‘ஒன்றியம்’ என்ற விபரீத சொல்லாடல் நெருப்புடன் விளையாடும் திமுக

பதிவுச்சுருக்கம்:

👉என்ன தான் வம்பிழுக்கிறது திமுக?
👉பிரச்னை எப்படி ஆரம்பமானது?
👉அமெரிக்கா / இந்தியா என்ன வேறுபாடு உள்ளது?
👉இப்படித்தான் உருவானது அமெரிக்கா…
👉இந்தியா / அமெரிக்க வேறுபாடு?

தமிழகத்தில் எப்போது எல்லாம் பிரச்னைகள் அதிகரிக்கிறதோ, அப்போது எல்லாம் அவற்றை திசை திருப்புவதற்காக ஆளும் கட்சிகள் ஏதாவது ஒரு பிரச்னையைத் துாண்டி, அதன் பின்னணியில் குளிர் காயத் தொடங்கும். ஆனால், அவர்கள் சொல்லும், பிரச்சனையை கொஞ்சம் கூர்ந்து பார்த்தால், அதில் உப்பு, புளிக்கு உதாவாத விஷயங்கள் இருப்பதாக தோன்றும். ஆனால், கொஞ்சம் ஊன்றி கவனித்தால், அத்தனை விஷமத் தனங்களும், அந்தப் பிரச்சனையில் பொதிந்திருக்கும்.

இந்த வகையில், தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மத்திய அரசுடன் மோதுவதாக நினைத்துக் கொண்டு, கண்ணைக் கட்டிக் கொண்டு, களத்தில் இறங்கி கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறது. மிகச் சமீபத்தில், சில நாட்களுக்கு முன்னர் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் சர்ச்சையானது.

அனுப்புனர் ஸ்டாலின், தமிழக முதல்வர் என்று குறிப்பிட்ட நிலையில், பெறுநர் என்ற இடத்தில் திரு.பிரதமர் மோடி, பிரதமர் அலுவலகம், தெற்கு பிளாக்… என்று குறிப்பிட்டதாக, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். தன்னை தமிழக முதல்வர் என்று போட்டுக் கொள்ளத் தெரிந்த ஸ்டாலினுக்கு, மோடி எந்த நாட்டின் பிரதமர் என்று குறிப்பிட்டு, கடிதம் எழுதத் தெரியவில்லை. பிரிவினை வாதத்துக்கு விதை போடவேண்டாம் என்று கூறியிருந்தார், இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற நிலைதான்.

என்ன தான் வம்பிழுக்கிறது திமுக?

திமுகவின் முதல்வர் தொடங்கி, கடைசி எம்எல்ஏ வரை மத்திய அரசுடன் மோதும் மன நிலையில்தான் உள்ளனர். இறை நம்பிக்கை கொண்ட பிரதமருக்கும், இந்து மதத்தின் மீது மட்டுமே நம்பிக்கையில்லாத தமிழக முதல்வருக்குமான பனிப்போர், இப்போது தேசப் பிரிவினை என்ற அளவில் வந்து நிற்கிறது. மத்திய அரசுக்கு கடிதம் எழுதும்போதும், மத்திய அரசைப் பற்றி பேட்டிகளில் குறிப்பிடும்போதும் ஒன்றிய அரசு என்று குறிப்பிடுகின்றனர். அதாவது, இந்தியா என்பது பல மாநிலங்களின் கூட்டமைப்பில் உருவான ஒரு நாடு, இதில், தமிழகம் நினைத்தால் பிரிந்து தனிநாடாக மாறலாம் என்ற தோரணையுடன் பேசத் தொடங்கிவிட்டனர். தமிழக மீடியாக்களும் வேறு வழியின்றி, அரசன் எவ்வழியோ ,நாங்கள் அவ்வழி என்று ஒத்தூதுகின்றன.
ஆனால், தகவல் ஒளிபரப்புத்துறையை தன்வசம் வைத்துள்ள மத்திய அரசு, இதுபோன்ற சூழல்கள் வரும்போது, கொஞ்சம் கூர்ந்து கவனித்து,சாட்டையைச் சுழற்றத் தொடங்கினால், எல்லாம் கந்தலாகிவிடும். உள்துறை அமைச்சகம் மவுனமாக இருக்கும் வரைதான் எல்லாம் சாத்தியம். அதுவும், கொஞ்சம் செயல்படத் தொடங்கிவிட்டால், திமுக அரசின் நிலை குதிரைக்கு கடிவாளம் போட்டமாதிரியாகிவிடும்.

