கடவுள் உருவங்களைக்காட்டி மோசடி செய்யும் கமல் – கலெக்டர் அலுவலகத்தில் சுயேச்சை வேட்பாளர் புகார்

27

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவரை எதிர்த்து கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் களம் இறங்கும் சுயேச்சை வேட்பாளர் பழனிக்குமார்,என்பவர் இது தொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் நாகராஜனிடம் புகார் கொடுத்திருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து பழனிக்குமார் கூறியதாவது: ராம் நகர் ஏரியாவில் கமல் ஓட்டு கேட்டார். இரவு, 7:00 மணியிருக்கும். அவர் பின்னால் பிரசார வேன் மெதுவாக வந்தது. அதில், அம்மன், ராமர், கிருஷ்ணர் வேஷம் போட்ட பெண்கள், இருந்தனர். ராமர் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்தவர்களிடம் அவர்கள் கமலுக்காக ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தனர்.

கடவுளே வந்து கமலுக்கு ஓட்டு கேட்பது போன்ற ஏற்பாடு இது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 123(3)ன் படி இது மிகப் பெரிய குற்றம். இதற்காக, கமல் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பதோடு, அவரை வேட்பாளர் தகுதி இழப்பு செய்ய வேண்டும் என்றும் புகார் கொடுத்திருக்கிறேன். ‘மதமில்லை; கடவுள் இல்லை’ என, சொல்லும் கமல், கடவுள் உருவங்களை காட்டி பிரசாரம் செய்வது பெரிய மோசடி.இவ்வாறு பழனிக்குமார் கூறினார்.

அவரது சட்ட ஆலோசகர் யோகேஸ்வரன் கூறியதாவது: மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, மத அடையாளங்கள் வைத்து பிரசாரம் செய்தாலே, அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கலாம். யாருக்காக அந்த பிரசாரம் செய்யப்பட்டதோ, அவர் வேட்பாளராக நிற்கும் தகுதியை இழந்து விட்டதாக தேர்தல் அதிகாரியே உத்தரவு போடலாம்.

அப்படி நடக்காமல் தேர்தல் நடந்து முடிந்து, ஒருவேளை கமல் வெற்றி பெற்றிருந்தாலும், ஐகோர்ட்டில் வழக்கு போட்டு அவருடைய வெற்றியை செல்லாது என அறிவிக்க வைக்கலாம். அவர் தோல்வி அடைந்திருந்தால், வாழ் நாள் முழுவதும் இனி தேர்தலில் நிற்க முடியாத அளவுக்கு தடை விதிக்கலாம். சட்டம் தெளிவாக இருப்பதாலும், ஆதாரங்கள் பலமாக இருப்பதாலும், நிச்சயம் நடவடிக்கை இருக்கும். இவ்வாறு யோகேஸ்வரன் கூறினார் .

0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here