நம்பிக்கை தருகிறதா ஜிஎஸ்டி வருமானம்?

நாட்டின் புதிய பேசுபொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது இந்த ஜிஎஸ்டி. அதிலும், தமிழகத்திின் சட்டசபைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் ‘ஜிஎஸ்டி பூச்சாண்டி’ என்று பேசத் தொடங்கியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி.

கல்லுாரியில், ஆங்கிலப்பிரிவு 3ம் ஆண்டு மாணவர்கள் மற்றும் எம்ஏ ஆங்கிலம் படித்த மாணவர்களுக்கு, 2018ல் ஜிஎஸ்டி சம்பந்தமாக 2 மணி நேரம் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஒரு மாணவர் புத்திசாலித்தனமான கேள்விகளைக் கேட்டார். ‘ஜிஎஸ்டியில் 28 சதவீத வரிப்பட்டியல் உள்ளது. நான் என் வீட்டுக்கு வாங்கிய பெயின்டுக்கு 28 சதவீதம் வரிபோட்டார்கள். இதற்கு என்ன காரணம்?’ என்று ஆவேசப்பட்டார்.

இதற்கு புத்திசாலித்தனமாக பதில் சொல்லாவிட்டால், நமது மேதமைத்தனம் அத்தனையும் சாம்பல்தான்…

இதன்பின்னர் நடந்த உரையாடல்…

பேச்சாளர் : ஜிஎஸ்டி பற்றி ஓரளவு தெரிந்துள்ளீர்களா?

மாணவர் : ஆமாம், தெரிந்து வைத்துள்ளேன்.

பேச்சாளர் : நீங்கள் சாப்பிடும் உணவு தானியங்கள், பால், சர்க்கரை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மீது வரியுள்ளதா?

மாணவர் : ஆமாம், பூஜ்ஜியம் முதல் 5 சதவீதம் வரை வரியுள்ளது.

பேச்சாளர் : உங்கள் கேள்வி பெயின்ட் மீதான 28 சதவீதம் வரி ஏன்?

மாணவர் : அது, மட்டும்தான்.

பேச்சாளர் : உங்கள் வீட்டுக்கு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயினட் அடிக்கிறீர்கள்?

மாணவர் : 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயின்ட் அடிக்கிறோம்.

பேச்சாளர் : நீங்கள் பெயின்டுக்கு செலுத்திய செலவுகளையும், அதன் மீதான வரியையும் 10ல் வகுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் வீட்டு பெயின்டுக்கு ஓராண்டில் செலுத்திய வரி 2.8 சதவீம் மட்டுமே.

மாணவர் : ஆமாம், உண்மைதான்.

பேச்சாளர் : குறைந்தபட்சமாக, நீங்கள் பயன்படுத்திய பொருட்கள் மீது 2.8 சதவீத வரி செலுத்துவதை பாரமாக கருதும் நிலையில்தான், சீரான மின்சாரம், நீண்ட துார பயணத்துக்கு தடையில்லாத சாலைகள், குடிநீர், அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை என்று பேசுகிறோம். இது புரிதல்களின் விளைவே…

இவ்வாறு, இந்த உரையாடல் நீண்டது.

இது ஒரு சின்ன உதாரணம்தான். ஜிஎஸ்டியை வரிசெலுத்தும் மக்கள் சத்தமின்றி ஏற்றுக் கொண்டுவிட்டனர். ஆனால், மக்களை மிரட்டியே அரசியல் செய்து கொண்டிருக்கும் எதிர்கட்சிகள் இன்னும் இந்த ஜிஎஸ்டி வரிமுறையைக் கொண்டு மக்களை மிரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருப்பது, இந்திய ஜனநாயகத்தின் வருத்தமான விஷயமாகும்.

தவறான புரிதலுக்கு என்ன காரணம்?

