பஜனை மண்டலியில் தேர்தல் பிரச்சாரம் செய்யலாமா?

அண்மையில் மிகவும் வைரலாக பரவியது ஒரு காணொளி. இக்காணொளியில் பாண்டுரங்கனை பாடும் பஜனை மண்டலி ஒன்றில் ஒரு உபந்நியாசகர் ஒரு விஷயத்தை கூடியிருக்கும் பக்தர்களுக்கு சொல்லுகிறார்: பாண்டுரங்கன் சிவ சொரூபம். சுவாமிக்கு இலைகள் – துளசியோ வில்வமோ- கொண்டு அர்ச்சனை செய்யலாம். பூக்கள் தாமரை மலர்கள் கொண்டு பூஜை செய்யலாம். மாம்பழம் நைவேத்தியமாக வைக்கலாம். செவ்வாய் கிழமை பூஜை விசேஷம். வரும் செவ்வாய் ஏப்ரல் 6 ஆம் தேதி வருகிறது. செவ்வாய் கிழமை சுவாமிக்கு இலை, தாமரை பூ, மாம்பழம் ஆகியவற்றைக் கொண்டு கைங்கரியம் செய்யுங்கள் என்கிறார்.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுகிறது. திருமாவளவனும் கமலஹாசனும் கனிமொழியும் இந்து மதத்தைக் கொச்சைப்படுத்திய போதெல்லாம் அமைதியாக இருந்தவர்கள் இப்போது பொங்கி எழுகிறார்கள். அவர்களுள் ஒருவர் ஜெயமோகன். அவர் இந்த பஜனை மண்டலி பேச்சைக் கண்டித்து எழுதுகிறார். இப்படி அரசியல் படுத்துவது இந்து மரபை சிறுமைப்படுத்துவது என்கிறார். இதனைக் கண்டித்து மற்றொருவர் எழுதிய கட்டுரையை அவர் மேற்கோள் காட்டுகிறார். அதில் இப்படி ஒரு வரி வருகிறது: “… நாம் இத்தனைக் காலம் பிழைத்திருக்க காரணமே நமது ஸ்வதந்திர சிந்தனை தான். பிரச்சாரம் செய்ய விருப்பம் உடையவர்கள் களத்திற்கு வாருங்கள் .அதை விட்டு உபன்யாசம் , பஜனையில் எல்லாம் சிலேடை பேசாதீர்கள் .”

நிஜமாகவா? இத்தனைக் காலம் பிழைத்திருக்கிறோமா?

எந்த சிந்து -சரஸ்வதி சமவெளி பிரதேசத்தில் வேதங்கள் எழுந்தனவோ, எங்கு பாரதத்தின் மிக தொன்மையான பண்பாடு உருவானதோ அது இன்று பாகிஸ்தான் ஆகிவிட்டது. அங்கே எத்தனை இந்துக்கள் பிழைத்திருக்கிறார்கள்? பிழைத்திருப்பவர்கள் எப்படி வாழ்கிறார்கள்?

காந்தார தேசமான ஆப்கானிஸ்தானில் எத்தனை இந்துக்கள் பிழைத்திருக்கிறார்கள்? அங்குள்ள இறுதி இந்துக்கள் எப்படி வாழ்ந்தார்கள்? அவர்கள் அவமானப்படுத்தப்பட்டு நாசி ஜெர்மனியில் யூதர்கள் போல அனுமதி சின்னங்களுடன் பொதுவெளிகளில் நடமாட வைக்கப்பட்டனர். தாலிபானால்.

பங்களாதேஷில் என்ன ஆகிக்கொண்டிருக்கிறது? ஹிந்துக்கள்,  பௌத்த வனவாசிகள் நிலவுரிமைகள் பறிக்கப்பட்டு மிக மோசமாக அழித்தொழிக்கப்படுகிறார்கள்.

