தேசியத்துறவி சுவாமி விவேகானந்தர்..!

பொதுவாக துறவியர்களின் நோக்கம் முக்தியடைவதாகவே இருக்கும். சுவாமி விவேகானந்தரோ, தனது முக்தியை நோக்கமாக கொள்ளாமல் தேசத்தின் விடுதலையையும் சாமான்ய மக்களிடையே விழிப்புணர்வையும் வேண்டினார். இதை நோக்கியே அவரின் செயல்பாடுகள் அமைந்திருந்தன.

தேசம், தேசத்தின் விடுதலை, சுபிக்ஷம், தேசத்தின் வளர்ச்சி மக்களின் மேம்பாடு, அனைவருக்கும் உணவு, உடை, உறைவிடம் இவற்றையே போதித்தார். ஆகவே தேசியத்துறவியாகிறார்.

சுதந்திரபோராட்ட காலகட்டத்தில் தேசவிடுதலைக்காக போராடிய மிதவாதிகள், தீவிரவாதிகள், ஆயுதக்குழுக்கள் என அத்தனை பேருக்கும் உந்துசக்தியாக இருந்தவர் சுவாமிஜி ஆவார். வெளிநாட்டில் இருந்தபோதும் அவரின் சிந்தனையெல்லாம் நமது தேசத்தை பற்றியே இருந்தது. தேசத்தை பற்றிய தவறான பிரசாரத்தை அவர் கண்டிக்க தவறியதே இல்லை. புகழோங்கிய பாரதம் பாழ்பட்டு போவதற்கு காரணம் யார் என்று குமரி முனைப்பாறையில் தவத்தின்போது கண்டார்.

ஹிந்து சமுதாயம் சுயமறதியில் உள்ளது. மிஷினரிகள் தந்திரத்தால் மேற்கத்திய மோகத்தில் கற்றோரெல்லாம் கட்டுண்டு கிடக்கின்றனர். பாரதம் மீண்டும் எழுச்சிபெறும், உலகின் புகழோங்கிய நிலையை மீண்டுமடையும் அதற்கு ஆன்மீக கருத்துக்களை பரப்பவேண்டும். பாரதத்தின் சிறப்பே ஆன்மீகமென்றார்.

சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர் மஹாசமாதியடைந்த பின்பு சுவாமி பாரத தேசமெங்கும் பரிக்ரமா என்னும் வலம் வந்தார். மன்னர் மாளிகையிலும் தங்கினார், சாமான்யர்களின் மண்குடிசையிலும் தங்கினார். மக்களின் சமூக பொருளாதார வாழ்வியல் சூழ்நிலையை நேரிடையாக நன்கு தெரிந்து கொண்டார். கேரளா பயணத்தின் போது அங்கு நிலவிய தீண்டாமை கொடுமையை கண்டு வெகுண்டெழுந்து சாடினார்.

இந்த சமயத்தில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெறவுள்ள உலக சர்வசமய மாநாட்டில் கலந்து கொள்ள கத்ரி சமஸ்தானத்தின் மன்னர் அஜித்சிங் சுவாமிஜியை வேண்டினார், முடிவு எதுவும் சொல்லாத சுவாமிஜி தமிழகத்தில் ராமேஸ்வரம் சென்று அங்கு மன்னர் பாஸ்கர சேதுபதியை சந்தித்தபோது அதே விருப்பத்தை சேதுபதி மீண்டும் தெரிவிக்க சுவாமிஜி அமெரிக்கா செல்ல சம்மதித்தார்.

பாஸ்கர சேதுபதியும், சென்னையிலுள்ள அரசிங்கபெருமாள் உள்ளிட்ட சீடர்களும் நிதிதிரட்டி கொடுத்தனர். சுவாமிஜி அமெரிக்கா பயணமானார்.

சிங்கத்தின் குகைக்கே சென்று அதன் பிடரியை பிடித்து உலுக்கியது போல, அமெரிக்காவில் சுவாமிஜியின் கர்ஜனை இருந்தது.

உதாரணமாக,
பாரதம் வளம் கொழிக்க, கிருஸ்துவமயமாக மாறவேண்டும் என்று ஒரு கிருஸ்துவ அறிஞர் கூறியபோது,

“கிருஸ்தவ மதம் உலகைக்காக்க வந்த சக்தி என்றல், எத்தியோப்பியாவையும், அபிசீனியர்களையும் அது ஏன் உயர்த்தவில்லை ?” என்று சுவாமிஜி எதிர்கேள்வி கேட்டு அவர்கள் வாயடைந்தார்.

