தொழிற்துறை மூளை, ஐஏஎஸ் வேலை …!

“ஐஏஎஸ் அதிகாரிகள், குறிப்பாக 50 வயதைக் கடந்தவர்கள் செயல்திறனுடன் பணிபுரிய வேண்டும். அவர்களது பணி செயல்திறன் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இதில், செயல்திறன் இல்லாதவர் என்று முடிவு கட்டப்படும் ஐஏஎஸ் அதிகாரிகள், கட்டாய ஓய்வில் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்”… என்ற அறிவிப்பை, பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்தபோது, பல ஐஏஎஸ் அதிகாரிகள் வயிற்றில் புளி தன்னாலேயே கரையத் தொடங்கிவிட்டது.

காரணம், ஐஏஎஸ் பணி என்பது ஆட்சிப் பணிமட்டுமல்ல, ஒரு தேசத்தின் பல்துறை வளர்ச்சிக்கான, படிக்கல் எனலாம். காரணம், மத்திய, மாநில அரசு நிர்வாகத்தில் 80க்கும் அதிகமான துறைகள் உள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள பலதுறைகளுக்கும் அமைச்சர் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரத்தில் இருந்தாலும், ஒவ்வொரு துறையிலும் அமைச்சருக்கான, அறிவு சார்ந்த ஆலோசனைகள் வழங்குவதற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி, செயலர் அந்தஸ்தில் இருப்பார்.

இவர்கள் தான், துறையின் வெற்றிகரமான செயல்பாடுகளுக்கு அச்சாணியாக இருப்பவர்கள். ஆனால், பெரும்பாலும் வெளியில் தெரிவது இல்லை.
நமக்குத் தெரிந்தது எல்லாம் தலைமைச் செயலர், சுகாதாரத்துறை செயலர், சட்டசபை செயலர் என்ற வட்டத்தில் மட்டுமே இருக்கும். காரணம், இவர்கள்தான் அடிக்கடி மீடியா வெளிச்சத்துக்கு வருவார்கள்.

மத்திய அரசில் எடுத்துக் கொண்டால் நிதித்துறை, பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை என்ற 3 முக்கியத்துறைகளின் செயலர்கள் தென்படுவார்கள். இப்படி வெளியுறவுத்துறை செயலர்களில் கண்டெடுக்கப்பட்ட முத்துதான், இப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
இதில், இன்னொரு விஷயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும். அது, சக்திகாந்ததாஸ். ஆமாம், திண்டுக்கல் கலெக்டர், தமிழக அரசுப் பணி என்று பலதுறைகளில் செயல்பட்ட சக்திகாந்ததாஸ், மத்திய அரசுப் பணிக்குச் சென்றதும், ஓய்வு பெற்றார். அடுத்ததாக அவருக்கு அடித்த ஜாக்பாட், ஆர்பிஐ கவர்னர் பதவி. “என்னய்யா, இது? ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆர்பிஐ கவர்னர் பதவியா? அவருக்கு பண நிர்வாகம் பற்றி, அப்படி என்னத்தை தெரியும்னு, இந்த மோடி அரசாங்கம் அவரை ஆர்பிஐ கவர்னரா நியமனம் பண்ணுது?” என்று எழுந்த விமர்சனங்கள் அதிகம்.

ஆனால், நிர்வாகத்திறமை, அனுபவம் இருந்தால், எந்தத் துறையிலும் சாதிக்க முடியும் என்பதற்கு சக்திகாந்ததாஸ் ஒரு உதாரணம். அதாவது, ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தாலும், ஆர்பிஐ கவர்னராக செயல்பட முடியும் என்று நிரூபித்தார். இப்படித்தான், எந்த சிப்பிக்குள், எப்படிப்பட்ட முத்து இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. ஒரு நாட்டின் வளர்ச்சியை, தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றால், அதற்கு அரசுத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், பல்துறை நிபுணர்களின் ஆலோசனைகளும் ரொம்பவே அவசியம்.

எப்படி, செயல்திறன் இல்லாத 50 வயதைக்கடந்த ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய விடுப்பில் செல்லும் அறிவிப்பை பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு முன்னெடுத்ததோ, அதேபோல், இன்னொரு அதிரடி அறிவிப்பையும் 2018ம் ஆண்டில் வெளியிட்டது. அதாவது, உரிய கல்வித் தகுதியும், தொழிற்துறையில் கணிசமான முன் அனுபவமும் இருந்தால், சம்பந்தப்பட்ட நபர்களை மத்திய அரசின் ஐஏஎஸ் பணியில் நேரடியாக, குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் பணி நியமனம் செய்ய ரத்னக் கம்பளம் விரிக்கும் வரவேற்புதான் அது.