நிறையபேருக்கு இந்தக் கேள்வி ஏற்படுவதுண்டு. இதற்குக் காரணம் பிரதமர் நரேந்திரமோடிதான். காங்கிரஸ் ஆட்சியில் ஜிஎஸ்டி கொண்டு வர முற்பட்டபோது, குஜராத்தின் பிரதமராக இருந்த மோடி, ‘என் பிணத்தின் மீதுதான் இந்தச் சட்டத்தை அமல்படுத்த முடியும்’ என்று கூறினார். ஆனால், அதே நரேந்திரமோடி பிரதமர் ஆனதும், ஜிஎஸ்டி சட்டத்தை ஏற்றுக் கொண்டு, அமல்படுத்தினார். இதுதான், சமூக வலைத்தளப் போராளிகள் பலரின் கிண்டல் பேச்சு. ஏறக்குறைய, இதுவும் கூட கற்ற அறிவாளிகள், தங்கள் மேதமையை காண்பிப்பதற்கான வழியாக இதை பார்த்தார்கள்.
அதேநேரத்தில், காங்கிரஸ், பாஜ இடையே இந்த சட்டத்தை அமல் செய்வதில் இருந்த வேறுபாட்டை குறிப்பிடவில்லை. அல்லது வேண்டும் என்றே மறைத்தார்களா? என்பதும் தெரியவி்ல்லை. பழனியப்பன் சிதம்பரம் தாக்கல் செய்த ஜிஎஸ்டி மசோதாவில், ‘ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்துவதால், மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை ஈடுசெய்யமாட்டோம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அருண்ஜெட்லி தாக்கல் செய்த ஜிஎஸ்டி மசோதாவில், ‘ஜிஎஸ்டி அமல் செய்வதால் ஏற்படும் வருமான இழப்பை 2017 முதல் 2022 வரை, மத்திய அரசு ஈடு செய்யும்’ என்று உறுதி வழங்கப்பட்டது. இந்த ஈடு செய்யும் இழப்பீடுபணத்தை கேட்டுதான் கடந்த ஆண்டில் பல மாநில அரசுகள் மத்திய அரசை நச்சரித்தன. அதேநேரத்தில், மாதாந்திர ஜிஎஸ்டி வருமானத்தில் மாநில அரசுகளின் பங்களிப்பு நிதி பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

உயர்ந்த வியாபாரிகளின் எண்ணி்க்கை

ஜிஎஸ்டி வரித்திட்டத்துக்கு முன்னர் நாடு முழுவதும் வாட் வரி முறை அமலில் இருந்தது. இந்தத் திட்டத்தின்படி, நாடு முழுவதும் 65 லட்சம் வியாபாரிகள் மட்டுமே, மத்திய, மாநில அரசுகளுக்கு வரி செலுத்திக் கொண்டிருந்தனர். ஜிஎஸ்டி வரிமுறை அமலுக்கு வந்த பின்னர், இப்போது வரை ஒரு கோடியே 30 லட்சம் வணிகர்கள், தங்களை ஜிஎஸ்டியில் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். இதன்மூலம், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே செலுத்தப்பட்டு வந்த வணிகவரிகள், இப்போது ஒவ்வொரு மாதமும் 20ம் தேதிக்குள் செலுத்தப்பட்டு வருகிறது.
அதாவது, டிசம்பர் மாதத்தின் வற்பனை கணக்குகளை ஜிஎஸ்டிஆர் 1 படிவம் வழியாக, ஜனவரி 10ம் தேதிக்குள்ளும், விற்பனை வரியை ஜிஎஸ்டிஆர் 3பி படிவம் வழியாக, ஜனவரி 20ம் தேதிக்குள்ளும் செலுத்தியாக வேண்டும். இந்தப் பணம் 30ம் தேதிக்குள், அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் மாநில அரசுகளுக்கு பகிர்ந்து வழங்கப்படும்.

