திமுக ஏற்கனவே ‘பிரிவினைவாதம்’ பேசி ஆட்சியை இழந்தது நினைவில் இல்லாமலா போய்விடும்? – டாக்டர் கிருஷ்ணசாமி

பதிவுச்சுருக்கம்:

  • திமுக ஏற்கனவே ஆட்சியை இழந்தது நினைவில் இல்லாமலா போய்விடும்?
  • திமுகவுக்குத் தடை விதிக்கப்படும்’ என்ற நேருவின் அரட்டலுக்கு அடிபணிந்த திமுக
  • ‘ஒன்றிய அரசு’ முழக்கத்தின் மூலம் திமுக ‘திராவிட நாடு’ கோரிக்கை

திமுக ஏற்கனவே ‘பிரிவினைவாதம்’ பேசி 1976, 1990-களில் ஆட்சியை இழந்தது நினைவில் இல்லாமலா போய்விடும்? இது தொடர்ந்தால் ஐந்து வருடத்திற்குப் பிறகு,திமுகவுக்கு வர வேண்டிய முடிவு, ஐந்தே மாதத்தில் வந்து விடுமோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை: டாக்டர் கிருஷ்ணசாமி.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியா எனும் பாரத தேசத்தை ‘ஒன்றிய அரசு’ என்று அழைத்து அகமகிழ்ச்சி கொள்ளுகின்ற ஒரு கூட்டத்தின் கூச்சல் இன்னும் அடங்கியபாடில்லை. இம்மாநிலத்தின் ஆட்சி, அதிகாரம் அவர்கள் கைக்கு வந்த நாள் முதலே துள்ளி குதிக்கிறார்கள்.

1962-ல் அன்றைய பிரதமர் நேரு ‘திமுகவுக்குத் தடை விதிக்கப்படும்’ என்ற ஒரே ஒரு அரட்டலுக்கு அடிபணிந்து, ‘திராவிட நாடு எனும் பிரிவினை கோஷத்தை’ கைவிட்டார்கள்.

இப்பொழுது ‘ஒன்றிய அரசு’ முழக்கத்தின் மூலம் திமுக ‘திராவிட நாடு’ கோரிக்கையை மீண்டும் தூசித் தட்டி தூக்கிப் பிடிக்கிறது என்பது தெளிவாகிறது.

திமுகவின் பார்வையில் ‘திராவிட நாடு’ என்பது மட்டுமே நாடு. இந்தியா தேசமுமல்ல, நாடும் அல்ல; ஊராட்சிக்கு ஒரு படி மேலே உள்ள ஒன்றியத்திற்கான மதிப்புதான். அந்த எண்ணத்திலேயே இப்போது முதலமைச்சரின் அறிக்கை உட்பட எல்லாவற்றிலும் ‘ஒன்றிய அரசு’ என்றே குறிப்பிடப்படுகிறது.

‘INDIA that is BHARAT shall be a union of states’ என்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முதல் சரத்தை (Article) உள்நோக்கத்துடன் ‘Google’ மூலம் மொழிபெயர்த்து மத்திய அரசைத் தவறுதலாக ‘ஒன்றிய அரசு’ என்று தொடர்ந்து திமுக மற்றும் அதன் அரசியல் கூட்டாளிகள் தமிழக மக்களிடம் அவதூறு பிரச்சாரமாகவும், அதை இயக்கமாகவும் முன்னெடுத்துச் செல்கிறார்கள். இந்திய அரசியல் சாசனத்தில் ஏறக்குறைய 100 ஆண்டுகாலம் புழக்கத்தில் உள்ள ‘Union of States’ என்ற சொல்லாடலுக்கு மொழிபெயர்க்க இவர்களுக்கு Google தான் கிடைத்ததா? திமுகவில் நல்ல அறிஞர்களுக்கும், சட்ட வல்லுநர்களுக்கும் பஞ்சம் ஏற்பட்டு விட்டதா?

ஆட்சிக்கு வருவதற்கு முன் ‘பாசிசம்’ என அடைமொழியிட்டு, மத்தியில் உள்ள ஆட்சியாளர்களைச் சாடி வந்தார்கள். இப்பொழுது நேரடியாக இறையாண்மைமிக்க இந்தியத் தேசத்தின் மீதே குறி வைத்து தாக்குதல் தொடுக்கிறார்கள். எனவே, இந்திய மைய அரசு – பாரத பேரரசு மீதான திமுக மற்றும் அதன் கூட்டாளிகளின் தாக்குதலை இந்தியக் குடிமக்கள் எவரும் எளிதாக எடுத்துக் கொண்டு, கடந்து போக முடியாது.

இந்திய அரசியல் சாசனத்தில் சொல்லி இருக்கக் கூடிய ‘Union’ என்ற வார்த்தையைத் தானே நாங்கள் ‘ஒன்றியம்’ என பயன்படுத்துகிறோம் என்று மழுப்பி, பித்தலாட்டம் செய்வதற்கு மத்திய அரசு ஓர் முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும்.

