‘தி வயர்’ என்ற இணையதள பத்திரிக்கை இடதுசாரி சிந்தனைகளை தாங்கி வருவது. நமது நாடு உலகிற்கே கொரோனா தடுப்பு மருந்து அளித்துவரும் சாதனையை பாராட்டாது. ஆனால் உலகமே சீனாவின் தயவை நாடியிருப்பதாக எழுதி தனது சீனப்பற்றை காண்பிக்கும்.
கம்யூனிச நாடான சீனர்களின் தேசப்பற்றை ஆகா, ஓகோ என்று புகழும் இந்த இணையதளம், நம் நாட்டில் தேசபக்தியுடன் இருப்பது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என்று வாதிடும். இதுபோலத்தான் அண்மையில், ஜம்மு-காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் தேசிய கீதத்திற்கு மாணவர்களை எழுந்து நிற்கக்கூறியது, தேசபக்தியை திணிக்கும் செயல் என்று கட்டுரை எழுதியுள்ளது.
28.2.2021 ல் வெளியான அந்த கட்டுரையில் இந்திய வெறுப்புத்தீயை பற்ற வைக்க முயன்றுள்ளது.
2005ஆம் ஆண்டில் ஜே.கே பல்கலைக்கழகத்தில் நடக்கும் முதல் பதக்கம் அளிக்கும் விழாவின் ஒத்திகையில் மாணவர்களை தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்குமாறு நிர்வாகம் கூறியது. அதற்கு உடன்படாத மாணவர்கள், விழாவில் கலந்து கொண்டு தங்களுக்கு சங்கடத்தை தர வேண்டாம், உங்கள் பட்டங்களை வீட்டிற்கே அனுப்பி வைக்கிறோம் என்று நிர்வாகம் கூறியது என்று பல்கலைக்கழகத்தின் மாணவர்களின் கருத்தாக தி வயர் வெளியிட்டுள்ளது.
அந்த கட்டுரையில் கருத்து தெரிவிக்கும் மாணவர், ‘தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்பதும், நிற்காமல் போவதும் எங்களுடைய தனிப்பட்ட விருப்பம் என்றும், இதில் நிர்வாகம் தலையிடுவதால், இந்த பல்கலைக்கழகமே தங்களுக்கு பிடிக்கவில்லை’ என்று கூறியுள்ளார்
மற்றொரு மாணவர், இது அரசாங்கத்தின் அடக்குமுறை, இந்திய அரசியலமைப்பின் 51 (ஏ) சட்டத்தில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்கவோ, தேசியக் கொடிக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றோ கூறவில்லை என்று கூறியதாக வயர் எழுதியுள்ளது.
மேலும் அந்த மாணவர், “எனக்கு தேசப்பற்று மேல் நம்பிக்கை இல்லை. எங்களை யாராலும் அடக்கி ஆள முடியாது. இந்திய அரசியலமைப்பில் ஒன்றும், தேசிய கீதத்துக்கு கட்டாயம் எழுந்து நிற்க சொல்லவில்லை. ஒவ்வொரு குடிமகனும் அரசியலமைப்பை மதித்தால் போதும். தேசிய கொடியையும், தேசிய கீதத்தையும் மதிப்பதும், மதிக்காமல் இருப்பதும் எங்கள் இஷ்டம்.” என்று பொங்கியதாகவும் வயர் கூறுகிறது.
தேசிய கீதத்தை எதிர்க்கும் மாணவர்களை பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் ஆதரிப்பதாகவும் கூறியுள்ள இக்கட்டுரை, தேசிய கீதத்தை மதிப்பவர்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாகவும் மறைமுகமாக மிரட்டியுள்ளது.
இறுதியாக கட்டுரையில், பல்கலைக்கழக பதிவாளர் நசீர் இஃபாலிடம் விளக்கம் கேட்டுள்ளது. அவர், தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்பது பல்கலைக்கழகத்தின் நெறிமுறையே என்றும், அதனால், பதக்கம் வாங்கும் முன்பு அந்த நெறிமுறையை சரியாக பின்பற்றாவிட்டால், அந்த நிகழ்வு எப்படி சரியாக இருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தி வயர் பத்திரிக்கை தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்கும்படி கூறியதை விமர்சித்து கட்டுரை எழுதியுள்ள அதே சமயத்தில், காஷ்மீர் மாநிலத்தில் நடக்கும் பயங்கரவாத செயல்கள் குறித்து வாய் திறக்காது. கம்யூனிஸ்ட்டுகளிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
Source : swarajya