இங்கு வாழும் இந்துக்கள் சீக்கியர்கள் பௌத்தர்கள் அனைவருமே ஒருவிதத்தில் நம் விடுதலையின் போது பிறந்த அனாதைகள். அவர்களுக்கு நாம் தார்மிக கடப்பாடு உடையவர்கள். அதை தொடர்ந்து இந்திய அரசு உதாசீனப்படுத்தியது.

நவீன காலகட்டங்களில் ஒரு குறிப்பிட்ட ஆன்மிக மரபைச் சார்ந்தவர்கள் மூன்று நாடுகளில் ஏறக்குறைய முழுமையாக துடைத்தழிக்கப்பட்டது என்பது முக்கியமாக நடந்தது இந்துக்களுக்குத்தான். இந்நிலையில் நாம் பிழைத்திருக்கிறோம் என்கிற வாசகம் முழுக்க முழுக்க ஒரு மிகச்சிறிய சுயநல வட்டத்தைக் கொண்டு எழுவது. குமரி மாவட்டத்திலேயே பல இடங்களில் இந்துக்கள் இந்துக்களாக வாழ முடியாமல் இருக்கும் சூழல் உண்டு.  இதை நானே காணொளி பதிவுகளாக பதிவு செய்திருக்கிறேன்.

ஆனால் இப்படி அழித்தொழிக்கப்படுவதைத் தாண்டி நம்முடைய வரலாறு முழுவதும் – நாம் இந்த அளவாவது பிழைத்திருக்க காரணமாக அமைந்தவை – அரசியல் களத்திலும் ஆன்மிக பெரியவர்கள் இறங்கியதும் தெளிவாக சமய மரபுகளைக் காப்பாற்றுதல்களுக்காக போராட அரசியலில் இருப்போரைத் தூண்டியதும்தான்.

தெற்கே விஜயநகரமும் தக்காண மராட்டிய சாம்ராஜ்யமும் இல்லை என்றால் வடக்கில் கால்ஸா இல்லை என்றால் இன்று நாம் ‘பிழைத்திருப்பது’ என்று சொல்லிக் கொள்ளவே எவரும் இருந்திருக்க மாட்டோம்.

வித்யாரண்யர் ஹரிஹர புக்கர்களை போராடத்தூண்டினார். சாம்ராஜ்ஜியம் அமைக்க உதவி செய்தார். ஒரு துறவி ஏன் இதையெல்லாம் செய்ய வேண்டும்? ஆன்மிக சாதனையில் மட்டும்தானே இருக்க வேண்டும். இத்தனைக்கும் வேதாரண்யர் பெரும் ஆன்மிக சாதனையாளர். பஞ்சதசி எனும் அற்புதமான ஆன்மிக இலக்கியத்தை இயற்றியவர். என்ற போதிலும் தர்மம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக போராட அவர் ஒரு அரசை உருவாக்கினார். 

இன்று நம் கோவில்கள் நிமிர்ந்து நிற்கின்றன என்றால் அது வித்தியாரண்யர் அளித்த அரசியல் உத்வேகத்தால்.

தக்காண பூமியின் பக்தி இயக்கத்துடன் இணைந்தது மகா சிவாஜியின் உதயம். வீர சிவாஜி நாம் காணும் இன்றைய நவீன பாரதத்தின் முன்னோடி மாதிரி சுவராஜ்ஜியத்தை கண்முன் கொண்டவர். அதற்காக உழைத்தவர்.  வீர சிவாஜியின் ஹிந்தவி சுவராஜ்ஜியமும் சரி மகாத்மா காந்தியின்   ’ஹிந்த் சுவராஜ்ஜியமும்’ சமயப் பொறையுடையவை ஆனால் மத நீக்கம் கொண்டவை அல்ல. 