ஐயகோ, அறிவுசார் பணியில் இப்படி தனி நபர்களை உள்ளே விடலாமா? என்று கூவக்கூடாது. நம்ம முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் உட்பட பலரும் இப்படி நிர்வாகத்துக்கு வந்தவர்கள்தான். இதில், மன்மோகன்சிங் 1984களில், ஆர்பிஐ கவர்னராக இருந்து, அப்போதைய ராஜீவ்காந்தி அரசால், அந்தப் பதவியில் இருந்து விரட்டப்பட்டவர் என்பது கூடுதல் சுவாரஸ்யமான விஷயம்.

சரி, ஏன் இந்த திடீர் ஐடியா? என்று கேட்கலாம். ஒரு சின்ன உதாரணம், இதற்கு சிறப்பாக கை கொடுக்கும் என்று நினைக்கிறேன். இந்தியாவின் முன்னணி இரும்பு உருக்கு நிறுவனம் டாடா ஸ்டீல். அதேபோல், மத்திய அரசின் இரும்பு உருக்கு நிறுவனம் செய்ல் எனப்படும் ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியா. தொழில் ரீதியாக இந்த 2 நிறுவனங்களும் ஒரே கோட்டில் பயணித்தாலும், லாபம், வளர்ச்சி என்ற அடிப்படையில் பார்க்கும்போது, டாடாவுக்கும், செய்ல் நிறுவனத்துக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும், மடுவுக்கும் இடையே உள்ள வேறுபாடுதான்.

சரி, இது வேண்டாம். இப்போதைய தபால் சேவையை எடுப்போம். இதில், இந்தியாவில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட தபால் சேவை, 20 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய கொரியர் நிறுவனங்களுடன் போட்டியிட முடியவில்லை. இத்தனைக்கும் ஆள், அம்பு, தனிக் கட்டடம், பட்டுவாடா செய்ய ஆட்கள், இத்தனையும் கொரியர் சேவையைவிட, தபால்துறையில் அதிகம். ஆனால், ஏன் வெற்றிபெற முடியவில்லை.

சரி, இந்த உதாரணமும் வேண்டாம், 35 ஆண்டுகளுக்கு முன்னர் வீடெங்கும் நிறைந்திருந்த பொதிகை சேனலின் நிலை என்ன? இதுவும் வேண்டாம், தொலைத் தொடர்புத்துறைக்கு வருவோம். 1990 – 93ம் ஆண்டுகள் வரை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த பிஎஸ்என்எல், 2016 செப்டம்பரில் தொடங்கப்பட்ட ஜியோவுக்கு முன் மண்டியிட்டது ஏன்? இத்தனைக்கும் தேசத்தின் மிக வலுவான கண்ணாடியிழைக் கேபிள் தொடர் கொண்ட ஒரு நிறுவனம். பல கிராமங்களில் பிஎஸ்என்எல் டவர்களில்தான், பிற செல்போன் சேவையாளர்களும் தொற்றிக் கொண்டுள்ளனர் என்பது தனிக்கதை.

இங்குதான் இருக்கிறது, நிர்வாக சூட்சுமம். அரசின் வசம் உள்ள மீன்வளம், கனிம அகழ்வு, உலோக உருக்கு, வேளாண் சந்தையிடுகை, விமானப்போக்குவரத்து மேலாண்மை, வேளாண் வணிக நிபுணர், ஏற்றுமதி சந்தையிடுகை, வெளிநாட்டு வர்த்தக ஆய்வாளர், சரக்குபோக்குவரத்து, பண்டக காப்பு நிபுணர், சட்டம், தொழில்நுட்ப ஆலோசகர், ஊடக மேலாண்மை, வங்கியியல், நிதித்துறையில் சைபர் செக்யூரிட்டி, இதே நிதித்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்ப பொருளாதாரம், நிதிச் சந்தை, காப்பீடு, நிதி, நீர் மேலாண்மை, கர்ப்பிணி பெண்கள் நலம் பேணும் சுகாதாரம், சைபர் சட்டங்கள், உள்நாட்டு சட்டங்கள், நீதித்துறை சீரமைப்பு, நெடுஞ்சாலை மேம்பாட்டில் புதிய தொழில்நுட்பம் என்று எண்ணற்ற துறைகளில், பல்துறை நிபுணர்களின் ஆலோசனைகளும் தேவைப்படுகின்றன.