அரசியல் சாசனத்தின் முழு அம்சத்தை அறியாத சாதாரண குடிமக்கள் ‘Union என்றால் ஒன்றியம்’ – ‘States என்றால் மாநிலம்’, எனவே ‘மாநிலங்களாலான ஒன்றிய அரசு’ என்று அவர்கள் கூறுவதை அப்படியே ஏற்று, எளிதாக நம்பக் கூடும்.

ஆனால், உண்மை அதுவல்ல, ‘India that is bharat shall be a union of states’ என்ற அரசியல் சாசனத்தின் முதல் சரத்தின் (Article) பொருளை ஒவ்வொரு வார்த்தையாகத் தனித்துப் பிரித்து பொருள் கொள்ளக்கூடாது. இந்தியா அடிமைப்பட்ட வரலாற்றையும், அது மீட்டெடுக்கப்பட்டு சுதந்திரம் பெற்ற வரலாற்றையும், தேசத்திற்கான வடிவமைக்கப்பட்ட அரசியல் சாசனத்துடன் இணைத்தும், பொருத்தியும் பார்க்க வேண்டும்.

ஒரு நாட்டின் புதிய அரசியல் சாசனம் வடிவமைக்கப்படுவதற்கு முன்பு, அந்த தேசம் எப்படிப்பட்டது; அதன் வரலாறு என்ன? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டிய கடமை அரசியல் சாசன தளகர்த்தர்களுக்கு உண்டு. அதனடிப்படையில் தான் ‘இந்தியா பிரிக்க முடியாத ஐக்கியப்படுத்தப்பட்ட ஒரே தேசம் என்பதை ‘Union of States’ என்று தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

ஆனால் திமுகவினர் பிதற்றுவதைப் போல, இந்தியத் தேசம் அமெரிக்கா, கனடா, ரஷ்யா போன்று வேறு வேறு மாநிலங்கள் அல்லது நாடுகளாலான கூட்டமைப்பு (Federation) அல்ல. ஆனால் அதைத் தெரிந்திருந்தும், இந்தியத் தேசம் பல மாநிலங்களின் கூட்டமைப்பு தான் (Federal) என்று அரசியல் சாசனத்திற்கு விரோதமான, உண்மைக்குப் புறம்பான கருத்தைக் தமிழக மக்கள் மத்தியில் திணிக்க முற்படுகிறார்கள்..

இந்தியத் தேசம் என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் பிரிந்து கிடந்த பல பகுதிகளை இணைத்து ஐக்கியப்படுத்த வேண்டிய சூழலும், அதையே அரசியல் சாசனத்தில் ‘Union of States அல்லது ஐக்கியமான தேசம்’ எனச் சொல்ல வேண்டிய அவசியமும் வந்தது. எனவே, ஒன்றுபட்ட இந்தியத் தேசத்தை மாநிலங்களின் கூட்டமைப்பு ‘Federation of States’ என்று சொல்ல முயற்சிப்பது தவறானது; அது இந்திய அரசியல் சாசன விதிகளைப் புரிந்துகொள்ளாத சில அறிவிலிகளின் கூற்றுமாகும்.

இந்தியாவினுடைய இறையாண்மை என்பது நிரந்தரமானது; இறவாத்தன்மை (Eternal) கொண்டது; அழிக்க முடியாதது; உடைக்க முடியாதது. தேசத்தில் பல மொழிகள், பல இனங்கள், பல மதங்கள் இருக்கலாம்; ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, வட்டம், மாவட்டம், மாநிலங்கள் எனவும் செயல்படலாம். ஆனால், அனைத்தும் ஒற்றை இந்தியத் தேசத்திற்குள் செயல்படலாமே தவிர, பிரிந்து செல்ல முடியாது.

ஏகாத்திபத்தியவாதிகளால் ஏற்படுத்தப்பட்ட நாடு பிரிவினையைத் தவிர, சுதந்திர இந்தியாவில் கடந்த 74 வருடத்தில் எந்தவொரு பிரிவினையும் ஏற்படவில்லை. ஆனால், 1974 ஆண்டு வரையிலும் தனி நாடாக இருந்த சிக்கிம், அதே போன்று கடந்த ஆண்டு வரை 370 சரத்தின் கீழ் தனி அந்தஸ்துடன் இருந்து வந்த காஷ்மீர் போன்ற பகுதிகளும் இந்தியப் பேரரசுக்குள் ஐக்கியம் ஆகியிருக்கிறது.

எனவே, தமிழ்நாடு என்பதில் ‘நாடு’ என விகுதி இருக்கின்ற காரணத்தினால் அதை ‘தனி நாடு’ எனப் பாவிக்கக்கூடியவர்களே, கடந்த கால திராவிட நாடு கோரிக்கையை இன்று முன்னிறுத்தக்கூடியவர்கள் ஆவர். தமிழகத்தில் கூட எத்தனையோ ஊர்கள் ‘நாடு’ எனும் விகுதியைக் கொண்டுள்ளன. அதற்காக அந்த கிராமங்கள் எல்லாம் நாடுகளாகி விடுமா?

