2021 பிரமாண்ட பட்ஜெட்டில் என்னென்ன இருக்கும்? ஒரு அலசல்

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டுக்கு, வரவு செலவுகளை சிக்கல் இல்லாமல் மேற்கொள்வது என்பது, அவ்வளவு எளிதான ஒரு விஷயமல்ல. அதிலும், பணக்காரர்கள் 2 முதல் 4 சதவீதமும், நடுத்தர மக்கள் 40 சதவீதமும், ஏழை மக்கள் 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ள நம் நாட்டுக்கு, யாருடைய கையையும் கடிக்காமல், வரவு செலவுக் கணக்குகளைத் தாக்கல் செய்வது என்பது ஒரு தனிக்கலையாகும்.

என்னதான், மத்திய நிதி அமைச்சரை எதிர் கட்சிகளும், மீம்ஸ் கிரியேட்டர்களும் கடுமையாக விமர்சித்தாலும், ‘இவ்வளவுதான் பட்ஜெட். தேவைப்பட்டால் அதிகரிக்கப்படும்’ என்று கூறும், நிதி அமைச்சர் நிர்மலா சீதராமனின் தில் யாருக்கும் வராது.

பட்டய கணக்கரான பியூஸ்கோயல், 2019ல் நிதி அமைச்சராக வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ராணுவ அமைச்சர் பதவி வகித்த நிர்மலா சீதாராமனை, பிரதமர் மோடி நிதி அமைச்சராக்கியது பலரையும் திகைப்பில் ஆழ்த்தியது என்றே சொல்ல வேண்டும். ஆனாலும், 2019–20, 2020–21 பட்ஜெட்களை நிர்மலா சீதாரமன், இந்த ஆண்டில் வெற்றிகரமாக தனது 3ம் பட்ஜெட், அதாவது, 2021–22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.

இதில், என்ன ஸ்பெஷல் என்றால் பட்ஜெட்டின் பிரமாண்டம்தான். சில ஆண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டின் மத்திய அரசின் பட்ஜெட் 22 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது படிப்படியாக வளர்ந்து, கடந்த நிதியாண்டில் 30 லட்சத்து 42 ஆயிரத்து 230 கோடி ரூபாயை எட்டியது. ஆனாலும், கடந்த ஆண்டில் மார்ச் 23ம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்ட கரோனா ஊரடங்கு 90 நாட்கள் நாட்டின் தொழில் வளர்ச்சியை முடக்கியது.

இதனால், அரசுக்கு பிரதானமாக வரவேண்டிய ஜிஎஸ்டி வரி வருமானத்தி்ல் மிகப் பெரிய அளவு தொய்வு ஏற்பட்டது. கரோனா பாதிப்புக்கு முன்னர் ஜிஎஸ்டி வரி வருமானம், 95 ஆயிரம் கோடி ரூபாய் முதல் ஒரு லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஊரடங்கு, தொழில் முடக்கத்தால் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கீழ் வீழ்ந்தது. இதனால், கடன் வாங்கி சில செலவினங்களை அரசு சமாளிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.

ஆனால், எதிர்வரும் நிதியாண்டு புதிய தொழில் மற்றும் பொருளாதார மீட்சிக்கான நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்றே சொல்ல வேண்டும். கரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் தொழில்துறையின் வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் நடவடிக்கை வேண்டும். இவை எல்லாவற்றையும் விட, இவற்றுக்கான நிதி ஆதாரங்களை தக்க வைக்க வேண்டும். இவற்றை சாத்தியமாக்குவதில்தான் அரசின் சாமர்த்தியம் உள்ளது.

30.42 லட்சம் கோடியில் எதற்கு எவ்வளவு?

ஒவ்வொரு பட்ஜெட்டிலும், செலவுபிடிக்கும் ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், பாதுகாப்புத்துறை சார்ந்த செலவுகள்தான். கடந்த பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு 3 லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. எதிர்வரும் பட்ஜெட்டில், இதுவரை இல்லாத வகையில் 4 லட்சம் கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு இருக்கலாம். குறைந்தபட்சம் மூன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் இருக்கும் என்கின்றனர், பாதுகாப்புத்துறை சார்ந்த வல்லுனர்கள். ஆனால், அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளுடன் ஒப்பிடும்போது தொகை மிகவும் சொற்பமானதுதான்.

விவசாயம் :

விவசாய நாடான இந்தியாவில், 60 சதவீதம் பேர் விவசாயிகள். விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஒரு லட்சத்து 55 ஆயிரம் கோடி ரூபாய்வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் உள்ள விவசாயிகளுக்கு 3 தவணைகளில் தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் 6 ஆயிரம் ரூபாய் செலுத்தும் திட்டம், 2019 லோக்சபா தேர்தலுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

அதாவது, 2019 பிப்ரவரி இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் இப்போது முழுவீச்சில் செயல்பாட்டில் உள்ளது. அதேநேரத்தில், இந்த ஆண்டில் ஜனவரி 15ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மத்திய அரசின் இந்திய உணவுக் கழகம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கு உணவு தானியம் கொள்முதல் செய்துள்ளது. இதுபோன்ற வேளாண் இயக்க நடவடிக்கைகளுக்கு அதிப்படியான தொகை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த ஆண்டில் இந்தத் தொகையின் வரம்பும் உயர்த்தப்படும் என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாநிலங்களும், மானியமும் :

மாநில அரசுகளின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு, மத்திய அரசின் நிதி உதவி இன்றியமையாதது. இந்த வகையில் கடந்த நிதியாண்டில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச நிதி ஒதுக்கீடு 2 லட்சம் கோடி ரூபாயாகும். இதில், ஜிஎஸ்டியின் மாதாந்திர மற்றும் 2022ம் ஆண்டு வரையிலான இழப்பீடு ஒதுக்கீடுகள் இடம்பெறவில்லை. சாலை, கட்டுமானம், அரசு நடவடிக்கைக்கு இந்நிதி செலவிடப்படும்.

