எரிபொருள் விலை உயர்வுக்கு என்னதான் காரணம்?

இந்தியாவின் பிரதான பிரச்னைகளில் ஒன்றாக, பெட்ரோலிய எரிபொருட்களின் பிரச்னை மாறிவிட்டது. மாதம் ஒருமுறை அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை என்ற பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றதுக்கு 2013ம் ஆண்டில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இப்போது, நாள் தோறும் விலையேற்றம் என்பது, தனியார்துறை ஊழியர்களுக்கும், நடுத்தர குடும்பத்துக்கும் பெரும் தலைவலியாகிக் கொண்டிருக்கிறது. பெட்ரோலிய பொருட்கள் மீதான தினசரி விலையேற்றத்துக்கு என்னதான் காரணம்?

உற்பத்தியின்றி, நுகர்வு அதிகம்

சர்வதேச அளவில் கச்சா எண்ணையை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா 3ம் இடத்தில் உள்ளது. தினம் 79 லட்சத்து 69 ஆயிரம் பேரல் இறக்குமதி செய்யும் அமெரிக்கா முதலிடத்திலும், 67 லட்சத்து 10 ஆயிரம் பேரல் உற்பத்தி செய்யும் சீனா 2ம் இடத்திலும் உள்ளது. இந்த வரியைில் இந்தியா தினமும் சராசரியாக 41 லட்சம் பேரல் கச்சா எண்ணையை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் கச்சா எண்ணை உற்பத்தி செய்யும் நாடுகள் பட்டியலில், நமது பாரதத்தின் நிலை என்ன தெரியுமா? முதல் 20 நாடுகளில் கூட இல்லை. கச்சா எண்ணை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா, சவுதி அரேபியா, இராக், கனடா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட், ஈரான், குவைத், பிரேசில், நைஜீரியா, அங்கோலா, மெக்சிகோ என்று வரிசையாக 20 நாடுகள் உள்ளன. இதில் இந்தியாவின் பங்களிப்பு தினமும் 6 லட்சத்து 70 ஆயிரம் பேரல் கச்சா எண்ணை மட்டுமே. நுகர்வுடன் ஒப்பிடும்போது, 75 முதல் 80 சதவீத கச்சா எண்ணையை நாம் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம்.

தேவையால் ஏற்படும் விலைப்போட்டி

சர்வதேச கச்சா எண்ணை சந்தையின் நிலவரத்தை எடுத்துக் கொண்டால், ஒபெக் நாடுகள் எனப்படும் எண்ணை உற்பத்தி வள நாடுகளான சவுதி, எமிரேட், குவைத், கத்தார், அல்ஜீரியா, லிபியா, வெனிசுலா, ஈரான், ஈராக் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளின் ஆதிக்கம் அதிகம். சர்வதேச சந்தையைப் பொறுத்தவரை இந்நாடுகள் வைப்பதே சட்டமாக இருந்த காலமும் உண்டு. ஆனால், ஓபெக் நாடுகளுக்கு இணையாக, அமெரிக்கா, ரஸ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் பெரும் அளவில் கச்சா எண்ணையை அகழ்வு செய்து எடுக்கத் தொடங்கியதும், ஓபெக் நாடுகளின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இப்போது, ஒரு நாட்டின் உற்பத்தி இழப்பை மற்றொரு நாடு ஈடு செய்யும் வகையிலான, எண்ணை அரசியல் நடந்து கொண்டிருக்கிறது.
காரணம், ரஸ்யா, சவுதி, கத்தார், ஈரான், ஈராக் மற்றும் குவைத் நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் பிரதான வருமானம் கச்சா எண்ணை விற்பனையால் நடக்கிறது. எண்ணை விற்பனை வீழ்ந்தால், இந்நாடுகளின் பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் என்பதே உண்மை. இதனால், கச்சா எண்ணை மீதான விலை நிர்ணயத்தையும், விற்பனையையும் நம்பியே இந்த நாடுகள் காலம் தள்ளிக் கொண்டிருக்கின்றன. சீனா, அமெரிக்காவைத் தவிர.

எந்தளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது?

இந்தக் கேள்விக்கான விடை தேடினால் வியப்பாக இருக்கிறது. 1989 ஏப்ரல் ஒன்றாம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.8.50, டீசல் ரூ.3.50, வீட்டு உபயோக காஸ் ரூ.57.60 அடுத்த 10 ஆண்டுகளில், அதாவது 1999ல் பெட்ரோல் 3 மடங்கு விலை உயர்வு. அதாவது, லிட்டர் ரூ.24. டீசல் ரூ.9. காஸ் ரூ.152. இதற்கு பிந்தைய 10 ஆண்டுகளில், 2009ல் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.45, டீசல் ரூ.36, காஸ். ரூ.311. இப்போது, 2021 மார்ச் 1ம் தேதியில் பெட்ரோல் ரூ.94, டீசல் ரூ.87. இந்த விலை உயர்வுடன் ஒப்பிடும்போது, தொழிலாளர்களின் சம்பளம், அரசு ஊழியர்களின் சம்பளம் என்ற பல விஷயங்களையும் ஒப்புநோக்கியாக வேண்டும். விலை உயர்வு நியாயமற்றதாக இருக்கிலாம். ஆனால், இதன் பின்னணியில் உள்ள நிர்வாக அரசியல் நிறைய பேருக்கு புரிவது இல்லை.

