தாய்மொழியை அழிப்பது ஆங்கிலமா? சமஸ்கிருதமா?

184

புகழ் பெற்ற சாலிவாகன மன்னன் குறித்து நம் பாரம்பரியத்தில் சொல்லப்படும் ஒரு சம்பவம்
உண்டு.சாலிவாகன மன்னனின் மனைவி நாகாக்னிகா. அவள் நாகர் சமுதாயத்தைச் சார்ந்த இளவரசி.
கல்வி கேள்வியில் வல்லவள். சாலிவாகனனோ குயவர் சமுதாய சிறுவன். போர்கலை நிபுணன்.
தன் வீரத்தாலும் போர் யுக்திகளாலும் விக்ரமாதித்தனையே வென்று பேரரசனானவன்.

ஒரு நாள் நாகாக்னிகாவுடன் அந்தப்புர குளத்தில் நீராடும் போது விளையாட்டாக சாலிவாகனன்
அவள் மீது நீரை அடித்து விளையாட அவள் ‘போதும்’ என்கிற பொருள் படும்படி சமஸ்கிருதத்தில்
‘மா உதகா’ (மாதகா) என சொன்னாள். அதை மோதக என புரிந்து கொண்ட மன்னன் மோதகம்
எனும் தின்பண்டத்தைக் கொண்டு வரும்படி அங்கிருந்த சேடிகளை ஏவினான். அரசி இதைப்
பார்த்து சிரித்துவிட்டாள்.

அதனால் சாலிவாகனன் மிகவும் வருத்தம் அடைந்தான். தன் அரசவையில் இருந்த சிறந்த
வடமொழி வல்லுனர்களிடம் மிகக் குறைந்த காலகட்டத்தில் தன்னை சமஸ்கிருத நிபுணனாக்க
கோரிக்கை விடுத்தான்.அரசவையின் தலைமை பண்டிதர் குணாத்யர் பொதுவாக அதற்கு 12 ஆண்டுகள் ஆகுமென்றும்
அரசர் சிறந்த அறிவாளி என்பதால் ஆறு வருடங்களில் அதை சாதித்துவிட முடியுமென்றும் கூறினார்.

‘ஆறே மாதங்களில் அரசரை சமஸ்கிருத நிபுணனாக்குகிறேன்’ என்று எழுந்தது ஒரு குரல். அதை
சொன்னவர் சர்வவர்மர். அரசவையில் உள்ள மற்றொரு பண்டிதர். அது இயலாத காரியமென்றும், அவ்வாறு ஒருவர் சாலிவாகனனை ஆறு மாதங்களில் சமஸ்கிருதம் பேச செய்தால் தாம் சமஸ்கிருதத்தில் பேசுவதையே நிறுத்திவிடுவதாகவும் சூளுரைத்தார் குணாத்யர்.

சர்வவர்மர் அச்சூளுரையை ஏற்றுக்கொண்டார். ஆறே மாதங்களில் மன்னனை சிறப்பான சமஸ்கிருத பண்டிதனாக்கினார் சர்வ வர்மர். குணாத்யருக்கோ சமஸ்கிருதம் மட்டுமே தெரியும். அரசனுக்கு இப்போது சமஸ்கிருதம்
பிராக்கிருதம் இரு மொழிகளும் தெரியும். எனவே அமைதியாக அரசவையை விட்டு வெளியேறினார் அரசரின் முதன்மை சமஸ்கிருத பண்டிதர்.

காலம் உருண்டோடிற்று. சில வனவாசிகள் ஏட்டுக் கட்டொன்றை கொண்டு வந்தார்கள். அவர்கள்
பேசும் பைசாசிக மொழியில் எழுதப்பட்ட காவியமாம். அதை அரசர் முன்னிலையில் அரங்கேற்ற
வேண்டும் என அதை எழுதிய கவி ஆசைப்பட்டாராம்.

சாலிவாகனன் நகைத்து மறுத்து விட்டான். அரசவை பண்பட்ட மொழிகளுக்கானது. இங்கே
பைசாசிக மொழியில் இயற்றப்பட்ட இலக்கியம் அரங்கேறுவதா! முடியாது. வனவாசிகள்
சென்றுவிட்டார்கள்.

