ஏன் திமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது! – ஏழு காரணங்கள்

141

1.ஊழல்:
சாதாரணமாக, எந்த அரசியல் கட்சியின் ஆட்சியிலும் ஊழல் இருக்கும் என்பது பொது பார்வை. ஆனால் ஊழலுக்காகவே ஆட்சி நடத்தப்படும் என்பது திமுக குறித்த மக்களின் அச்சம். ஊழலை அறிவியல்பூர்வமாக செய்யும் கட்சி என திமுக அறியப்படுகிறது. ஒரு அரசு மக்களுக்காக திட்டம் கொண்டு வரும். அந்த திட்டத்தில் சில மோசமான நபர்கள் ஊழல் செய்துவிடுவார்கள். இது அந்த அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும். இது நாம் பொதுவாக பார்ப்பது. ஆனால் திமுக அப்படி அல்ல. திமுகவில் ஊழல் செய்யவே திட்டங்கள் கொண்டு வரப்படும். அனைத்து துறைகளிலும் அனைத்து தளங்களிலும் ஊழல் செய்வதுதான் திமுகவின் தனி சிறப்பு. ஆட்சியில் மட்டுமல்லாது கட்சியிலும் ஊழல் செய்த தனித்தன்மை திமுகவின் தலைமை குடும்பத்துக்கு உண்டு. எனவேதான் எம்.ஜி.ஆர் அவர்கள் கணக்கு கேட்டு வெளியே வந்தார்கள். வீராணம் ஊழலிலேயே குடும்ப கட்சி பாரம்பரியமும் திமுகவுக்கு தொடங்கிவிட்டது. வீராணம் குடிநீர் திட்ட டெண்டர் கொடுக்கப்பட்டது முரசொலி மாறனுக்கு மிகவும் வேண்டிய சத்தியநாராயணன் என்கிற நபருக்கு. பின்னர் பூச்சி மருந்து ஊழல், மேம்பாலம் ஊழல், அலைக்கற்றை ஊழல் என திமுகவின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன. ஆனால் எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்றால் அதில்தான் இருக்கிறது சாமர்த்தியம். திமுகவின் ஊழல் அறிவியல்பூர்வமான ஊழல்.

உதாரணமாக 2ஜி அலைக்கற்றை  விவகாரம். இதில் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்காக 2007-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் உரிமம் பெறத் தகுதி உடையவை என்று அறிவிக்கப்பட்ட பின்னர் திடீரென்று திடீரென ஒரு சுபயோக சுபதினத்தில்  2007-ம் ஆண்டு செப்.25 அன்று மாலை 3.30 இலிருந்து 4:30 வரை பெறப்பட்டவை மட்டுமே தகுதியானவை என சொல்லியது ஐயம் திரிபற என்னவென்று அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் ஊழல் நிரூபிக்கப்பட முடியாமல் அனைவரும் வெளிவர முடிந்தது. இதுதான் திமுகவின் பலம். இப்படிப்பட்ட ஊழல் ராவணர்கள் ஆட்சியில் ஏறினால் மீண்டும் என்னென்ன ஊழல்கள் நடக்கும் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

2.நிலஅபகரிப்பு:
தமிழ்நாட்டின் வரலாற்றில் நில அபகரிப்பை ஒரு அன்றாட நிகழ்வாக மாற்றி ஒரு மாஃபியா கும்பலே அரசாண்டது போல் செயல்பட்டது 2006-2011 வரையிலான திமுக ஆட்சி. திமுக ஆட்சியின் போது ரூ 1220 கோடி மதிப்புள்ள 14523 ஏக்கர் அரசு நிலங்களும் நீராதார வளங்களுக்கான நிலங்களும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டன என தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 2006-2011 வரையிலான திமுக ஆட்சியில் தொழில் வணிகம் கல்வி நிறுவனங்களுக்காக ரூ 189.89 கோடி மதிப்பிள்ள 6773.54 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப்பட்டன. கோவை, ஈரோடு, நாகை, கரூர் , நாமக்கல் என 18 மாவட்டங்களில் 7065 ஏக்கருக்கு மேற்பட்ட நீராதார வளத்துக்கான நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டன. இது போக போலி ஆவணங்கள் மூலம் நில ஆக்கிரமிப்பு என்பதை ஒரு அறிவியல் துல்லியத்தன்மையுடன் செய்தனர் திமுகவினர். முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கூறியதாவது: திமுக ஆட்சியின் போது மக்கள் அளித்த 6000 நில அபகரிப்பு வழக்குகளில் 300 மட்டுமே காவல்துறையால் பதிவு செய்யப்பட்டன. அதீத நில அபகரிப்பின் விளைவாக நில அபகரிப்புகளை தடுத்து அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்டுத்தர என்றே தனிப்பிரிவு காவல்துறை உருவாக்கப்பட்டது ஒரு வேதனையான சாதனை என்றே சொல்ல வேண்டும்.

