இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தற் கடியேன்” – சுந்தரமூர்த்தி நாயனார்

“இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தற் கடியேன்” – சுந்தரமூர்த்தி நாயனார்
காவிரியின் மகா முக்கியமான துணையாறான அமராவதி ஆறு அன்று அமைதியாய் ஓடிக் கொண்டிருந்தது. அதன் கரையோரம் இருந்த கருவூர்.
ஆறு இருந்தால் அதன் கரையில் ஊர் இருக்கும். ஊர் இருந்தால் அதில் சிவனுக்கு ஆலயமும் இருக்கும் என்பது பரத கண்டத்தின் இயல்பான விஷயம். அப்படி கருவூரில் அமர்ந்த சிவனுக்கு ஆனிலைநாதர் எனப் பெயர்.
ஆற்றின் கரையில் அமர்ந்திருக்கும் அந்த ஆனிலைநாதரைக் காண ஏராளமான பக்தர்கள் வருவார்கள். ஆற்றில் நீராடி ஆனிலைநாதரை தரிசித்து விட்டுச் செல்வார்கள். தமிழ்நாட்டின் பழம்பெரும் சிவத்தலங்களில் ஒன்றான அந்த ஆலயம் கொங்கு நாட்டின் ஏழு சிவத்தலங்களில் ஒன்றானதாகும்.
தேவபசுவான காமதேனு வந்து வழிபட்டதால் அந்த ஆலயம் ஆனிலை ஆலயமாயிற்று.
(இன்று அந்த ஊர் கரூர் என்றும் அந்த ஆனிலைநாதர் ஆலயம் பசுபதி ஆலயம் எனவும் அழைக்கப்படுகின்றது
வேண்டுவதை குறைவின்றி அளிக்கும் தெய்வீக தன்மையுடைய வந்து காமதேனு வந்து வழிபட்ட தலம் என்பதால் என்றும் இன்றளவும் கரூர் பகுதியில் நெய், வெண்ணைய்,பால் போன்றவை தனிசிறப்புடன் விஷேஷ தரத்துடன் விளங்குகின்றது என்பது ஒரு நம்பிக்கை, அதில் உண்மையும் உண்டு)
அந்த அமராவதி நதியினையொட்டிய கரையோரங்களில் உலவிக் கொண்டிருந்தார் அந்த சிவனடியார். கழுத்தில் ருத்திராட்சமாலை . மேலேங்கும் திருநீறு. காதில் கடுக்கன் . தலையில் கொண்டையும் முகத்தில் நீண்ட தாடியும் கையில் மழு எனும் ஒரு சிறிய கோடாரியுடன் அவர் பரசுராமரின் சாயலில் நடமாடிக் கொண்டிருந்தார்.
அந்த மழு என்பது கோடாரி சாயல், அது சிவபெருமானின் ஆயுதங்களுள் ஒன்றாகும். தாருகாவனத்து ரிஷிகள் தவவலிமையால் ஏவிய மழுவினை சிவன் தன் வசப்படுத்தி தன் கரங்களில் வைத்திருப்பதாக புராண சாட்சிகள் உண்டு.
மழுவை ஏந்துதல் சிவனுடைய அடையாளமாகக் கருதபடுவதால், ருத்ர வடிவங்களான வீரபத்ரர், பைரவர் போன்றோரின் கைகளிலும் மழு இருப்பதால், தானும் அதை ஏந்தியபடி இருந்தார் அந்த பக்தர்.
காம்பில் இலை சரிந்தது போன்ற சாயல் என்பதால் இலைமலிந்த வேல் என்று அக்காலத்தில் அந்த மழு அழைக்கப்பட்டது.
அந்த மழுவினை எறிந்து ஆபத்தை விரட்டுவதால் எறி பக்தர் என்றானார். அதுவே எறிபத்தர் என மருவிற்று. அவரின் பெயராகவும் நிலைத்தது. ருத்ர சிவன் கோலத்தில் அடியாருக்கு காவல்காரனாய் ஓடித் திரிந்தார் அந்த எறிபத்தர்.
அவர் கொங்கு, தொண்டை நாடு, சோழ நாடெங்கும் சுற்றிச் சுற்றி வருவார். அவருக்கு எல்லைகளில்லை. ஏன் தேசங்களெல்லாம் சுற்றி வருவார் என்றால் அப்பகுதி எங்கும் நடமாடும் சிவனடியார்களின் பாதுகாப்புக்குத் தான் பொறுப்பு என அவரே நினைந்தும் கொண்டார், அதில் உறுதியாகவும் இருந்தார்.
சிவனடியாருக்கு எவரேனும் தீங்கிழைத்தாலோ , காட்டு மிருகங்களாலோ இல்லை இதர ஆபத்துக்களோ நேர்ந்தால் தன் மழுவால் ஆபத்தை வெட்டி விரட்டிக் காப்பார். தர்மமும் நியாயமும் இருக்கும் பக்கம் அவர் இருப்பார் என்பதால் அவரை எதிர்த்துக் கேட்பார் எவருமில்லை.
அந்த எறிபத்தர் அன்று புகழ்மன்னன் எனும் சோழ அரசனின் பட்டத்து யானையினை நோக்கி அந்த மழுவினை கையில் உயர்த்தியபடி ஆக்ரோஷமாக ஓடிக்கொண்டிருந்தார், அவரை ஒரு அடியார் பின்தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தார். சிவனின் ருத்ர தாண்டவம் போன்ற ஒரு ஆக்ரோஷம் அவரிடம் இருந்தது.
ஏன் அரசனின் யானையினை நோக்கி ஓடினார் எறிபத்தர், என்ன நடந்தது? அவரின் ஆக்ரோஷத்துக்கு காரணம் என்ன?
செழித்தோடிய அந்த அமராவதி நந்தியோரம் ஒரு நந்தவனம் இருந்தது, அதை ஒரு சிவனடியார் பராமரித்து வந்தார். அவர் பெயர் சிவகாமி ஆண்டார். சிவகாமியாண்டார் அந்த நந்தவனத்தில் இருந்து அதிகாலை மலரெடுத்துச் சென்று ஆனிலைநாதரை அர்ச்சிப்பார். அதுவே அவரின் முதல் கடமை, இரண்டாம் கடமை மற்றும் வாழ்வின் ஒரே கடமை.
சிறந்த வாசமிக்க பூக்களைப் பரிசுத்தமாக இறைவனுக்குப் படைக்க வேண்டும் என்பதால் காலையில் குளித்துவிட்டு, தன் மூச்சுக்காற்றுக் கூட பூவின் மேல் படக்கூடாது என்பதற்காக முகத்துக்குத் துணியிட்டு, மிகுந்த பக்தியுடன் அதைப் பறித்து கையில் இருக்கும் சுத்தமான இரு கூடைகளில் சேகரித்து, ஒரு கழியில் இருபுறமும் கட்டித் தோளில் சுமந்து ஆலயம் கொண்டுவந்து சிவனுக்குச் சாற்றுவார்.
