மக்கள் யாரை தோற்கடிக்கப் போகின்றனர்?

205

மிகப் பெரிய அரசியல் எதிர்பார்ப்புகள், அதன் பதவி தாகங்கள் நேற்று மாலை 7 மணிக்குப் பின்னர் கொஞ்சம் தணியத் தொடங்கிவிட்டன. பெரிதாக ஒன்றும் இல்லை, தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி நடந்த சட்டசபைத் தேர்தல் ஓட்டுப் பதிவு குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று மாலை 7 மணிக்கு பின்னர் வெ ளியானது.

இந்தக் கருத்துக் கருப்புகளில் சட்டசபைத் தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்த தமிழகம், கேரளா, அசாம், மேற்குவங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களின் ஆட்சி, அதிகார நிலவரம் பற்றிய தகவல்கள் மட்டுமே கொடுக்கப்பட்டன. அதாவது, தேர்தல் ஓட்டுப்பதிவு நாளில், தொகுதிக்கு ஆயிரம் பேர் என்ற அடிப்படையில் சேகரிக்கப்பட்ட ஓட்டு சதவீதத்தின் அடிப்படையில், இந்த தேர்தல் கருத்துக் கணிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதே நிதர்சனம்.

5 மாநிலங்களில் என்ன நிலவரம்?

ஓட்டுப்பதிவு முடிந்துள்ள கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட்களும், தமிழகத்தில் திமுக (160 சீட்கள் வரும் என்று கூறப்படுகிறது), புதுச்சேரி மற்றும் அசாமில் பாஜ, மேற்கு வங்கத்தில் இழுபறி என்ற முடிவுகளே வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தின் ரிசல்ட் திமுக கூட்டணிக்கு சாதகமாக இருந்தாலும், இனம் புரியாத மவுன அச்சம் திமுக கூட்டணியில் நீடித்துக் கொண்டிருப்பது உண்மை.

இதுதான் கடந்த கால ரிசல்ட்

தேர்தல்களில் மக்கள் எப்போதும் 2 விதமான மனநிலையில் ஓட்டுப்போடுகின்றனர். லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தல் ஆகியவற்றில், மக்கள் எப்போதும் இரட்டை நிலைப்பாடு எடுக்கின்றனர் என்பதே உண்மை. உதாரணமாக 1996ம் ஆண்டில் சட்டசபைத் தேர்தலில் அதிமுக தோற்றது. அதே தேர்தலில் லோக்சபா தேர்தலிலும் தோல்வியடைந்தது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் தோல்வியடைந்தார். தமிழகம், மகராஷ்டிரா, அசாம் என்று காங்கிரசை பல இடங்களில் உடைத்தவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டாஞ்சோற ஆட்சியைக் கொண்டு, இந்தியாவில் நிலையற்ற தன்மையை உருவாக்கினர். தேவகவுடா, இந்திரகுமார் குஜ்ரால் என்று அறிமுகம் இல்லாத நபர்களால், ஆட்சியை கொண்டு செல்ல முடியவில்லை. ஆதரவு கொடுத்த காங்கிரசே ஆட்சியை கவிழ்த்தது.

இதன்பின்னர், 1999 தேர்தலில் பாஜ வெற்றிபெற்றது. 2004, 2009 தேர்தல்களில் காங்கிரஸ் தொடர் வெற்றிபெற்றது. இதில், 2004 தேர்தலில் உருவான திமுக, காங்கிரஸ் கூட்டணி 2006 சட்டசபைத் தேர்தலில் தொடர்ந்தது . இதில் திமுக பெரும்பான்மை பெற முடியவில்லை. இதனால், ‘மைனாரிட்டி திமுக அரசு’ என்று, எதிர்கட்சித் தலைவியான ஜெயலலிதா கொடுத்த அடைமொழியுடன், காங்கிரஸ் தயவுடன் ஆட்சி செய்தது.

2009 லோக்சபா தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி பெரிய வெற்றிபெற்றாலும், 2011 சட்டசபைத் தேர்தலில் அந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ், திமுக கூட்டணி பலமாக இருந்தது. இதனால், 2011 சட்டசபைத் தேர்தலில் மீண்டும் திமுக வெற்றிபெறும் என்று கருத்து கணிப்புகள் கூறின.

