பஞ்சாப் எதிர்கொள்ளும் அபாயமும் ,மோடியின் தேவையும்

36
0

ஜனநாயக நாடு என்ற ஒரே காரணத்தால் நடக்கும் அசம்பாவிதங்களை அரசாங்கம் தட்டி கேட்க இயலாமல் தவிக்கிறது. விவசாயிகள் என்ற பெயரில் தலைநகரை முற்றுகையிடுதல், பொது சொத்துக்களை சேதப்படுத்துதல், காவல் துறையையே தாக்குதல் போன்ற செயல்கள் என்று நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது.

குடியரசு தின விழாவை சீர்குலைக்க நினைத்த சிலர், விதிகளை மீறி விஷமத்தனமான செயல்களில் ஈடுபட்டார்கள். பசு தோல் போர்த்திய புலியை போல் விவசாயி வேடமும் இட்டார்கள்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடத்தப்படும் அமைதி பேரணி என்று அனுமதி கோரிய போராட்டக்காரர்கள்,  திடீரென அனுமதி அளிக்கப்பட்ட பாதைக்கு மாறாக சென்று போர்க்கொடி தூக்கினார்கள். செங்கோட்டையை முற்றுகையிடவும் துணிந்தார்கள்.


ஜனவரி 26 அன்று திட்டமிட்ட ரீதியில் திடீரென வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. தடுத்த காவல்துறையினர் தாக்கப்பட்டனர். பொது சொத்துக்களை பற்றி கொஞ்சமும் கவலையில்லாமல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தி களங்கத்தை உண்டாக்கினர்.

நடிகர் தீப் சித்து தலைமை தாங்கிய இன்னொரு கூட்டம் நிஷான் ஷாஹிப் என்ற பெயரில் கொடியை ஏற்றி முகப்புத்தகத்திலும் அதனை பதிவிட்டது. அதுவே வன்முறையை தூண்டுவதற்காக திட்டமிட்டே செய்யப்பட்ட செயல் என்பதை உறுதிப்படுத்துகிறது.

குடியரசு தினம் என்பதால் அரசாங்கம் இப்பேரணி அனுமதி குறித்து இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். எச்சரிக்கை கொடுக்கப்பட்டதோடு கண்ணீர் புகைக்குண்டு போன்றவற்றை பயன்படுத்தி போராட்டக்காரர்களை கலைக்க வேண்டிய சூழலுக்கு போலீசார் தள்ளப்பட்டனர்.

எல்லை மீறிய போராட்டத்தை அடக்க போலீசார் துப்பாக்கி சூட்டில் ஈடுபடுவார்கள், அதில் சிலர் இறக்க, டெல்லி நகரம் இன்னொரு ஜாலியான் வாலாபாஹ் என்றும்  அரசாங்கம், அடக்குமுறையால் சாமானிய மக்களின் உரிமைகளை தட்டி பறிக்கிறது என்றும் பிரச்சாரம் செய்ய சமூகவிரோதிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் மத்திய அரசு இதை கவனமாக கையாண்டிருப்பதால் தேசவிரோதிகளின் நோக்கம் நிறைவேறவில்லை.

ஆயுதங்களை ஏந்துவதும் காவல்துறையினரை அச்சுறுத்துவதும் தாக்குதல் நடத்துவதும் இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று நாட்டுநலன் கருதும் பலரும் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.

இன்று இந்த அசம்பாவிதத்தை கண்டுக்கொள்ளாமல் அரசாங்கம் விட்டுவிட்டால், காஷ்மீரை போன்று நிலைமை கட்டுப்பாட்டை மீறிவிடும் எனவும் எச்சரிக்கின்றனர்.

போலீசாரால் ஏற்படுத்தப்பட்ட தடுப்புக்களை டிராக்டரால் தகர்க்கும் காட்சிகளை பார்த்தபோது, செங்கோட்டையில் இருந்தவர்களுக்கு மிகப்பெரிய வேதனையை தந்திருக்கக்கூடும் என்கிறார்கள்.

அடுத்து அரசாங்கம் என்ன தான் செய்ய போகிறது?

பா.ஜ.க இந்த திட்டத்திலிருந்து எதற்கும் பின்வாங்குவதாக தெரியவில்லை. மாறாக சில சீர்திருத்தங்களை கொண்டு வந்து <உண்மையான விவசாயிகளுக்கும், மக்களுக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல பலன்களை அளிக்கவே முடிவு செய்துள்ளது.

விவசாயிகளின் கருத்து ஏற்கெனெவே கேட்கப்பட்டது. டிசம்பர் 9-ஆம் தேதி திருத்தத்தில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டது.

சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பாக 18 மாத இடைவெளியும் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. விவசாயிகளிடம் கேட்கப்படும் கருத்தை கொண்டு சீர்திருத்தத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தவும் முடிவு செய்தது. இவை எல்லாவற்றையும் விட, ஜனவரி 26 இவ்வளவு பெரிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட போதும் பொறுமையாகவே அதனை கையாள்கிறது அரசு.