விடிந்தும் விடியாத‌ காலைப் பொழுதில் பூக்கள் மிகுந்த மணமாயிருக்கும் என்பதால் அந்தப் பொழுதினை அவர் தவ‌றவிடுவதே இல்லை. அவரின் காணிக்கை மலர்கள் மிகுந்த பக்தியுடன் ஆனிலைநாதருக்கு சென்றுக் கொண்டே இருந்தன.
அன்று புரட்டாசி வளர்பிறை அஷ்டமி, பொதுவாக அஷ்டமி என்பது சிவனின் ருத்ர அம்சமான பைரவருக்கு உகந்த நாள்.
தேய்பிறை அஷ்டமி என்பது கால பைரவருக்கானது என்றும், வளர்பிறை அஷ்டமி என்பது சொர்ணாகர்ஷண பைரவருக்கானது என்றும் கூறுவர். அன்று அவர்களை வழிபட்டால் தீமைகள் அகலும். சனியின் தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை.
அன்று அப்படி புரட்டாசி வளர்பிறை அஷ்டமியாக இருந்ததால் மிக ஆர்வமாக, மிக பக்தியாக‌ப் பூக்களைப் பறித்து கூடைகளில் நிரப்பி ஆலயம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார் அந்த சிவகாமி ஆண்டார்.
அன்றைய தினத்திற்கு சில தினங்கள் முன்பு சோழமன்னனான புகழ்சோழன் கரூவூர் வந்திருந்தான். கருவூர் என்பது உறையூர், பழையாறை போல சோழ தேசத்தின் முக்கிய‌ நகரங்களுள் ஒன்று. கரிகால் சோழன் அங்கு இருந்து தான் ஆட்சி புரிந்தானாம். புகழ்சோழன் உறையூரில் இருந்தாலும் கருவூருக்கு அடிக்கடி வருவதுண்டு.
அது புரட்டாசி மாதம் என்பதாலும், அந்த வருடத்துக்கான பாசான வசதிகள், நாற்று தயாரான ஏற்பாடு மழை நிலவரம் , விவசாய பணிகளை பார்வையிட அவன் வந்திருந்தான். அப்படி அடிக்கடி வருவது அந்த மன்னனின் அலுவல்களில் ஒன்று
அரசனோடு ஒரு சிறு படையும் வரும். குறிப்பாக பட்டத்து யானையில் தான் அரசன் வருவான் . அரசனின் கொடி அந்த யானை மேல்தான் பறக்கும். அவ்வளவு சிறப்புமிக்க யானை அது.
அக்கால பரத கண்டத்தில் யானைகளே மன்னர்களுக்கும் மக்களுக்கும் உவப்பானவை. குதிரைகள் பிற்கால வரவு. வந்தாலும் யானை அளவு அது கொண்டாடப்படவில்லை.
யானைக்கு உள்ள சில பிரத்யேக குணங்கள் குதிரைக்கு இல்லை. யானை நாய் போன்ற சாயல் . எக்காலமும் மனிதனை விட்டு நகராது . குதிரை என்பது பூனை சாயல். தனக்கு தேவையானது இல்லை என்றால் ஓடிவிடும்.
யானையினை பழக்கும் வித்தை பரத கண்டத்தவருக்கே உரித்தானவை, அவர்களுக்கு அது இயல்பாய் வந்தது, மாபெரும் மிருகத்தை பாரத மக்கள் குழந்தைப் போல் பழக்கி வைத்ததும், உத்தரவிட்டால் அது ஓடோடி வேலை செய்வதும் இன்றுவரை விசித்திரமானது.
அது அன்று கிரேக்க வீரன் அலெக்ஸாண்டரே அரண்டு போன விஷயம்.
பாரத கலாச்சாரம் ஆன்ம விஷயங்களைப் பிரதானமாகக் கொண்டது. மனதை ஆராயும் குணம் கொண்டது. அதனால் யானையின் மனதையும் அவர்களால் கவனிக்க முடிந்தது, அதை வளைக்க முடிந்தது. அந்த மாபெரும் மிருகத்தைக் குழந்தைப் போல் அடக்கி ஆளச் செய்ய முடிந்தது, வேலைக்காரனாக மாற்ற முடிந்தது.
யானைக்கும் மனிதனைப் போன்ற சுபாவம் உண்டு, மனிதரோடு நெருங்கிப் பழக அது தோழமையானது என்பதால் இங்கு யானை தனியிடம் பிடித்தது. யானை பராமரிப்புக்கு “கஜ சாஸ்திரா” என்றொரு நூலே எழுதிய கண்டம் இது. யானைக்குக் ” கஜ பூஜை” என வழிபாடே கொண்ட சமூகம் இது.
எதெல்லாம் காக்கபட வேண்டுமோ அதையெல்லாம் தெய்வமாக உயர்த்துதல் பாரத மரபு
பசு, ரிஷபம், காகம், பாம்பு , நாய், கருடன், மயில் இன்னபிற வரிசையில் யானையும் தெய்வ அம்சமாகவே பார்க்கபட்டது.
யானையின்றி அரசன் இல்லை, அரச விழாவோ, கோவில் திருவிழாவோ இல்லை. அது பெருமையின் வடிவம், கௌரவத்தின் சின்னம். யானை கட்டி மேய்ப்பதும் , பராமரிப்பதும் , யானையின் பவனி வருவதும் பெரும் செலவு மிக்க விஷயம் என்பதால் அது பெரும் செல்வாக்கின் அடையாளமாய் இருந்தது.
இன்றும் மைசூர் விழா, கேரள விழா , தமிழக ஆலயங்கள் என அந்த பாரம்பரியத் தொடர்ச்சியினைக் காணமுடியும்.
அரசனுக்கு பட்டத்து யானை என்றொரு யானை கண்டிப்பாய் உண்டு. அரசனுக்குத் தரப்படும் அத்தனை மரியாதையும் அதற்கும் கொடுக்கப்படும். அரசனைத் தவிர யாரும் அதில் ஏறி அமர முடியாது. அரசக் கட்டில் போல அது அரசனின் அடையாளம், மிகப்பெரும் கௌரவம்.
நடமாடும் சிம்மாசனம்.
கப்பம் கட்ட வரும் மன்னர் கூட மன்னனை வணங்கிவிட்டு அவனுடைய பட்டத்து யானையினையும் வணங்கிவிட்டே செல்வார்கள்
யானை ஒரு அறிவுள்ள விலங்கு. தன்னைக் கொண்டாடுவதை அதனால் உணரமுடியும், அந்தக் குதூகலத்தில் அது பல குறும்புகளையும் சேட்டைகளையும் புரியும், அதில் பெருமிதம் கொள்ளும் . அதன் குழந்தைப் போன்ற‌ இயல்பு அது.
எந்த அளவுக்கு பட்டத்து யானை கொண்டாடப்பட்டது என்றால், வாரிசில்லா அரசுக்கு வாரிசைத் தேர்ந்தெடுக்க அதன் கையில் மாலை கொடுக்குளவு அதற்கு உயரிய இடம் இருந்தது,
ஏன் கொடுத்தார்கள்? அரசனோடு பழகி அரசனைச் சுமந்து அவன் இயல்பை மனதால் உணர்ந்த யானை இன்னொரு திறமையாளனை எளிதாக அடையாளம் காணும் எனும் ஒரு நம்பிக்கை இருந்தது. பல இடங்களில் அது மெய்யாயிற்று.