சில மாதங்கள் சென்றன. அரசனுக்கு வயிற்று வலி. அரசனை பரிசோதித்த மருத்துவர்கள் இதற்கு
காரணம் அரசன் உண்ணும் மாமிசம் நல்ல தரமற்றது என்பதுதான் என்றார்கள்.

சமையல்காரர்களிடம் விசாரிக்கப்பட்டது. அவர்கள் வனவாசிகள் தரும் மாமிசம் முன்பு போல
நன்றாக இல்லை என்று சொன்னார்கள். வனவாசிகளிடம் காரணம் கேட்கப்பட்டது.
கானகத்தின் நடுவே ஒரு ஆசிரமத்தில் ஒரு முனிவர் மிகவும் அழகிய பாடல்களை பாடுவதாகவும்,
விலங்குகள் அப்பாடல்களை கேட்டு உண்ணவும் மறந்து அங்கேயே லயித்து இருந்து
விடுவதாகவும் எனவே அவை மெலிந்து விடுவதால் அவற்றின் மாமிசம் அத்தனை சத்தான
தரமானதாக இல்லை என்றும் சொன்னார்கள் அவர்கள்.

அத்தகைய முனிவரை காண மன்னன் ஆர்வம் கொண்டு சென்றான் சாலிவாகன மன்னன். அங்கே
விலங்குகள் புடை சூழ ஒரு முனிவர். அவர் எதிரே நெருப்பு பீடம். அவர் தேனினும் இனிய
கவிதைகளை பைசாச மொழியில் பாடுகிறார். அவர் பாடுவதைக் கேட்டு விலங்குகள் கண்ணீர்
மல்க அமைதியா அமர்ந்திருக்கின்றன. பின்னர் அந்த பாடல்கள் கொண்ட ஓலையை அக்னிக்கு
அர்ப்பணம் செய்கிறார்.

தாங்க முடியவில்லை சாலிவாகனனுக்கு. ஓடிச்சென்று அவர் கரத்தை பிடித்து தடுத்து
நிறுத்துகிறான். சடை முடியில் இருந்தாலும் அந்த முனிவரை அவனால் அடையாளம் காண
முடிகிறது. அவர் வேறு யாருமில்லை குணாத்யர்.

இவ்வாறுதான் நமக்கு பைசாச மொழியில் இயற்றப்பட்ட முதல் இலக்கியம் கிடைத்ததென்று
ஐதீகம்.

இந்நிகழ்வு நடந்திருக்கக் கூடிய காலகட்டத்துக்கு ஒரு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்னர்,
ஜனவரி 6, 1996 இல் ‘நியூ சயிண்டிஸ்ட் ‘ இதழில் ‘ஒரு தாய் மொழியின் மரணம் ‘ எனும் கட்டுரை
வெளியாகியது.

உலக மொழிகளில் மூன்றில் ஒரு பங்கு அழிவினை எதிர்நோக்கியுள்ளதாக அக்கட்டுரையாளர்
குறிப்பிடுகிறார். மொழிகளின் மரணம் என்பது மிக வேகமாக நடைபெறுவது காலனிய
ஆதிக்கங்களுக்கு உட்பட்ட தேசங்களில் தான்.

காலனிய ஆதிக்கத்தின் பொருளாதார தாக்கம் புள்ளிவிவரப்படுத்தப் பட்ட அளவுக்கு
காலனியத்தின் கலாச்சார அழிப்பு புள்ளிவிவரப்படுத்தவோ விவரிக்கப்படவோ இல்லை. காலனிய
எஜமானர்களின் பண்பாடுகளையும் அவர்களின் சித்தாந்தங்களையும் காலனியாதிக்கத்திற்கு
உட்படுத்தப்பட்ட தேசங்கள் ஏற்றெடுப்பதென்பது ஏறக்குறைய கேள்விக்குள்ளாக்கப்படாத ஒரு
நிகழ்வாகிவிட்டது.

மைக்கேல் க்ராஸ் எனும் மொழியியலாளர் அலாஸ்காவின் 20 மொழிகளில் 2 மொழிகளே
இன்னமும் கற்கப்பட்டு ஜீவித்திருப்பதாக கூறுகிறார்.