பிரச்னை எப்படி ஆரம்பமானது?

தமிழக அமைச்சர்களில் ஒருவரான நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், வாய் வீச்சுக்கு பெயர் பெற்றவர். யாரையும் மதிக்கமாட்டார். அமெரிக்காவின் பிரபல வங்கியின் பொருளாதாரத்தை உயர்த்திய காரணத்துக்காக, தமிழகத்தின் நிதி அமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தான் யுனைடட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்காவில் வாழ்ந்ததை மனதிற்கொண்டு, ‘இந்தியாவும் பல மாநிலங்களின் கூட்டமைப்புதான். ஒன்றிய அரசுதான் என்று அழைக்க வேண்டும்’ என்று பேட்டி கொடுத்தார். அவ்வளவுதான் பற்றிக் கொண்டது. திமுகவின் ஒட்டு மொத்த எம்பி, எம்எல்ஏக்கள் மத்திய அரசைப் பற்றி குறிப்பிடும்போது ஒன்றிய அரசு என்று குறிப்பிடத் தொடங்கிவிட்டனர்.

அமெரிக்கா / இந்தியா என்ன வேறுபாடு உள்ளது?

உலகின் மேற்கு நாடுகளுக்கு, கிழக்கின் செழுமை எப்போதும் பிடிக்காத ஒன்றாகும். இது அலெக்சாண்டர் காலத்தில் தொடங்கி, பாபர் காலம் வரை பொருந்தும். மேற்கில் வாழ வழியில்லாத நிலையில், ஒவ்வொரு மேற்கு நாடும் தன்னை வளப்படுத்திக் கொள்ள, கொள்ளையிட வந்த இடம்தான் இந்தியா. இந்த வகையில், மேற்கத்திய கொள்ளையர்கள் நாடும் அட்சய பாத்திரமாக இந்தியா எனப்படும் பாரத தேசம் திகழ்ந்தது. இப்படி, ஐரோப்பிய, மேற்காசிய கொள்ளையர்கள் சுரண்டிச் சென்றாலும் பாரதம் இன்றும் செலுமையுடன்தான் உள்ளது. அதாவது, இந்தியா எனப்படும் துணைக்கண்டம். ‘இமயம் முதல் குமரி வரை’ என்பது இந்தியாவுக்கான அடையாள எல்லை என்பது, நீதிக்கட்சியும், திராவிடர் கழகமும், திமுகவும் தோன்றும் முன்னர் தோன்றிய நியதி. தப்பிதமாக திராவிட சித்தாந்தம் என்று திரிக்கப்பட்ட வரலாறு பேசும், இப்போதைய அரசியல்வாதிகளால், இதை முழுவதும் புரிந்து கொள்ள முடியாது. இப்படிப்பட்ட பாதரதத்தை, அமெரிக்காவுடன் ஒப்பீடு செய்வது என்பது, பாரதத்தை அவமதிக்கும் செயலாகும். அமெரிக்காவின் வரலாறு என்பது கிபி 1500க்கு பின்னர்தான் தோன்றுகிறது. 500 ஆண்டுகள் பாரம்பரியம் மட்டுமே கொண்ட ஒரு நாட்டை, 5000 ஆண்டுகள் பழம் நாகரீகம், பண்பாடு, எல்லைகளைக் கொண்ட நாட்டுடன் ஒப்பீடு செய்வது, மகாதவறு.