அப்படிப்பட்டது பட்டத்து யானை, எல்லா யானையும் பட்டத்து யானை ஆகிவிட முடியாது, அதற்கென ஒரு பழுதிலா அழகும், அழகான தந்தமும் இன்னும் பல லட்சணங்களும் வேண்டும், ஆயிரத்தில் சிறந்த ஒரு யானைதான் பட்டத்து யானை ஆக முடியும்.
அப்படி புகழ்மன்னன் ஒரு பட்டத்து யானை வைத்து அதன் மேல் தங்க அப்பாரம் போட்டு யானைக்கு மந்தகத்தில் தங்க கேடயமிட்டு, கழுத்தில் வெண்கல மணிபூட்டி அதை நடமாடும் தேர்போல் மாற்றி கம்பீரமாக வந்திருந்தான்.
அன்று அந்த யானையினை பாகன்கள் ஐந்து பேர் ஆற்றுக்குக் குளிக்க அழைத்துச் சென்றனர், மன்னர் எழுவதற்குள் யானையினைக் குளிப்பாட்டி, திருநீறு பூசி அலங்காரம் செய்து தயாராக வைப்பது அவர்கள் கடமை.
அப்படி ஆற்றுக்கு அழைத்துச் சென்றார்கள், பொதுவாக நீர் என்றால் யானைக்கு உற்சாகம், அது இந்த யானைக்கும் வந்தது, ஆற்றைக் கண்டதும் துள்ளிக் குதித்து ஓடிய யானை வழியில் அட்டகாசம் செய்தபடியே ஓடியது.
பட்டத்து யானை கடை வீதிகளில் வந்தால் நினைத்தப் பழத்தை எடுக்கும், போகும் பாதையில் நினைத்த மரத்தை முறிக்கும், அரசனுக்குள்ள மதிப்பு அதற்கும் உண்டு என்பதால் ஒரு மிதப்பில் இருக்கும் . அதை தடுப்பாரும் இலர், அது கேட்டதை மறுப்பாரும் இலர்.
ஆலயத்தை நெருங்கிக் கொண்டிருந்த சிவகாமி ஆண்டாரைப் பார்த்த யானை தன் வழக்கமான குணத்தால் சிவனடியார் கையில் இருந்த பூக்கூடையினை இழுத்தது.
அது சிவனுக்கான பூக்கள் என்பதால் அலறிய அடியார் கொடுக்க மறுத்தார். ஆனால் அவரோடு சேர்த்து பூக்கூடையினை இழுத்து போட்டுவிட்டு அதன் போக்கில் குதிபோட்டு சென்றது யானை.
கீழே விழுந்து கிடந்த அடியார் அழுதார். அரற்றினார். காரணம் அந்த பூக்கள் அவரின் உயிர்கள்.
அனுதினமும் மிகுந்த பயபக்தியுடன் அவர் சிவனுக்கு சமர்ப்பிக்கும் பூக்கள். சிவன் அபிஷேகத்திற்கு செல்ல வேண்டிய, அங்கு அலங்கரிக்க வேண்டிய பூக்கள் மண்ணில் கிடப்பதை அவரால் சகிக்க முடியவில்லை.
அங்கு மண்ணில் கிடந்தது பூக்கள் அல்ல, அவரின் மனம், அவரின் உயிர், அவரின் உயர்வான கடமை. அது மண்ணில் சிதறிக் கிடக்கக் கண்டு வாய்விட்டு அழுதார் சிவகாமி ஆண்டார். ஆம் தன் மூச்சுகாற்றுக் கூடப் படாமல் பறித்த பூக்கள் இனி பூஜைக்கு பயன்படா வண்ணம் தெருவில் கிடந்தால் அந்த பரமபக்தனின் மனம் கதறாமல் என்ன செய்யும்?
வாய்விட்டு அலறினார், தரையில் கைகளை, தலையினை முட்டி முட்டி அழுதார். பூக்களைத் தொட்டு தொட்டு அழுதார். ஆக்ரோஷமாய் ஒரு கம்பை எடுத்து யானையினை அடிக்கத் தேடினார். ஆனால் அரசனின் பட்டத்து யானை அல்லவா?
அவர் நீதி கேட்கச் சென்றாலும் பாகன்கள் அவரைத் தள்ளிவிட்டு அவர்கள் போக்கில் சென்றனர். விழுந்து கதறி அழுத அவரின் கண்ணீர் நிலத்தைத் தொட்டது.
“சிவனே ஏன் இந்த சோதனை, தவறு என் மேலா? ஏன் என் பூஜையினை நீ ஏற்க மறுத்தாய்? நான் என்ன பாவம் செய்தேன்” எனப் புலம்பி நிலத்தில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தார். சிவகாமி ஆண்டாரின் கண்ணீரைக் கண்டதும் அங்கு வந்து நின்றார் எறிபத்தர், அவரின் கண்கள் சிவந்தன.
அவரைத் தொட்டுப் பிடித்து எழுப்பினார் எறிபத்தர். சிவனடியாரைக் காக்கும் பிறப்பாகவே தன் பிறப்பினை நினைத்தும் வாழ்ந்தும் வந்த எறிபத்தருக்கு ஒரு அடியாரின் சோகத் துயர‌க் கண்ணீரைக் கண்டதும் மனம் கொந்தளித்தது.
அது என்ன சுயநலக் கண்ணீரா? பூஜைத் தடைப்பட்டதால் வந்த ஆற்றாமைக் கண்ணீர் அல்லவா? விடுவாரா எறிபத்தர்?
தான் ஒருவன் இருக்கும் பொழுது ஒரு சிவனடியார் கண்ணீர் விடுவதா? அதைக் காண சகிப்பதா எனக் கண்கள் சிவந்த எறிபத்தர், அந்த யானையினை நோக்கி வெறியுடன் நடந்தார்.
ஒரு கையில் மழு. இன்னொரு கையில் அந்தச் சிவனடியாரைப் பிடித்துக் கொண்டு அவர் நடந்த காட்சி அமராவதி ஆற்றுப்பக்கம் பொங்கிய‌ கங்கை ஆக்ரோஷமாக நடந்தது போலிருந்தது.
பக்கவாட்டில் நடந்து யானை முன்னால் சென்று அதை மறித்து நின்றார் எறிபத்தர். அலட்சியமாக அவரைப் பார்த்த பாகன்கள் “ஐயா அடியாரே . பட்டத்து யானையினை மறிப்பது ராஜவிரோதம். இங்கேயே உம்மை அடித்து விரட்டுவோம். நாங்கள் என்ன. யானையிடம் சொன்னால் உங்களை மிதித்துக் கொன்றுவிடும். அடியார் என்பதால் சொல்கின்றோம். வழிவிடும். ” என்று எச்சரித்தார்கள்.
