வரக்கூடாது என்பதற்காகவே, 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு என்பதை உறுதிப்படுத்தினார்.
ஜிஎஸ்டி முறையில் கொள்ளை வரி வசூல் செய்யப்படுகிறது என்று முழங்கிய திமுக, இப்போது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள நிலையில், அதன் மாதாந்திர செலவு, வருடாந்திர பட்ஜெட் ஆகியவற்றுக்கு மிகப் பெரிய அளவில் கை கொடுக்கும் ஜிஎஸ்டியில் எப்படி கை வைக்கப்போகிறது?

பெட்ரோல், டீசல் மீதான விலை?

ஜிஎஸ்டியின் மாதாந்திர வசூல், அவ்வப்போது கிடைக்கும் இழப்பீட்டு தொகை என்பதைக் கடந்து, தமிழகம் மட்டுமின்றி பல மாநில அரசுகளின் கை செலவுக்கு பாக்கெட் மணியாக கை கொடுப்பது பெட்ரோல், டீசல் விற்பனை மீதான செஸ் மற்றும் வாட் வரிதான். இதில் கை வைத்தால், கடன் வாங்க நேரிடும் என்பதால் பல மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலை உயரும்போது சத்தமின்றி, தங்கள் கல்லாவை நிரப்பிக் கொண்டிருக்கின்றன.
ஆனால், பழி என்னவோ முழுக்க முழுக்க மத்திய அரசு மீதுதான். பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்திவிட்டது என்ற வாசகம்தான் செய்திச் சேனல்களில் ஸ்குரோலிங்காக ஓடிக் கொண்டிருக்கும். ஆனால், இப்போதைய விலை உயர்வுக்கு எண்ணை நிறுவனங்கள்தான் காரணம் என்று மாற்றப்பட்டுள்ளது. இது அரசியல் முரண்பாடு என்பதா? கொள்கை முரண்பாடு என்பதா? காரணம் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை மாநில அரசுகளின் கை செலவுக்கு சென்று கொண்டிருக்கிறது.
எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்துவதாக கூறியுள்ள மாநில அரசு, அதை எந்தளவுக்கு குறைக்கப்போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அப்படி குறைத்தால், அது பாக்கெட் மணியில் பொத்தல் விழுந்ததை ஞாபகப்படுத்தும்.

டாஸ்மாக் மூடப்படுமா?

நிச்சயமாக இப்படியொரு அறிவிப்பை எல்லோரும் எதிர்பார்ப்பது இயற்கைதான். ஆனால், திமுக அப்படியொன்றும் புத்தியில்லாத கட்சியல்ல. காரணம், ஜெகத், டிஆர் பாலு உட்பட திமுக விவிஐபிக்கள் நடத்தும் மது ஆலைகளில் இருந்து டாஸ்மாக்கிற்கு மது வகைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழகத்தின் 7 பிரபலமான மது ஆலைகள் அவர்கள் வசம் இருக்கும்போது, விற்பனைக்கு வேறு எங்கு போவார்கள். அத்துடன், ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் டாஸ்மாக் விற்பனை வழியாக கிடைத்துக் கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில் டாஸ்மாக்கை மூடினால், வருமானத்தை இழக்க வேண்டியிருக்கும். அதேநேரத்தில், டாஸ்மாக் கடைகளில் விற்பனையாளர், கண்காணிப்பாளராக இருக்கும் தொழிலாளர்களுக்கு மாற்று பணிகளை ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும். இருக்கும் வருமானத்தை இழந்து, புதிய செலவினங்களுக்கு வழி கோளும் வகையிலான நியமனங்களை திமுக அரசு அவ்வளவு எளிதில் முன்னெடுக்காது.

கல்விக் கடன் தள்ளுபடி?
திமுகவின் பிரதான அறிவிப்புகளில் ஒன்று கல்விக் கடன் தள்ளுபடி. இன்ஜினீயரிங் மற்றும் மருத்துவ மாணவர்கள், தங்கள் படிப்புக்காக பொதுத்துறை வங்கிகளில் பெற்ற கல்விக்கடனை, மாநில நிர்வாகம் எப்படி தள்ளுபடி செய்ய முடியும்? என்பது பில்லியன் டாலர் கேள்வி. இது ஒரு வகையில் சாத்தியப்படும். எப்படியென்றால், மத்தியில் தங்கள் உதவியில்லாமல் ஆட்சி நடத்த முடியாது என்ற நெருக்கடியில் ஒரு அரசு இருக்குமானால், அந்த அரசுக்கு நெருக்கடி கொடுத்து, கல்விக் கடனை ரத்து செய்ய வைக்கலாம். அல்லது, கல்விக் கடன் தொகையை மாநில அரசு செலுத்துவதாக, கடன் பத்திரங்கள் கொடுத்து, அவற்றை ரத்து செய்யும்படி கோரலாம். ஆனால், அப்படி செய்யும் நிலைமை ஏற்பட்டால், அதுவும் தமிழக அரசின் கடன் சுமையை அதிகரிக்கும்.

நலத்திட்டங்களால் கடன் சுமை?

தமிழக அரசின் இப்போதைய கடன் சுமை 5 லட்சம் கோடி ரூபாய்களாகும். இப்படிப்பட்ட சூழல்களில் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றால், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக அரசு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு (குறைந்தபட்சம்) கடன் வாங்கிட வேண்டியிருக்கும். இதனால், அரசின் கடன்சுமை அதிகபட்சம் 7 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயரும் சூழல் உள்ளது.
இதுதவிர அரசுத் துறையில் புதிய நியமனங்கள், சம்பளக் கமிஷன், அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும், அது தமிழக அரசுக்கு மிகமிகப் பெரிய சிக்கலான சூழல்களை ஏற்படுத்தும்.

இவை எல்லாம் ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்ற நிலையில், சுட்டிக்காட்டப்பட்டுள்ள சவால்கள்தான். இவை எல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு விஷயம்… சட்டம் ஒழுங்கு… இதைப்பற்றி இங்கே எழுதுவதைவிட, சமூக வலைத்தளம் ஒளிபரப்பு செய்திகள் சொல்லாமல் சொல்லும்.

எனவே, முதல்வராக பதவியேற்கும் கிரீடம் மலர் கிரீடமல்ல. முள் கிரீடம்.

3 COMMENTS

 1. சரியான அலசல். ஆனால் மக்கள் இவற்றையெல்லாம் எதிர்பார்த்ததுதான் திமுகவை தேர்ந்தெடுத்தார்கள். இவை கிடைக்காத பட்சத்தில் என்ன செய்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

 2. நிச்சயம்..இவ்வரசு அனைத்து வகையிலும் வெற்றி பெறுமா என்பது சந்தேகமே! எதிர் கட்சியாக இருக்கும் போது …ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் எதற்கு? என்று பதாகை ஏந்தி போராட்டம் நடத்தியவர்…தற்பொழுது காலை 8.00 மணிக்கே மதுக்கடைகளை திறக்க சொல்கிறார்…ஒரு பானை சோற்றுக்கு இந்த ஒரு சோறு பதம்.

 3. பொறியியல் படிப்பிற்கான பொது நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது 2007 என்று நினைக்கிறேன்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here