மத்திய, மாநில அரசுகளுக்கு பிரதான வருவாய்

நகர மறுக்கும் குதிரைக்கு முன், கொள்ளுக்கட்டை காண்பித்து, ஓடச் செய்வதுபோல், மந்தகதியில் இருந்த இந்தியாவின் தொழிற்துறையை ஜிடிபி வளர்ச்சி என்ற தார்க்குச்சியைக் கொண்டு, மத்திய, மாநில அரசுகள் ஓடச் செய்து கொண்டிருக்கின்றன. இந்த ஓட்டம் காலத்தின் கட்டாயம் என்றாலும், இதற்காக, தேசத்தின் மக்கள் கொடுத்த விலை அதிகம். தேசத்தின், மாநிலத்தின் வளர்ச்சிக்கான நிதியைத் திரட்டுவதில், இப்போதைய ஜிஎஸ்டி வரியும், இதற்கு முந்தைய வாட் வரியும், இத்துடன் இணைந்த வருமான வரியும் முக்கிய பங்காற்றின. ஆனால், எந்த ஒரு அரசாக இருந்தாலும், அதன் நடைமுறை செலவினங்களுக்கான நிதியைத் திரட்டுவதற்கு பெரும் பக்கபலமாக இருந்தது, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் மீதான விற்பனை வரிதான் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. துல்லியமாக சொல்வது என்றால், ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மீதும் மத்திய, மாநில அரசுகள் 50 ரூபாய் வரை வரியாக அள்ளிக் கொண்டிருக்கின்றன என்பதே கசப்பான உண்மையாகும்.

கடந்த ஆண்டில் மே மாதத்தில் (கொரோனா காலத்தில்) பெட்ரோல் லிட்டர் ரூ.71.26க்கு விற்றபோது, அதன் மீதான வரி மட்டும் ரூ.49.42. இதே காலகட்டத்தில் டீசல் மீதான விலை 70 ரூபாயாக இருந்தபோது, ரூ.48 ரூபாயாகும். இப்போது விலை உயர்ந்த நிலையில், இதப்போதைய வரி 50 ரூபாய்க்கு குறையாத நிலையில் இருக்கும் என்பதே உண்மை.

கொரோனா காலத்தில் அரசுகளை காப்பாற்றியது

2020ம் ஆண்டில் மார்ச் 4ம் வாரத்தில் நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்புக்காக ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில், கொரோனா நிவாரண நிதி, நோய் தடுப்பு மருந்துகள், கிருமிநாசினிகள், சிகிச்சை மையங்களுக்கான செலவின மேய்ப்பு என்று நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் பரபரப்பாகன செலவுகளை எதிர்நோக்கியிருந்தன.

கடும் ஊரடங்கு ஏப்ரலில் முடிவுக்கு வந்தது எப்படி? இந்தக் கேள்வி நிறைய பேருக்கு இருக்கத்தான் செய்தது. காரணம், எந்த ஒரு மாநில அரசுக்கும் ஜிஎஸ்டி வருவாய் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை. 2020 மார்ச், ஏப்ரலில் ஜிஎஸ்டி வருமானம் படுபாதாளத்துக்கு சென்றது. இதனால், தவித்துப்போன அரசுகள், தங்கள் கை செலவுக்கு கை கொடுக்கும் பெட்ரோல், டீசல் விற்பனையை கையில் எடுத்தன.

என்னதான், ஊரடங்கு என்றாலும், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பணிகளுக்கு வாகனங்களை இயக்கலாம் என்று அறிவிப்பு செய்தன. இந்த அறிவிப்புதான், திருப்புமுனை எனலாம். தொழிற்சாலை, வணிகம் முழுமையாக இயங்காத நேரத்தில், ரோட்டில் இயங்கிய வாகனங்கள்தான், அரசுகளின் கஜானாவை நிரப்பின.

அரசுகள் விதிக்கும் வரிகள் எவ்வளவு?

பெட்ரோல் / டீசல் மீது மத்திய அரசு விதிக்கும் சராசரி வரி என்பது லிட்டருக்கு ரூ.33 மற்றும் ரூ.32 ரூபாய் என்று மதிப்பீடு செய்து கொள்ளலாம். இதன்பின்னர், ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் பங்குக்கு பெட்ரோல் / டீசல் மீது வாட் வரி விதிக்கிறது. இது ஒவ்வொரு மாநிலத்தின் குறைந்தபட்ச அளவு 30 சதவீதம் ஆகும். நாட்டிலேயே அதிகபட்சமாக 33 சதவீதம் அளவுக்கு வாட் வரி விதிக்கப்படுகிறது. இப்போது, விலை உயர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஜிஎஸ்டி வளையத்துக்குள் பெட்ரோல் / டீசல் மீதான விலையைக் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடம் வலுத்துள்ளது. இதற்கு மத்திய அரசும் பச்சைக் கொடி காண்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இது நடக்குமானால், இப்போதைய விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையில், 10 முதல் 15 ரூபாய் வரை விலை குறையும் வாய்ப்பு உருவாகும்.

