சர்வதேச அடாவடி சீனா

உலகம் இன்று கொரோனா என்கிற கோவிட்-19 வைரஸைக் கண்டு அலறுகிறது. அந்த வைரஸ் சீனாவிலிருந்து உலகெங்கும் பரவியது. இன்றும் அந்த வைரஸின் உண்மை தோற்றம் தெளிவாகவில்லை. ஆனால் அதைக் குறித்து பேசுவதே – அதாவது அந்த வைரஸ் இயற்கையான ஒன்றா அல்லது ஏதாவது பரிசோதனை சாலை ஆராய்ச்சியிலிருந்து மாற்றமடைந்து வெளிவந்ததா என்கிற விஷயம்- பெரும் ஊடகங்களில் கமுக்கமாக பேசப்படக் கூடாத ஒன்றாக மாறியுள்ளது.

இதே போல ஒரு உலக பெருந்தொற்று இந்தியாவிலிருந்து உருவாகியிருந்தால் உலக நாடுகளில் நம் கதி என்னவாகியிருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. ஏன் நம் நாட்டு பெரும் ஊடகங்களே எப்படி கிழி கிழி என இந்தியாவைக் கிழித்திருக்கும் என்பதையும் சொல்ல தேவையில்லை. ஆனால் சீனாவைக் குறித்து பேசுவது எளிதல்ல. எல்லா தளங்களிலும் எல்லா இடங்களிலும் சீனா முதலீடுகள் செய்திருக்கிறது. ஊடகங்களில் சீன ஆதரவாளர்கள், அரசியலில் சீன ஆதரவாளர்கள். ஏன் அறிவியல் தொழில்நுட்ப துறைகளிலும் கூட சீன ஆதரவு சக்திகள் உண்டு.
இதோ இன்றும் நாளையும் உலக நாடுகளெல்லாம் வானை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கின்றன. சீனா அண்மையில் ஒரு விண்வெளி கேந்திரத்தை அனுப்பியது.

ஏப்ரல் 29 2021 இல் சீனா இந்த விண்வெளி கேந்திரத்தை அனுப்பியது. இதன் எடை 22.5 மெட்ரிக் டன்கள். இந்த விண்வெளி கேந்திரத்தை புவியைச் சுற்றும் சுழல் பாதையில் செலுத்தியது சக்தி வாய்ந்த ஒரு ராக்கெட் கலன். அதன் பெயர் ‘லாங் மார்ச் 5பி’ (Long March 5B).

புவியின் கீழ் மட்ட சுற்றுப்பாதையில் (low-Earth orbit (LEO)) இந்த விண்வெளி கேந்திரம் வைக்கப்பட்டது. இது வரை விஷயம் சரி. ஆனால் இந்த விண் உந்து கணை – ராக்கெட் அதன் கனமான எஞ்ஜின் இப்போது பூமியை நோக்கி கீழ் சுற்றுப்பாதையில் சுற்றியபடியே கீழிறங்கிறது. அதுவும் ஒன்றரை மணி நேரத்தில் அது பூமியை ஒரு சுற்று சுற்றியபடி கீழிறங்கிறது. எது எங்கே இறங்கும்? பொதுவாக சாதாரணமான இப்படிப்பட்ட தேவையற்றுப்போகும் ராக்கெட் பாகங்கள் பூமியினுள்ளே இறங்கும் போது அது வளிமண்டலத்தில் இறங்குகையில் உராய்ந்து எரிந்து போகும். ஆனால் இந்த விண்கலன் எஞ்ஜினோ அப்படி எரிந்து போக வாய்ப்பில்லை. இதன் வேகமான சுற்றும் தன்மையால் இது எங்கே விழுந்து தொலைக்கும் என்பதையும் சரியாக துல்லியமாக சொல்ல வழியில்லை.

நாசா விண்வெளி மையங்களும் இதர உலகநாட்டு விண்வெளி கண்காணிப்பு கேந்திரங்களும் வழிமேல் விழிவைத்து காத்திருக்கின்றன. எங்கே விழுமோ எப்படி விழுமோ?
1970களில் இதே போல ஒரு விஷயம் நிகழ்ந்தது நினைவிருக்கலாம். அமெரிக்காவின் முதல் விண்வெளி மையம் ஸ்கைலாப். 1973 இல் அமெரிக்காவால் அனுப்பப்பட்டது. 1979 இல் உயரமிழந்து வந்த இந்த விண்மையம் இறுதியில் இந்து மகா சமுத்திரத்தில் விழுந்தது. என்றாலும் அக்காலத்தில் அது பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. அதன் பிறகு உலக நாடுகள் பொதுவாக இத்தகைய விஷயங்களில் கவனமாகவே இருக்கின்றன.
ஆனால் சீனா அப்படி அல்ல.

