துர்கா ஸ்டாலினை போற்றுவோம்!!

வீரமணி வகையறாக்களை கிடுகிடுக்க வைக்கும் வீடியோ ஒன்று இன்று 24.06.2021 அன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம். கடவுள் மறுப்பு, இந்து மத துவேஷம், சமஸ்கிருத விமர்சனம் என்று அத்தனை கூப்பாடுகளுக்கும் சத்தமில்லாமல் சவுக்கடி கொடுத்திருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மனைவி திருமதி. துர்கா ஸ்டாலின்.

தேர்தலுக்கு முன்பாக தி.மு.க. இந்து விரோத கட்சியில்லை என்பதை சொல்வதற்காக தனது மனைவி துர்காவே கடவுள் பக்தியுள்ளவர் தான் என்று ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால் வெளியாகியுள்ள வீடியோவில் தி.மு.க தலைவரின் இல்லத்தில் காலம் காலமாக இந்து மத வழிபாடு தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பது நிரூபணமாகியுள்ளது.

நாயகி டிவி என்ற யூடியூப் சேனலில் பத்திரிக்கையாளர் லோகநாயகி திருமதி.துர்கா ஸ்டாலினின் பூஜை அறையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.

தனது கணவர் நாத்திகம் பேசினாலும், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், கோயில்களுக்கு தொடர்ந்து வழிபடச் சென்று வருபவர் துர்கா. போலித்தனமாக அவர் என்றும் நடித்ததில்லை. தனது படம் அடுத்த நாள் பத்திரிக்கைகளில் வெளியாகி கிண்டலாக எழும் கேள்விகளை பொருட்படுத்தியதில்லை. பல நூறு கோடி ரூபாய் கொடுத்து பிரசாந்த் கிஷோரிடம் வாங்கிய ஆலோசனையை விட, திருமதி துர்கா ஸ்டாலினின் வழிபாடு தான் பல பத்தாண்டுகளாக முதல்வர் பதவிக்காக காத்திருந்த ஸ்டாலினை அரியணையில் ஏற்றியது என்று சொல்வதில் மிகையில்லை, ஆம். மன்னர்கள் போருக்கு கிளம்பும் முன்பு வராகியை வழிபட்டு செல்வார்கள் என்பதை அறிந்து, தேர்தலுக்கு முன்பாக வராகி வழிபாட்டையும் அவர் துவக்கியுள்ளார்.

வீரமணி வகையறாக்கள் விமர்சிக்கும் குழலூதும் கண்ணனின் சிற்பம் தான், ஸ்டாலின் வீட்டு பூஜையறையின் முன்பாக வரவேற்கிறது. வடக்கத்திய கடவுள் என்று அவர்கள் விமர்சிக்கும் ‘நம் பிள்ளையார்’ பளிங்கு கல்லாகவும், தஞ்சாவூர் சிற்பமாகவும், முதல்வர் ஸ்டாலின் வீட்டு பூஜையறையில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். சிவபெருமானின் திருமண கோலமும், சீதாராமரின் சிற்பமும் அங்கு இடம்பெற்றுள்ளது.

குலதெய்வம் அங்காளம்மன், வெங்கடேசபெருமாள், முருகன் படங்கள் மலர் மாலைகளுடன் அருள்பாலிக்கின்றன. முகேஸ் அம்பானி அளித்த காயத்திரி தேவி சிலை, சீரடி சாய்பாபா சிலை, காசியிலிருந்து வாங்கி வந்த அன்னபூரணி சிலை, கன்றுக்கு பால் கொடுக்கும் கோமாதா சிலை ஆகியவை துர்கா ஸ்டாலினின் தினசரி பூஜைக்குரியவையாக உள்ளன.

அணையா தீபம் 24 மணிநேரமும் பூஜை அறையில் எரிந்து கொண்டிருக்கிறது. கருப்பர் கூட்டத்தின் கந்த சஷ்டி கவச பிரச்சனையின் பின் விளைவாக திருத்தணியில் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட வேல், கொடைக்கானலில் குழந்தை வேலர் கோயிலில் வழங்கப்பட்ட வேல், நாமக்கல் ஆஞ்சனேயர் கோயிலில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட வெள்ளி கதாயுதம் இவையெல்லாமே திருமதி துர்கா ஸ்டாலின் பூஜை அறையில் பக்தி பரவசத்துடன் தினசரி வணங்கப்படுபவை.

இவற்றையெல்லாம் விட, லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணுசகஸ்ரநாமம், கந்த சஷ்டி கவசம் ஆகியவை எப்போதும் தங்கள் வீட்டில் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்று பெருமையுடன் கூறும் துர்கா, அற்புதமாக சமஸ்கிருத ஸ்லோகங்களையும் பாடிக் காண்பிக்கிறார்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பது போல, பெண்ணின் பக்தி பின்னாலும் ஒரு ஆண் இருப்பார். ஆம் திருத்தணியில் தனக்கு கொடுக்கப்பட்ட வேலாயுதத்தை பத்திரமாக தனது வீட்டு பூஜை அறைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் ஸ்டாலின். தினசரி அவர் வீட்டில் ஒலிக்கும் சமஸ்கிருத மந்திரங்களை அவர் மட்டும் கேட்காமல் இருந்துவிட முடியாது.

அரசியலுக்காக இந்து மதத்தை தி.மு.க.வினர் விமர்சித்து வந்தாலும், இதுவரை வெளிவராத தனது பூஜையறையை வெளி உலகத்திற்கு காண்பித்துள்ளார் திருமதி துர்கா ஸ்டாலின். அவர் பேச்சில், அரசியல் இல்லை, எதையும் மறைக்க வேண்டும் என்ற நடிப்பு இல்லை. தனது கணவரின் அரசியல் நாத்திக கொள்கை, நடைமுறைக்கு ஒத்து வராது என்பதை தெளிவாகவே புரிந்து வைத்திருக்கும் பக்குவம் அவரது குரலில் இருக்கிறது.

தனது வழிபாடு, தனது கணவருக்கு வெற்றியை தேடி தரும் என்ற நம்பிக்கை இருந்ததும், அதில் வெற்றி கிடைத்திருப்பதும் தனது வழிபாட்டு முறையை பகிரங்கப்படுத்தும் துணிச்சலை கொடுத்திருக்கிறது.

துர்கா ஸ்டாலினின் இந்த நடவடிக்கையை கேலி செய்யாமல் போற்றுவோம். ஆம். அவர் இந்து மதத்தை யாராலும் அழிக்க முடியாது என்பதை நடைமுறையில் செய்து காட்டியிருக்கிறார். அவருக்கு துணையிருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் வாழ்த்துக்களை தெறிவிப்போம். முதல்வர் வீட்டு பூஜையறையைத் தொடர்ந்து இனி நடிப்பு தி.மு.கவினர் பகிரங்க பக்தர்களாவார்கள் என்று எதிர்பார்ப்போம்.

+3

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here