இப்படித்தான் உருவானது அமெரிக்கா…

இந்தியாவை அடிமை வம்சத்தினரும், மொகலாயர்களும் ஆட்சி செய்வதாக கூறி, கொள்ளையடித்த அதே காலகட்டத்தில், ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்தவத்தின் பெயரால் பெரும் போர்கள் நடந்து கொண்டிருந்தன. இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுக்கல், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து உட்பட பல நாடுகளும் தாங்கள் தப்பிப்பிழைக்க, இப்போதுள்ள நாடுகள் போதாது. புதிய குடியேற்றங்கள் கொண்ட நிலப்பகுத வேண்டும். செல்வங்களை கொள்ளையடிக்க வேண்டும் என்ற மனோ நிலையில் இருந்தன. பார்த்தலோமியா டயஸ், கொலம்பஸ் உட்பட கடற்பயணத்தின் திறமையான மாலுமிகளை உலகின் பல மூளைகளுக்கு அனுப்பின. பெரும் பணம் செலவிட்டன. இப்படியாக கொலம்பஸ் தன் 4 கடற் பயணிங்களில், ஒரு கடற் பயணத்தில்தான் அமெரிக்காவை கண்டுபிடித்தார்.

கிபி 1492ல் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்தார். இதன் வழியாக ஸ்பெயின் அரசின் குடியேற்றம் அமெரிக்காவில் தொடங்கியது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து, இத்தாலி, போர்ச்சுக்கல் உட்பட பல நாடுகளின் மக்களும் அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளில் குடியேற்றத்தை அமைத்தனர். ஆனால், ஐரோப்பாவில் என்ன நிலையோ, அமெரிக்காவிலும் அதே நிலைதான் நீடித்தது. அதாவது, ஐரோப்பாவில் தொடங்கிய யுத்தம், அமெரிக்காவிலும் நீடித்தது. இந்த வகையில், அமெரிக்கா என்பது ஐரோப்பிய இனக் குழுக்களின் எச்சம் எனலாம். இதில், எந்த வித சங்கடமும், சங்கோஜமும் தேவையில்லை.

இந்த இனக் குழுக்கள், தங்களில் யார் பெரியவர் என்பதை நிலை நிறுத்திக் கொள்வதற்காக உள்நாட்டுப் போரில் தீவிரமாகின. இந்த வகையில், அமெரிக்கன் சிவில்வார் என்பது, அமெரிக்காவின் வரலாற்றில் மிகப் பெரிய தாக்கத்தை பதிவு செய்துள்ளது. இனிமேலும், சிவில்வார் நடந்தால், அது அமெரிக்காவில் குடியேறிய லட்சக் கணக்கான ஐரோப்பிய மக்களுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஜார்ஜ் வாஷிங்டன் உணர்ந்ததால், உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். இப்படி, அமெரிக்கன் சிவில்வார் முடிவில், பல இனக்குழுக்கள் தாங்கள் கைப்பற்றிய நிலத்தை சுயமாக ஆட்சி செய்து கொள்ளும் மன நிலையில் இருந்தாலும், பிராந்திய பாதுகாப்பு என்ற ரீதியில் ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட தேசசமாக உருவானார்கள். அதாவது, பல மாகாணங்கள் இணைந்து ஒரு தேசமாக, யுனைடட் ஸ்டேஸ்ட் ஆப் அமெரிக்காவாக உருவானார்கள்.

இந்தியா / அமெரிக்க வேறுபாடு?

இந்தியாவை கொள்ளையடித்துக் கொண்டிருந்த மொகலாயர்கள், மத்தியில் வணிக நோக்கில் வந்திறங்கிய கிறிஸ்தவர்களுக்கும் கொள்ளையிட ஆசை வந்தது. அமெரிக்காவில் அடித்துக் கொண்டதைப் போலவே, இந்தியாவில் போர்ச்சக்கல், பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின் நாடுகள் அடித்துக் கொள்ளத் தொடங்கின. இதில், கடற்படையில் வலிமையான நாடாக விளங்கிய இங்கிலாந்து, கொஞ்சம் பெரிய பிஸ்தவாக தன்னை நிரூபித்துக் கொண்டு, அசாம் தொடங்கி குஜராத் வரை, காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. கொஞ்சம் அதிர்ச்சி என்னவென்றால், தங்கள் வலுவான ஆயுத பலத்தால், சில லட்சம் பேர் கொண்ட இங்கிலாந்து, பல கோடி மக்கள் தொகை கொண்ட பாரதத்தை அடக்கியாண்டது. சுதந்திரம் என்ற நிலைப்பாடு வரும்போது, இந்தியா முழுவதும்தான் கிறிஸ்தவர்களை எதிர்த்துப் போராடினார்கள்.

