கோவையில் பெய்த கனமழையால் பறவை காய்ச்சல் உள்ளிட்ட நோய்த் தொற்றுக்கள் பரவுவதைத் தடுக்க மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், கேரளா – தமிழக எல்லைப் பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கேரளாவிலிருந்து கோவைக்கு வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளித்து எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் நேற்று இரவு கன மழை வெளுத்து வாங்கியது. இதனால் பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட நோய் தொற்று பரவலை தடுக்க சுகாதார துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து மாநகர பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகள் மற்றும் மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இறைச்சி விற்பனையகங்கள் அதிகமுள்ள உக்கடம் பகுதியில் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.