பாரதம் போன்ற பன்னெடுங்காலமாக பன்மை பேணும் மரபு கொண்ட ஒரு தேசத்தில் மொழி
என்பது தனி இருப்பு அல்ல. சமயம், பண்பாடு, மொழி ஆகிய அனைத்தும் பின்னி பிணைந்ததொரு
உயிர்க்கோளமாக அவை ஜீவித்திருப்பதை நாம் நம் நாட்டில் மிகச் சாதாரணமாக காணலாம். இந்த
இழைகளில் ஏதாவது ஒன்றை முழுமையாக நீக்க ஒரு சக்தி முயலுமேயானால் அதன் விளைவுகள்
அச்சமூகத்தில் மிகக் கடுமையான மானுட சோகமாக வெடித்தெழக்கூடும்.

· திரிபுராவின் ஜாமாத்தியாக்களைப் போல,
· மிஸோரமின் ரியாங்குகளைப் போல,
· காஷ்மீர பண்டிட்களைப் போல,
· பாகிஸ்தானின் சிந்திகளைப் போல,
· இலங்கையின் தமிழர்களைப் போல,
· பங்களாதேஷ் சக்மாக்களைப் போல,
· திபெத்தின் பௌத்தர்களைப் போல,

மேற்கூறிய அனைத்துமே கடுமையான மானுட சோகங்கள்.

பன்மை பேணும் பண்பாடு மொழிப்பன்மையும் இறைப்பன்மையும் இணைத்து போற்றுகின்றது.
பண்பாட்டு பன்மையை பேணும் மரபுகளின் தன்மை ஒற்றை பண்பாடு கொண்ட மரபுகளின்
தன்மையிலிருந்து வேறுபட்டது.

பாரதம் பன்மை பேணும் பண்பாட்டைக் கொண்ட தேசம். மேற்கத்திய நாகரிகம் பன்மை
அழிக்கும் ஒற்றைத்தன்மையை வலியுறுத்துகிறது.

அண்மை காலங்களில் நாம் காணும் குறுகிய இனவாதம், மொழித்தனித்துவம் ஆகியவை
மிஷினரிகள், மெக்காலேயிஸ்ட்கள், மார்க்ஸிஸ்ட்களால் தூக்கிப் பிடிக்கப்படுகின்றன. இதன்
விளைவுகள் எப்போதுமே மோதலும் அழிவும் சார்ந்து இருப்பதை காணலாம்.

எனவேதான் மிசினரிகளால் உருவாக்கப்பட்ட திராவிட இனவாத இயக்கங்களும், நேருவிய
ஓட்டுவங்கி அரசியல் உருவாக்கிய கன்னட வெறியர்களும் காவேரியின் பெயர் சொல்லி
கன்னடர்களுக்கும் தமிழர்களுக்கும் நரகத்தை உருவாக்கிக் கொண்டிருந்த அதே நேரத்தில்
தலைக்காவேரியில் கன்னடர்களும் தமிழர்களும் இணைந்து காவேரியை வழிபடுகின்றனர்.
அவர்களுக்கு காவேரி வெறும் ஆறு அல்ல. அரசியலுக்கு பயன்படும் பகடைக்காயும் அல்ல.
அவர்களுக்கு காவேரி தெய்வம். ‘கங்கையில் புனிதமாய காவேரி’.

விஜயநகர சாம்ராஜ்ய பேரரசர் கிருஷ்ண தேவராயர். அவர் துளுவ வம்சத்தை சார்ந்தவர். கன்னட
ராஜ்ய சத்ரபதி என புகழப்பட்டவர். அவர் தமிழின் பெயர் பெற்ற பக்தையும் திருப்பாவை
இயற்றிய பெண் ஆழ்வாருமான ஆண்டாளைக் குறித்து அமுக்தமால்யதா எனும் காவியத்தை
இயற்றினார்.தெலுங்கு மொழியில்.