அராஜகத்துக்கு அடிபணிந்து செல்ல வேண்டிய கட்டாயம் அரசாங்கத்துக்கு ஒருபோதும் இல்லை என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த திட்டத்தை பஞ்சாப் மாநிலம் மட்டுமே அதிகம் எதிர்க்கிறது. விவசாயிகள் தனியார் உதவியை பெறும்போதிலும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் எவ்வித மாற்றமும் இருக்காது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதில் இடைத்தரகர்கள் விவசாயிகளை கொண்டு காசு பார்ப்பது முற்றிலும் குறையும். நில அபகரிப்பு போன்ற சிக்கல்கள் தவிர்க்கப்படும். குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாயிகளுக்கு எதிர்காலத்தில் கைக்கொடுக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இடைத்தரகர்கள் பணம் சம்பாதிப்பதற்காக பல வழிகளில் விவசாயிகளின் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் வெகுநாட்களாகவே இருந்து வருகிறது.

தேசிய நெல் மற்றும் கோதுமை உற்பத்தியில் பஞ்சாப்பின் பங்கு 18 மற்றும் 12 சதவீதம் ஆகும்.

2019-20-இல் 310.6 லட்சம் டன்கள் நெல் கொள்முதலில் 202.5 லட்சம் டன்கள் பஞ்சாப்புடையது. 389.5 லட்சம் டன்கள் கோதுமை கொள்முதலில் 127 லட்சம் டன்கள் பஞ்சாப்புடையது.

 2020-21-இன் சம்பா சாகுபடியில் 583.31 லட்சம் டன் நெல் (24 ஜனவரி 2021 வரை) அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது போன வருடத்தை விட 20.53 சதவிகிதம் அதிகம்.

கொள்முதல் செய்யப்பட்டதில் பஞ்சாப்பின் பங்கு 34.76 சதவிகிதம், அதாவது 202.77 லட்சம் டன்னாக உள்ளது.

2019-20 சர்வேயின் படி குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டத்தையும் அழிந்து வரும் விவசாய நிலங்களையும் காக்க வேண்டிய பொறுப்பில் மத்திய அரசாங்கம் இப்போது உள்ளது.

இன்னொரு மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், குறைந்துவரும் நிலத்தடி நீர்மட்ட அளவு காரணமாக பலரும் எதிர்காலத்தில் விவசாயத்தை கைவிட வேண்டிய நிலை வரும்.

மொத்தம் 138 பகுதிகளில், 109 பகுதிகள் அதிகம் சுரண்டப்பட்டதாகவும் 2 பகுதிகள் மோசமானதாகவும் 5 பகுதிகள் பாதி மோசமான நிலையில் உள்ளதாகவும் 22 மட்டுமே பாதுகாப்பானதாகவும் 2017 நிலத்தடி நீர் ஆய்வறிக்கை கூறுகிறது.

இப்படியே போனால் 2025-இல் வீட்டு உபயோகத்துக்கே பஞ்சாப்பில் தண்ணீர் திண்டாட்டம் ஏற்படும் என தெரிகிறது.

குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் மூலமாகவும் இப்பிரச்சனையை தீர்க்க முடியும் என அரசாங்கம் நம்புகிறது.

பஞ்சாப்பில் மோடி அரசாங்கம் பெரிய அளவில் ஒன்றும் வாக்கை பெறவில்லை. பஞ்சாப் இன்றியே மோடியால் ஜெயிக்கவும் முடியும். அதனால் மிகவும் தைரியமாகவே இந்த முடிவை எடுத்துள்ளது.

மோடிக்கு பஞ்சாப் ஒன்றும் தேவையில்லை. ஆனால் எதிர்கால பிரச்சனையை சமாளிக்க மோடி அரசாங்கம், நிச்சயம் பஞ்சாப்பிற்கு தேவை என்பதே பலர் கருத்து.

இப்போது அரசாங்கத்தை எதிர்த்து யார் எது சொன்னாலும் நம்பிக்கொண்டு இவர்களால் எதிர்க்க முடியும். ஆனால், எதிர்கால சிக்கல்களை சமாளிக்கும்போது எட்டிப்பார்க்க கூட ஆள் இருக்குமா என்பது சந்தேகமே.

யாரோ ஒருவரின் சொல் கேட்டு இறையாண்மைக்கு எதிராக நடந்துக்கொண்டுவிட்டனர் சிலர். இதன் தாக்கம், அரசாங்கம் உடனடியாக மவுனத்தை கலைத்து விவசாய திட்ட செயல்முறைகள் குறித்து அடுத்த கட்ட செயல்பாடுகளில் இறங்கும் என்றும் பலர் கூறுகின்றனர்.

பஞ்சாப் விவசாயிகள் பாதையை இப்போது தேர்வு செய்வது எளிது. ஆனால் வரவிருக்கும் ஆபத்தான சூழலை சமாளிப்பது எளிதல்ல என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Source : Swarajya

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here