மேற்கத்திய மதநீக்க மதச்சார்பின்மை போலியானது. ஆபத்தானது. அதிர்ஷ்டவசமாக மேற்கிலேயே இந்த மதச்சார்பின்மை என்பது துறை சார்ந்து இருக்கிற போதிலும் சமய சின்னங்களின் முக்கியத்துவம் அங்கே உணரப்பட்டே இருக்கின்றன.  பைபிள் தொடங்கி ‘In God we Trust’ என்பது வரை சமயச்சின்னங்களுக்கு மேற்கத்திய – மற்றபடி மதச்சார்பற்ற நாடுகளில் ஒருவித சமய ஏற்பு உண்டு.

எனவே மேற்கத்திய புத்தெழுச்சி கால மத நீக்க கோட்பாடுகளின் பார்வையில் இங்கும் மத நீக்கம் என்பது பேசப்படும் போது அது ஒரு முரணை உருவாக்குகிறது. போலித்தனம் ஏற்படுகிறது. இந்த விளைவுகளை காந்தி உணர்ந்திருந்தார். இயல்பான ஜனநாயக வளர்ச்சிக்கு சமய சின்னங்கள் அவசியம் என்பதை உணர்ந்திருந்தார்.

மதநீக்க அரசியலை நிராகரித்து அரசியலை முழுக்க சமய அடையாளங்களைக் கொண்டு நிரப்பியவர் அவர்.

அவர் அடையாள அரசியல் செய்தாரா என்றால் – ஆம். இந்து சமய அடையாளங்களை ஒட்டுமொத்த சமுதாய அரசியலில் கொண்டு வந்தார். வார்தா ஆசிரமம் காந்திய அரசியலில் முக்கியமான ஒரு மையம். இன்றைக்கும் அங்கே காந்தி அமர்ந்திருக்கும் ஆசனம் இருக்கிறது. அப்படியே வைத்திருக்கிறார்கள். அதில் அவர் பின்னால் பிரணவம் பொறிக்கப்பட்டிருக்கும். காந்தி ரகுபதி ராகவ ராஜாராம் எனும் பாடலில் ஒரு முக்கியமான வரியை சேர்த்தார். ‘ஈஸ்வர அல்லா தேரே நாம்’ இன்றைக்கு சில இணைய இந்துத்துவர்கள் அதை எள்ளல் செய்யலாம். ஆனால் இந்துத்துவ உள்ளிழுத்தலின் மிக முக்கிய பிரகடனம் அது. அல்லாவும் ஈஸ்வரனும் பரம்பொருளுக்கான பெயர்கள் பலவற்றில் ஒன்று. உண்மையில் இஸ்லாமிய வகாபிய அடிப்படை வாதத்திற்கு ‘வந்தே மாதரம்’ என்பதை விட மிகப் பெரிய ஷிர்க்காக -இணை வைப்பாக தெரிய வேண்டியது இந்த வரிதான் – ரகுபதி ராகவனான ராஜாராமனை சொன்ன பிறகு வரும் வரி ஈஸ்வர அல்லா தேரே நாம் – ஈஸ்வரனும் அல்லாவும் உன் நாமங்களே.

சரி மீண்டும் அரசியலில் மத அடையாளங்கள் குறித்து.

ஒத்துழையாமை இயக்கத்துக்கான திட்டமிடல் 1920 நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டில்தான் நடந்தது. பிரிட்டிஷ் உளவுதுறையின் ரகசிய அறிக்கையின்படி அந்த மாநாட்டில் நாகசாதுக்கள் கலந்து கொண்டனர். அந்த அறிக்கையின்படி நாக சாதுக்கள்கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்தித்து தங்கள் மீது மக்களுக்கு இருக்கும்  மதிப்பையும் அவர்கள் மீது சாதுக்களுக்கு இருக்கும் செல்வாக்கையும் பயன்படுத்தி ஒத்துழையாமை இயக்கத்தை பரப்ப திட்டமிடப் பட்டது.  காந்தி தனிப்பட்ட முறையில் இந்த சாதுக்களை சந்தித்து தன் நன்றியை தெரிவித்து செயல்திட்டத்தையும் விளக்கினார் என்கிறது அறிக்கை.