இவ்வாறு தமிழின் பெருமையும் பெண் ஆழ்வாரும் தமிழ்
பெண்ணுமான ஆண்டாள் நாச்சியாரின் பெருமையை தெற்கு தமிழகமெங்கும் தெலுங்கு மொழி
மூலம் கொண்டு சென்றார் கிருஷ்ணதேவராயர் எனும் துளுவை தாய்மொழியாகக் கொண்டவர்.
அதுவும் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில். இதில் நாம் பார்க்க வேண்டியது எப்படி
பாரதத்தின் ஆன்மிகம் சார்ந்த பண்பாடு மொழி பன்மையை பாதுகாத்தது என்பதைத்தான்.
ஆனால் மொழி குறித்த ஐரோப்பிய பார்வை ஒவ்வொரு மொழியையும் மற்றொன்றின்
விரோதிகளாக பார்க்க நமக்குக் கற்றுக் கொடுத்தது.

ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழகத்தில் வெடித்து எழுந்த போது ஆங்கிலம் வரவேற்கப்பட்டதை
நாம் அறிவோம். ஹிந்தி எதிர்ப்பின் அடியோட்டமாக சமஸ்கிருத வெறுப்பும் இருந்தது.
சமஸ்கிருதம் நம் தேசம் முழுவதும் ஒரு பாரத ஒருமை மொழியாக விளங்கிய போதிலும் அதன்
விளைவாக எந்த மொழியும் அழியவில்லை. சமஸ்கிருதம் உயர்பண்பாட்டு மொழி என்பது
போன்ற போக்குகள் எழுந்த போதெல்லாம் அந்த தன்மையை நம் பண்பாடு களைந்துள்ளது. கர்வம்
கொண்ட சமஸ்கிருத பண்டிதருக்கு கர்வ பங்கம் செய்து பிராந்திய தாய்மொழி பக்தி இலக்கியத்தை
இறைவன் ஏற்றதாக ஏறக்குறைய அனைத்து பாரத மொழிகளிலும் கதைகள் வழங்குவதை
காணலாம். இத்தகைய ஆற்றுப்படுத்தல் மூலம் மொழிப்பன்மைக்கு ஊறுபடுத்தாது சமஸ்கிருதமும்
பிராந்திய மொழிகளும் பாரதத்தில் வளர்ந்துள்ளன.

எனவே சமஸ்கிருதத்தையும் தாய் மொழியையும் இணைந்து வளப்படுத்தும் போக்கே பாரதத்தின்
அனைத்து மொழி மரபுகளிலும் உள்ளது.
மாறாக ஆங்கிலம் தன் பரவும் தன்மையிலேயே மொழிப்பன்மையை அழிப்பதாக உள்ளது.
மொழியியலாளர் மார்க் பேகல்ஸ் ஆங்கிலம் பேசப்படும் இடங்களில் 80 முதல் 90 சதவிகித மண்
சார்ந்த மொழிகள் அழிக்கப்பட்டு விட்டதாக கூறுகிறார்.

சமஸ்கிருதம் என்றென்றும் தமிழுக்கு உருவாக்கியிராத, உருவாக்கியிருக்க முடியாத அபாயத்தை
ஆங்கிலம் ஏற்படுத்தி யிருப்பதை நாம் இன்று கண்கூடாகக் காண்கிறோம்.

இன்றைக்கு மொழி இழக்கும் அபாயத்தில்தான் நாம் உள்ளோம். வடகிழக்கு மாநிலங்களில் அங்கு
பேசப்படும் வனவாசி சமூக மொழிகளுக்கு மிக அருகாமையில் இருப்பது வங்க மொழியே.
ஆனால் அங்குள்ள மதமாற்ற தீவிரவாத அமைப்புகள் அந்த மொழி லிபியை பயன்படுத்த தடை
விதித்து அவற்றை மீறுவோரை படுகொலைகளும் செய்திருக்கின்றன. நம் தேச லிபிகளை
பயன்படுத்தக் கூடாதாம். மாறாக ரோமானிய எழுத்துருக்களை பயன்படுத்த வேண்டுமாம்.