எறிபத்தர் கண்கள் சிவக்க, “சிவனடியாரை விட இந்த யானை உயர்ந்ததோ? மன்னன் உயர்ந்தவனோ? சிவபெருமானுக்குரியப் பூக்களை யானை பறித்தது குற்றம். அதைத் தடுக்காமல் நீங்கள் வேடிக்கைப் பார்த்தது உங்கள் குற்றம். அதை விட உங்களை இப்படி ஆக்கியது மன்னனின் குற்றம். அவனை வரச் சொல்லி மன்னிப்புக் கேட்டு விட்டு செல்லுங்கள். அதுவரை உங்களை விடமாட்டேன்” என்று கர்ஜித்தார்.
சர்வ சக்திவாய்ந்த அரசனின் மரியாதைக்குரிய யானையினையும், அதை வளர்க்கும் பாகனையும் ஒரு ஆண்டி, பரதேசி மிரட்டுவதா என எகத்தாளம் செய்த பாகன் கூட்டம் அவரை அடித்து விரட்ட முனைந்தது. ஆனால் மழுவுடன் நின்ற முனி என்பதால் எச்சரிக்கையுடன் அணுகிற்று.
“ஏ ஆண்டி. உன்னை என்ன செய்கின்றோம் பார்..” என அவர்களில் இருவர் பாய, “இதோ உங்களுக்கான‌ தண்டனை..” எனச் சீறிப் பாய்ந்தார் எறிபத்தர்.
யானையினை நோக்கி அவர் செல்லும் பொழுது இரு பாகன்கள் யானையின் பக்கவாட்டில் வர ஒருவன் யானைக்கு ஏதோ கட்டளையிட, அது காலை மடக்கி படிபோலாக்கி அவனை மேலே ஏற்றிக் கொண்டது. அவன் அங்குசத்துடன் தயாரானான்.
முன்னே வந்து எறிபத்தரை அகற்ற முயன்ற பாகன்களை வெட்டி வீழ்த்தினார் எறிபத்தர் . அடுத்து இருவர் வர, அவர்களையும் சரித்தார். யானையுடன் முன்னேறி வந்தான் மேலிருந்த பாகன்.
யானை என்பதற்கு நேருக்கு நேர் நின்றால் பலம் அதிகம். அதன் பலவீனம் மெல்லத் திரும்புவது. இதனால் பக்கவாட்டில் சென்று அது மெல்லத் திரும்பும் பொழுது அதன் துதிக்கையினை வெட்டி வீழ்த்தினார் எறிபத்தர். துதிக்கையில்லா யானை வலியில் அலறி பாகனைத் தூக்கி எறிந்துவிட்டு தரையில் விழுந்து புரண்டது. கீழே விழுந்த பாகனை வெட்டி வீழ்த்தினார் எறிபத்தர்.
துடிதுடித்த யானையின் மண்டையில் மழுவின் பின்பக்கத்தால் அடித்து அதைக் கொன்றுவிட்டு அடங்கா சீற்றத்துடன் அங்கேயே நின்றுக் கொண்டிருந்தார் எறிபத்தர்.
தனிமனிதனாக, ஒரு சாதாரண சிவனடியாரால் பலமிக்க அரசனின் யானையினையும், அந்த யானையினையே அடக்கி ஆண்ட பாகன்களையும் எப்படி நொடிப் பொழுதின் வெட்டிச் சாய்க்க முடிந்தது?
சிவனின் அம்சமான ருத்ர ரூபத்தில் எறிபத்தர் தனது அப்பழுக்கற்ற முழுமையான அன்பினால் கலந்திருந்தார். அவருடைய மனம் அந்த ருத்ரனின் தன்மையில் பூரணமாக நிறைந்திருந்தது.
அடியாருக்குத் துன்பம் என்றவுடன் அந்த ருத்ரனின் கோபமாகவே வெளிப்பட்டது. எறிபத்தர் பைரவராகவே மாறி விட்டார். அந்த மாற்றத்தில் எந்தவிதமான சுயதிணிப்போ, நாடகத்தன்மையோ இல்லாததால் மானிடரான எறிபத்தரால் யானையையும், பாகன்களையும் நிமிட நேரத்தில் ஒரே வீச்சில் வதம் செய்ய முடிந்தது.
ஆம், எறிபத்தர் தன்னை ஆட்கொண்ட சிவனில் அவர் துளி மாறுபாடும் இன்றி பரிசுத்தமாக கலந்திருந்தார்.
கடலில் கலக்கும் நதி உப்பாவது போல, சந்தனத்தைத் தொடும் காற்று மணமாவது போல, தீயில் விழும் விறகு நெருப்பின் இயல்பினை பெறுவது போல சிவனில் கலந்த பொங்குவது போல் பொங்கினார், வீழ்த்தினார், ருத்திரமான உக்கிர சிவன் கோலத்தில் நின்றிருந்தார்.
அதைக் கண்ட சிவகாமி ஆண்டார் அங்கு எறிபத்தருள் தோன்றிய ருத்ர அம்சத்தை கண் குளிர, அகம் மகிழ தரிசித்தார். குருதியில் தோய்ந்த மழுவுடன் நின்ற எறிபத்தர் முன் நெடுஞ்சாண்கிடையாக புழுதியில் விழுந்து நெடுநேரம் வணங்கினார்.
சம்பவத்தைப் பார்த்த மக்கள் அரண்டு போய் மிக அச்சத்துடன் சுற்றி நின்றனர். மக்கள் நடுவில் யானை செத்துக் கிடக்க , அதனைச் சுற்றி பாகன்கள் கிடக்க , அதன் முன்னால் கையில் ரத்தக் கறையுடனான மழுவுடன் நின்றிருந்தார் எறிபத்தர்.
அன்று அஷ்டமி, பைரவருக்கான நாள், தீமைகளை அழிக்கும் தன் ருத்ர கோலத்தை எறிபத்தர் ரூபத்தில் உலகிற்கு காட்டி நின்றார் சிவபெருமான்.
விஷயம் அரசமாளிகையை எட்டிற்று, இது அண்டை நாட்டு மன்னனின் சதிவேலை என்றும், நாட்டில் அரசனுக்கான அவமரியாதை எச்சரிக்கை எனவும் பலகுரல்கள், அலறல்கள், போர்க்கோலங்கள்.
மனனனின் பட்டத்து யானைமேல் கைவைப்பது அரசன் மேல் கைவைப்பதற்கு சமம் அல்லவா? எங்கே அந்தக் கொடியவன் என ஆக்ரோஷ அறைக்கூவல்கள்.
படை சூழ ஒரு யானைமேல் ஏறி களத்துக்கு வந்தான் புகழ்சோழன். அவன் இருந்த யானையில் வேலும் வில்லும் அம்புகளும் இருந்தன. அவனுக்கு முன்னால் மெய்க்காப்புப் ப‌டையும் ஆயுதங்களோடு வந்தது.
மன்னன் ஆணையிட்டதும் கொலைகாரனைக் கொல்வது ஒன்றுதான் பாக்கி.