இந்த வகையில், இங்கிலாந்து, பிரான்ஸ், போர்ச்சுக்கல் கிறிஸ்தவர்கள் இந்தியாவில் இருந்து செல்லும்போது, ஒருங்கிணைந்த ஒரு தேசமாகத்தான் பாரதத்தை, அதன் பழங்கால எல்லைகள் அடிப்படையில் இந்தியாவாக்கி கொடுத்துச் சென்றார்கள். இந்தியாவின் சுதந்திரத்தின்போது கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை மாகாணங்கள் என்றுதான் பெரிய அளவில் அடையாளப்படுத்தப்பட்டன. இந்த மாகாணங்களின் உச்ச ஆட்சி அதிகாரம் டில்லியில், மத்திய அரசு வசமே இருந்தது. அப்படித்தான் அரசியல் சாசனமும் உருவாக்கப்பட்டது. இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்தின்படி பார்த்தால், மத்திய அரசு நினைத்தால் புதிய மாநிலத்தை உருவாக்கிட முடியும். மாநிலங்களின் எல்லைகளை மாற்றிட முடியும். இந்த அடிப்படையில்தான் 1956ம் ஆண்டில் சென்னை மாகாணத்தை உடைத்து பல மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. ஜார்கண்ட், உத்தரகாண்ட் , தெலுங்கானா என்று மேலும் பல மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

இந்த மாநிலங்களின் உருவாக்கம் சொல்லும் அதிகாரம் என்னவென்றால், இந்தியாவைப் பொறுத்தவரை மத்திய அரசுதான் சர்வ அதிகாரம் பொறுந்தியது. மாநில அரசு என்பது, மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதே. ரொம்பவும் பேசினால், மத்திய அமைச்சரவை முடிவுப்படி, ஆட்சியைக் கலைக்க முடியும். இப்படி திமுக ஆட்சி 2 முறை கலைக்கப்பட்டுள்ளது. மிசா முடியும் காலத்திலும், புலிகளுக்கு ஆதரவான நிலையிலும் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை சுட்டிக்காட்டுவது எதற்காக என்றால், மத்திய அரசு சர்வ வல்லமை கொண்டது. அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்துக்கு உட்பட்டு, மத்திய அரசு தன்னை செயல்படுத்திக் கொள்ள முடியும். இவ்வளவும், அமெரிக்கா ரிட்டன் நம்ம மாநில நிதி அமைச்சருக்கு தெரியாமல் இருக்காது. தெரிந்திருந்தும், இப்படி பேசிக் கொண்டிருப்பது, நெருப்புடன் விளையாடும் ஒரு செயலுக்கு ஒப்பானதாகும்.

கடைசியாக சொல்வது என்றால், தமிழகம் என்பது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பல ஊராட்சி ஒன்றியங்களின் கூட்டமைப்பாகும். இந்த அடிப்படையில் பார்த்தால், நமது மாநில நிர்வாகத்தை எப்படி அழைப்பது? கடந்த ஆட்சியில் புதிதாக சில மாவட்டங்கள் பிரித்து உருவாக்கப்பட்டதை, இங்கே சுட்டிக்காட்டலாம். நமது மாநிலம் பல ஊராட்சி ஒன்றியங்களின் கூட்டமைப்புதான். ஊராட்சிகளில் வசூலிக்கப்படும் வீட்டுவரி, தவிர தொழில்வரி உட்படபல்வேறு வரிகளும் மாநில அரசுக்கு பறக்கிறது. இதை எல்லாம் கூட்டிக் கழித்துப்பார்த்தால், இப்போதைக்கு நம் மாநிலத்தில், ஒன்றிய அரசு கூக்குரல் ஏன் வந்திருக்கிறது என்று சொல்லாமலேயே புரியும். சொல்வதற்கு ஒன்றும் இல்லைதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here