கம்யூனிச நாடுகளை பொறுத்தவரையில் ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்கலாம். அவர்கள் பெரும் சாதனைகளை நிகழ்த்துவார்கள். கண்ணைப் பறிக்கும் சாதனைகள். வியக்கவைக்கும் சாதனைகள்.
மானுட குலத்தின் முதல் செயற்கைக் கோள் ஸ்புட்னிக்கை சோவியத் யூனியன் அனுப்பியது. விண்வெளியில் சென்ற முதல் மானுடன் விண்வெளி வீரட் ககாரின். சீனாவின் சாதனைகளும் அறிவியல் தொழில்நுட்பத்தில் சாதாரணமானவை அல்ல.

இவை போல ஒவ்வொரு ஒலிம்பிக்ஸிலும் இன்று சீனாவும் சரி அன்று சோவியத் யூனியனும் சரி வாங்கிக் குவிக்கும் பதக்கங்கள் சாதாரணமானவை அல்ல. எந்த நாடும் இவற்றையெல்லாம் ஆதங்கத்துடன் பார்க்கும்.
ஆனால் இவற்றுக்குப் பின்னால் இருக்கும் கொடூரமான மானுட விலை சாதாரணமானது அல்ல.
அமெரிக்கா போல செல்வ வளமும் பல தளங்களில் ஒற்றைத்தன்மையும் கொண்ட ஒரு ஜனநாயக-நாடே இதனை சமாளிக்க மூச்சு வாங்குகியது. மிகக் கடுமையாக தம் நாட்டின் கல்வி அமைப்பையும் விண்வெளி செயல்திட்டங்களையும் மாற்றியமைத்து அன்றைய விண்வெளிப் போட்டியில் வெற்றியை எட்டியது அமெரிக்கா.
இந்தியாவின் நிலையோ அப்படி அல்ல. இந்தியா ஜனநாயக நாடு. ஆனால் அமெரிக்கா போல செவ்வச் செழிப்பு கொண்டதல்ல. ஆனால் அதற்காக விண்வெளி, அணு தொழில்நுட்பம் என்பதிலெல்லாம் நாம் வாளாவிருக்க முடியாது. அதே சமயம் ஒரு நியூட்ரினோ அவதானிப்பு மையம் கட்டவே இங்குள்ள அறிவியல் எதிர்ப்பு சக்திகளையும் வக்கிரமான சுயதேச வெறுப்புக் கும்பல்களையும் நாம் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. சீனா அண்மையில் ஒரு பெரிய ரேடியோ விண்நோக்கியை உருவாக்கியது. அதன் விரி குடை ஆண்டெனா உலகின் மிகப் பெரிய விண்நோக்கிகளில் ஒன்று. அதனை அமைக்க அது கிராமம் ஒன்றைத் தேர்த்தெடுத்தது. கிராமத்தினர் முணுமுணுப்பின்றி அல்லது முணுமுணுப்பு வெளியில் கேட்காத விதத்தில் ஊரை காலி செய்து கொடுத்தனர்.

சீனாவின் விண்வெளி செயல்திட்டங்களுக்கும் இதேதான் நிலை. அரசு சொன்னால் கீழ்படிந்தாக வேண்டும்.
ஆனால் சீனாவின் விண்வெளி செயல்திட்டமும் சோதனைகளும் இன்னும் எதிர்மறை விஷயங்கள் நிறைந்தவை. குறிப்பாக இத்திட்டங்களின் சோதனைகளின் மனிதவிலை. அவை பெறும் வெற்றிகள் சர்வதேச ஊடகங்களில் சிலாகிக்கப்படும் அளவுக்கு இந்த மானுடவிலை பேசப்படுவதே இல்லை.

சர்வதேச நாடுகள் விண்வெளி கலன்களையும் உந்து கணைகளையும் (ராக்கெட்களையும்) அனுப்புவதில் அடிப்படையான எழுதப்படாத விதிகளை கடைபிடிக்கின்றன. எடுத்துக்காட்டாக ஒரு கலன் அனுப்பப்படும் போது அது செல்லும் புவிசார்ந்த தொடக்க பாதையின் கீழ் மானுட குடியிருப்புகள் இருக்கக் கூடாது. அது கடலருகில் அமைந்திருந்தால் இன்னும் நல்லது. இந்தியாவின் விண்வெளி கலன்கள் ஏவு மையங்கள் அனைத்தும் கடல்களின் அருகில் அமைந்திருப்பதைக் காணலாம்.