3.மின்வெட்டு:
2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியின் மறக்கமுடியாத ஒரு சாதனை அதன் தொடர் மின்வெட்டு. தொடர்ந்து பல மணி நேரங்கள் நீடிக்கும் மின்வெட்டுக்கள் தமிழ்நாடு முழுக்க கொடுங்கதையாக தொடர்ந்தன. ஒரு நாளைக்கு 16 மணிநேரத்துக்கும் மேல் அதுவும் இரவிலும் மின்சாரம் இல்லாமல் அனைத்து மக்களும் அவதிப்பட்டனர். ஆனால் திமுக அது குறித்தெல்லாம் கலங்கியதே இல்லை. எவ்வித அக்கறையும் மக்கள் நலனில் இல்லாமல் தங்களுக்கு கமிஷன் எவ்வளவு கிடைக்கும் என்பதிலேயே குறியாக இருந்த கட்சி திமுக. திமுகவுக்கான வாக்கு மின்வெட்டு மீண்டும் இருள் அரக்கனாக உலா வர வைக்கப்படும் வாக்கு. திமுகவுக்கு எதிரான வாக்கு ஒளிக்கும் வெளிச்சத்துக்குமான வாக்கு.

4.கல்வித்தரம்:
தயாநிதி மாறன் காங்கிரஸ் கூட்டணியில் அமைச்சராக போகிறார். அப்போது நிருபர்கள் அரசியல் அனுபவமும் அதிக வயதும் இல்லாத அவருக்கு பல மூத்த திமுக தலைவர்களை ஒதுக்கி மத்திய அமைச்சர் பதவியை அளிக்க காரணம் என்ன என்று கேட்டனர். அதற்கு காரணங்களை அடிக்கிய படியே கூறினார் மஞ்சள் துண்டு பகுத்தறிவாளர் மு.கருணாநிதி, ‘தயாநிதி மாறனுக்கு ஹிந்தி தெரியும்.’ அதாவது ஊரான் குழந்தைக்கு ஹிந்தி தெரியவேண்டாம் என்று சொல்லி உசுப்பேத்தி ஹிந்தி கல்வியை இல்லாமல் ஆக்கிய கருணாநிதி குடும்பம் தன் வீட்டு வாரிசுகளுக்கு ஹிந்தி கல்வியை அளித்திருக்கிறது.

சமச்சீர் கல்வி என்கிற பெயரில் திமுக அரசு கொண்டு வந்த கல்வி தமிழ்நாட்டின் கல்விதரத்தை அதல பாதாளத்துக்கே தள்ளிவிட்டது. காமராஜர், எம்.ஜி.ஆர் ஆகிய தலைவர்கள் தரமான கல்வியை தமிழ்நாடு எங்கும் ஏழை எளிய மக்களுக்கு கொண்டு சென்றனர். ஆனால் திமுக திட்டமிட்ட விதத்தில் கல்வியின் தரத்தை அழித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தாமல் தரமான கல்வியை பணக்காரர்களுக்கான சந்தை பொருளாக மாற்றியதோடு எல்லா திமுக பரம்பரை அரசியல் வாதிகளும் தரமான கல்வியை விற்கும் பெரிய தனியார் நிறுவனங்களை நடத்துகிறார்கள். எனவே எந்த எளிய திமுக தொண்டனும் என்றைக்கும் பரம்பரை திமுக அரசியல் குடும்பங்களுடன் போட்டியிடும் நிலைக்கு வர முடியாது.

