சமூகம், சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட மனிதர்: விவேக் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

8

சமூகம், சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட மனிதர் என்று விவேக் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். நேற்று (ஏப்ரல் 16) காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

விவேக்கின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அவருக்கு எக்மோ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 17) காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

திரையுலகில் விவேக்கின் சேவையைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது இந்திய அரசால் வழங்கப்படும் 4-வது உயரிய விருதாகும். பத்மஸ்ரீ விருது வென்றுள்ள விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“நடிகர் விவேக்கின் திடீர் மரணம் பலரைத் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது நகைச்சுவை உணர்வும், புத்திசாலித்தனமான வசனங்களும் மக்களுக்கு நல்ல பொழுதுபோக்காக இருந்தது. சமூகத்தின் மீதும், சுற்றுச்சூழலின் மீதும் அவருக்கிருந்த அக்கறை அவரது திரைப்படங்களிலும், அவரது வாழ்க்கையிலும் பிரகாசித்தது. அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் அனுதாபங்கள். ஓம் சாந்தி.”

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

0

Disclaimer: This news is auto-aggregated by a computer program and has not been created or edited by NewsGuru. Publisher: இந்து தமிழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here