மதிய உணவு வேளைகளில் ரசமும் மோரும் இல்லாத வீடுகளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எங்கள் ஊர் திருமணங்களில் ரசமும் மோரும் முக்கியமான உணவு வகைகளில் ஒன்று.
ரசத்துடன் மோரும் ஊறுகாயும் சேர்த்து சாப்பிடும் வழக்கம் புதுமையானது அல்ல. இதற்கு 2000 ஆண்டுகால வரலாறு உண்டு என்று கூறினால் ஆச்சரியமாக இருக்கும். இதன் அடிப்படையில் இன்றிலிருந்து 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் சோறுடன் ரசமும், மோர்க்குழம்பும் ‘மாங்காய் ஊறுகாயும்‘ சேர்த்து பிசைந்து அடித்துள்ளதோடு மோரும், மோர் குழம்பும் சுத்தமான பசுவின் பாலில் இருந்து எடுக்கும் செய்தியையும் பதிவு செய்துள்ளனர்.
அதாவது சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான ‘பெரும்பாணாற்றுப்படையில்‘ இத்தகவல் விரிவாக குறிப்பிடப்பட்டாள்ளது…!

‘வளைக்கை மகடூஉ வயினறிந் தட்ட
சுடர்க்கடைப் பறவைப் பெயர்ப்படு வத்தஞ்
சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத் துருப்புறு பசுங்காய்ப்
போழொடு கறிகலந்து கஞ்சக நறுமுறி யளை இப் பைந்துணர்
நெடுமரக் கொக்கின் னறுவடி விதிர்த்த
தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர்‘
அதாவது சோறுடன், வற்றல் போட்டு செய்த மோர்க்குழம்பு உண்டனராம். மாதுளையின் பச்சை காயை பிளந்து அதன் விதைகளை எடுத்து வெண்ணெயில் வதக்கி உண்டனராம் இதைதான் மாதுளை ரசம் என்பர்.
அதோடு மோரும் வெண்ணெயும் தனித்தனியே வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு உண்ண கெடுப்பார்களாம், இதன் மூலப்பொருட்கள் செவ்விய சுத்தமான ’பசும்பாலை’ காய்ச்சி செய்யப்பட்டதாம்.
மோர் வத்தல் குழம்பிலும், மாதுளை ரசத்திலும் கஞ்சுகத்தை எனும் கறிவேப்பிலையை போட்டு மணக்க மணக்க உண்ணுவார்களாம். இதனுடன் மாங்காய் ஊறுகாயும் சேர்த்து வரும் விருந்தினர்களுக்கும் உண்ணத் தருவார்களாம்…!
இப்பாடல் பெரும்பாணாற்றுப்படையில் மறைகாப்பாளர்களாகிய அந்தணர்களின் வீடுகளுக்கு விருந்தினர்கள் வரும்போது தரும் உணவாக சொல்லப்பட்டுள்ளது.
இது தவிர்த்து பருப்பு சோறு, நெய் சோறு போன்ற பல வகையான உணவுகளை இவர்கள் வாய்க்கு ருசியாக சமைப்பதில் கெட்டிக்காரர்கள் என்றும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
சங்க இலக்கியங்களில் பெரும்பான்மையாக அசைவ உணவுகள் குறிப்பிடப்பட்டாலும் பழமை மாறாத இதுபோன்ற உணவுகளும் உண்டுள்ளனர் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது. அதனால் தான் பீஸா, பர்கர், பிரியாணி என்று எந்த ஊடுறுவல் உணவுகளும் இவற்றின் முன் நிற்க முடியவில்லை.