இன்றைக்கு தரமான கல்வியை நல்ல தொழில்நுட்ப அறிவியல் கல்வியை அனைத்து தரப்பு மக்களுக்கும் அளிக்கும் மத்திய அரசின் புதிய கல்வி திட்டத்தை ஸ்டாலின் உட்பட பரம்பரை அரசியல் வாதிகள் எதிர்ப்பதன் காரணமும் இதுதான்.

5.ஜிகாதி பயங்கரவாதம்:

திமுக தலைவர் மஞ்சள் துண்டு பகுத்தறிவாளர் மு.கருணாநிதி ரொம்ப பெருமையுடன் சொல்லிக்கொள்வார், அவர் சிறுவயதிலேயே பாகிஸ்தான் ஆதரவாளர் என்று. பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்தவராம். எனவே ஜிகாதிகளை ஆதரிப்பதென்பது திமுகவின் டி.என்.ஏவிலேயே உள்ள ஒரு விஷயம்.  இதனால்தான் திமுக ஆட்சிக்கு வந்த போதெல்லாம் இங்கு ஜிகாதி பயங்கரவாதம் தலைவிரித்து ஆடியது. அது மட்டுமல்ல. வெளிப்படையாக ஜிகாதி பயங்கரவாதம் வெளியே தெரியாவிட்டாலும் கூட திமுக அரசின் மென்மை போக்கால் தமிழ்நாட்டில் ஜிகாத்துக்கான கட்டமைப்புகளை செய்ய முடியும் என்பதுதான் திமுக ஆட்சியின் முக்கிய பெரிய அபாயம். 

இந்த அபாயத்தை வெளிப்படையாக 1998 பிப்ரவரி 14 கோவை குண்டு வெடிப்பின் போது பார்த்தோம். பின்னர் அக்குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளி அப்துல் நாசர் மதானி 2007 இல் திமுக ஆட்சியின் போது குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டார். 1998 இல் நிகழ்ந்த கோவை குண்டு வெடிப்பு மும்பை குண்டு வெடிப்பைக் காட்டிலும் அதீத கவனத்துடன் திட்டமிடப் பட்டது. குற்றவாளிகளை விடுவிப்பதற்கான அரசியல் வியூகங்கள், சட்ட நுணுக்கங்கள், கைது செய்யப்படுவோருக்கான பொருள் உதவிகள் அனைத்தும் துல்லியமாக திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட குண்டு வெடிப்பு. 52-க்கும் மேற்பட்ட அப்பாவி உயிர்களை பலிவாங்கிய குண்டு வெடிப்பு. அத்தொடர் குண்டு வெடிப்பின் இறுதி குண்டுகள் மருத்துவமனைகளில் வைக்கப்பட்டிருந்தன. எங்கே காயம்பட்டவர்களை கொண்டு வருவார்களோ அங்கே இறுதி குண்டுகள் வெடிப்பதன் மூலம் சாவு எண்ணிக்கை அதிகமாக்கப்பட வேண்டுமென்று திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு.

ஆனால் இத்தனை நேர்த்தியான திட்டமிடுதலுக்கு பின்னால் அரசின் செயலற்ற மௌனம், உளவுத்துறை எச்சரிக்கையையும் பொருட்படுத்தாத இஸ்லாமியவாதிகளை செல்லப்பிள்ளைகளாக நடத்தும் போக்கு ஆகியவை இருந்தன. அப்போது அதிகாரத்தில் இருந்த மஞ்சள் துண்டு பகுத்தறிவு மு.கருணாநிதிக்கு இந்து கடவுளரை கிண்டலடிக்கவே நேரம் போதுமானதாக இருந்ததே அன்றி பயங்கரவாதத்தை தடுப்பதைக் குறித்து அவருக்கு ஆர்வம் இல்லை.

