கோவை, நவ 16, சட்டமன்ற தேர்தலையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஆயத்தப் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு ள்ளனர். இச் சூழலில் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்பு இன்று மாவட்ட ஆட்சியர் கே.ராசாமணி வெளியிட்டார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கே.ராசாமணி கூறியதாவது:
இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி கோவை மாவட்டத்தில் 29 லட்சத்து 70 ஆயிரத்து 733 வாக்காளர்கள் உள்ளனர்.
வெளியிடப்பட்ட பட்டியிலின் படி ஆண்கள் 14, 68,722, பெண்கள் 15,02,142 பேர். மற்றும் 369 மூன்றாம் பாலினத்தவர் உள்ளனர். இதில் 15,165 பேர் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் இருந்து 24, 727 பேர் நீக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு, முகவரி மாற்றம் மற்றும் ஒரே பெயர் மீண்டும் வருதல் உள்ளிட்ட காரணங்களால் நீக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளிலும் டிசம்பர் மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் மக்கள் கலந்துகொண்டு முகவரி மாற்றம், புதிதாக பெயர் சேர்ப்பு உள்ளிட்டவற்றை செய்து கொள்ளலாம்.
அடுத்த ஒரு மாத காலம் இந்த பணிகள் நடைபெற உள்ளன கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி அன்று வரை 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ளலாம். விரைவில் முழுமையான வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.