வரி வருமானத்தில் உயர்வு

ஜிஎஸ்டி பதிவெண் இருந்தால் மட்டுமே வியாபாரம் செய்ய முடியும் என்ற நிலையில், வாட் முறையில் தப்பித்துக் கொண்டிருந்த லட்சக் கணக்கான வியாபாரிகள், ஜிஎஸ்டியில் தங்களை இணைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மாதாந்திர ரிட்டன், 3 மாதங்களுக்கு ஒருமுறை தாக்கல் செய்யப்படும் காலாண்டு ரிட்டன் என்று எந்த வகையிலும் அரசுக்கான வரி செலுத்துதலில் இருந்து வியாபாரிகள் தப்பிக்கவே முடியாது என்பதுதான் உண்மை.

தொடக்கத்தில் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட நாட்களில், இது நம் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்த்தும் என்று பூச்சாண்டி காண்பித்தனர் காங்கிரஸ் கட்சியினர். உண்மைதான். எந்த ஒரு சட்டமும் அறிமுகமான புதிதில், அப்படியே நன்மை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது, திருமணமாகி மாமியார் வீட்டுக்கு வரும் மருமகள், அப்படியே, அந்தக் குடும்பத்தை புரிந்தவளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது போன்றதுதான். இது சாத்தியம் இல்லாத ஒரு விஷயம். ஜிஎஸ்டியும் அப்படித்தான்.

ஜிஎஸ்ட அறிமுகமானபோது இருந்த விதிகளில், ஜிஎஸ்டி என்ற 3 எழுத்துக்களைத் தவிர, இப்போது எதுவும் நடைமுறையில் இல்லை. காரணம், இந்த சட்டம் 2017 ஜூலையில் அமலான நாளில் இருந்து, மத்திய நிதி அமைச்சர் தலைமையில், ஒவ்வொரு மாதமும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அவ்வப்போது, சட்டத்தி்ல் உள்ள சிக்கல்கள் நீக்கப்பட்டு வருகிறது. இதுவரை 140க்கும் அதிகமான திருத்த சுற்றறிக்கையை, ஜிஎஸ்டி கவுன்சில் பிறப்பித்துள்ளது. ஜிஎஸ்டி வருமானத்தின் அளவும் 85 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து, ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இந்த வருமானத்தை, தக்க வைக்கும் வகையில் ஜிஎஸ்டி கவுன்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஒரு ரூபாயில் பட்ஜெட் வரவினங்கள் என்ன?

மத்திய அரசு தான் செலவிடும் ஒவ்வொரு ரூபாய்க்கும், தனக்கான வருமான ஆதாரங்களை தக்க வைத்துக் கொள்வதில் கவனமாக உள்ளது. படாடோப அறிவிப்புகள் கொடுத்துவிட்டு, சிக்கலில் தவிக்கக்கூடாது என்பதில் மத்திய அரசு எச்சரிக்கையுடன் உள்ளது. மத்திய அரசு தெரிவித்துள்ள தவகல்படி, ஒரு ரூபாய்க்கான வருமான ஆதாரம் இதுதான்.

வரியல்லாத வருமானம் 10 காசு
ஜிஎஸ்டி வருமானம் 18 காசு
எக்சைஸ் மற்றும் சுங்கம் 11 காசு
வருமான வரி 17 காசு
கார்ப்பரேட் வரி 18 காசு
கடன் அல்லாத முதலீடு வருமானம் 6 காசு
கடன் மற்றும் இதர வகைப்பாடுகள் 20 காசு

நமது வருமான ஆதாரம் இவ்வளவுதான். இதைக் கொண்டுதான், 136 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டுக்கு, ஒவ்வொரு ஆண்டும், பெரிய பட்ஜெட் விருந்து படைக்கப்படுகிறது. இதில், ஜிஎஸ்டியின் பங்களிப்பு 20 சதவீதம் வரை மாதாந்திர வருமானமாக இருப்பதால், மத்திய அரசு தன் செலவினங்களை திறம்பட சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது. இன்னும் சொல்லப்போனால், எதிர்வரும் பட்ஜெட்டில், ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் நிறையவே இருக்கும் என்று வரி ஆலோசகர்ளும், ஆடிட்டர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here