மசினகுடியில் காதில் தீக்காயம் பட்டு ஜன.20ஆம் தேதி யானை ஒன்று உயிரிழந்தது. இந்நிலையில், டயர் ஒன்றில் தீ வைத்து யானை மீது வீசும் பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
டயரில் தீ வைத்து யானை மீது வீசும் பதைபதைக்கும் காணொளி
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் காது மற்றும் முதுகுப் பகுதியில் தீக்காயங்களோடு சிகிச்சைப் பெற்று வந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று ஜன.20 சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. அதைத்தொடர்ந்து, வனத்துறை மருத்துவர்கள் சுகுமார், ராஜேஷ், பாரத்ஜோதி ஆகியோர் தலைமையில் யானையின் உடலுக்கு நேற்று(ஜன.21) உடற்கூராய்வு செய்யப்பட்டது.
அதன் முடிவில், யானையின் காது பகுதியில் பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. அக்காயங்களால் காதில் உள்ள நரம்புகள் அறுபட்டு, அதிகளவில் ரத்தம் வெளியேறி யானை உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பாக யானை மீது நடத்தப்பட்ட தாக்குதல்தான் உயிரிழப்புக்கு காரணம் என்று உறுதி செயப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைந்து பிடிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த நிலையில், டயர் ஒன்றில் தீ வைத்து யானை மீது வீசும் பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன