சுவாமி ஓங்காரனந்தர் என்ற காவல்தெய்வம்

இன்று என்றையும் விட அவர் நமக்கு தேவைப்படும் நேரம்.
சுவாமி ஓங்காரனந்தர் சமாதி அடைந்துவிட்டார். கொரோனா தொற்றினால் மோசமாக பாதிப்படைந்த அவர் தம் பூத உடலை விட்டு நீங்கிவிட்டார். கோவையின் ஆன்மிக மைந்தர். கோவை மாவட்டம் உலகுக்கு அளித்த அருட்கொடைகளில் முக்கியமான ஒருவர் சுவாமி ஓங்காரனந்தர்.
கோஷ்டேஸ்வர சர்மா என்கிற பூர்வாசிரம நாமம் கொண்ட சுவாமிகள் பரம்பரையாக வேதமோதும் குடும்பத்தில் பிறந்தவர். பூர்வாசிரம தாயார் அலமேலு அம்மாள். தந்தையார் வைத்தியநாத கனபாடிகள். சுவாமிகள் சிறு வயதிலேயே வேத பாராயணத்தில் சிறந்து விளங்கினார். ஆன்மிக நாட்டத்தால் மிக இளம் வயதிலேயே ஸ்ரீ ராமகிருஷ்ண சுவாமி விவேகானந்த வேதாந்த இலக்கியங்களில் நாட்டம் கொண்டு படிக்கலானார்.
எனவே துறவறம் புக அவர் நிச்சயித்த போது தாம் தீட்சை பெற சுவாமி சித்பவானந்தரை நாடினார். சுவாமி சித்பவானந்தர் தமிழகத்தின் ஆன்மிக பொக்கிஷம். ஈடு இணையற்ற ஆன்மிக பேரொளியாக திகழ்ந்தவர் சுவாமி சித்பவானந்தர். கல்வியாளர். வேதாந்த மேதை, சமூக களப்பணியாளர் என பல துறை திறமை கொண்டவர் சித்பவானந்த சுவாமி. குறிப்பாக சுவாமிகளின் திருவாசக பாஷ்யம் தமிழ் ஆன்மிக உரைநடை நூல்களில் ஒரு உச்சம் என்பதில் ஐயமில்லை. தலைமுறைகளை கடந்து நிற்கும் சனாதன பொக்கிஷம் சுவாமி சித்பவானந்தரின் திருவாசக உரை. ஸ்ரீ நாராயண குருதேவரின் தூண்டுதலால் சுவாமி சித்பவானந்தர் இதை செய்தார் என்பது வரலாறு.
அப்பேரருளாளரிடம் ஓங்காரனந்தர் எனும் திருநாம தீட்சை பெற்றார் சுவாமி.
பின்னர் பாரம்பரிய வேதாந்த கல்வியை சுவாமி தயானந்த சரஸ்வதியின் முதன்மை சீடர்களில் ஒருவரான சுவாமி பரமார்தானந்தர் என்பாரிடம் கற்று தேர்ந்தார்.
தீட்சை குரு சுவாமி சித்பவானந்தர் அடியொற்றி தமிழ் ஆன்மிக இலக்கியங்களை கற்று தேர்ந்து அவற்றை அவற்றின் உண்மையான உட்பொருளுடன் மக்களுக்கு உரைக்கலானார் சுவாமி ஓங்காரனந்தர்.
தமிழ் நாட்டில் மிகவும் கொடுமைக்கு உள்ளான நூல் திருக்குறள். ஏதோ மேடை பேச்சுக்கும் தமிழர் பெருமைக்கும் உலக பொதுமறை எனும் பெயர் கொடுக்கப்பட்ட அந்த நூல் தமிழருக்கு அளிக்கப்பட்ட அருள் நூல். வாழ்வியலுக்கான நூல். அருள் வாழ்க்கைக்கு புலால் மறுக்க சொல்லும் நூல். அறத்தை வாழ்வின் புருஷார்த்தங்களில் முதன்மை என வலியுறுத்தும் நூல். ஆனால் அதையெல்லாம் மறைத்து ஏதோ அது ஒரு மேடை பேச்சுக்கு கவர்ச்சியான ஈரடிகளை மேற்கோள் காட்ட உதவும் நூலாக மாற்றியது திராவிடமும் தனி தமிழ் இயக்கமும். இதன் பின்னால் இருந்ததோ மதமாற்ற சூழ்ச்சி.