என்றாலும் உபந்யாசம் என்று வருகிறவர்களிடம் அரசியல் கருத்துக்களை சொல்லலாமா?

பாரத விவசாயிகள் கிளர்ச்சியின் வரலாற்றில் முக்கியமான தலைவர் பாபா ராமசந்திரர். அவரது  துளசிதாஸ் ராமாயணம் உபந்நியாசம் வட நாட்டில் பிரபலமானது. அதன் மூலமாகவே அவர் மக்களை சென்றடைந்தார். ’ஜெய் ராம்’ ’சீயா ராம்’ ’ஜெய் சங்கர்’ ஆகிய சமய கோஷங்கள் சமத்துவ இயக்கத்துக்கான கோஷங்களாயின என்பது வரலாறு.

ராவணனை தகனம் செய்யும் ராம்லீலா முக்கியமான சமயத் திருவிழா. பிரிட்டிஷ் ரகசிய அறிக்கைகள் இந்த திருவிழாவில் தொடர்ந்து தேசிய சின்னங்கள் அதிக இடம் பெறுவதை கவலையுடன் தெரிவித்தன.  1900 தொடங்கியே இந்த போக்கு அதிகமானது. ஜான்ஸி ராணி லட்சுமிபாய் குதிரையில் ஏறி ஒரு பிரிட்டிஷ் ராணுவ வீரனை வதம் செய்வது போன்ற ஒரு வடிவமைப்பு, பஞ்சாபின் சிங்கம்  லாலா  லஜ்பத் ராய் அவர்களின் ஓவியம் ஆகியவை ராம்லீலா ஊர்வலத்தில் இடம் பெற்றதை பிரிட்டிஷ் காவல்துறை ஆவணங்கள் பதிவு செய்கின்றன.

வள்ளி திருமணம் நாடகங்களில் இந்திய விடுதலை வசனங்கள் பேசப்பட்டன.  பாஸ்கரதாஸ் எழுதி வெளியிட்ட இந்து தேசாபிமான செந்தமிழ்த் திலகம் எனும் பாடல் தொகுப்பு பெரும்பாலும் அன்றைய ஹிந்து பக்தி பாடல்களைத் தழுவி – மெட்டில் மட்டுமல்ல, ஆன்மிகக் கோட்பாடுகளையும் தேசிய இயக்கத்துடன் தொடர்புபடுத்தி, எழுதப்பட்டது. தியாகி விசுவநாத தாஸ் அவர்கள் வள்ளி திருமணம் போன்ற புராண நாடகங்களில் ஆங்கிலேய எதிர்ப்பு வசனங்களை வைத்து எழுதினார் என்பது எல்லாருக்கும் தெரியும். 

வள்ளி திருமணம் என்பது ஆன்மாவை இறைவனே தேடி வந்து ஆட்கொள்வது. அதை ஒரு அரசியல் கிளர்ச்சிக்கு பயன்படுத்தக் கூடாது என்று அன்றும் எவராவது எழுதியிருப்பார்கள். விசுவநாத தாஸ் வரலாற்றில் என்றும் இருப்பார். அப்படி எழுதியவர்களை வரலாற்றாசிரியர்கள் வரலாற்றின் குப்பை கூடைகளை கவிழ்த்து கவிழ்த்து தேடி எங்கோ குப்பைகளின் அடியாழத்தில் கண்டு பிடித்துவிடலாம். நிச்சயமாக கண்டுபிடித்துவிடலாம். அவர்களுக்கும் கட்டாயம் வரலாற்றின் அடிக்குறிப்பில் ஒரு இடம் இருக்கும்.

