டிசம்பர் 17
சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரூ பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா ஜனவரி மாதம் விடுதலை செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.
வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டு கால சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரூ பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை காலம் விரைவில் முடிவுக்கு வருகிறது. மேலும், நீதிமன்ற உத்தரவுப்படி, அபராதத் தொகை 10 கோடியே 10,000 ரூபாயை, சசிகலா தரப்பினர் கடந்த மாதமே செலுத்தி விட்டனர். இருப்பினும், அவரது விடுதலையில் குழப்பம் நிலவி வந்தது.
இந்த சூழலில், வரும் ஜனவரி மாதம் 27ம் தேதி அவர் விடுதலை செய்யப்படுவதாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கர்நாடக சிறைத்துறை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சசிகலாவை விடுதலை செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த அறிக்கையை கர்நாடகா உளவுத்துறை, சிறை நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளது. சசிகலாவின் தொண்டர்களை சிறை வளாகத்தின் அருகே வர விடாமல், எல்லையிலேயே தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரது பாதுகாப்பு காரணங்களுக்காக, மற்ற கைதிகளை போல 7 மணிக்கு விடுதலை செய்யாமல், இரவு 9.30 மணிக்கு விடுதலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா – தமிழகம் எல்லையான அத்திப்பள்ளி வரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று, அவருக்கான வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்க வேண்டும். சசிகலாவின் விடுதலை நாளில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க சிறைத்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.