அதற்கு பிறகாவது திமுக பாடம் படித்ததா? இல்லை. 2006-2011 ஆட்சியின் போது திமுக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் இருந்த இஸ்லாமியவாதிகளை விடுவித்தது. 2006 இல் பதவியேற்ற இரண்டு வாரங்களுக்குள் திமுக 12 இஸ்லாமிய அடிப்படைவாத கைதிகளை விடுவித்தது. அல் உம்மா ஆதரவு கிச்சான் புகாரி உட்பட 12 பேர் வெளியே வந்தனர். திமுக அரசின் இந்த செய்கையால் மூத்த காவல்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர் என்கிறது ஆகஸ்ட் 8,2006 தேதியிட்ட இந்தியன் எகெஸ்பிரஸ் இதழ் இந்துக்கள் மட்டுமல்ல கொல்லப்பட்டது. தமிழ்நாட்டின் பல கிராமப்பகுதிகளில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் பழமைவாத இஸ்லாமிய சட்டங்களுக்கு கட்டுப்படாத இஸ்லாமிய பெண்களைக் கூட கொல்ல ஆரம்பித்தனர்.

இன்றைக்கு முக்கியமான ஜிகாதி பயங்கரவாதிகள் விசாரணை கைதிகளாக உள்ளே இருக்கிறார்கள். பாடி சுரேஷ் கொலை, ஆடிட்டர் ரமேஷ் கொலை, ராமலிங்கம் கொலை, சசிகுமார் படுகொலை என இந்து இயக்கத்தவர்களின் படு கொலைகளில் உள்ளே கைதிகளாக இன்று இருக்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் திமுக ஆட்சிக்கு வந்தால் ஒன்று வழக்குகள் பலவீனப்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள் அல்லது குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களோ நல்லெண்ணம் என்றோ அண்ணாதுரை பிறந்த நாள் அல்லது மு.கருணாநிதி பிறந்த நாள் என்றோ விடுதலை செய்யப்படுவார்கள்.

6.கிறிஸ்தவ மதமாற்ற ஊக்குவிப்பு:

திமுக என்னதான் பகுத்தறிவு பேசினாலும் அதன் தலைவர்களும் தலைமை குடும்ப வாரிசுகளும் அற்புத சுகமளிக்கும் கிறிஸ்தவ பிரசங்கிகள் முன்னால் பகுத்தறிவையெல்லாம் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு மேடையிலேயே முழங்கால் போட்டுவிடுவார்கள். ஸ்டாலினும் சரி, உதயநிதி ஸ்டாலினும் சரி எஸ்.ரா சற்குணம், மோகன் லாசரஸ் போன்ற ஹிந்து வெறுப்பு கிறிஸ்தவ அடிப்படைவாதிகளின் முன்னால் மண்டியிட்டு அரசியல் பிழைப்பு நடத்துகிறவர்கள்தான்.

எஸ்.ரா.சற்குணம் இந்து என்றால் மூக்கில் குத்து என்று பேசிய மனிதர். இவர்தான் திமுகவின் ஆதர்ச நாயகன். மோகன் சி லாசரஸோ சுனாமியால் தமிழர்கள் இறந்ததற்கு விக்கிர ஆராதனை காரணம் என்று சொல்லிய ஆசாமி. அத்துடன் நம் திருக்கோவில்கள் சாத்தானின் இடங்கள் என்று பேசியவர். இந்த ஆளுடன் மேடையில் தோன்றிருக்கிறார் உசுடாலின் (அதுதானே தூய தமிழ் பெயர்? இல்லையா?) என்கிற மு.க.ஸ்டாலின்.

இவற்றுக்கெல்லாம் மேலாக இருக்கிற ஆசாமி ஜகத் கஸ்பர். கத்தோலிக்க சபையின் ஸ்டார்டஜிஸ்ட். கனிமொழியின் நண்பர். தன்னை தமிழ் அன்பராகக் காட்டிக் கொண்டு கிறிஸ்தவ மதமாற்ற வியூகங்களை வகுக்கும் பலே ஆசாமி. இவரது தமிழ் ஆர்வலத்தனமெல்லாம் லெமூரியா போன்ற குடாக்குத்தனமாக இருக்கும். சாத்தூர் சேகரன், ஒரிஸா பாலு போன்ற விரிந்த உடைசல் பானை வித்தகர்களைக் கொண்டு தமிழ் வெறியை ஏற்றிவிட்டு அதில் கிறிஸ்தவ முதல் காணும் மதமாற்ற வியாபாரி. கனிமொழியின் கலாச்சார ஆலோசகர் என்று கருதத்தக்க மனிதர்.