ஒத்துழையாமை கிலாபத் இயக்கத்தின் போது காந்தி சாது சன்னியாசிகளை  தேசிய  இயக்கத்தில் பிரச்சாரம் செய்ய சொன்னார். பின்னாட்களில் பாரதி கிருஷ்ண தீர்த்தராக கோவர்த்தனபுரி சங்கராச்சாரியாரான துறவி இந்த இயக்கத்தில் பிரச்சாரம் செய்து கைது செய்யபட்டார். மத அடையாளங்களை பயன்படுத்தி இந்தியா முழுக்க பெரிய அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டது அதுவே முதல் முறை. பின்னர் அப்படிப்பட்ட எழுச்சி ஸ்ரீ ராமஜென்ம பூமி இயக்கத்தின் போதுதான்.

தாமரை மட்டுமல்ல கை சின்னத்துக்கு கூட ஆன்மிக விளக்கம் உண்டு. அபய ஹஸ்தமாக அது இருக்கிறது என்று சொல்லலாம். ஒரு கோவில் மூர்த்தியின் அபய ஹஸ்தத்தையே ஏதோ மாந்திரீகர் அல்லது யோகி சொன்ன அறிவுரையின் படி இந்திரா காந்தி தன் கட்சிக்கு அளித்தார் என்று கூட சொல்வார்கள். சூரியனுக்குக் கூட ஆன்மிக விளக்கம் சொல்லலாம்.

அரசியலை மதத்திலிருந்து நீக்க வேண்டுமென்பது ஏறக்குறைய இயலாத ஒரு விஷயம். அது எப்போதும் இருந்து கொ்ண்டு இருக்கும் ஒரு விஷயம். இந்து மதம் முன்னெப்போதையும் விட கடுமையாக தாக்கப்படுவது எங்கே? ஊடகங்களில் மட்டுமல்ல அரைகுறை அறிவுஜீவிகளின் விவாத உரையாடல்களில் மட்டுமல்ல. முக்கியமாக பல்லாயிரம் மக்கள் கூடும் அரசியல் மேடைகளில்.

’ஆபாச சிலைகள் இருக்கின்றன என்றால் அது கோவில் கோபுரம்’ என திருமாவளவன் பேசியது அரசியல் மேடையில் பலத்த கர கோஷங்களுக்கிடையே. அவருக்கு கோவில்களில் பூர்ணகும்ப மரியாதை கிடைத்திருக்கிறது. பூஜிக்கப்பட்ட கும்பங்களைக் கொண்டு சென்று அவர் கும்பாபிஷேகம் செய்திருக்கிறார். என்றாலும் கூட்டத்தின் மத்தியில் அவர் இப்படி பேசுகிறார். பலத்த கரகோஷம்.

அ.ராசா, கனிமொழி , அருணன், தா.பாண்டியன் என அனைவரும் இந்து மதத்தையும் அதன் பூஜை முறைகளையும் திருமண சடங்குகளையும் அந்தணர்களையும் மோசமாக பேசுவதை ஒரு அரசியல் கடமையாகக் கொண்டுள்ளார்கள். இப்படிப்பட்ட தொடர் தாக்குதல் ஒரு புறம் நடப்பது மதமாற்ற ஆக்கிரமிப்பை எளிதாக்குகிறது.  மத மாற்றம் செய்யும் மதங்கள் இந்து மதத்தை ஒழிப்பதை தங்கள் புனித கடமையாகவே கருதுகின்றன.  

