கலவரத்தை தூண்டுவது கருத்து சுதந்திரமா?

நாட்டில் அமைதி நிலவச்செய்வதில் ஊடகங்களுக்கும் முக்கிய கடமை உண்டு. இரு தரப்பினர் கலவரத்தில் ஈடுபடும் போது அவர்கள் சார்ந்த ஜாதி, மதங்களை அடையாளப்படுத்தாமல் இருப்பதற்கு காரணம், அந்த கலவரம் பிற பகுதிகளுக்கு பரவிவிடக் கூடாது என்பதற்காகத் தான்.ஆனால் சமீப காலங்களாக தங்கள் டிஆர்பி ரேட்டிங் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும், தங்கள் திரைமறைவு அரசியல் எஜமானர்களின் அரசியலுக்காகவும் ஊடகத்துறையினர் எல்லை மீறி நடந்து கொள்வதும், சட்டநடவடிக்கை பாயும் போது கருத்து சுதந்திரம், பத்திரிக்கை சுதந்திரம் என்ற போர்வையில் ஒளிந்து கொள்வதும் நடக்கிறது.

டில்லியில் விவசாய சட்டங்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் சமூகவிரோதிகள் நடத்திய வன்முறையை கண்டு நாடே கொதித்தது. காவல்துறையின் தடையை தகர்த்தெறிய தனி இரும்பு கூண்டுகளை டிராக்டர்களில் பொறுத்தி வந்த போராட்டக்காரர்களை எதிர்கொள்ள முடியாமல் காவல்துறையினர் திணறியபோதும், போராட்டக்காரர்களுக்கு எதிராக துப்பாக்கிகளை தூக்கவில்லை. 300 க்கும் மேற்பட்ட போலீசார் ரத்தம் சிந்தி, போராட்டக்காரர்களின் ரத்தம் சிந்தாமல் பார்த்துக் கொண்டனர்.

எந்த கட்டுப்பாடும் இல்லாமல் நடந்து கொண்ட போராட்டக்காரர்களின் ஒருவரான நவநீத் என்பவர் போலீசாரின் தடுப்புகள் மீது டிராக்டரை ஏற்றியதில், டிராக்டர் கவிழ்ந்து அதனடியில் சிக்கி பலியானார். ஆனால் அவரை காவல்துறையினர் சுட்டுக் கொன்று விட்டதாக இந்தியாடுடே பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசாய் டிவீட்டரில் பதிவு வெளியிட்டார். இவரைப்போலவே அரசுக்கு எதிராக செயல்படும் பலரும் பதிவிட்டனர். போலீசார் விரைந்து செயல்பட்டு டிராக்டர் கவிழ்ந்த சிசிடிவி காட்சிகளை வெளியிடவே, தனது டிவீட்டரை மட்டும் நீக்கிவிட்டு அமைதியாக இருந்துவிட்டார் சர்தேசாய்.

காவல்துறையினர் சம்பவ வீடியோவை உடனே வெளியிடாமல் இருந்திருந்தால், நாடு முழுவதும் கலவரம் வெடித்திருக்கும், எண்ணற்றோர் பலியாகியிருக்கும் அபாயம் உள்ளது. ஆனால் ராஜ்தீப் சர்தேசாய் எதுவும் நடவாதது போல இருந்து கொண்டிருக்கிறார். இந்தியா டுடே நிர்வாகம் அவருக்கு சிறு தண்டனை வழங்கியுள்ஹதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

. சர்தேசாய் இது போல கருத்துக்களை மாற்றி மாற்றி பதிவிடுவது சந்தேகம் அளிப்பதாகவும் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். ஒரு செய்தியின் உண்மைத்தன்மை தெரியாமல் ஒரு பத்திரிக்கையாளரே இப்படி நடந்துக்கொள்ளலாமா எனவும் பலரும் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். முதலில் செய்த ட்வீட் இன்னொரு வன்முறைக்கு காரணமாய் கூட அமைந்துவிடலாம். அவ்வளவு அப்பட்டமான வார்த்தை வெளிப்பாடு அந்த ட்வீட்டில் காணப்பட்டுள்ளது. ஒருவேளை சர்தேசாய் கூறுவது பொய் என நிரூபணம் ஆனால், சட்ட ஒழுங்கை சீர்குலைக்க முயன்றதாக சிறைத்தண்டனை கிடைக்கும்.

