கோவை ,டிசம்பர் 25
கோவையில் இன்று காலை தொழிலதிபர் காரை மறித்து கத்தியை காட்டி 27 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் பூக்கோட்டூர் பகுதியை சேர்ந்த அவரான் என்பவரின் மகன் அப்துல் சலாம் (வயது 50). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் தனது தொழில் விஷயமாக அடிக்கடி கோவைக்கு வந்து செல்வது வழக்கம்.
அப்படி வந்து செல்லும்போது வியாபாரத்திற்கு உரிய பணத்தை எடுத்து செல்வாராம். இவரிடம் மலப்புரம் மாவட்டம் பூக் கோட்டூர் பகுதியை சேர்ந்த அசைன் என்பவரின் மகன் சம்சுதீன் (வயது 42) ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
அப்துல் சலாம் தனது காரில் ஓட்டுநர் சம்சுதீனுடன் நேற்று கோவைக்கு வந்தார்.பின்னர் வியாபாரம் முடிந்த பின்னர் இன்று அதிகாலை கோவையில் இருந்து புறப்பட்டார். அப்போது 27 லட்சம் ரூபாயை அப்துல் சலாம் வைத்து இருந்தார்
பாலக்காடு சாலை நவக்கரை நந்தி கோவில் அருகே, இன்று அதிகாலை 4:30 மணி அளவில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பின்னால் வந்த கார் ஒன்று அப்துல் சலாம் சென்ற காரை வழிமறித்தது
அந்த காரில் இருந்து இறங்கி வந்த ஐந்து பேர் அப்துல் சலாமை கத்தியை காட்டி மிரட்டினர்.பயந்து போன அப்துல் சலாமையும் அவரது டிரைவர் சம்சுதீனையும் காரில் இருந்து இறக்கி தள்ளி விட்ட அந்த கும்பல் அப்துல் சலாம் வந்த காரையும், அவர் கொண்டு வந்த 27 லட்ச ரூபாய் பணத்துடன் கொள்ளை அடித்து சென்றது.