மத்திய அரசின் 2021 –22ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்புகளின்போது, பலரால் கவனிக்கப்படாத ஒரு சுவாரஸ்யமான விஷயங்கள் பலவுள்ளன. இவற்றில் முக்கியமான ஒன்று டிஜிட்டல் கரன்சி.
அதேநேரத்தில், பிட்காயின் உட்பட கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயங்கள் மீதான முதலீடும் தடை செய்யப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டது. கிரிப்டோ கரன்சிகள் மீதான முதலீடுகளுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தடை விதித்தது.
ஆனாலும், இந்தியாவின் லட்சக் கணக்கான கோடீஸ்வரர்கள், தங்கள் சட்டவிரோத பணத்தை கிரிப்டோ கரன்சியில் குவித்துள்ளனர். அவர்கள், அந்த முதலீட்டில் இருந்து தங்கள் பணத்தை திரும்ப எடுப்பதற்கான ஒரு வாய்ப்பை மத்தியஅரசு உருவாக்கிக் கொடுத்துள்ளது. இதன்வழியாக, வரும் முதலீடுகளை தன்வசம் ஈர்க்கவே இந்த டிஜிட்டல் கரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயத்தை, விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.
கிரிப்டோ கரன்சி என்றால் என்ன?
பொருளாதார பரிவர்த்தனைகளின் புதிய பரிணாம்தான் கிரிப்டோ கரன்சிகள். அதாவது, பணத்தின் பெயரால், உங்களால் ஸ்பரிசிக்க முடியாத ஒரு பண மதிப்பீட்டில், உங்கள் பணத்தை முதலீடு செய்வதே கிரிப்டோ கரன்சி சந்தை என்று கூறப்படுகிறது. நாம் நடைமுறையில் பயன்படுத்தும் 10 முதல் 2 ஆயிரம் ரூபாய் வரையிலான கரன்சிகளை தொட்டு, உணர்ந்து ஸ்பரிசிப்பது என்பது, கிரிப்டோ கரன்சியில் கிடையாது.
காரணம், இந்த கிரிப்டோ கரன்சிகள் முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தின் உச்சத்தில், மிகவும் பாதுகாப்பான பார்கோடுகளை பயன்படுத்தி உருவாக்கப்படுபவை. நீங்கள் கொடுக்கும் பணத்தக்கு ஏற்ப பார்கோடுகள் உங்களுக்குக் கிடைக்கும். இதை உங்கள் மொபைல் அல்லது இன்டர்நெட் வேலட்டில் சேமிக்கலாம். உங்கள் கூட்டாளிக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய பணத்துக்கு இந்த பார்கோடுகளை, அதன் மதிப்புக்கு ஏற்றவாறு மாற்றிக் கொடுக்கலாம்.
உதாரணமாக, கிரிப்டோ சந்தையில் ஆயிரத்துக்கும் அதிகமான நாணயங்கள் இருந்தாலும், முதலிடத்தில் இருப்பது பிட்காயின்தான். இதன் மதிப்பு இப்போதைக்கு 51 ஆயிரம் டாலரை எட்டியுள்ளது. நம் பணத்தின் மதிப்பில் சொல்வது என்றால், 37 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய். இதே அளவுக்கு நீங்கள் பணம் கொடுக்க வேண்டிய சூழலில், உங்கள் பங்குதாரர் ஒப்புக் கொண்டால், ஒரு பிட்காயினை வழங்கி, பிரச்னையை சமாளிக்கலாம். ஆனால், நீங்கள் கொடுத்த பணத்தையும், உங்கள் கூட்டாளி வாங்கிய பணத்தையும் ஸ்பரிசிக்க முடியாது. இதுதான் கிரிப்டோ கரன்சிகளின் ஸ்பெஷாலிட்டி. இந்த வகையில், இந்தியாவில் லட்சக் கணக்கான கோடீஸ்வரர்கள் தங்கள் பணத்தை, பிட்காயின்களில் கொட்டியுள்ளனர்.
சரி, நம்ம டிஜிட்டல் கரன்சி எப்படி இருக்கும்?
வங்கியில் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும்போது, உங்கள் பண மதிப்பு மாறாமல் அப்படியே 2ம் நபருக்கு, அதே மதிப்பில் பணத்தை பரிவர்த்தனை செய்திட முடியும். உதாரணமாக, ஏ என்ற நபர், பி என்ற நபருக்கு தான் வழங்க வேண்டிய 10 ஆயிரம் ரூபாயை, நெப்ட் உட்பட ஆன்லைன் பரிவர்த்தனை முறையில் செலுத்திடலாம். இது டிஜிட்டல் பரிவர்த்தனை எனப்படும். அதாவது மின்னணு முறையில் நடைபெற்ற பரிவர்த்தனை
இதில் இருந்து, டிஜிட்டல் கரன்சி கொஞ்சம் மாறுபடும்.
அதாவது பரிவர்த்தனை செய்யும் பணம் உங்களுக்குச் சொந்தம். ஆனால், ஒருமுறை நீங்கள் உங்கள் பெயரில் வாங்கும்போது, பணம் கொடுத்து வாங்கிடலாம். ஆனால், அதை விற்கும்போது மட்டுமே மீண்டும் பணமாக்கிட முடியும். அதுவரை அது உங்கள் பெயரிலான வேலட்டில், இணையதளத்தில் பாதுகாப்பாக தூங்கிக் கொண்டிருக்கும். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ஏறக்குறைய இது கிரிப்டோ சந்தையைப் போன்று இருக்கிறதல்லவா?