ஒரு ஊராட்சியோ, நகராட்சியோ தங்களுக்கு இருக்கக்கூடிய நிதி பலத்தோடு தனித்தும் செயல்பட வேண்டும், மாநில அரசையும் சார்ந்து இருக்க வேண்டும். மாநில அரசு விரும்பினால் இவர்களின் எல்லைகளைக் கூட மாற்றியமைக்க முடியும்? ஆனால், மாநிலத்தின் கட்டுப்பாட்டிற்குள் வரமாட்டோமென எந்த ஊராட்சியோ, நகராட்சியோ தீர்மானம் நிறைவேற்ற முடியுமா? அதே போலத்தான், கோரிக்கைகளின் அடிப்படையில் தமிழ்நாட்டைத் தென் தமிழ்நாடு, வட தமிழ்நாடு, கிழக்கு தமிழ்நாடு, மேற்கு தமிழ்நாடு, மத்திய தமிழ்நாடு என மத்திய அரசு நினைத்தால் பிரிக்கவும் முடியும்; தமிழகத்தின் எல்லைகளை மாற்றியமைக்கவும் முடியும்.

மாநில அரசின் எல்லைகளை மத்திய அரசால் மாற்றியமைக்க முடியும். ஆனால், இந்திய அரசின் எல்லைகளை எவராலும் மாற்றியமைக்க முடியாது. அதைத்தான் ‘India is an indestructible union of destructible states’ என அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திரத்திற்குப் பின், இந்திய அரசியல் சாசனம் நமக்கு வழங்கியுள்ள பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை உள்ளிட்ட அனைத்தையும் மறந்துவிட்டு இந்திய அரசியல் சாசனத்தையும், இந்தியத் தேசத்தையும் சொல்லாலும், செயலாலும் சிறுமைப்படுத்த எண்ணுகிறார்கள். ஒரு மரக்கிளையின் நுனியைப் பிடித்துக்கொண்டு அடிமரத்தை வெட்டினால் என்ன நிகழுமோ? அதேபோலத்தான் அவர்களுக்கும் நிகழும்.

இனியாவது திமுக மற்றும் அதன் அருவருடிகள் இந்திய அரசியல் சாசனத்தின் அருமை, பெருமைகளைத் தெரிந்து செயல்பட வேண்டும். இறையாண்மை மிக்க இந்தியப் பேரரசை ‘ஒன்றிய அரசு’ எனத் தொடர்ந்து அழைப்பது எட்டுகோடி தமிழ் மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதற்கும், 140 கோடி இந்திய மக்களைச் சீண்டிப் பார்ப்பதற்கும் சமமானதும், சட்டவிரோதமானதும், தேசவிரோதமானதும் ஆகும்.

திமுகவும், அதன் கூட்டணி கட்சியினரும் இந்திய அரசை ‘ஒன்றிய அரசு’ எனக் குறிப்பிடுவதும், ‘திராவிட நாடு’ என்ற பிரிவினை முழக்கமும் உள்ளடக்கத்தில் ஒன்றே தவிர, வேறு வேறு அல்ல.

ஏற்கனவே ‘பிரிவினைவாதம்’ பேசி 1976, 1990-களில் ஆட்சியை இழந்தது நினைவில் இல்லாமலா போய்விடும்? இது தொடர்ந்தால் ஐந்து வருடத்திற்குப் பிறகு, வர வேண்டிய முடிவு, ஐந்தே மாதத்தில் வந்து விடுமோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. தவறான தமிழாக்கம் மூலம் மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று சிறுமைப்படுத்தி வருவதின் உள்ளார்ந்த அர்த்தம் தெரிய வராததால் இன்று வரை மத்திய அரசின் உளவுத் துறையும், உள்துறையும் கவனத்தில் கொள்ளாமல் இருக்கிறது.

இந்தியா, அதாவது பாரத தேசம் ஒன்றுபட்ட பேரரசு. அதை எவரும் துண்டாட முடியாது; துண்டாட நினைப்பவர்களே, துண்டாடப்பட்டு இருக்கிறார்கள் என்பதே வரலாறு. மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன். ‘INDIA that is BHARAT shall be a union of states’ இந்தியா அதாவது, பாரத தேசம் ஒன்றுபட்ட இறையாண்மை மிக்க ‘ஒரு பேரரசாகத் திகழும்’ – என்பதே அதன் அர்த்தமாகும். ‘நாடு’ என விகுதி கொண்டிருந்தாலும் தமிழ்நாடு ஒரு மாநிலமே. திமுகவின் ‘ஒன்றிய அரசு’ எனும் முழக்கத்தின் பின்னால் ஒளிந்து கிடக்கிறது, திராவிட நாடு கோரிக்கை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here