பாஜக எம்.பி. நந்த் குமார் சிங் சவுகான் கரோனா பாதிப்பால் உயிரிழப்பு: பிரதமர் மோடி, அமித் ஷா இரங்கல்

7

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த காந்த்வா மக்களவை எம்.பி. நந்த் குமார் சிங் சவுகான் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று உயிரிழந்தார் என்று அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு வயது 69.

மத்தியப் பிரதேச மாநிலம், காந்த்வா மக்களவைத் தொகுதியில் 6 முறை பாஜக எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நந்த் குமார் சிங் சவுகான். கரோனாவில் பாதிக்கப்பட்ட நிலையில் நந்த் குமார் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால், கடந்த மாதம் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து, விமானம் மூலம் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நந்த் குமாருக்குத் தீவிரமான சுவாசப் பிரச்சினை இருந்துவந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். நந்த் குமாருக்கு மனைவியும், மகனும், இரு மகள்களும் உள்ளனர்.

கடந்த 1978-ம் ஆண்டு ஷாபூர் நகராட்சி கவுன்சில் தேர்தலில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய நந்த் குமார், அதன்பின் மத்தியப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 1985 முதல் 1996-ம் ஆண்டுவரை எம்எல்ஏவாக நந்த் குமார் இருந்தார். அதன்பின் கடந்த 1996-ம் ஆண்டு முதல் முறையாக மக்களவை எம்.பி.யாக நந்த் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 1998, 1999, 2004, 2014, 2019-ம் ஆண்டிலும் எம்.பி.யாக நந்த் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்.

நந்த் குமார் மறைவுக்கு மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “நந்து அண்ணன், மாநில பாஜக தலைவராக இருந்தபோது சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார். அவரின் உடல் அவரின் சொந்த ஊரான புர்ஹான்பூர் மாவட்டம் ஷாப்பூரில் வைக்கப்படும். அவரின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்” எனத் தெரிவித்தார்.

பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில், “காந்த்வா எம்.பி. நந்த் குமார் மறைவு கேட்டு வேதனை அடைந்தேன். அவரின் நாடாளுமன்ற நடவடிக்கைகள், செயல்பாடுகள் மத்தியப் பிரதேசத்தில் பாஜகவை வலிமையடைச் செய்ய அவர் எடுத்த நடவடிக்கைகள், நிர்வாகத் திறமைகளை நாம் நினைவுகூர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில், ” மத்தியப் பிரதேசம், காந்த்வா தொகுதி எம்.பி. நந்த்குமார் மறைந்துவிட்டார் எனும் துயரச் செய்தியைக் கேட்டேன். தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் மக்கள் பணிக்காக அர்ப்பணித்தவர். மத்தியப் பிரதேசத்தில் பாஜக விரிவடைச் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தவர் நந்த் குமார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா ஆகியோரும் நந்த் குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

0

Disclaimer: This news is auto-aggregated by a computer program and has not been created or edited by NewsGuru. Publisher: இந்து தமிழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here