கோவிட் சுரக்ஷா திட்டம்; கோவாக்சின் மருந்து உற்பத்தி திறன் அதிகரிப்பு

3

உள்நாட்டு கோவிட் தடுப்பூசிகள் உற்பத்தியை அதிகரிக்க, தற்சார்பு இந்தியா திட்டம் 3.0-ன் கீழ் கோவிட் சுரக்‌ஷா அறிவிக்கப்பட்டது. இதை மத்திய அரசின் உயிரிதொழில்நுட்பத் துறை அமல்படுத்துகிறது.

இத்திட்டத்தின் கீழ், தடுப்பூசி உற்பத்தி திறனை அதிகரிக்க, தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுக்கு மானியமாக நிதியுதவியை மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத்துறை வழங்கி வருகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியின் தற்போதைய உற்பத்தி திறன், 2021 மே-ஜூன் மாதங்களில் இரட்டிப்பாக்கப்படும் மற்றும் 2021 ஜூலை -ஆகஸ்ட்டில் 6 முதல் 7 மடங்காக உற்பத்தி அதிகரிக்கப்படும்.

உதாரணமாக ஏப்ரலில் 1 கோடியாக இருக்கும் கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி, ஜூலை -ஆகஸ்ட் மாதத்தில் 6 முதல் 7 கோடியாக அதிகரிக்கப்படும். இந்த அளவு 2021 செப்டம்பரில், சுமார் 10 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்காக, சில வாரங்களுக்கு முன், இந்தியாவில் 2 முக்கிய தடுப்பூசி உற்பத்தி மையங்களை மத்திய அமைச்சகங்களுக்கு இடையேயான குழுக்கள் பார்வையிட்டன. அப்போது தடுப்பூசி தயாரிப்பாளர்களுடன் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த அதிகரிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் இதர பொதுத்துறை தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்தி திறன்கள், தேவையான கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்படுகின்றன.

பெங்களூரில் அமைக்கப்படும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் புதிய மையத்துக்கு சுமார் ரூ.65 கோடி மத்திய அரசு சார்பில் மானியமாக வழங்கப்படுகிறது. தடுப்பூசி உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில் இந்த மையம் மாற்றியமைக்கப்படுகிறது.

தடுப்பூசி உற்பத்தித் திறனை அதிகரிக்க 3 பொதுத்துறை நிறுவனங்களுக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது.

மும்பையில், மகாராஷ்டிர அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான ஹப்கைன் பயோபார்மசூட்டிக்கல் கார்ப்ரேஷன் லிமிடெட் தடுப்பூசி தயாரிக்க, மத்திய அரசிடம் இருந்து ரூ.65 கோடி மானியமாக வழங்கப்படும்.

இப்பணியை மேற்கொள்ள 12 மாத கால அவகாசம் கேட்டது ஹப்கைன் பயோபார்மசூட்டிக்கல் நிறுவனம். ஆனால், 6 மாதத்துக்குள் இந்த பணியை முடிக்கும்படி மத்திய அரசு கூறியுள்ளது. இந்த மையம் செயல்பட்டால், மாதத்துக்கு 20 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை தயாரிக்க முடியும்.

தேசிய பால் வளர்ச்சி வாரியத்தின் கீழ் ஹைதராபாத்தில் செயல்படும் இந்தியன் இமுனோலாஜிக்கல்ஸ் நிறுவனம் மற்றும் உயிரி தொழில்நுட்ப துறையின் கீழ் புலந்சாகரில் செயல்படும் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பயாலஜிக்கல்ஸ் நிறுவனம் ஆகியவை இந்தாண்டு ஆகஸ்ட் -செப்டம்பர் மாதத்திற்குள், மாதம் 10 முதல் 15 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை தயாரிக்க மத்திய அரசு நிதியுதவி வழங்கும்.

0

Disclaimer: This news is auto-aggregated by a computer program and has not been created or edited by NewsGuru. Publisher: இந்து தமிழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here