சர்தேசாய் மட்டுமே இந்த அப்பட்டமான தவறை செய்யவில்லை. இன்னொரு பத்திரிக்கை நாளிதழின் டிவிட்டர் பக்கமும், “உத்தரகாந்த் மாநிலத்தை சேர்ந்த 34 வயதான நவநீத் சிங், #Farmer protester, இன்று மதியம்  போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இது ஆந்திர எஜுகேஷன் சொசைட்டிக்கு வெளியே தீன தயாள உபத்ய மார்க்கத்திடம் நடந்துள்ளது” என்ற பதிவை போட்டது. வன்முறையை தூண்டும் வகையில் #FarmerProtest என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கசப்பான உண்மைகளை வெளியிட தயங்கும் பத்திரிக்கைகள் தான் இன்று பொய் தகவலை கொஞ்சம் கூட பயம் இல்லாமல் போட துணிந்துவிட்டது என்று பலரும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இது போன்ற ஆதாரம் அற்ற தகவலை பதிவிட்டு எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றி விளம்பரம் தேடிக்கொள்வது இன்றைய நாளில் ஃபேஷன் ஆகிவிட்டது. பத்திரிக்கைகளுக்கு நம் நாட்டு இறையாண்மையை பாதுகாப்பதில் எள்ளளவும் பொறுப்பில்லை என பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

பத்திரிக்கை தரப்பு “இது பத்திரிக்கை சுதந்திரம், உண்மையை வெளிக்கொண்டு வர இது போன்ற கருத்துக்களை ஊடகவியலாளர்கள் பதிவிடுவது ஒன்றும் புதிதல்ல. நாங்கள் ஜனநாயக விதிப்படியே செயல்படுகிறோம்.” என்று கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் கூறி ஒவ்வொரு முறையும் இது போன்ற குற்றச்செயல்களில் இருந்து தப்பித்து வருகிறது.

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய். நீங்கள் நேரம் செலவிட்டு எது உண்மை? எது பொய்? என ஆராய தொடங்கிவிட்டால், பிரச்சனைக்கான ஆணி வேர் எது என்பது தெளிவாக புரிய தொடங்கிவிடும் என்பது பலர் கருத்து.

முதலாவது, இது அமைதியான முறையில் நடந்த போராட்டமா? பொது சொத்துக்களை ஆக்கிரமிப்பது எப்படி அமைதியான போராட்டம் ஆகும்? 1500 மொபைல் டவர்களை சேதப்படுத்துவது எப்படி அமைதியான போராட்டம் ஆகும்? அதிலும் 26ஆம் தேதி காணப்பட்ட ஆக்ரோஷம், அமைதியை சீர்குலைக்க நடந்ததாகவே பலராலும் பார்க்கப்படுகிறது. அனைத்தும் வீடியோவில் பதிவானது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது, விவசாயிகள் கோரிக்கையை கேட்டு அரசாங்கம் எடுத்த முடிவால் உண்டான நற்பலனை எந்த ஊடகமும் காட்டவில்லை. மாறாக, ‘விவசாயிகள் அதிருப்தி’ என்பதையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி மற்றவர் மனதில் நஞ்சை விதைத்தது. இதன் தாக்கம், என்னவென புரியாமலே அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்தனர் பலரும்.

மூன்றாவது, வேளாண் சட்டத்தை ஏற்றுக்கொண்ட விவசாயிகளை எந்த ஊடகமும் கண்டுக்கொள்ளவே இல்லை. அதனை எதிர்ப்பவர்களை மட்டுமே எப்போதும் காட்டி வந்தது. இதனால் போராட்டம் செய்பவர்கள் பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே என்பது வெளிச்சத்திற்கு வந்தது.

ஒரு சில பத்திரிக்கைகளுக்கு விவசாயிகளின் உண்மை கோரிக்கை என்னவென்றே கடைசி வரை தெரியாது என்பதும் அரசாங்கத்தால் கொண்டு வரப்படும் இச்சட்டத்தின் பயன் பற்றி பேச மனமில்லாமல் போனதும் மிக வேதனையான விஷயமே. ஒரு ஆடு செல்லும் பாதையில் தான் மற்ற ஆடுகள் பயணிக்குமாம், மந்தையாக. அப்படி தான் இது அமைந்திருப்பதாக பல நிபுணர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.

உண்மை நிலையை பதிவிட விரும்பும் பத்திரிக்கைகளுக்கு இன்றைய காலக்கட்டத்தில் வரவேற்பு மிகக்குறைவு என்பதாலே எல்லோரும் ஒரே மாதிரி செயல்பட்டு விளம்பரம் தேடி சம்பாதிக்க தொடங்கிவிட்டனர் என்றும் இதுவா உண்மையான பத்திரிக்கை சுதந்திரம் என்றும் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். உண்மை ஒரு நாள் வெல்லும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Source : Swarajya

2 COMMENTS

  1. கலவரத்தை தூண்டுபவர்கள் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் தப்பிவிடக்கூடாது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here