இந்தத் துறைகளுக்கு என்று தனிச் செயலர் ஐஏஎஸ் அந்தஸ்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இவர்கள் எல்லாம் துறை சார்ந்த நிர்வாகப் பணிகளில் உள்ளவர்கள் மட்டுமே. இவர்களுக்கு கீழ் இணை செயலர், துறைகளின் இயக்குனர்கள் பணியில் உள்ளனர். இவர்களும் கீழ்நிலையில் பணிக்குச் சேர்ந்து, படிப்படியாக உயர் பதவிக்கு நிர்வாக ரீதியாக பயணித்து வந்தவர்கள் மட்டுமே. அதாவது, ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும், இவர்களுக்கும் நிர்வாக ரீதியாக நல்ல அனுபவம் இருக்கும்.

ஆனால், அந்தத் துறைகளின் கள நிலவரம்? கலவரமாகத்தான் இருக்கிறது. அதாவது, நீதித்துறை மற்றும் சைபர் கிரைம் சட்டங்கள், பாதுகாப்பில் அரசு மட்டுமே களமாடி சாதிக்க முடியாது. இதற்கு தனியார்துறை நிபுணர்களின் ஆலோசனையும் அவசியம். தனியார்துறை என்பதைவிட, தகுதியான நபர்களாக இருந்தால், அவர்களை முறைப்படி தேர்வு செய்து, அவர்களது கல்வித் தகுதிகளை ஆய்வு செய்து, தகுதியும், துறைசார்ந்த நிர்வாகத்தில் கணிசமான ஆண்டுகள் அனுபவமும் இருந்தால், அவர்களை, தன் நிர்வாகத்தின் இணை செயலாளர் மற்றும் இயக்குனர் பதவிகளில், குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் பணியாற்றுவதற்கு மத்திய அரசு இந்த யுபிஎஸ்சி நிர்வாகத்தில், தகுதியும், திறமையும் கொண்ட நபர்கள் நேரடியாக களமாடும் லேட்டரல் என்ட்ரி எனப்படும் தேர்வு முறையை இந்த ஆண்டில் இருந்து அறிமுகம் செய்துள்ளது.

இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், மார்ச் 22ம் தேதி இதற்கான தேர்வு அறிவிப்பு முறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 29 பிரிவுகளில் 3 இணை செயலாளர்கள் மற்றும் 26 இயக்குனர்கள் அந்தஸ்தில் இந்தப் பணியிடங்களுக்கான நியமனம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்பவர்களின் கல்வித்தகுதி, அந்தந்த துறை சார்ந்த பணிக்கு தகுந்தார்போல் உள்ளதா? மற்றும் அந்தத்துறையில் எத்தனை ஆண்டுகளாக பணியில் உள்ளார்கள்? பணிக்காலத்தில் தாங்கள் பணிபுரிந்த நிறுவனங்களில் செய்த சாதனைகள் என்ன? தாங்கள் தேர்வாக உள்ள துறைக்கான, அடுத்த 5 ஆண்டுகளுக்கான தங்களது திட்டம் என்ன? என்பது உட்பட பல்வேறு விஷயங்களும் இந்தப் பதவிகளுக்கான நேர்காணலில் கருத்தில் கொள்ளப்படும் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

மத்தியில் ஆளும் மோடி அரசைப் பொறுத்தவரை நிர்வாகத்துறையில் வெகு தெளிவான ஒரு பார்வையை ஏற்கனவே முன்னெடுத்துள்ளார்கள். வெறும் நிர்வாக அறிவு மட்டுமே, எந்த ஒரு துறையின் வெற்றிகரமான செயல்பாட்டுக்கு போதுமானமாக இருக்காது என்பதை, தன் 20 ஆண்டுகால அரசு நிர்வாகத்தில் புரிந்து கொண்ட மோடி, இதற்காகவே திறமையான நபர்கள் வெளியில் இருந்தால், தேசத்தின் வளர்ச்சியில் அவர்களது பங்களிப்பும் இன்றியமையாததாக இருக்கும் என்று கணித்துள்ளார்.

இதைத்தான் நீங்கள் தலைப்பில் பார்த்தீர்கள். அதாவது தொழிற்துறையின் மூளை, ஐஏஎஸ் வேலை. இதுதான், எதிர்கால இந்தியாவின் அடுத்த 25 ஆண்டு கால வளர்ச்சிக்கான ஒரு முன்னோட்டம் எனலாம். இவ்வளவு சொன்ன பிறகும் ரொம்பவும் புலம்ப வேண்டாம். இதெல்லாம் ஏற்கனவே அமெரிக்காவில் நீண்ட நாட்களுக்கு முன் நடைமுறைக்கு வந்துவிட்டது. பதவிக்கு வரும் எந்த ஒரு அதிபரும், தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, திறமையாளர்களை தன் நிர்வாகப் பணிக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். ஏறக்குறைய, அதே பாலிஸியைத்தான் இப்போது மோடியும் கையில் எடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here