தன் பட்டத்து யானை வீழ்ந்து கிடப்பதை, தன் பெருமை சரிந்து கிடப்பதை, தன் குடையும் கொடியும் பிடித்த, தன் நடமாடும் அரியாசனமான யானை சரிந்துக் கிடப்பதைக் கண்டு மனம் கொதித்த புகழ்சோழன் யானை மேல் இருந்தே, “எவன் இதை செய்தது, எவன் தலை இப்பொழுது இந்த யானை காலால் இடறப்பட வேண்டும்?” எனக் கோபமாகக் கேட்டான்.
ஆம், கொலைகாரனைக் கொன்றொழிக்கும் ஆக்ரோஷத்தில் கூட்டத்தை நோக்கி புகழ்சோழன் உறுமினான்.
அவன் முன் வந்து நின்றார் எறிபத்தர். கொஞ்சமும் பயமோ அச்சமோ இல்லாமல் பதிலுக்கு சிங்கமென கர்ஜித்தார் எறிபத்தர்.
“நீ புகழ்மன்னனாக இருந்தாலும், சோழ மன்னனாக, ஏன் பாரத கண்டத்துக்கே அரசனாக ஏன் தேவர்களுக்கே அரசனாக இருந்தாலும் நாம் அஞ்சமாட்டோம்
நான் வணங்கும் சிவன் மன்னர்களுக்கெல்லாம் மன்னவன், தேவர்களுக்கெல்லாம் தேவன், கடவுளுக்கெல்லாம் கடவுள். உன்னை படைத்து மன்னனாக்கி தேசத்தின் அரசனாக்கியதும் சிவனே
ஏன் உன்னை அரசனாக்கினான்? நீ சொகுசாக யானைமேல் உலா வரவா?, இல்லை அதிகாரம் செலுத்தி ஆட்சி புரியவா?
கொடிய மன்னனே உன் ஆட்சியும் அதிகாரமும் யாருக்கு? மக்களை காக்க, அந்த மக்களிள் தலையானவர்கள் யார், சிவனடியார்கள். உன்னிலும் என்னிலும் மேலானவர்கள். அவர்களை காக்க வேண்டிய நீ சரியாக இருந்தால் உன் படையினரும் சரியாக இருப்பார்கள்.
ஆனால் உன் அக்கிரமான குணம் உன் நிர்வாகிகளை உனக்கு கீழே இருப்பவர்களிடம் பதிந்துவிட்டது, நல்லவன் நல்ல அதிகாரிகளை உருவாக்குவான். ஒரு அதிகார போதையுள்ளவன் அதிகாரம் யாரையும் மதிக்காத கர்வத்திலே நடக்கும்.
ஒரு சிவனடியாரை உன் யானை இழுத்து போட்டுவிட்டு சென்றது தெரியுமா?, நீ என்றாவது பூஜை செய்தாயா? உன் பட்டத்து யானையோடு சிவாலயம் சென்றாயா? பூஜை என்றால் அதற்கான பக்தி அர்பணிப்பு தூயபொருள் என்றால் என்னவென தெரியுமா?
உனக்கு தெரிந்தால் அல்லவா உன் யானைக்கு தெரியும்
செத்துகிடக்கும் யானை உன் அக்கிரம ஆட்சிக்கு சாட்சி, உன் கர்வத்துக்கும் சிவனடியார் மேலான அலட்சியத்துகும் சாட்சி, இதோ செத்து கிடக்கின்றார்களே பாகன்கள், அவர்கள் எவ்வளவு கர்வம் மிகுந்த வேலைக்காரர்களை நீ வைத்திருக்கின்றாய் என்பதற்கு சாட்சி
யானை அவரை இழுத்து போட்டது இவர்கள் கண்டுகொள்ளவில்லை, அவரின் கண்ணீர்க்கு பதில் சொல்லவில்லை, சிவனின் தொண்டன் ஒருவனை அழவைத்துவிட்டு உங்கெளுக்கெல்லாம் என்ன பகட்டான ஊர்வலம்?
பட்டத்து யானையினை தொட்டால் நான் சாவேன் என எனக்கு தெரியும், சிவனடியார் ஒருவனை காத்துவிட்டு சாக நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும், மன்னமே உன் வேல் எறிந்து என்னை கொல், ஆனால் இனியாவது உன் நாட்டில் சிவனடியாருக்கு பாதுகாப்பு கொடு
நான் சாவதற்கு முன் ஒரு வேண்டுகோள், என்னை கொன்றுவிட்டு ஆற்றில் குளித்துவிட்டு. நடந்த தவறுக்கு சிவகாமி ஆண்டாரிடம் மன்னிப்புகேட்டு விட்டு இந்த ஆனிரை நாதனின் அடியாரான சிவகாமியாண்டார் இனி அவர் கடமையில் இருந்து தவறாமல் இருக்க வழி செய்து கொடு.
நீ சிவனடியாரிடம் மன்னிப்பு கேட்டால் உன் வீரர்களுக்கும் அவர்பால் மரியாதை வரும், அரசன் செய்வதை தேசம் செய்யும், திருந்திய மன்னனாய் என்னை கொல். திருந்திய மன்னனாய் வேல் எடுத்தது எம்மேல் வீசு “
மன்னன் ஒன்றும் பேசவில்லை, யானையில் இருந்து மெல்ல‌ இறங்கினான். கூட்டம் நிசப்தமாய் பார்த்து கொண்டே இருந்தது, நெற்றி சுருக்கியது.
ஆம் மன்னன் பொதுவாக யானையில் இருந்து இறங்குவதில்லை, அப்படி இறங்கினால் அது அவனுக்கு அவமான குறைவு அல்லது யாருக்காக இறங்குகின்றானோ அவனுக்கான சரி மரியாதை, இது அந்நாளில் மரபு.
மன்னன் யானையில் இருந்து இறங்கி அவர் அருகில் சென்றான், உடைவாளினை உருவினான். கூட்டம் வேல் எறிந்து கொல்லாமல் வெட்டி கொல்லபட போகின்றார் எறிபத்தர் என எண்ணி அவர் சாவதை காண சகிக்காமல் கண்களை மூடிகொண்டது
சில நிமிடங்களுக்கு பின் மெல்ல திறந்தால் அந்த காட்சி நம்ப முடியாத காட்சியாய் இருந்தது
ஆம் எறிபத்தர் முன் மண்டியிட்டு கைகளை உயர்த்தி அதில் வாளை ஒப்படைத்தபடி சொன்னான் புகழ் மன்னன், “அய்யா சிவனடியார் வேறு சோழதேசத்தின் ஆட்சி வேறு என்றா நினைத்தீர்கள்? சோழ தேசம் சிவ பூமி
ஒவ்வொரு சோழனுக்கும் சிவனே அரசன், நான் அந்த கூட்டத்துக்கு தலைவன். எம்முன்னோரும் நானும் என் வம்சமும் சோழ வம்சம் இருக்குமளவும் ஒவ்வொருவன் செய்த சிவதொண்டுக்கு மேலாக ஒருபடி செய்வோமே அன்றி குறைந்து செய்யமாட்டோம்
நிச்சயம் நடந்தது மிகபெரும் பிழை, இதற்கு செத்திருக்க வேண்டியது என் யானையோ என் பாகன்களோ அல்ல, நானே சாக வேண்டிய குற்றவாளி, உம் கரங்களால் என்னை வெட்டி கொல்லுங்கள். சிவனடியார் பூஜையினை காக்க முடியா மன்னன் எறிபத்தர் கையால் செத்து பாவம் தீர்த்தான் என சோழ வரலாறு எழுதட்டும் , ஆனிலை நாதர் அதற்கு சாட்சியாகட்டும்
கையில் மழுவோடு நீர் தருகாவனத்து சிவனாகவே எமக்கு தெரிகின்றீர், அந்த கர்வமிக்க ரிஷிகளை சிவன் அழித்தது போல் என்னை அழிப்பீராக” என கழுத்தை கொடுத்து குனிந்து நின்றான் புகழ்சோழன்.