சீனா இப்படிப்பட்ட விசயங்களை துளியும் மதிக்காமல் உதாசீனம் செய்கிறது. அதன் ஏவு மையங்களில் மூன்று முக்கிய மையங்கள் மக்கள் அதிகமாக வாழும் கிராமங்கள் சூழ அமைந்துள்ளன. ஒவ்வொரு முறையும் சீனா தன் விண்வெளி வெற்றியை ஊர் அறிய கூவி மகிழ மகிழ பிரச்சாரம் செய்யும் போது இந்த கிராமங்களின் மீது சீன உந்து கலன்களில் உள்ள விஷத்தன்மை கொண்ட திரவ எரிபொருட்களின் அபிக்ஷேகம் நடக்கிறது. மக்கள் அமைதியாக ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

இது ஏதோ தெரியாமல் நடப்பதில்லை. கம்யூனிசத்தின் அடிப்படை தத்துவம் ஒன்று இங்கு செயல்முறையாக்கப்படுகிறது.
கம்யூனிசம் கிராமங்களை விட நகரங்களையே சிலாகிக்கிறது. கிராமங்கள் விவசாயிகளால் நில உடமையாளர்களால் ஆனவை. பிற்போக்கானவை. திருத்தப்பட வேண்டியவை. நகரங்களோ முற்போக்கானவை. தொழிலாளர்களின் வாழ்விடம். என்னதான் அரிவாளையும் சுத்தியலையும் தங்கள் சின்னத்தில் காட்டினாலும் விவசாயிகள் எனவே கிராமவாசிகள் கம்யூனிசத்தில் என்றைக்குமே இரண்டாந்தர குடிமக்கள்தாம். இதை சீனா இன்னும் கடுமையாக நிறுவனப்படுத்தியுள்ளது. கிராமங்களில் உள்ளவர்கள் பிறப்பிலேயே இரண்டாந்தர கீழ் சாதிகள். அவர்கள் நகரங்களுக்கு வர விசா வாங்க வேண்டும். அங்கே தங்கினாலும் கூட என்றைக்குமே பரம்பரை நகர வாசிகளின் முதல் உரிமைகளும் வசதிகளும் அவர்களுக்கு கிடைக்காது. சுருக்கமாக நகர மக்களுக்காக உணவு உற்பத்தி செய்து கொடுக்கும் சாதாரண கையறு நிலை மக்கள். எனவே அவர்கள் விண்ணூர்திகளின் பாய்ச்சலால் பாதிக்கப்பட்டால் அது மார்க்சிய பெருந்தலைகளுக்கு ஒரு பொருட்டே இல்லை. இதனால் சீனாவின் விண்வெளி செயல்திட்டங்கள் சீன கிராமவாசிகளை என்றுமே காவு வாங்கிக் கொண்டேதான் இருக்கிறது.

பிப்ரவரி 15 1996 இல் ‘லாங் மார்ச் 3B’ விண் உந்து கலன் அனுப்பப்பட்டது. ஆனால் மேலே பாய்வதற்கு பதிலாக அது திசை மாறி அதிவேகமாக சென்று கிராமம் ஒன்றில் விழுந்து வெடித்து சிதறியது. இன்றைய தேதி வரை அந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை தெரியாது. நூற்றுக்கணக்கில் இருந்தாக வேண்டும். அப்படித்தான் அங்கு அந்த வெடித்து சிதறலைக் கண்டவர்கள் சொன்னார்கள். வீடியோக்கள் வெளியாயின. ஆனால் சீனா பத்துக்கும் குறைவானவர்களே இறந்தார்கள் என்றது. மற்ற பல நேரங்களில் இது கூட ஏற்றுக்கொள்ளப்படாது.

1996 – அட இன்றைக்கு 25 ஆண்டுகள் ஆகிவிட்டன இப்போதெல்லாம் அப்படி இல்லை என்று சொல்லலாமா? 20 ஏப்ரல் 2019 இல் சீனா அதன் நூறாவது விண்வெளி சாதனையை நிகழ்த்தியது. செயற்கை கோள் விண்வெளிக்கு சென்றது. நச்சுத்தன்மை கொண்ட மஞ்சள் நிற எரிதிரவம் பக்கத்து கிராமங்களிலெல்லாம் மழையென பொழிந்திருந்தது.