ஹிந்து தர்மம் தான் உலகை உய்விக்க வல்லது என்பதில் சுவாமிஜி ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.
தன் தாய் மதத்தை பழிப்பானை அவர் மன்னிக்க தயாரில்லை. ஒருமுறை அவர் வெளிநாட்டு பயணத்தை முடித்து தாய்நாடு திரும்பும் போது கப்பலில் இரண்டு பாதிரிகள் அவ்வப்போது ஹிந்து தர்மத்தை துவேசித்தும் வசைபாடியும் வந்தனர். ஒருசமயம் சுவாமிஜியின் பொறுமை எல்லை கடந்தது.அவர் அந்த பாதிரியின் சட்டை காலரை பிடித்து தூக்கி
“ இனி ஒருவார்த்தை என் மதத்தை பற்றி இழிவாக பேசினால் உன்னை அப்படியே கடலில் எறிந்துவிடுவேன்” என்று சினந்து கூறினார்.

ஹிந்து மதத்தை காப்பதும் மதமாற்றத்தை தடுப்பதுமே உண்மையான தேசபக்தி என்று சுவாமிஜி தெளிவாக கூறியுள்ளார்.

1893 ஜனவரி 26 அன்று சுவாமிஜி கொழும்பிலிருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் அருகே பாம்பன் குந்துகல் என்னுமிடத்தில் வந்து இறங்கினார். மன்னர் பாஸ்கரசேதுபதி தலைதாழ்த்தி வரவேற்று தனது கரத்தால் பாதரட்சைகள் அணிவித்தார். சுவாமிஜி பாரதத்தில் கால்வைத்ததும் அதன் புனிதமண்ணை எடுத்து வாயில்போட்டுக்கொண்டார், மேனியில் பூசினார், விழுந்துபுரண்டார் . பாரத தேசத்தின் மீது எத்தகைய பக்தி !

ராமநாதபுரம் தொடர்ந்து பரமக்குடி, திருச்சி, கும்பகோணம்,மயிலாடுதுறை, செங்கல்பட்டு வழியாக சென்னை சென்றடைந்தார். அங்கே அவருக்கு மாபெரும் வரவேற்பு ஏற்பாடாகியிருந்தது. மக்கள் திரண்டுவந்து வரவேற்பளித்தனர்.

பாம்பனில் குதிரை பூட்டிய சாரட்டுவண்டியில் சுவாமிஜி வந்தபோது பாஸ்கரசேதுபதி மன்னர், குதிரைகளை அவிழ்த்துவிட்டுவிட்டு, அவரும், அவரது அதிகாரிகளும் வண்டியை இழுத்தனர் என்றால் சுவாமிஜியை அவர்கள் எந்த அளவிற்கு நேசித்தனர் என்பது புரியும். துறவியர்களை மதித்து வழிபட்ட சேர, சோழ, பாண்டிய வம்சத்தை நினைவுபடுத்துவதாக இது உள்ளது.

இதே போன்ற சம்பவம் சென்னையிலுள்ள நீதியரசர் சுப்பிரமணிய அய்யர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அவர்களே வண்டியை இழுக்க சுவாமிஜிக்கு சங்கடமாகிப்போய்விட்டதாம்.

மக்கள் மனதில் அத்தகைய இடம் பிடித்த சுவாமிஜி தமிழ் மண்ணை மிகவும் நேசித்தார். குமரி முனையில் இறை உணர்வு, தமிழர்கள் உதவியால் அமெரிக்கா பயணம், குமரி மாவட்டத்தில் புகழ்படைத்த ஐயா வைகுண்டர் வழிபாட்டு முறையில் கடைப்பிடிக்கப்பட்ட தலைப்பாகை அணியும் முறையை கண்டபிறகே சுவாமிஜி தலைப்பாகை அணிந்தார் என்பர். இவ்வாறாக பலவகைகளில் சுவாமிஜிக்கு தூண்டுதலாக இருந்த தமிழ் மண்ணை அவர் மிகவும் நேசித்தார். அதனால் தானோ அவர் பிறந்த வங்கத்தை விட சில காலம் தங்கிய தமிழகம் சுவாமிஜியை அதிகம் உரிமைகொண்டாடுவதை பார்க்க முடிகிறது.

