கோவை மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

5
0

தமிழக சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

அடுத்த சில ஆண்டுகளில் 12 ஆயிரம் பஸ்கள் கொள்முதல் செய்யப்படும். அவற்றில் 2 ஆயிரம் பஸ்கள் மின்சார பஸ்களாக இருக்கும். முதல் கட்டத்தில் ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ. 1,580 கோடியில் 2,200 பி.எஸ்-6 பஸ்களும், 500 மின்சார பஸ்களும் கொள்முதல் செய்யப்படும்.


இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக 2021- 22-ம் ஆண்டின் இடைக்கால வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.623.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான நிதியில், மத்திய அரசு தனது பங்கை வழங்கும் என்று மத்திய நிதி மந்திரி தனது வரவு-செலவுத் திட்ட உரையில் தெரிவித்துள்ளதை நான் மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறேன்.

இத்துடன் இத்திட்டத்திற்கான மொத்த நிதி ஆதாரம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம் வழியாக விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வரையிலான மெட்ரோ ரெயில் நீட்டிப்பிற்கான விரிவான திட்ட அறிக்கையும், தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி வரையிலான திட்டத்திற்கான விரிவான சாத்தியக் கூறு அறிக்கையும் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரூ.6,683 கோடி மதிப்பீட்டில் 44 கிலோ மீட்டர் நீளமுள்ள கோவை மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்கு உயர்தர கல்வியை வழங்குவது இந்த அரசின் உயர்ந்த முன்னுரிமை ஆகும். எனவே பள்ளி கல்விக்காக அதிகபட்சமான ஒதுக்கீடாக, 2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.34,181.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மாணவர்கள் இடைவிடாமல் தொடர்ந்து கல்வி கற்பதை உறுதி செய்வதற்காக 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக பாடபுத்தகங்களை அரசு வழங்கியது. 12-ம் வகுப்புக்கு உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் மூலம் 1,912 வீடியோ பாடங்கள், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதனால் 4,20,624 மாணவர்கள் பயன் அடைந்தனர்.

5,522 வீடியோ பாடங்கள் தயாரிக்கப்பட்டு கல்வி தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. அரசின் சார்பாக 10 இதர தனியார் தொலைக்காட்சிகளும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கின்றன. மாணவர்களுக்கான பாடங்கள் பல்வேறு இணையதளங்களில் மின்னணு தொகுப்பில் பதிவேற்றப்பட்டுள்ளன.

இதுவரையில் கணிப்பொறி அறிவியல் பாடப்பிரிவானது 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் தனிப்பாடமாக கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி களிலும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகப்படுத்தப்படும்.

விவசாயிகளுக்கு மேலும் நிவாரணம் அளிக்கும் விதமாக, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய அனைத்து பயிர்க்கடன்களையும் தள்ளுபடி செய்வதாக முதல்-அமைச்சர் அறிவித்தார்.

இதனால் 16,43,347 விவசாயிகள் செலுத்த வேண்டிய 12,110.75 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடும் நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையில் கூட முதல்-அமைச்சர் விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.

பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்திற்காக 2021-22-ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு- செலவு திட்ட மதிப்பீடுகளில் 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு காப்பீட்டுக் கட்டண மானியத்தை கூடுதல் சுமையாக ஏற்றுக் கொண்டு, 80:20 எனும் பகிர்மான அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய இணைக் காப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்கு போதுமான இடர்க்காப்பீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

2020-21 ஆம் ஆண்டு வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்கான ஒதுக்கீடு 747.15 கோடி ரூபாயை உயர்த்தி, 2020-21-ம் ஆண்டில் திருத்த மதிப்பீடுகளில் 812.09 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகையை மேலும் உயர்த்தி, 2021-22-ம் ஆண்டுக்கான இடைக்கால வரவு -செலவு திட்ட மதிப்பீடுகளில் 1,738.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here