கோவை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு பாரதிய ஜனதா தொண்டர்களின் உருக்கமான வேண்டுகோள் என்ற தலைப்பில் போலி முத்திரையுடன் கடிதம் அனுப்பியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட பாஜக சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
பாரதமாதா, ராமர் பட முத்திரையுடன் பாஜக ஆதரவாளர்கள் வெளியிடுவது போல் நோட்டீஸ் ஒன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு பாஜக தொண்டர்களின் உருக்கமான வேண்டுகோள் என்ற தலைப்பில் இந்த இந்த நோட்டீசானது பலருக்கும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே பெரிய மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த கடிதத்தில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருப்பதால் இதனை அச்சிட்டவர்கள் யார் என்பதை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என கோவை மாநகர மாவட்ட செயலாளர் நந்தகுமார் தலைமையில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலி முத்திரைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கடிதத்தை அச்சிட்டவர்கள் மற்றும் தபால் அனுப்பியவர்கள் யார் என்பதை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட அம்மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக கோவை மாநகர மாவட்ட தலைவர் நந்தகுமார், இதுபோல் கடிதம் அனுப்பி பிரிவினை வாதத்தை ஏற்படுத்தி சமூக விரோத செயல் செய்யத் துடிக்கும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.