சாசுவதமான ஒரு இயக்கத்தை உண்டாக்க சுவாமிஜி விரும்பினார். துறவு இன்றி தொண்டாற்ற முடியாது, துறவு மனப்பான்மை வேண்டும் அத்தகையோரைக்கொண்ட அமைப்பை உருவாக்கிட சுவாமிஜி விரும்பினார்.அதன் அடிப்படையிலேயே அவர் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார். இளைஞர்களிடம் அவர் அதீத நம்பிக்கை கொண்டிருந்தார்.
சுவாமிஜியின் நண்பர் அரசிங்கபெருமாளுக்கு சுவாமிஜி எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்…

“இறைவனிடத்தில் தளராத நம்பிக்கையும், புனிதமான பணி செய்கிறோம் என்ற ஊக்கமும், ஏழைகளிடத்தும் , ஒடுக்கப்பட்டோரிடத்தும் எல்லையற்ற பரிவும், அந்த பரிவு காரணமாக எதிர்த்து நிற்பதில் சிங்கத்தின் துணிவும் கொண்ட ஆயிரமாயிரம் ஆண்களும், பெண்களும் இந்த பாரத தேசத்தின் மூலை முடுக்கெல்லாம் செல்லவேண்டும் . நமது சமய அறிவுரைகளை பரோபகாரம் என்ற நமது வேத தத்துவங்களை, சமூக முன்னேற்றத்துக்கான வழிகாட்டும் நற்செய்திகளை, சமத்துவம் என்கிற வேத நெறிகளை மக்களிடையே பரவச்செய்யவேண்டும். இளைஞர் படையை உருவாக்க இது மிகப்பெரிய திட்டம் தான். இதை என்றைக்காவது செயல்படுத்த முடியுமா என்பது எனக்கு தெரியாது. ஆனால் வேலையை கட்டாயம் நாம் துவங்கவேண்டும் ” என்கிறார்.

1897 பிப்ரவரி 14 சென்னை ஹார்ம்ஸ்டன் சர்க்கஸ் வளாகத்தில் நிகழ்த்திய சொற்பொழிவில் இவ்வாறு கூறுகிறார்:
“ சென்னை இளைஞர்களே என் நம்பிக்கை உங்களிடம் தான் இருக்கிறது. உங்கள் தாயகத்தின் அழைப்பிற்கு செவி சாய்ப்பீர்களா ? அசைக்கமுடியாத நம்பிக்கையை உங்களிடம் நீங்கள் கொள்ளுங்கள். ஒவ்வொரு ஆன்மாவிலும் எல்லையற்ற ஆற்றல் இருக்கிறது என்ற நம்பிக்கையை நீங்கள் ஒவ்வொருவரும் கொண்டீர்களேயானால் பாரதம் முழுவதையும் நீங்கள் பாதுகாத்துவிடலாம்”.

இரும்பு போன்ற தசைகளும் எஃகு போன்ற நரம்புகளும் கொண்ட வலிமையான இளைஞர்கள் தேவை என்ற சுவாமிஜி அத்தைகைய இளைஞர்களை தமிழகத்திலிருந்து எதிர்பார்த்தார் என்றால் அவர் தமிழ் மக்கள் மீது கொண்ட நம்பிக்கை தான்.

தமிழக இளைஞர்களே சுவாமிஜி கூறியது போல் இளமையின் வேகமும் உற்சாகமும் இருக்கும் நேரம் தான் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிய நேரமாகும். வேலை செய்யுங்கள் தேசத்திற்காக வேலை செய்யுங்கள் அதற்கான நேரம் இது தான். எனவே கிளர்ந்தெழுங்கள் தேசத்தின் நன்மைக்காக உங்களை நீங்கள் தியாகம் செய்து கொள்வதுதான் மிக உயர்ந்த வேலை. உயர்ந்ததோர் இலட்சியத்தை மேற்கொள்வோம் அதற்காக நம் வாழ்க்கை முழுவதையும் அர்பணிப்போம். இது நமது தீர்மானமாக இருக்கட்டும்.

இளைஞர்களே விழித்தெழுங்கள் இலக்கை அடையும்பவரை ஓயாதிருப்போம். உலகின் குருவாய் பாரதம் ஆகுவதே நமது இலக்கு சுவாமிஜியின் ஆசி நம் அனைவருக்கும் அப்போதும் இருக்கட்டும்! வாழ்க பாரதம் !. வெல்க பாரதம்.

-அ. இளங்குமார் சம்பத்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here