தங்கம் வாங்கலாம் வாங்க!!

என்னது, நம்மை கேலி செய்யுறதுக்காக, கூவி அழைப்பதுபோல் இருக்கிறதே?னு ரொம்பவும் கோவப்படாதீங்க. காரணம், காலம் அப்படியிருக்கு. ஆமாங்க,. உண்மையாகவே தங்கத்தின் விலையில் தடதட விலை சரிவு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதனால், இன்னும் ஒரு சில வாரங்களில் தங்கத்தின் மீதான மேலும் குறையுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஏன், இப்போதே குறைந்து கொண்டுதான் இருக்கிறது.

எதற்காக, சொல்கிறோம் என்றால், ஏப்ரல் மாதத்துக்குள் 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு 4 ஆயிரம் கிராமுக்குள் வீழ்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. கடந்த 10 மாதங்களின் குறைந்தபட்ச தங்கம் விலையை எடுத்துக் கொண்டால், 2020ம் ஏப்ரல் ஒன்றாம் தேதி இருந்த தங்கம் விலையைத்தான் குறிப்பிட வேண்டும். அன்றைய நாளில், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் 4 ஆயிரத்து 167 ரூபாயாக இருந்தது. இதன்பின்னர் தங்கம் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியது.

இதில், வியப்பான விஷயம் என்னவென்றால், கொரோனா அச்சத்தால் உலகம் முழுவதும் ஷாப்பிங் மால்கள், தங்கள் விற்பனைக் கடைகள் எல்லாம் மூடப்பட்டிருந்த காலகட்டத்தில், தங்கம் மீதான விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து, நடுத்தர மக்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது. இதற்கு அடிப்படையான 2 விஷயங்களை இங்கே நாம் குறிப்பிட்டாக வேண்டும்.

தங்கம் மீதான விலை  ஓட்டத்தை தடுத்து நிறுத்தும் 2 முக்கியக் காரணிகள் உள்ளன. இவற்றில் ஒன்று கச்சா எண்ணை சந்தை, 2வது பங்கு சந்தை செயல்பாடு. உலகம் முழுவதும் தொழிற்துறை செயல்பாடு முடங்கியதால், கச்சா எண்ணை விலை 60 டாலர்களில் இருந்து சரிந்து 30 டாலர்களுக்கு சென்றது, பங்கு சந்தையின் வர்த்தகப் புள்ளிகள் கடந்த ஆண்டு ஜனவரியில், 42 ஆயிரமாக இருந்து, ஏப்ரல் மாத ஊரடங்கு நேரத்தில் சரிந்தது. மும்பை பங்கு சந்தையின் வர்த்தகப் புள்ளிகள் 28 ஆயிரமாக வீழ்ந்தது.

முதலீட்டாளர்களைக் கவரும் 2 விஷயங்களும் ஒரே நேரத்தில் வீழ்ந்ததால், தங்கள் பணத்தை பாதுகாக்கத் துடித்த உலக முதலீட்டாளர்கள், ஒரே நேரத்தில் தங்கம் மீது முதலீடுகளை குவித்தனர். குறைந்த உற்பத்தி அதிக தேவை என்ற நிலையில், தங்கம் மீதான விலை கிடுகிடு உயரத் தொடங்கியது.

2020 ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் மீதான விலை புதிய சரித்திர சாதனை படைத்தது. அந்த ஆண்டின் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் 5 ஆயிரத்து 196 ரூபாயாக இருந்தது. இதன்பின், ஆகஸ்ட் 7ல் கிராம் 5 ஆயிரத்து 416 ரூபாயாக உயர்ந்தது.

ஒப்பீடு அளவில் சொல்வது என்றால், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்களில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஆயிரத்து 250 ரூபாய் வரை உயர்ந்தது. பங்கு சந்தையில் கூடஇந்தளவுக்கு லாபம் கொட்டியிருக்காது. இதன்பின்னர் தங்கத்தின் விலை மெல்லக் குறைந்தது.காரணம், உலகம் முழுவதும் கரோனாவின் பிடியில் இருந்து, தொழிற்துறை மீண்டு, இயங்கத் தொடங்கியதால், பங்கு சந்தை முதலீட்டாளர்கள் தங்கத்தை தங்கள் பிடியில் இருந்து விடுவித்தனர்.

இதனால், தங்கம் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொண்டு, விலை சரிவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி 22 காரட் தங்கம் கிராம் 4 ஆயிரத்து 735 ரூபாயாக இருந்தது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாளில் விலை 4 ஆயிரத்து 625 ரூபாயாக இருந்தது. நேற்று கிராம் 4 ஆயிரத்து 535 ரூபாயாக இருந்தது. இந்த விலைக்குறைவுக்குக் காரணம், பட்ஜெட்டில் வெளியான ஒரு அறிவிப்பும் மற்றும் பங்குச் சந்தையின் தாக்கமும்தான்.