இதனை உடைத்தெறிந்தவர் சுவாமி ஓங்காரானந்தர்.
தம் பேச்சுக்கள் ஆழ்ந்த கருத்துகளால் அமைந்த எழுத்துக்கள் மூலம் திருக்குறளின் உண்மை நிலையை நம் மக்களுக்கு உணர்த்தினார் அவர். அவர் அதை செய்த பாங்கு அற்புதமானது. நாட்காட்டிகள், நாட் குறிப்புகளில் திருக்குறளும் அதனை ஒத்த இதர பாரத அருமறைகளும் கொடுக்கப்பட்டன. சுவாமி ஓங்காரானந்தரின் உரைகளில் நகைச்சுவையும் ஆழ்ந்த அறிவார்ந்த கருத்துகளும் எளிய முறையில் பின்னி பிணைந்து மக்களை சென்றடையும். மொழியின் எளிமைக்கு பின்னால் அறிவின் ஆழமும் ஆன்மிக அனுபவ செறிவும் பொலியும். எனவே மக்கள் அவர் உரைகள் மூலம் திருவள்ளுவரின் சஹிருதயரானார்கள். திருக்குறளை சனாதன தர்ம பாரம்பரியத்திலிருந்து பிரிக்க நினைத்த சூழ்ச்சியாளர்களுக்கு பெரும் தடையாக நின்றிருந்தார் நம் சுவாமிகள்.
ஸ்தாபனங்களை உருவாக்குவதிலும் சாமர்த்தியம் கொண்டவர் சுவாமி ஓங்காரானந்தர். அவரால் உருவாக்கப்பட்ட சித்பவானந்த ஆசிரமமே அதற்கு சான்று. இடையறாது உழைத்து அந்த ஆசிரமத்தை வேத பண்பாட்டு செயல்பாடுகளின் முக்கிய மையமாக ஆக்கினார் சுவாமிகள்.
திருக்குறள் மட்டுமல்ல சுவாமிகளின் மனம் கவர்ந்தவை பாரதி கவிதைகளும் தாயுமான சுவாமிகளின் ஆன்மிக பாடல்களும். பின்னது சுவாமி சித்பவானந்தரின் தாக்கம். பாரதியின் பாடல்களின் விடுதலை வேட்கையின் அடிப்படை பாரதிக்கு என்றும் உடனிருந்த ஆன்மிக மோட்ச இச்சையே. இதனை கவனமாக தவிர்த்து பாரதி ஒரு விடுதலை போராளி என்றும் சமூக விடுதலை விரும்பி என்றுமே சித்தரிக்கப்பட்டுள்ளார். சுவாமி ஓங்காரானந்தர் பாரதியின் ஆன்மிக அடிப்படையிலிருந்து எழுந்த கனிகளே அரசியல் விடுதலை வேட்கையும் சமூக விடுதலை விருப்பும் என்பதை வெளிக்காட்டினார்.
சமஸ்கிருதத்திலும் தமிழிலும் பெரும் பாண்டித்தியம் பெற்றவர் சுவாமிகள். இறுதி காலத்தில் இலக்கணம் உதவாது என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியென உணர்ந்த சுவாமிகள் பாண்டித்தியத்தைத் தாண்டி ஆன்மிக பரிபக்குவத்தை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவே மொழி மேலும் நூல்கள் மேலும் அவர் கொண்ட பாண்டித்தியத்தை கருதினார். வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து விரிவுரைகளை அளித்த வண்ணம் இருந்தவர் சுவாமிகள். திருவாசகம், திருக்குறள், பகவத் கீதை, ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம், தாயுமானவ சுவாமிகள் பாடல்கள் என அவர் அளித்து சென்றுள்ள உரைகள் என்றைக்குமான பொக்கிஷங்கள்.
சமூகத்திலும் தர்மம் தழைத்தோங்க அவர் பாடுபட்டார். வேதம் ஓதும் பாடசாலைகளும் ஓதுவார் மூர்த்திகளும் அவரால் பயன்பெற்றனர். சுவாமி சித்பவானந்தரின் அருட்கொடைகளில் ஒன்று அந்தர்யோகம். அதனை சுவாமி ஓங்காரானந்தரும் பின்பற்றினார். அதே போல சுவாமி சித்பவானந்தர் தமிழ்நாட்டில் தர்மம் பாதுகாக்கப்பட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேவையை உணர்ந்து அதனை ஆதரித்தார். பெரிய மடாதிபதிகளும் ஆதீனங்களும் தனிப்பட்ட உரையாடல்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தேவையை ஏற்றுக்கொண்டாலும் வெளியே பேச தயங்குவார்கள். ஆனால் அக்காலகட்டத்தில் சுவாமி சித்பவானந்தரே ஆர்.எஸ்.எஸ் முகாம்கள் நடத்த தம் கல்வி மையங்களை வழங்கினார்.