இதே போன்ற ஒரு வக்கிரமான கோரிக்கை தமிழ்நாட்டிலும் எழுந்துள்ளது. அதாவது தமிழை
ஆங்கில எழுத்துருக்களைக் கொண்டு எழுதுவது. இவையெல்லாம் கேட்க சுவாரசியமாக
இருக்கலாம். நம் அறிவு பலமும் ஆன்ம பலமும் குறைந்த இக்காலகட்டத்தில் இத்தகைய
நோய்கிருமி போலி-சிந்தனைகள் நம்மிடம் சுவாரசியத்தைக் கூட தூண்டலாம். ஆனால் நம்
எழுத்துருக்கள் மிகுந்த மொழியியல் திறமையுடன் வடிவமைக்கப்பட்டவை. உதாரணமாக உயிர்
மெய் எழுத்துக்களை எடுத்துக் கொண்டால். கா என்பதை ஆங்கிலத்தில் எழுத kaa என்று எழுத
வேண்டும். கௌ என்பதை kau என்று எழுதவேண்டும். ஆனால் இந்திய எழுத்துரு குடும்பங்களில்
அது மிக எளிதானது.

இன்றைக்கு ஆங்கிலம் நமக்குள் நுழைந்த பிறகு நாம் நம் மொழி சார்ந்த பல திறமையான
அம்சங்களை மொழியை இழக்காமலே இழந்து கொண்டிருக்கிறோம்.

உதாரணமாக உம்மை தொகை.
சேரசோழ பாண்டியர் என்றால் சேரரும் சோழரும் பாண்டியரும் என பொருள். இதை
ஆங்கிலத்தில் Cheras, Chozhas and Pandyas என்று எழுதுவர். இன்றைக்கு தமிழில் எழுதும்
போது ஆங்கிலத்தை மனதில் இருத்தி எழுதுகிறோம். எனவே சேரரும், சோழரும் மற்றும்
பாண்டியரும் என்று எழுதுகிறோம். And என்பதன் மொழி பெயர்ப்பான மற்றும் என்பது நமக்கு
தேவையற்றது. ஆனால் ஆங்கிலத்தில் இருப்பதால் அதை அப்படியே தமிழுக்கு மாற்றுகிறோம்.

கலை அறிவியல் கல்லூரி என்றால் போதுமானது. உம்மை தொகை இருக்கிறது. கலை மற்றும்
அறிவியல் கல்லூரி என்று மொழியியல் திறமை குறைந்த ச்ணஞீ என்பதை மனதில் கொண்டு மற்றும்
என்று எழுதுகிறோம். தமிழில் பேசினாலும் எழுதினாலும் நம் சிந்தனை நம்மை அறியாமல்
ஆங்கில மொழிநடைக்கு செல்கிறது. அதன் மொழியியல் திறன் தமிழை விட குறைவானதாக
இருந்தாலும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

ஐனார் ஹாஜன் எனும் மொழியியலாளர் இத்தகைய மொழி அழிவினை தடுக்க ‘மிகக் கவனமாக
இசைவிக்கப்பட்ட இருமொழிபயில்தலை’ ஒரு தீர்வாக முன்வைக்கிறார். நம் புராணங்களில்
சமஸ்கிருதமும் தமிழும் ஈசன் கை டமருவிலிருந்து பிறந்ததாக கூறப்படுகின்றன.
அருட்பிரகாச வள்ளலார் மூன்று மொழி கொள்கையை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தினார்.

நம் மொழிகள் அனைத்துமே கடவுளின் வடிவங்கள் எனும் சிந்தனை நம் மரபுகளில் உள்ளது.
‘வானவன் காண் வடமொழியும் தெந்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண்’ என்பது
திருநாவுக்கரசர் திருமொழி. பாரத பண்பாட்டில் மொழிகளின் சாரத்தில் ஒற்றுமை உள்ளது.
மகாகவி பாரதி இதை ‘சிந்தனை ஒன்றுடையாள்’ என்கிறார். இந்த சாராம்ச ஒருமையை காணும்
பார்வையே பாரத பண்பாட்டில் மொழி பன்மையினை பேணிக்காத்துள்ளது. இந்த ஹிந்துத்வ
பார்வையினை நாம் இழந்துவிட்டால் நம் தேசத்தின் மொழிப்பன்மை அழிந்து விடும்.
மொழிப்பன்மையையும் மொழி செழுமையையும் நாம் இன்று காக்க வேண்டும். அப்படி காப்பாற்ற
நீளும் சாலிவாகன கரம்தான் இந்துத்துவம்.

+2

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here