இன்றைய விலை நிலவரம் என்ன?

சர்வதேச கச்சா எண்ணை சந்தையில் நம் பொதுத்துறை எண்ணை நிறுவனங்கள் வாங்கும் கச்சா எண்ணையின் பெயர் பிரென்ட் ரகமாகும். 2ம் தரம் டபிள்யூடிஐ கச்சா எண்ணையாகும். இதில், பிரென்ட், டபிள்யூடிஐ எண்ணை ரகங்களுக்கு இடையே சிறிய வேறுபாடுதான் இருக்கிறது. பிரென்ட் ரகத்தில் கந்தகத்தின் அளவு குறைவாக இருக்கும். இதனால், இந்த ரக கச்சா எண்ணையை உற்பத்தி செய்யும் சவுதி, இங்கிலாந்து நாடுகளுக்கு எப்போதும் ஜாக்பாட்தான். டபிள்யூடிஐ கச்சா எண்ணையில் சிறிது கந்தகம் அதிகம் இருக்கும். இதனால், பிரென்ட் ரகத்தைவிட, சிறிது விலை குறைவாக இருக்கும்.
நேற்றைய நிலையில் பிரென்ட் ரகம் ஒரு பேரல் 66 டாலருக்கும், டபிள்யூடிஐ கச்சா எண்ணை 63 டாலருக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்திய மதிப்பில் முறையே ரூ. 4 ஆயிரத்து 851 மற்றும் ரூ.4 ஆயிரத்து 630 ஆகும்.

ஒரு பேரல் கச்சா எண்ணையில் என்னென்ன பிரிக்கலாம்?

ஒரு பேரல் கச்சா எண்ணை என்பது 42 கேலன் அல்லது 159 லிட்டர் கொள்ளளவைக் கொண்டது. கச்சா எண்ணை என்பது அதிக அடர்த்திக் கொண்டது. அதை சூடேற்றி சுத்திகரிப்பு செய்யும்போது கிடைக்கும் பொருட்களில் காஸ், பெட்ரோல், டீசல், விமான மண்ணெண்ணை, மண்ணெண்ணை, மசகு எண்ணை, பாரபின் மெழுகு, கந்தகம் மற்றும் தார் உட்பட பல பொருட்கள் கிடைக்கின்றன.

பொதுத்துறை எண்ணை நிறுவனங்கள் சர்வதேச நாடுகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 40 ரூபாய்க்கு வழங்கினால், ஏறக்குறைய இதே விலைக்குத்தான் நம் நாட்டுக்குள்ளும் வழங்குகின்றன. இதன்பின்னர், மத்திய, மாநில அரசுகளின் வரி, பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு உட்பட பொருட்கள் மீது திணிக்கப்படுகிறது.

2020ம் ஆண்டில் மட்டும் கச்சா எண்ணை இறக்குமதி வரியாக மத்திய அரசு சம்பாதித்த தொகையின் அளவு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயாகும். இந்தத் தொகையைக் கொண்டுதான், கரோனா காலத்தில் மத்திய அரசின் சமூக நலத்திட்டத்துக்கும், மாநில அரசுகளின் கரோனா நிவாரண நிதிக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டது. ஜிஎஸ்டி வீழ்ச்சியால் ஏற்பட்ட வருவாய் இழப்பை, இப்படித்தான் மத்திய, மாநில அரசுகள் சரிகட்டின என்பதே உண்மை.

நியாயமற்ற விலை உயர்வு

என்னதான் அடிப்படை செலவினங்களுக்கான நிதித் தேவைக்காக பெட்ரோலிய பொரட்கள் மீதான விலையை அரசுகள் உயர்த்துவதாக கூறினாலும், நியாயமற்ற விலை உயர்வால், சாமானிய நடுத்தர மக்கள் குடும்பம் நடத்தமுடியாமல் ஆட்டம் காணும் நிலையில் உள்ளனர். குறிப்பாக டீசல் மீதான விலை உயர்வு, போக்குவரத்து செலவினங்களை அதிகரித்துள்ளதால், அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, காய்கறி தொடங்கி, அனைத்துவிதமான பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது வருத்தமான விஷயமாகும். அதேநேரத்தில், அரசின் இலவச அறிவிப்புகள், சலுகைகள் உட்பட அனைத்தும் தேவையின்றி வரிசைப்படுத்தப்படுவதால், இதன் வலிகளை நடுத்தர வர்த்தகத்தினர் சுமக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இலவசத்தை தவிர்த்தாலே பெரும் அளவிலான செலவினங்களைக் குறைக்க முடியும். செலவுகள் குறைந்தால் வரியைக் குறைக்கலாம். ஆனால், ஓட்டு வங்கி அரசியல் பிரதானமாகிவிட்ட இந்தக் காலகட்டத்தில், ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் இந்தத் திட்டத்துக்கு ஒருபோதும் உடன்படப்போவதில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here