2011, 2016 தேர்தலில் என்ன நடந்தது?

மத்தியிலும், மாநிலத்திலும் அதிக செல்வாக்குடன் இருந்த திமுக 2011 சட்டசபைத் தேர்தலில் 145 சீட்கள் பெற்று, ஆட்சி அமைக்கும் என்று மீடியாக்கள் கூறின. இன்னும் சொல்லப்போனால், தேசிய அளவிலான மீடியாக்களில் சாணக்யா தவிர மற்ற சேனல்கள் திமுக வெற்றிபெறும் என்றன. ஆனால், சாணக்யா சேனல் மட்டுமே அதிமுக கூட்டணி 175 முதல் 191 சீட்களைப் பிடிக்கும் என்றது. அது நடந்தது.

2014 லோக்சபா தேர்தலில் மீண்டும் காங்., ஆட்சி அமையும் என்றனர். தமிழகத்தில் திமுக, விடுதலை சிறுத்தைகள், புதியதமிழகம், முஸ்லிம் லீக் மனிதநேய மக்கள் கட்சி கூட்டணியை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் பிரச்சாரம் நொறுக்கியது. போட்டியிட்ட 39 தொகுதிகளில் 37ஐ அதிமுக கைப்பற்றியது.
இந்தத் தேர்தல் கொடுத்த ஊக்கத்துடன் அதிமுக 2016 சட்டசபைத் தேர்தலில் அதிரடி முடிவு எடுத்தது. காரணம், மீடியாக்கள் கொடுத்த குருட்டு தைரியம்தான். “2015ல் தேர்தல் நடந்தாலும், அதிமுக 210 தொகுதிகளில் வெற்றிபெறும்’ என்று உசுப்பேற்றினர். ஆனாலும், சுதாரித்த ஜெயலலிதா, முன்கூட்டியே தேர்தல் நடத்தும் திட்டத்தை கைவிட்டார்.

தொடர்ந்து, 2016 சட்டசபைத் தேர்தலில் அதிமுக அதிரடி முடிவு எடுத்து, கூட்டணிகளை கழற்றிவிட்டு களம் இறங்கியது. தனித்து நின்று தில் காண்பித்தது.

தோற்றது கருத்துக் கணிப்பு

இந்தத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிடுவதால், மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லை என்று மீடியாக்கள் கூறின. குறிப்பாக திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு 145 முதல் 160 இடங்கள் வரை கிடைக்கும் என்று சத்தியம் செய்தன. ஆனால், ரிசல்ட் வேறு மாதிரி வந்தது. அதிமுக தான் போட்டியிட்ட 227 தொகுதிகளில் 134 இடங்களில் வெற்றிபெற்றது. திமுக 173 இடங்களில் போட்டியிட்டு 89 இடங்களைக் கைப்பற்றியது. திமுகவுடன் காங்கிரஸ், இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் இருந்தன. காங்கிரஸ் 41 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒரு இடத்திலும் வென்றன. மக்கள் நலக் கூட்டணி மண்ணைக் கவ்வியது.

2019 தேர்தலில் மாற்றம் ஏன் ?

தமிழகத்தில் ஜெயலலிதா என்ற ஆளுமை இல்லாத நிலையில், அதிமுக தத்தளித்துக் கொண்டிருந்தது. திமுகவின் தலைவர் கருணாநிதி சக்கர நாற்காலியில் வலம் வந்தார். இந்நிலையில், தேச நலன் கருதி பாஜ அரசின் தலைவராக பிரதமர் நரேந்திரமோடி ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உட்ட, பல சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். இந்த திட்டங்கள் குறித்து என்ன ஏது என்று முழுமையான விளக்கம் இல்லாத எதிர் கட்சிகள் தேசம் முழுவதும் மோடி எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டன.

நல்லவேளை, தமிழகத்துக்கு வடக்கே போனால், நிறையபேருக்கு இந்தி தெரியும். இதனால், பாஜ அரசுக்கு எதிரான பிரச்சாரம் என்ன? அதை முறிடியக்கும் வழி என்ன என்று எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால், தமிழகத்தில்?