மன்னன் கொடுங்கோலன், சிவபக்தி இல்லாதவன் அவன் சரியின்றிதான் இது நடந்தது என அதுகாலம் எண்ணிய எறிபத்தர் மனம் கலங்கினார்
“அய்யோ தவறு செய்துவிட்டோமே, மன்னின் பட்டத்து யானையினை கொல்வது அவனுக்கு மாபெரும் அவமானம் அல்லவா? இந்த யானை மன்னனையா சுமந்தது? இல்லை ஒரு சிவனடியாரை அல்லவா சுமந்திருக்கின்றது.
இப்படிபட்ட மன்னனுக்கு தீராத சோகத்தை கொடுத்துவிட்டோமே, அவன் இருந்தால் இன்னும் எவ்வளவு அடியார்களை ஆதரிப்பான்? எவ்வளவு ஆலயங்களை எழுப்புவான்?
ஆனால் நாம் வாழ்ந்தால் அது அவனுக்கு அவமானம் அல்லவா? பகைவர் சிரிப்பர், மன்னர் மதிப்பிழப்பான். ஊர் உலகம் அவனை மதிக்காது, பட்டத்து யானையினை ஒரு ஆண்டிக்கு வெட்ட கொடுத்த கோழை என்றல்லவா பரிகாசிப்பார்கள்?
ஒரு சிவனடியாருக்கு நீதி கேட்க போய், ஒரு பெரும் சிவனடியார் மனம் புண்பட்டுவிட்டதே. ஒரு பக்கம் சரிந்து ஒரு அடியாரை பழிக்குள் தள்ளிவிட்டேனே
சிவனே, சிவனே. ஒரு அடியார் மனம் குளிர இன்னொரு அடியார் இப்படி தன்னை ஒப்புகொடுப்பதா?
ஒரு மாபெரும் அரசன் இந்த ஆண்டியின் முன் என்னை கொல் என குனிந்து நிற்பான் என்றால் அவன் மனம் எவ்வளவு சிவபக்தியில் உயர்ந்திருக்க வேண்டும்? நானே பாவி, நானே படுபாவி நான் வாழகூடாது”
என சொல்லியபடி மன்னன் இடுப்பில் இருந்த குறுவாளை எடுத்து தன் கழுத்தை அறுக்க தீர்மானித்தார், அது எட்டிவிடும் தூரத்தில் தெரிந்தது
ஆனிலைநாதர் கோவிலில் இருந்தபடி இந்தக் காட்சிகளை கண்டுக் கொண்டே இருந்தார்.
மூவரையும் பார்த்து கொண்டே இருந்தார்.
பூஜைக்கு பூக்கொண்டு செல்ல முடியவில்லையே என அழும் பக்தன் ஒரு புறம்.
அப்பக்தனுக்கு நீதி வேண்டி பட்டத்து யானையினையே கொன்று கழுவேற நிற்கும் பக்தன் ஒரு புறம்.
அந்த பக்தன் முன்னால் ‘நானே குற்றவாளி’ என சாவுக்குத் தயாரான பக்தன் மறுபுறம்.
ஆம் . மூவரும் இப்படி நிற்கக் காரணம் என்ன? அவர்களின் அன்பு , மாபெரும் பக்தி, அபாரமான பக்தி, சிவனை தவிர வாழ்வில் ஏதுமில்லை என சரணடைந்த பெரும் பக்தி.
அனுதினமும் பூ வைக்கும் பக்தன் எறிபத்தனின் பக்தனைக் கண்டு அதிர்ந்து நின்றான். எறிபத்தரோ மன்னனின் பக்தி கண்டு அதிர்ந்து நின்றார்.
மூவரும் அடுத்தவரின் பக்தியில் ஆச்சரியப்பட்டு மனமுருகி நின்ற நேரமது . தன்னை விட மற்றவர் பக்தி பெரிது என ஒப்புக்கொண்ட நேரமது.
சிவன் அக்காட்சியினைக் கண்டு புன்னகை செய்தது அவர்களுக்கு அந்நேரம் தெரியவில்லை.
மூவரின் பக்தியும் ஒன்றுகொன்று குறைந்ததல்ல, மூவரின் பக்தியுமே அவரவர்களின் சிவ அன்பின் உச்சம். சிவனுக்காக வாழும் வாழ்வின் சாட்சி.
அமராவதி நதியினை விட மிகப்பெரும் அன்பு நதி. சிவன் மேலான அன்பில் பெருகிய நதி அங்கு அரூபமாய் ஓடிக் கொண்டிருந்தது. தெய்வத்தின் கண்களுக்கு மட்டும் தெரியும் அந்த நதியில் சிவன் நீந்தி வந்து நின்றார்.
அன்பான பக்தர்களை விட சிவனுக்கு என்ன வேண்டும்? பரம்பொருள் விரும்புவதெல்லாம் பலன் எதிர்பாரா பக்தி ஒன்றல்லவா?
சிவபெருமான் அந்த இடத்துக்கு வந்து விட்டது தெரியாமல், குறுவாளை உருவி தன் கழுத்தை அறுக்க முயன்றார் எறிபத்தர்.
ஆம். சிவனுக்காக உயிர்விட அவர் சித்தமானார், ஏன் சாக சித்தம் கொண்டார்? இனி அவர் யாரையும் காக்கின்றேன் எனச் செயலாற்ற முடியாது, இனி எந்த சிவனடியாரைக் காக்கச் சென்றாலும் ‘அன்று அரசனை பற்றித் தெரியாமல் யானையினைக் கொன்றவனல்லா நீ. தற்குறி ‘ என்பார்கள்
அவரின் காவலும் , தொண்டும் இனி ஏற்கப்படாது, அவர் ஒதுக்கப்படுவார்.
அரசனின் யானையினைக் கொன்ற பழி என்பது சாதாரணம் அல்ல, கஜம் எனும் யானையினை போர்க்காலம் அன்றி கொல்வது பெரும் பாவம், பாவங்களிலெல்லாம் பெரும்பாவம்.
இனி சிவனடியாரைக் காக்க மழு ஏந்தாமல் என்ன வாழ்வு. தீராப் பழிக்கு சாவே சரி என்றுதான் சாகத் துணிந்தார். கத்தியினை உருவிய கரங்கள் அவர் கழுத்தைத் தொட்டன‌.