கிறிஸ்தவ இஸ்லாமிய வழிபாட்டு கூடுகைகளில் எவருக்கு வாக்களிக்க வேண்டுமென்பது பூடகமாகவோ வெளிப்படையாகவோ சொல்லப்படும். இது பெரும்பாலும் எல்லா தேர்தல்களுக்கும் உண்மை. ஆனால் அதற்கு என்ன காரணம்? சிறுபான்மையினர் உணரும் பாதுகாப்பற்றத்தன்மை என வெளியே சொல்லப்பட்டாலும், உண்மை என்னவென்றால் இந்த இரு மதங்களும் விரிவாக்க போக்கு கொண்ட மதங்கள்.  அவர்களின் விரிவாக்கத்துக்கு அவற்றுக்கான அரசியல் அணிகளை அவை ஆதரிக்கின்றன.  பெரும்பாலும் இஸ்லாமிய அமைப்புகளும் கிறிஸ்தவ அமைப்புகளும் கடுமையான இந்து எதிர்ப்பையும் வெறுப்பையும் கொண்ட திமுகவையே ஆதரிக்கும் நிலைப்பாட்டை தேர்ந்தெடுப்பதென்பது தற்செயலானது அல்ல.

ஆனால் இன்று வைரலாகி அதனால் சர்ச்சையாகியிருக்கும் பாண்டுரங்க பஜனை மண்டலி காணொளி கிறிஸ்தவ இஸ்லாமிய கூடுதல்களில் மதத்தலைமைகளால் இடப்படும் கட்டளைகளை போன்றதா? என்றால்,

கிறிஸ்தவ இஸ்லாமிய மத கூடுகைகளில் ஒவ்வொரு தேர்தல் தோறும் கொடுக்கப்படும் மறைமுக வெளிப்படையான கட்டளைகள் தங்கள் விரிவாதிக்கத்துக்கான அரசியல் வியூகங்கள்.  இந்த தேர்தலில் ஒரு சில பஜனை மண்டலிகளில் ஒரு குறிப்பிட்ட உபந்யாசகரால் சூசகமாக சொல்லப்பட்ட பரிந்துரை தொடர்ந்து ஹிந்து மதம் இழிவுப்படுத்தப்பட்டு மதமாற்ற ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்படுவதைத் தொடர்ந்து எழுப்பப்பட்ட ஒரு உதவிக்கான கூக்குரல். வேதனையின் விளைவு.

ஒரு பலம் வாய்ந்த அரசியல் அணியில் மேடைக்கு மேடை இந்து பண்பாடு வாய்க்கு வந்த படி அசிங்கப்படுத்தப்படும் போது இந்து பஜனை மண்டலி கூடுதலில் இந்து பண்பாட்டைக் கேலி செய்யாத ஒரு கூட்டணிக்கு வாக்களிக்க சூசகமாக சொல்வது எவ்விதத்திலும் தவறானது் அல்ல. இயற்கையானது. இன்னும் சொன்னால் இப்படி எவ்வித எதிர்வினையும் வரவில்லை என்றால் மட்டுமே அது செயற்கையானது சமூக நோய்கூறுடைய நிலை அது.

காந்தார தேசமாக இருந்த ஆப்கானிஸ்தானத்திலும், சிந்துவின் மடியாக இருந்து வேதம் வளர்த்து இன்று பாகிஸ்தானமாக மாறிவிட்ட பிரதேசத்திலும், டாகினீஸ்வரி வழிபடப்பட்டு இன்று பங்களாதேஷ் ஆகிவிட்ட  தேசத்திலும் வாழ்ந்த இந்துக்களின் அவமானப்பட்டு வாழ்ந்து அழிகிற இந்துக்களின் நிலை நம் சந்ததிகளுக்கு வராமல் இருக்க ஒவ்வொரு பஜனை மண்டலியும், ஒவ்வொரு தேர் திருவிழாவும், ஒவ்வொரு பிரதோஷ பூஜையும், ஒவ்வொரு திருவிளக்கு பூஜையும், ஒவ்வொரு புரட்டாசி சனிகிழமையும், ஒவ்வொரு ஆடி வெள்ளியும், ஒவ்வொரு அம்மன் கோவில் திருவிழாவும், மக்களால் அவற்றுள்ளும் அவர்களுள்ளும் என்றென்றும் இருக்கும் ஹிந்துத்துவத்தை உணர வைக்க வேண்டிய சந்தர்ப்பங்களாக்கப்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here