 பட்ஜெட் தாக்கல் செய்யும் முன் இந்திய பங்குச் சந்தையில், மும்பை சந்தையின் வர்த்தக குறியீடு எண் 50 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டு சரிந்தது. பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர், மும்பை பங்கு சந்தையின் வர்த்தகப் புள்ளிகள் 52 ஆயிரத்தை நோக்கியும், தேசிய பங்குச் சந்தையான நிப்டியின் வர்த்தக புள்களிகள் 15ஆயிரத்தைக் கடந்தும் பயணிக்கின்றது. அதேநேரத்தில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்து வருவதால், பலநாடுகளின் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை பங்கு சந்தை, கச்சா எண்ணை நோக்கி திருப்பியுள்ளனர். தங்கம் மீதான முதலீடு குறைந்துள்ளது. விலை குறைவுக்கு இதுவும் ஒரு காரணம்.

அதேநேரத்தில், தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைக்கக்கோரி, தங்க இறக்குமதியாளர்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தனர். இதனால், 12.5 சதவீதமாக இருந்த இறக்குமதி வரி, இப்போது 10 சதவீதமாக்கப்பட்டுள்ளது. தங்கம் மீதான இறக்குமதி வரிக்குறைப்பால், கடத்தல் தங்கத்தின் அளவு குறைவதுடன், அரசுக்கு நேரடியாக கிடைக்கும் வரி வருமானத்தின் அளவும் அதிகரிக்கும் என்று தங்க நகை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சர்வதேச அளவிலான முதலீடு மாற்றங்கள், மத்திய அரசின் தங்கம் மீதான இறக்குமதி வரிக்குறைப்பு உட்பட பல காரணங்களால் வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து தங்கம் மீதான விலை மேலும் சரியும் என்கின்றனர் இந்திய ஆபரண உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினர். 22 காரட் தங்கம் கிராம் 4 ஆயிரம் ரூபாய்க்கு வந்தாலும், அதில் வியப்பொன்றும் இல்லை என்கின்றனர். நல்லதுதான், விலை குறைந்தால், லட்சக் கணக்கான நடுத்தர வர்க்கத்தினர், தங்கள் குறைந்த தேவைக்காவது தங்கம் வாங்கிட முடியும்தானே!

ஆனால், விற்பனை இல்லாத நேரத்தில், இறக்குமதி வரி 12.5 சதவீதமாக இருந்தக் காலகட்டத்தில் தங்கம் மீதான விலையை ஒப்பிடும்போது, தங்கம் விலை மீண்டும் கிராம் 4 ஆயிரத்துக்குள் அடங்கும் என்ற நம்பிக்கையை தங்க நகை விற்பனையாளர்கள் உருவாக்கியுள்ளனர். வரிக்குறைப்பு நடைமுறைக்கு வந்தால், மீண்டும நடுத்தர வர்க்கத்தினர் தங்கம் வாங்கும் ஆசையை வளர்த்துக் கொள்ளலாம். அந்தளவுக்கு விலை குறையும் என்று நம்பிக்கை கொடுக்கின்றனர் தங்க நகை விற்பனையாளர்கள் கூட்டமைப்பினர். ஆனால் தங்கத்தை சர்வதேச அளவில் மொத்தமாக வாங்கி விற்கும் மொத்த வியாபாரிகள் தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்கள் தங்கத்தின் விலையை அந்த அளவிற்கு குறைய அனுமதிப்பார்களா என்ற சந்தேகமும் உள்ளது. ஆனாலும், பொதுமக்கள் தங்கத்தை வாங்கினால் தான் வியாபாரிகளுக்கு லாபலம் கிடைக்கும். எனவே தங்கத்தின் விலை மேலும் சரியும் என்று நம்புவோம்!

 சில குறிப்பிட்ட காலத்தில் தங்கம் மீதான விலை இதுதான்

ஆண்டு ஒரு பவுன்

1920 ரூ.21
1961 ரூ.104
1978 ரூ.602
1980 ரூ.1,136
1987 ரூ.2,106
1996 ரூ.4,000
1977 ரூ.3,400
2001ரூ.3,368
2006 ரூ.7,060
2008 ரூ.10,048
2010 ரூ.15,488
2011 ரூ.22,104
2015 ரூ.21,424
2019 ரூ.30,104
2020 ரூ.31,168
2020 ரூ.33,336

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here