இவர்களுக்கெல்லாம் ஆதாயமான கட்சி திமுக. அதாவது கிறிஸ்தவ மதமாற்ற வியாபாரிகளுக்கான அரசியல் புரோக்கர் திமுக.

7.ஹிந்து வெறுப்பு:

திமுக இஸ்லாமிய ஜிகாதிகளுக்கு பாதுகாவலனாக செயல்படுவதும் சரி, கிறிஸ்தவ  மதமாற்றத்துக்கான அரசியல் புரோக்கர்களாக செயல்படுவதும் ஏதோ வாக்கு வங்கிக்காக செய்யப்படுவது அல்ல. மாறாக,  ஹிந்து வெறுப்பு என்பது கருணாநிதி குடும்ப திமுகவின் அடிப்படை. 

ஈவெராவின் வக்கிரமான ஹிந்து வெறுப்பிலிருந்து சற்றே பின்வாங்கினார் சி.என். அண்ணாதுரை. ஒரு கட்டத்தில் தம் அரசின் லட்சிய உதாரணமாக வேதாந்த அரசரான ஜனகரை எடுத்துக்காட்டாக சொல்லக் கூட அண்ணா தயங்கவில்லை. ஆனால் அண்ணாவுக்கு பின்னர் அண்ணாவின் இந்த தன்மையை முன்னெடுத்தவர் கருணாநிதி அல்ல எம்.ஜி.ஆர் அவர்கள்தான். கருணாநிதியோ, ஈவெராவின் வக்கிரமான ஹிந்து வெறுப்பில் திளைத்தார். இஸ்லாமிய கிறிஸ்தவ அடிப்படைவாத மதமாற்ற சக்திகளுடன் கொள்கை கூட்டணி வைத்து கொண்டார்.

எனவே திமுகவின் பகுத்தறிவு என்பதே பகுத்தறிவல்ல. ஹிந்து வெறுப்பு என்பதற்கு அவர்கள் வைத்துக் கொண்ட பெயர் ‘பகுத்தறிவு.’

இவர்களின் தமிழ் பற்றே போலியானதுதான். இந்து மதத்தை நேசிக்காமல் தமிழ் மீது எப்படி பற்று இருக்க முடியும்? எனவேதான் தன் குடும்பத்தவர்களுக்கு என்ன துறை வேண்டும் என்பதற்காக மத்திய அரசை மிரட்டி கருணாநிதி இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போது அதை தடுக்காமல் மோசமாக ‘தூள்’ திரைப்படத்தில் வரும் வில்லனின் காமெடி காட்சி போல ஒரு காட்சியை கடற்கரையில் அரங்கேற்றிக் கொண்டிருந்தார்.

எனவேதான் இந்து திருமண சடங்குகள் குறித்து பகுத்தறிவில்லாமல் பிதற்றுகிறார் உசுடாலின் என்கிற ஸ்டாலின். பிள்ளையார் சிலையை பார்த்தால் ஏதோ தொடக்கூடாத ஒன்றை தொட்டது போல அருவெருப்பாக நகர்கிறார் கனிமொழி.

ஆனால் தங்கள் கட்சி இந்து விரோத கட்சி இல்லை என்கிறார்களே அதில்தான் இருக்கிறது திமுகவின் நயவஞ்சகம். கோவில்களுக்காக 1000 கோடி செலவழிப்பார்களாம். ஏற்கனவே சொன்னது போல ஊழல் செய்யவென்றே திட்டம் போடுகிற கூட்டம் திமுக. இந்து கோவில்களுக்காக செலவழிப்போம் என்றால் பொருள் அதை விட அதிகமாக திமுக குடும்ப வாரிசுகளுக்காக கொள்ளையடிப்போம் என்பதுதான்.

ஒவ்வொரு தமிழனும் இந்த ஏழு காரணங்களையும் நினைவில் கொண்டு திமுகவுக்கு ஒரு வாக்குக் கூட விழாமல் தமிழ்நாட்டையும் தமிழரையும் தமிழ் பண்பாட்டையும் காப்பாற்ற வேண்டும்.

+3

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here