ருத்திராட்ச மாலையினை ஒதுக்கிக் கழுத்தில் கத்தி வைத்ததும் ஒரு குரல் கேட்டது. அசரீரியாய் கேட்டது . எல்லோருக்கும் கேட்டது
“அன்பர்களே, உங்களது திருத்தொண்டின் பெருமையினை உலக மாந்தர்க்கு உணர்த்துதற் பொருட்டே இத்தகையத் திருவிளையாடலை நிகழ்த்தினோம்” என உரக்கச் சொன்னது.
ஆம், வரிகளை கவனியுங்கள் . மூவரின் அன்பையும் ஒரே அளவில் எடுத்தார் சிவன், யாரையும் குறைத்தோ கூட்டியோ சொல்லவில்லை. மூவரின் அன்பும் அவருக்கு ஒரே வரிசையே.
கடலில் கலந்து விட்ட நதிகளில் எது பெரும் நதி ? சிறு நதி? அப்படி சிவனில் கலந்து விட்ட அந்த மூன்று அன்புநதிகளும் சிவ அன்பின் வெள்ளமாய் ஒருசேர நின்றது.
அசரீரீ கேட்ட மறுநிமிடம் அந்த பட்டத்து யானை உயிர் பெற்று எழுந்தது. அந்த பாகன்களும் உயிர் பெற்று எழுந்தனர், மகா ஆச்சரியமாக அந்தப் பூக்கூடையும் நறுமணமிக்க பூக்களால் நிரம்பிப் புதுமணம் பரப்பிற்று.
அந்த ஆச்சரியம் நடந்ததும் என்னாயிற்று?
சிவகாமியாண்டார் அவர்போக்கில் மலர்க் கூடையினை எடுத்துக் கொண்டு ஆனிலைநாதர் ஆலயம் நோக்கி ஓடினார் . அவர் கடமையினை நிறைவேற்றுவதில் அவருக்கு அவ்வளவு ஆனந்தம்.
மறுபடி கிடைத்த மாசுபடா பூக்களை கொண்டு ‘என் பக்தி காத்தாய் சிவனே’ என ஆனந்தக் கண்ணீர் விட்டு அர்ச்சனை செய்தார்.
கையில் மழுவுடன் நின்ற எறிபத்தரை வணங்கி வேண்டி தன் பட்டத்து யானையில் ஏற்றி கோவிலுக்கு அழைத்து வந்தான் புகழ்சோழன். பட்டத்து யானையில் மன்னனைத் தவிர இன்னொருவர் அமர்வது அவன் அரியாசனத்தில் அமர்வது போன்றது. ஆம். மன்னருக்கு இணையான அடையாளம் .
மன்னராக ஆலயத்துக்கு வந்தார் எறிபத்தர். வணங்கினார். அதன்பின் எறிபத்தரும் புகழ் சோழரும் சிவனடியார் எனும் வகையில் நெருக்கமான அன்பர்களானார்கள்.
வாழும் வரை சிவனடியார்களைத் தொடர்ந்து காத்த எறிபத்தர் , தன் பூலோக காலம் முடிந்ததும் கைலாயம் ஏகினார். அவரை பூதகணங்களின் தலைவராக்கினார் சிவன், இன்றும் அங்கிருந்து காவல் புரிகின்றார் எறிபத்தர்
இப்படிபட்ட சிவனடியார்கள் நிறைந்த கருவூர், திரும்பும் பக்கமெல்லாம் சிவனடியார்கள் நிறைந்த கருவூர் , அடியார்களும் அவர்களின் காவலும் அவர்களின் மன்னனுமாய் எங்கு திரும்பினும் சிவபக்தர்களால் நிரம்பிய கருவூர் பின்னாளில் பெரும் சித்தரைக் கொடுத்தது.
அவர் கருவூர் சித்தர் என அறியப்பட்டார்.
புகழ்சோழனுக்கும் எறிபத்தருக்கும் இருந்த அன்பான உறவு ராஜராஜசோழனுக்கும் கருவூர் சித்தருக்கும் இருந்ததும், தஞ்சை கோவிலின் பிரமாண்ட லிங்கம் அவரால் நிலைநிறுத்தப்பட்டதும் வரலாறு.
ஆம், அவர்கள் இந்த புகழ்சோழன் எறிபத்த நாயனாரின் தொடர்ச்சியாக வந்தவர்கள். முன்னோர்கள் வாழ்ந்த பக்தியின் அடையாளமாய் வாரிசாய் வந்தவர்கள்.
எறிபத்த நாயனார் வாழ்வில் அந்த மூவரையும் கவனியுங்கள். ஒரு ஒற்றுமை புலப்படும். ஒரு சங்கிலி அவர்களை இணைக்கும்.
அந்த சிவனடியார் கீழே விழுந்து அழுத பொழுது, அவர் தன் சிவபூஜை தடைப்பட்டு நின்றதை நினைத்து அழுதது மற்றவர் கண்களுக்கு சாதாரணமாகத் தெரிந்தது, ஆனால் சிவனடியாரான எறிபத்தருக்கோ அது தன் துயராகத் தெரிந்து, சாவுக்கு ஏதுவான செயலைச் செய்யத் தீர்மானித்தார்.
அப்படியே எல்லோருக்கும் கொலைகாரனாக, கொல்லப்பட வேண்டியவனாக, கொடூர பைத்தியமாகத் தெரிந்த எறிபத்தர், மன்னன் புகழ் சோழனுக்கு மட்டும் கொண்டாடப்பட வேண்டியவராகத் தெரிந்தார்.
எப்படி இது சாத்தியமாயிற்று?
மூவர் மனதிலும் நிறைந்து இருந்தது சிவம். அன்பெனும் சிவம். இனத்தை இனம் அடையாளம் காண்பது போல ஒருவரையொருவர் எளிதாகப் புரிந்து கொள்ள முடிந்தது. மானிடக் கண்களுக்குப் புலப்படாத விஷயம் சிவ அன்பு நிறைந்த மனதிற்கு எளிதாகப் புலப்பட்டது
.
அந்த மூவரையும் புரிந்துக் கொண்ட சிவனும் தக்கத் தருணத்தில் வந்து அவர்களைக் காத்தார். மூவரும் மீண்டனர்.
நீங்களும் சிவ அன்பினில் நிறைந்திருந்தால் உலகம் உங்களைப் பரிகாசம் செய்யலாம். மானிடர் உங்களைப் புரிந்துக் கொள்ள முடியாமல் பழிக்கலாம், ஆனால் சிவனில் வாழும் மனம் புரிந்துக் கொள்ளும். சிவனின் சித்தப்படியே உங்கள் சிவ அன்பு அகிலமெங்கும் விளங்கச் செய்யப்பட்டு, நிரந்தர கல்வெட்டாகும்.
அமராவதி என்றால் காலத்தால் அழியாதது எனப் பொருள். அந்த அமராவதி நதி கூட இப்பொழுது வற்றிவிட்டது . ஆனால் எறிபத்த நாயனார், புகழ் சோழன், சிவகாமியாண்டார் ஆகிய மூவரும் காலத்தை வென்றும் நிற்கின்றனர்.