அதே ஆண்டு நவம்பரில் மற்றொரு லாங்க் மார்ச் 3பி விண்ணுந்து கலன் இரண்டு செயற்கை கோள்அளை ஏந்தி விண்ணில் பாய்ந்தது, பக்கத்து கிராமங்களில் மஞ்சள் எரிபொருள் திரவ நச்சு மழையுடன் வீடுகள் இடிந்திருந்தன.
ஆனால் இவையிலெல்லாம் இறந்தவர் பாதிக்கப்பட்டவர் குறித்து எந்த புள்ளி விவரமும் கிடையாது. அப்படி எவராவது சீன குடிமகன் உண்மையைத் தேடி எடுத்தால் அவனே வரலாறு ஆகிவிடுவான்.
இன்று நாம் எதிர்நோக்கும் அபாயமும் இதே மாவோயிச நாட்டு மனநிலையின் வெளிப்பாடுதான்.
இம்முறை இந்த சீன ரவுடித்தனம் சீன கிராம மக்களை மட்டுமல்லாமல் உலக மக்களின் வாழ்க்கைகளையும் அது கண்டு கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது, பூமியின் சுற்றுப்பாதையில் இருக்கும் ஒரு செயற்கை கோளை பூமியிலிருந்து ஏவுகணையை செலுத்தி அழிக்கும் தொழில்நுட்பம் ஒரு நாட்டின் வலிமையை பறை சாற்றுவது. முக்கிய போர்-தொழில்நுட்ப சாதனை. அதனை சீனா செய்து காட்டியது. 2019 இல் இந்தியாவும் செய்து காட்டியது நினைவிருக்கலாம் – ஆபரேஷன் சக்தி.

விண்வெளி தொழில்நுட்ப வல்லுனர் கிரெக் ஆட்ரி (Greg Autry) இந்த இரு பரிசோதனைகள் குறித்து ஒரு விசயத்தைச் சுட்டிக்காட்டுகிறார். 2007 இல் இந்த தொழில் நுட்பத்தை சீனா செயல்படுத்திக் காட்டிய போது அது ஒரு பழைய தட்பவெப்ப கண்காணிப்பு செயற்கை கோளை உடைத்தெறிந்தது. பொதுவாக இந்த தொழில்நுட்ப செயல்பாட்டில் பூமியின் கீழ் சுற்றுப்பாதைகளில் உள்ள செயற்கைகோள்களையே பயன்படுத்துவார்கள். இந்தியா அதைத்தான் செய்தது. இது மிகக் குறைவான விண்வெளி மாசினை ஏற்படுத்தும். சீனாவுக்கு அப்படிப்பட்ட கவலைகளெல்லாம் இல்லை.
வூகான் வைரஸிலிருந்து கைதிகளின் உடல்பாகங்களை அறுவடை செய்வது வரை என உலக நியதிகள் அனைத்தையும் தூக்கி எறிந்து பூவுலகின் ரௌடியாக வலம் வரும் கம்யூனிச சீனா இப்போது விண்வெளி ரௌடியாகவும் மாறி வருகிறது.
இதில் நூற்றில் ஒரு பகுதியை இந்தியா செய்தாலும் நியூயார்க் டைம்ஸும், வாஷிங்க்டன் போஸ்ட்டும் அதில் எழுதும் நம்மூர் சிப்பாய்களான பர்கா தத்துகளும் என்ன குதி குதிப்பார்கள். ஏன் இந்தியாவின் விண்வெளி சாதனைகளை கிண்டல் செய்து ‘இந்தியர் பசுமாட்டுடன் மேற்கத்திய விண்வெளி கிளப்பின் கதவுகளைத் தட்டுவது போல கார்ட்டூன்கள் முக்கிய பத்திரிகைகளில் வெளிவந்தன. ஆனால் சீனா விஷயத்தில் இதே ஊடகங்கள் கப்சிப் ஆகிவிடுகின்றன. அப்பட்டமாக அவர்கள் தலை மீதே சீனா ஏவின அபாயம இருந்த போதிலும் மௌனம், செவியைக் கிழிக்கிற மௌனம்.
உலக விண்வெளி கண்காணிப்பு மையங்கள் சீனாவின் விண்ணுந்து எஞ்ஜின் எங்கே யார் தலையில் விழப்போகிறதோ என்று கண் விழித்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே சீனா என்ன செய்கிறது? ராணுவத்தின் உதவிக்கான ஒரு விண்கலனை அது ஏவியுள்ளது.

இதுதான் சர்வதேச அடாவடி சீனா. இதைத்தான் நாம் எதிர்கொண்டு கொண்டிருக்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here