24 நாடுகள் பங்கேற்று விளையாடிவரும் யூரோ கால்பந்து தொடரில், குரூப் எப் பிரிவில் இடம்பெற்றுள்ள. நடப்பு சாம்பியனான போர்ச்சுக்கல் அணியும், ஹங்கேரி அணியும் மோதின.
முதல் பாதியில் இரு அணி வீரர்களும் எந்த கோலும் அடிக்கவில்லை. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் அதிரடியாக விளையாடிய போர்ச்சுகல் அணி, 84வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது.
இதைத் தொடர்ந்து, நட்சத்திர வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ, அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். இதன்மூலம் மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில், பலம் வாய்ந்த ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த முதல் பாதி ஆட்டத்தில், 20-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் லூகா ஹெர்னாண்டஸ் அடித்த பந்து ஜெர்மனி வீரர் ஹம்மெல்ஸின் காலில் பட்டு, OWN கோலாக மாறியது. இதனால் முதல் பாதியில் பிரான்ஸ் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் பிரான்ஸ் அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
யூரோ கால்பந்து தொடரில் இன்று மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் பின்லாந்து அணி ரஷ்யாவை எதிர்கொள்கிறது.
இரவு 9.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில், ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள துருக்கி, வேல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 12.30 மணிக்கு நடைபெறும் போட்டியில், முன்னாள் சாம்பியன் இத்தாலி அணி, ஸ்விட்சர்லாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த போட்டி இத்தாலியின் ரோம் நகரில் நடைபெறுகிறது