சந்தேகம் வேண்டாம், கிரிப்டோ சந்தையின் இந்திய வெர்ஷன்தான் டிஜிட்டல் கரன்சியாக இருக்கப்போகிறது என்கின்றனர், நாணயவியல் நிபுணர்கள். அதாவது, பிட்காயின் உட்பட முதலீட்டில் இருந்து மீட்கப்படும் பணத்தை, அப்படியே டிஜிட்டல் கரன்சியில் ஈர்ப்பதற்கு மத்திய அரசு, இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இதன்படி, கிரிப்டோ நாணயங்களை உருவாக்குவதைப்போல், டிஜிட்டல் கரன்சிக்கான பார்கோடுகளை, ஆர்பிஐ மேற்பார்வையில் ஒரு அமைப்பு உருவாக்கும். இந்த ஒவ்வொரு பார்கோடுக்கும் குறிப்பிட்ட அளவிலான பண மதிப்பீடு நிர்ணயம் செய்யப்படும்.
பார்கோடுகளுக்கு எப்படி பண மதிப்பீடு நிர்ணயம் சாத்தியம்?
உங்கள் கையில் ரோஸ் வண்ணத்தில் உள்ள கரன்சிக்கு 2 ஆயிரம் ரூபாய் மதிப்பீடு என்று ஆர்பிஐ கூறுகிறது. அதேபோல், டிஜிட்டல் கரன்சி திட்டத்தில் உருவாக்கப்படும் பார்கோடுகளுக்கு பண மதிப்பீடு நிர்ணயம் செய்யப்படும். உதாரணமாக ஒரு பார்கோடுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டால், பணம் செலுத்தி ஒரு பார்கோடு / டிஜிட்டல் கரன்சியை வாங்கிக் கொள்ளலாம். இந்த டிஜிட்டல் கரன்சியில் வழங்கப்படும் வேலட்டை, உங்கள் ஸ்மார்ட் போனில் திணித்துக் கொண்டு எங்கும் கொண்டு செல்லலாம். ஆனால், பாஸ்வேர்ட் பத்திரம். காரணம், சர்வதேச அளவில் ஹேக்கர்கள் கூட்டம், இந்த கிரிப்டோ /டிஜிட்டல் கரன்சியை திருடுவதற்காகவே காத்திருக்கின்றனர் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.
இதனால், அரசுக்கு என்ன லாபம்?
சர்வதேச அளவில் பிட்காயின் உட்பட கிரிப்டோ சந்தையில், இந்தியர்கள் வீணாக முடக்கியுள்ள நிதியை மீட்க முடியும். மத்திய அரசின் சமாதான் திட்டம் உட்பட எந்த ஒரு திட்டத்தின் கீழும், அந்த முதலீட்டுத் தொகையை டிஜிட்டல் கரன்சியில் முதலீடு செய்ய வைக்க முடியும். இதன்மூலம் வெளிநாட்டில் இருந்தும், உள் நாட்டில் இருந்தும் லட்சக் கணக்கான கோடி ரூபாய் நேரடியாக, ஆர்பிஐ வழியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும்.
இந்தப் பணத்தை அரசு அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு உட்பட, நாட்டின் எந்த ஒரு வளர்ச்சிக்கும் பயன்படுத்த முடியும். அதேநேரத்தில், டிஜிட்டல் கரன்சியின் மதிப்பீடு அடிப்படையில் பெரு நிறுவனங்களுக்கு இடையேயான கொடுக்கல், வாங்கல் சட்ட ரீதியாக நடக்கும். மேலும், இவ்வாறு மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் கரன்சி முதலீடுகளுக்கு வருமான வரித்திட்டத்தில் விலக்கு, கவர்ச்சிகரமான வட்டி என்று பல விஷயங்களை அரசு அறிவிக்கும் வாய்ப்புகளும் உள்ளன.
இதனால், கிரிப்டோ சந்தையில் நாணய மதிப்பு வளர்வதுபோல், இந்த டிஜிட்டல் கரன்சிகளின் மதிப்புகளும் நாளுக்கு நாள் உயரலாம். நீங்கள் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய ஒரு பார்கோடு மதிப்பு, சில மாதங்களில் 5 ஆயிரத்து 500 ரூபாயாகவும் இருக்கலாம். ஆனால், இந்தியாவின் பணம், இந்தியாவுக்குள்ளேயே சுழலும் ஒரு நிலை ஏற்படும்.
இதனால், நாட்டின் பல்வேறுதுறைகளின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். அதேநேரத்தில், டிஜிட்டல் கரன்சியில் நீங்கள் முதலீடு செய்த பணமும், சந்தை மதிப்பில் வளரத் தொடங்கியிருக்கும். ஆனால், ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால், முதலீடு செய்யும்போது நீங்கள் வழங்கும் பணம், இதன்பின்னர், பார்கோடு வடிவில் இணையத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கும். மீண்டும் பணமாக்க வேண்டிய சூழலில், அதை கைமாற்றும் சந்தையில், வழங்கினால் மட்டுமே, உங்கள் கணக்கில் ரொக்கம் வரவாகி இருக்கும்.
மற்றபடி, இந்த டிஜிட்டல் கரன்சி வரத்து, இந்திய பொருளாதாரத்துக்கு ஒரு நேர்மையான ஊக்கியாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.