ஆம் , சிவ பக்தி ஒன்றைக் கொண்டவன் காலத்தை வென்று நிற்பான் என்பதற்கு இதுதான் சாட்சி.
நாயன்மார்கள் வரலாற்றை படித்தால்,ஒவ்வொரு நாயனாரும் சிவனின் ஒவ்வொரு அம்சத்தில் தங்களை தொலைத்து அந்த அம்சத்தின் வடிவமாகவே மாறி நின்றதை கவனிக்கலாம். அந்த சிவ அன்பு அவர்களை அப்படி சிவனின் ஒரு அம்சமாகவே மாற்றியிருகின்றது
எறிபத்த நாயனார் அப்படி தீமையினை அழிக்கும் சிவனின் ருத்ர அம்சமாக உருமாறி நின்றிருக்கின்றார்.
அந்த புகழ்சோழன் அதன் பின் என்ன ஆனார் என்றால் அவரும் நாயன்மார்களில் ஒருவரானார். ஒரு அடியவர் உயிருக்காகத் தன் உயிர்கொடுத்து , தீயில் இறங்கி சிவபக்தியினை நிரூபித்து புகழ்சோழ நாயனார் என உயர்த்தப்பட்டார்.
திருநாவுக்கரச நாயனார் சில நாயனார் வாழ்வில் வருவது போல எறிபத்த நாயனார் வாழ்விலும் புகழ்சோழ நாயனார் வந்தார்.
இதில் அவர் வாழ்வு சொன்ன சிவபக்தியின் ஒரு முகத்தைப் பார்த்தோம். இன்னும் மகா முக்கிய முகங்களையும் அவர் நாயனார் நிலையினை அடைந்ததையும் அவர் புகழ் சொல்லும் தனி அத்தியாயத்தில் காணலாம்.
எறிபத்த நாயனார் வாழ்வு சொல்வது இதுதான், அடியார் என யாரைக் கண்டாலும் முடிந்த உதவியினைச் செய்யுங்கள். அவர்களுக்கு ஆறுதலாகவும் அடைக்கலமாகவும் நில்லுங்கள். உரிய நேரத்தில் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய எல்லாமும் கிடைக்கும்.
அடியார்களைக் காக்க எதை இழந்தீர்களோ அதை சிவன் அபப்டியே திருப்பி பன்மடங்காகத் தருவார்.
அடியார்களை ஆதரிப்போருக்கு ஒரு குறைவும் வராது. வந்தாலும் திரும்ப வந்து சிவனருளால் நிறையும்.
இறைவனைப் பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். நறுமணமிக்கப் பூக்கள் இறைவனுக்குப் பிடித்தமானவை, ஆலயம் செல்லும் பொழுதும், இறைவனை வணங்கும் பொழுதும் பூக்களை மறக்காதீர்கள்.
அது போன்ற மிக முக்கியமான விஷயம், இறைவனுக்காக வாழும் அடியார் துன்பத்தை தன் துன்பமாக கருதுதல், விட்டுக் கொடுத்தல், மன்னிப்பு, நிதானம், மாபெரும் குற்றம் செய்திருந்தாலும் மன்னித்தல் , தன்னிலை உணர்தல்.
ஆம். சிவனுக்காக வாழும் அடியாரைத் தன்னை போல் நேசி என்பது தான் எறிபத்த நாயனார் சொல்லிச் சென்ற பாடம். அதை ஒவ்வொரு இந்துவும் மனதில் கொள்ள வேண்டும்.
மாசி மாதம் அஸ்தம் நட்சத்திரமன்று அவர் குருபூஜை கொண்டாடப்படுதல் மரபு.
ஆனால் அந்த கரூர் பசுபதிநாதர் ஆலயத்தில் புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி என்பது விசேஷம். அன்று மறக்காமல் பூக்கூடை திருவிழாவும் கொண்டாடப்படும்.
அன்று எறிபத்த நாயனார் காட்சி அரங்கேறும். ஆம். அந்த ஆலயத்தின் மிக முக்கியமான நாளில் எறிபத்த நாயனாரை மறக்கக் கூடாது எனச் செய்யப்பட்ட ஏற்பாடு அது.
பூக்கூடைகள் வருவதும், யானை அதை இழுப்பதும், எறிபத்த நாயனார் வந்து யானைவதம் செய்வதும் , புகழ்சோழன் வந்து மன்னிப்பு கேட்பதும், சிவன் வந்து அற்புதம் செய்வதும், திருசெந்தூர் சூரசம்ஹாரம் போல் அரங்கேறும்.
புகழ்சோழனும், எறிபத்தரும், அடியாரும் அங்கு எக்காலமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.
கரூர் பசுபதி ஆலயத்துக்குச் செல்ல வாய்ப்புக் கிடைத்தால் தவற விடாதீர்கள். எறிபத்த நாயனாரின் பக்திக்குச் சாட்சியாக இன்று பசுபதியாக வீற்றிருக்கும் அந்த பசுபதிநாதனை பூப்போட்டு வணங்குங்கள்.
எறிபத்த நாயனார் மரபில் வந்த கருவூர் சித்தர் சன்னதியில் நின்று வணங்குங்கள்.
அந்த அமராவதி நதிக்கரையோரம் ஒரு நடை நடந்துவிட்டு வாருங்கள், அதன் சிவனடியார்களைக் கண்டால் உங்களை அறியாமல் உங்கள் மனமே செய்ய வேண்டிய கடமைகளை செய்யச் சொல்லும், அதை செய்யுங்கள் . சிவன் அதில் மகிழ்வார்.
எறிபத்த நாயனாரை பட்டத்துயானை மேல் ஏற்றிய பரம்பொருள் உங்களுக்கு அமர ஒரு நாற்காலி தரமாட்டாரா?
அனுதினமும் சிவனுக்கு பூக்காணிக்கை செய்யும் பொழுது அந்த அடியாரையும், பூக்காணிக்கைக்காக தன்னைக் கொடுக்க வந்த எறிபத்தரையும் ஒரு கணம் நினையுங்கள்.ராஜ சம்பத்துத் தானாக உங்களைத் தேடி வரும்.
அவனோடு இறைவனும் உங்களுக்கு எக்காலமும் காவலாய் இருப்பான். எந்த ஆபத்தும் உங்களை நெருங்காது. இழந்தாலும் பெறுவீர்கள் .விழுந்தாலும் எழுவீர்கள். சரிந்தாலும் உயர்வீர்கள்.
நீங்கள் சிவபக்தராய் இருந்தால் உங்களைக் காக்க எறிபத்தராக சிவன் வருவார், நீங்கள் எறிபத்தராக பக்தரைக் காத்தால் புகழ்மன்னனாக அவர் வருவார்.
ஆம் . சிவ பக்தியில் நிலைத்திருந்தால் ஒரு காலமும் நீங்கள் கைவிடப்பட மாட்டீர்கள். சிவனின் கரம் வந்து உங்களை தாங்கும். அந்த மழு வந்து ஆபத்தை நீக்கி வழி செய்யும்.
இம்மை நன்றாக முடிந்து மறுமையில் கைலாயநாதனுக்கு பூத்தூவும் பாக்கியமும் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here