ஐசிசி சார்பில் இந்த ஆண்டு முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆட்டம் நடத்தப்பட்டது. பல்வேறு போட்டிகளில் வெற்றியின் அடிப்படையில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் இறுதிப் போட்டிக்கு திகுதி பெற்றன. அதன்படி, சவுத்தாம்டன் மைதானத்தில் கடந்த 18ம் தேதி தொடங்கியது. முதல் நாளன்றே மழை காரணமாக போட்டி ஒத்தி வைக்கப்பட்டது. நான்காவது நாள் ஆட்டமும் மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது .
மீதமுள்ள நாட்களில் , முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்களும், நியூசிலாந்து 249 ரன்களும் எடுத்தன. 5வது நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 64 ரன்கள் எடுத்து 32 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்யும் வகையில் 6வது நாள் ஆட்டம் (ரிசர்வ் டே) நடைபெற்றது. இதில் இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 170 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்தது.
இதையடுத்து 53 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என நியூசிலாந்துக்கு இழக்கு நிர்ணயிக்கப்பட்டது. 44 ரன்களுக்குள் 2 விக்கெட்களை இழந்ததால் நியூசிலாந்து சற்று நெருக்கடிக்கு உள்ளானது. எனினும் வில்லியம்சன் (52 ரன்கள்) ராஸ் டைலர் (47 ரன்கள்) ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் அந்த அணி முதல் ஐசிசி டெஸ்ட் கோப்பையை கைப்பற்றியது. 45.5 ஓவர்களில் வெற்றி இழக்கை எட்டி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை நியூசிலாந்து தோல்வியடைய செய்தது.
2-வது இன்னிங்சில் மட்டும் இந்திய அணி கூடுதலாக ஒரு மணி நேரம் தாக்குப்பிடித்திருந்தால் இந்த டெஸ்ட் டிராவில் முடிந்து கோப்பையை பகிர்ந்திருக்கலாம். அவ்வாறு தான் நடக்கப்போகிறது என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களை நமது நட்சத்திர பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பி வெறுப்பேற்றிவிட்டனர்.
இந்த வெற்றியின் மூலம் 144 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் அணி என்ற சாதனையை நியூசிலாந்து பெற்றுள்ளது. கடந்த 2015 மற்றும் 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை ஒருநாள் போட்டிகளில் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்திருந்த நிலையில், இந்த வெற்றி அந்த அணிக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. இதற்கு முன்பு கடந்த2000ம் ஆண்டில் இந்தியாவை வீழ்த்து சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியதே நியூசிலாந்து அணியின் சிறப்பான பங்களிப்பாக பார்க்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் கடைசியாக ஆடிய 9 போட்டிகளில் ஒரு தோல்வியை கூட பெறவில்லை என்ற சிறப்பையும் நியூசிலாந்து அணி பெற்றுள்ளது. கடைசியாக ஆடிய 9 போட்டிகளில் 8 வெற்றியையும் ஒரு ட்ராவையும் அந்த அணி கண்டுள்ளது.
வாகை சூடிய நியூசிலாந்து அணிக்கு கதாயுதத்துடன் ரூ.11¾ கோடியும், 2-வது இடம் பிடித்த இந்திய அணிக்கு ரூ.5¾ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.