தமிழை துண்டுச் சீட்டில் எழுதி படிக்கும் தலைவர்களும், கட்சியைக் காப்பாற்ற கூட்டணி வைக்கும் தலைவர்களும் மோடி எதிர்ப்புப் பிரச்சாரத்தை 2017ல் இருந்து தீவிரமாக கட்டமைத்தனர். மோடி வந்தால் மதவாதம் அதிரிக்கும், நாட்டில் மத மோதல்கள் அதிகரிக்கும் என்ற பிரச்சாரத்தை முன் நிறுத்தியே, போலியான ஒரு கட்டமைப்பை உருவாக்கினர். ஒரு பொய்யை 10 முறை சொன்னால் நம்புவது கடினம். ஆனால், அதே பொய்யை 100 பேர், வெவ்வேறு இடங்களில் ஒரே மாதிர சொன்னால், யாரும் நம்பிவிடுவார்கள்.

இப்படிப்பட்ட கட்டமைப்பை தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் மிக தத்ரூபமாக கட்டமைத்தன. இங்கே உள்ளவர்களுக்கு வடக்கத்தி சங்கதி தெரியாது. அதனால், 2019 லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிமுக, பாஜ கூட்டணி படுதோல்வியடைந்தது.

“ஆமாம். நாங்கள் மோடி எதிர்ப்பு என்ற கட்டமைப்பை, திட்டமிட்டே சில ஆண்டுகளாக உருவாக்கினோம்” என்று திருமாவளவனின் பேட்டி, யூ டியூப் சேனல்களில் ரொம்பவும் பிரபல்யம். இந்த வெற்றியை மனதிற்கொண்டே, 2021 சட்டசபைத் தேர்தல் முடிவுகளையும் மீடியாக்கள் கணித்துள்ளன.
மீண்டும் மக்கள் தோற்கடிப்பார்களா?

2014 லோக்சபா தேர்தல் முடிவுகள் அடிப்படையில், 2016 சட்டசபைத் தேர்தல் கணிப்பை எடுத்துப் பார்த்தாலும் மக்கள் அதிமுகவை பார்டர் மார்க்கில் பாஸ் செய்ய வைத்தனர். அதேநேரத்தில், இப்போதைய சூழலில், 2019 லோக்சபா தேர்தல் முடிடுவுகளை வைத்துக் கொண்டு, அதே ரிசல்ட் ஒப்பீடு நோக்கினால், சொற்ப சீட்டுகள்தான் 2 கட்சிகளுக்கும் இடையே வேறுபாடு கொண்டதாக இருக்கும்.

பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் சொல்வது என்னவென்றால் திமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்பதைத்தான். ஆனால், 2011, 2016 சட்டசபைத் தேர்தல் முடிவகளுடன் இப்போதைய முடிவுகளை வைத்து ஒப்பீடு செய்யும்போது, திமுக இப்போது 3வது முறையாக கருத்துக் கணிப்பில் முந்திக் கொண்டு ஆட்சி அமைக்கும் சூழலில் உள்ளது தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் ஆளும் கட்சியான அதிமுக, ’அசுர பலம் கொண்ட எதிர்கட்சி’ (இதுவும் கூட 2006ல் திமுக தலைவர் கருணாநிதி சொன்னதுதான்) என்ற நிலையில் உட்காரும் என்று தெரியவந்துள்ளது.

ஆனால், மக்கள் ஒவ்வொரு முறையும் தேர்தல் ரிசல்ட் நாட்களில் மீடியாக்களை தோற்கடித்து, முகத்தில் கரி பூசுவதற்கு தயங்குவதில்லை. இந்த வகையில், மே 2ல் மீண்டும் மக்கள் மீடியாக்களின் கருத்துக் கணிப்புகளை தோற்கடிப்பார்களா? அல்லது போனால் போகிறது என்று திமுகவை உண்மையிலேயே ஆட்சியில் உட்கார வைப்பார்களா?

மே 2 ல் ரிசல்ட் தெரிந்துவிடும்.

+1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here