2015 இல் சமாதியடைந்த தயானந்த சரஸ்வதி சுவாமிகள் சுவாமி ஓங்காரானந்தரை, தாம் தலைமையேற்றிருந்த அமைப்பான தர்ம ரக்க்ஷண சமிதி எனும் அமைப்பின் தலைவராக நியமித்தார்.
தர்ம ரக்க்ஷண சமிதி தமிழ்நாட்டில் இயங்கும் ஒரு அமைப்பு. அதன் ஊழியர்கள் கிராமம் கிராமமாக தர்மத்தை பாதுகாப்பதில் பணியாற்றுகின்றனர். கிராம தேவதைகளின் கோவில்கள் தொடங்கி ஆயிரமாண்டு பழமையான ஆலயங்கள் முதல் மதமாற்ற சக்திகளுக்கு எதிராக மக்களை ஒருங்கிணைப்பது வரை அவர்கள் செய்யும் பணிகள் அளப்பரியது. நம் பண்பாட்டின் அற அறிவு நூல்களையும் அவர்கள் மக்களிடம் எளிய முறையில் கொண்டு சேர்க்கும் அரும்பணிகளையும் செய்கிறார்கள்.
இந்த அமைப்பின் தலைவராக சுவாமிகள் இயங்கிய விதம் அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தியது.
தேகம் உகுத்து சமாதி அடைந்த நம் பெரியவர்கள் நம்மை விட்டு அகல்வதில்லை என்பது நம் மரபில் ஒரு நம்பிக்கை. குறிப்பாக தேச பணியும் தெய்வ பணியும் மேற்கொள்ளும் பெரியவர்கள் அப்பணிகளை மேலும் சிறப்பாக செய்ய உதவும் தெய்வீக சக்திகளாக மாறி அதற்காக இயங்கும் ஒவ்வொருவருக்கும் உறுதுணையாக இருப்பார்கள் என்பது நம் நம்பிக்கைகளில் ஒன்று.
சுவாமி ஓங்காரனந்தர் இன்று தம் பூத உடலை உகுத்து சமாதி அடைந்துள்ளார். ஆனால் அவர் இந்து இயக்க பணிகள் ஒவ்வொன்றிலும் இந்து இயக்கப் பணியாளர்களின் ஒவ்வொரு செயலிலும் உறுதுணையாக நிற்பார் எனும் நம்பிக்கை இப்போது தேவை.
தமிழ்நாட்டுக்கு இது ஒரு இருண்ட காலம் என்பதில் ஐயமில்லை. பெருந்தொற்றுகள் நம்மீது கவிந்திருக்கும் காலம். என்றென்றும் நிலைத்திருக்கும் அறத்தை வெறுக்கும் அதிகார வெறி அரங்கேறும் கால கட்டம். இனிவரும் நாட்கள் தீய சக்திகளை வெல்லும் குருக்ஷேத்திரமாக அமையும் என்பதிலும் ஐயமில்லை. அப்பெரும் போரில் நமக்கு வலிமையூட்டும் நம் அக சக்தியாக ஓங்காரனந்த சுவாமிகள் அமைவார் என்பதிலும் ஐயமில்லை.
அறம் காக்க, தேசம் காக்க, தெய்வீகம் காக்க களமிறங்கும் ஒவ்வொரு தமிழ் ஹிந்துவுக்கும் சுவாமி ஓங்காரானந்தர் என்றென்றும் இனி ஒரு காவல்தெய்வம்.

1 COMMENT

  1. வேதாந்த தீபமாய் சுடரொளி வீசிய ஶ்ரீமத் சுவாமி ஓங்காரனந்தர் அவருக்கு மகத்தானதொரு அஞ்சலியை ஶ்ரீ அநீ வழங்கியுள்ளார்! சுவாமிகள் விதைத்த வேதாந்தவிதைகள் விருக்ஷங்களாகி தமிழகத்தையும் பாரதத்தையும் செழிக்கச்செய்யும் என்பதில் ஐயமில்லை! சிவோஹம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here