காஸ் மானியம், உர மானியம் உட்பட நேரடியாக பணப் பயன் வழங்கும் மானியங்கள், மத்திய அரசின் சமூக நலத்திட்ட உதவிகளுக்கு என்று ஆண்டுக்கு 2 லட்சத்து 27 ஆயிரம்கோடி ரூபாய்வரை செலவிடப்படுகிறது. இந்த வகையில் எந்தவித மாற்றமும் இந்த ஆண்டில் இருக்க வாய்ப்பில்லை.

கல்வி, சுகாதாரம் :

கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசு கல்வித்திட்டங்களுக்கு 99 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. எதிர்வரும் கல்வியாண்டில் புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மேம்பாட்டு மற்றும் வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு கல்விக்கான ஒதுக்கீடு ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகரிக்கலாம்.
அதேநேரத்தில், கடந்த பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு மத்திய அரசு 67 ஆயிரத்து 484 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், கரோனாவின் தாக்கம், தடுப்பு மருந்து மாநிலங்களுக்கு வினியோகம் என்று மத்திய அரசு, இந்த ஆண்டில் பன்முகப் பிரச்னையை எதிர்நோக்கியுள்ளது. கரோனா தடுப்பு மருந்துகள் வினியோகம் என்ற பெரும் பொறுப்பை முன்னெடுக்கும் காலகட்டத்தில், சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீடு 50 முதல் 100 சதவீதம் வரை உயரும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

போக்குவரத்தும், பென்ஷனும் :

போக்குவரத்து வசதிகளின் துரித வளர்ச்சியே, பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை என்பதை முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 1999 –2004ம் ஆண்டில் நிரூபித்தார். அவர் தொடங்கி வைத்த 4 வழிச்சாலைத் திட்டத்தால் மட்டுமே, இன்றைய இந்தியாவின் வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது. இதை யாராலும் மறுக்க முடியாது. இந்த தொடர் கட்டமைப்பு பணிகள் தொடர்ந்து முடுக்கப்பட்டால் மட்டுமே, நம்மை அச்சுறுத்தும் நாடுகளுக்கு எதிராக நம்மால் படை நடத்தவும், வர்த்தகம் நடத்தவும் முடியும். இதற்காகவே சாலை கட்டமைப்பு பணிகளுக்காக கடந்தாண்டில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதேநேரத்தில், மத்திய அரசின் செலவினங்களை வளர்ப்பதில் பென்ஷனுக்கு முக்கிய பங்களிப்பு உள்ளது. ராணுவம், மத்திய அரசு சேவை, உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்புப் படையினரின் ஓய்வு என்ற வரும்போது, மத்திய அரசு பென்ஷனுக்காக ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையை செலவிட வேண்டியுள்ளது. இது ஒரு வளரும் செலவினமாக உள்ளது. கடந்த ஆண்டில் 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த, இந்தத் தொகை, எதிர்வரும் நிதியாண்டில் மேலும் 15 ஆயிரம் கோடி ரூபாய் வரை அதிகரிக்கலாம்.

உள்துறையும், ஊரக வளர்ச்சி :

இந்த 2 துறைகளம் தனித்தனியாக இருந்தாலும், சில இடங்களில் இணைந்தே பயணிக்க வேண்டிய நிலையில் உள்ளன. குறிப்பாக, வடகிழக்கு மற்றும் எல்லைப்புற கிராமங்களில், ஊரக கட்டமைப்பு சிறப்பாக இருந்தால்தான், உள்துறை அமைச்சகம் தன் செயல்பாடுகளை உறுதிப்படுத்த முடியும். இதற்காக, இந்தத் துறைகளுக்கு அதிக நிதிஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டில் ஒரு லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த ஊரக வளர்ச்சித்துறைக்கு, எதிர்வரும் நிதியாணடில் ஒரு லட்சத்த 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம். அதேபோல், உள்துறை அமைச்சகம், எல்லைப்புற எதிர்ப்புகள், மாவோயிஸ்ட், நக்சலைட்டுகளுக்கு எதிரான பணிகளுக்கு ட்ரோன்கள், அவற்றுடன் இணைக்கப்பட்ட இயந்திரத் துப்பாக்கிகள் என்று புதிய பரிணாமத்தை நோக்கி பயணிக்கிறது. இதனால், கடந்த ஆண்டில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு பெற்ற இந்தத்துறை, எதிர்வரும் பட்ஜெட்டில், கூடுதல் ஒதுக்கீட்டை அள்ளும்.

நிதியும் சிக்கலும் :

செலவினங்கள் ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் நிலையில், அதை ஈடுகட்டும் வகையில் புதிய வரியினங்களை உருவாக்கி, வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய நிதி அமைச்சகம் களம் இறங்கியுள்ளது. இதில், குறிப்பிட்ட 50 விதமான இறக்குமதி பொருட்கள் மீதான வரியை 10 சதவீதம் வரை உயர்த்துவதற்கு நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன் வழியாக 2.8 பில்லியன் டாலர் அளவுக்கு, அதாவது 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வருமானத்தை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. இதனால் பிற நாடுகளில் இருந்து, இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட் டிவிக்கள், ஆன்ட்ராய்டு போன்கள் உட்பட பல்வேறு இனங்களின் விலை கணிசமாக உயரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here