காரில் தனியாகச் சென்றாலும் முகக்கவசம் அணிவது கட்டாயம்: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

5

கரோனா பரவல் காலத்தில் காரில் தனியாகச் சென்றாலும் முகக்கவசம் அணிவது கட்டாயம். கரோனா பரவலைத் தடுக்கும் கேடயமாக முகக்கவசம் இருந்து வருகிறது என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காரில் தனியாகச் செல்வோரும் முகக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறு அணியாவிட்டால் அபராதம் விதிக்கும் நடைமுறையை டெல்லி அரசு செயல்படுத்தி வருகிறது. டெல்லி அரசின் நடவடிக்கைக்கு எதிராக வழக்கறிஞர்கள் 4 பேர் சேர்ந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி பிரதிபா எம்.சிங் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வழக்கறிஞர் ஃபர்மான் அலி மாக்ரே ஆஜரானார். அவர் கூறுகையில், “காரில் தனியாகச் செல்வோரும் முகக்கவசம் அணிய வேண்டும் என மத்திய அரசு ஏதும் உத்தரவிடவில்லை. ஆனால், அதே சமயம் சுகாதாரம் என்பது மாநில அரசுக்கு உட்பட்டது என்பதால், இதில் டெல்லி அரசுதான் முடிவெடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

டெல்லி அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், “டெல்லியில் காரில் தனியாகச் செல்வோரும் முகக்கவசம் அணிவது கட்டாயம். இது நடைமுறையில் இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

பிரதிநிதித்துவப்படம்

நீதிபதி பிரதிபா எம்.சிங் பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், ”காரில் தனியாகப் பயணிப்போரும் முகக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறு அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்ற டெல்லி அரசின் விதிமுறைகளில் நீதிமன்றம் தலையிடாது. காரில் ஒருவர் மட்டும் தனியாகச் சென்றாலும் அவர் முகக்கவசம் அணிய வேண்டும்.

கரோனா வைரஸ் பரவல் காலத்தில் ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம். ஒருவர் தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் அல்லது செலுத்தாவிட்டாலும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

முகக்கவசம் அணிந்திருப்பது என்பது, நமக்குப் பாதுகாப்பு கேடயம் போலாகும். இதன் மூலம் கரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். முகக்கவசம் அணிந்திருந்தால் ஒருவர் கரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம் என்று மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர்.

ஒருவர் முகக்கவசம் அணிந்தால், அதன் மூலம் லட்சக்கணக்கான உயிர்களைக் கரோனா பரவல் காலத்தில் காப்பாற்ற முடியும். டெல்லியில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, மாநில அரசின் நடவடிக்கைக்கு உதவியாக வழக்கறிஞர்களும், மனுதாரர்களும் இருக்க வேண்டும். மாறாக விதிகளைக் கேள்வி கேட்கக் கூடாது. ஆதலால், இந்த மனுக்களை விசாரிக்க இயலாது” எனத் தெரிவித்தார்.

0

Disclaimer: This news is auto-aggregated by a computer program and has not been created or edited by NewsGuru. Publisher: இந்து தமிழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here