பதிவு சுருக்கம் :
i ) தனிநபர் வருமான வரிவிலக்கு
ii) அரசின் வருமானவரியில் இழப்பு
iii) சுகாதாரத்துறையில் அரசின் பங்கீடு அதிகரிப்பு
iv) வேளாண் துரையில் அரசுத்துறையின் பங்கீடு அதிகரிப்பு
v) தனிமனிதனுக்கு இந்த பட்ஜெட்டில் என்னென்ன பலன் ?
நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களாலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய அரசின் 2021 –22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட், அதாவது பொது வரவு செலவு கணக்கு கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் குறித்து பல்வேறு தரப்பிலும், வரவேற்பும், எதிர்ப்பும், தங்கள் ஏமாற்றத்தையும் அனைத்துத் தரப்பு மக்களும் பதிவு செய்திருந்தனர்.
ஆனால், இந்த பட்ஜெட், இப்படித்தான் இருக்கும் என்று ஜனவரி கடைசி வாரத்தில் சில ஆடிட்டர்கள் கணித்திருந்தனர். ஏறக்குறைய இந்தக் கணிப்பும் 70 சதவீதம் வரை உண்மையாகியுள்ளது. ஆடிட்டர்கள் சிலர் கணித்திருந்த முதல் விஷயம், பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி வரம்பு உயர்த்தப்படமாட்டாது. 2ம் விஷயம், அரசு சுகாதாரத்துக்கு செலவிடும் தொகை அதிகரிக்கும். 3ம் விஷயம், வேளாண் கட்டமைப்புகள், வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
இந்த 3 விஷயங்களையும் திடீரென கணிக்கவில்லை. கடந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட கரோனா ஊரடங்கால் தொழில் முடக்கம், இதனால், சாதாரண நபர்களின் வாழ்க்கைச் செலவுக்கு பணம் இல்லாத சூழலில் தடுமாறியது. மத்திய, மாநில அரசாங்கங்கள் தங்கள் பங்களிப்பு தொகையாகவும், சமூக நலத்திட்டங்கள் வழியாகவும் மக்களுக்கு உதவியது.
தொழில் முடக்கத்தால் மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்பட்ட வருமான இழப்பு. கரோனா தடுப்பூசி கொண்டு வரப்பட்டாலும், அதை நாட்டின் கடைசி குடிமகனுக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய மத்திய அரசின் பொறுப்பு என்று சில விஷயங்கள் கொஞ்சம் ஆழந்து விவாதிக்கப்பட்டது.
அதேநேரத்தில், மத்திய அரசின் வேளாண் கொள்கைப்படி, 2022ம் ஆண்டுக்குள் வேளாண் வருமானத்தை 2 மடங்காக உயர்த்த வேண்டும் என்ற இலக்கின்படி, வேளாண் நடவடிக்கைள் மற்றும் கட்டமைப்புக்கான கூடுதல் நிதி உருவாக்கப்படும் என்று கணித்திருந்தோம். ஏறக்குறைய இதுதான் நடந்தது. நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளை தினமும் அப்டேட் செய்து கொண்டிருந்த சூழலில், இந்தக் கணிப்புகள் எந்தளவுக்கு உண்மையாக இருந்தது என்ற விவாதம் 2 நாட்களாக ஓடிக் கொண்டிருந்தது.
தனி நபர் வருமான வரி வரம்பு இரண்டரை லட்சம் ரூபாய்க்கும் வரியில்லை. அதே நேரத்தில் பிபிஎப், செல்வமகள் சேமிப்பு, வீட்டுக்கடன் என்ற வகையில் அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் வரை விலக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அதாவது, 2020 –21ம் நிதியாண்டில் இந்த நடைமுறை வந்துவிட்டது. இதில், இரண்டரை லட்சம் ரூபாய் மற்றும் சேமிப்பு என்று எடுத்து 5 லட்சம் ரூபாய் கணக்கு காண்பிக்கலாம். அல்லது நேரடியாக 5 லட்சம் ரூபாய் வரை கணக்கு காண்பித்துவிட்டு, அதன் பின்னர் வரி செலுத்தலாம் என்று 2 விதமான தேர்வுகளை கொடுத்திருந்தனர்.
இந்தத் தேர்வுகளில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்த்தோம். நினைத்தபடி மாற்றங்கள் ஏதும் இல்லை. காரணம், கரோனா காலத்தில் சாதாரண மக்கள் வேலை இழந்திருந்தாலும், நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் பெரு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஓரளவு சம்பளம் வந்து கொண்டிருந்தது. அதனால், ஓட்டு மொத்த பொருளாதாரமும் வீழ்ந்துவிடாமல், ஓரளவு தாக்குப்பிடித்துக் கொண்டிருந்தது என்பதுதான் நிச்சயமான உண்மை.
இந்த வகையில், சில மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு 20 முதல் 30 சதவீதம் சம்பள வெட்டு இருந்தாலும், தமிழகத்தில் அரசு ஊழியர்கள் அதிர்ஷ்டசாலிகள். பைசா குறைவு இல்லாமல் மாதம் தோறும் செட்டில்மென்ட் நடந்தது என்பதை, அரசு ஊழியர்களே ஒப்புக் கொள்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில், மாதச் சம்பளதாரர்களுக்கு வருமான வரிவிலக்கில் உயர்வு அறிவித்திருக்க வேண்டும் என்ற குரல், பட்ஜெட்டில் எதிரொலிக்கவில்லை என்று பலரும் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இதில் ஒரு டுவிஸ்ட் என்னவென்றால், கடந்த ஆண்டில் வருமான வரியில் இருந்து பட்ஜெட்டுக்கு கிடைக்கும் தொகையின் அளவு ரூபாய்க்கு 17 காசுகளாக இருந்தது. இந்த ஆண்டில் இது 14 காசுகளாக குறைந்துவிட்டது. பெரு நிறுவனங்கள் வருமானம் 18 காசில் இருந்து 13 காசுகளாகிவிட்டது. சரக்கு மற்றும் சேவை வரியின் அளவும் 18 காசில் இருந்து 15 காசுகளாகிவிட்டது. வரி சாரா வருமானம் 10 காசில் இருந்து 6 காசுகளாக குறைந்துவிட்டது.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் கடன் மற்றும் இதர பொறுப்புகளில் இருந்த பெறப்பட்ட 20 காசு, இந்த பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 35 காசுகளாகிவிட்டது. அதாவது, மற்ற இனங்களில், துண்டு விழுந்த வருமானத்தை ஈடுகட்டுதற்காக மத்திய அரசு பெரிய அளவில் கடன் வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. காரணம், கரோனாவால் நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்கள் மிக மோசமான விளைவுகளை தொழிற்துறையும், நாடும் எதிர் கொண்டதுதான். இப்படி எல்லா வகையிலும், பட்ஜெட்டில் துண்டு விழும் என்று எதிர்பா்த்திருந்த நிலையில், முன் எப்போதும் இல்லாத வகையில், ஒரு ரூபாய் செலவினத்தில் 65 காசு மட்டுமே அரசுக்கு வருமானம் வரும் நிலையில், 35 காசு வட்டிக்கு வாங்கி, செலவுகளை ஈடுகட்டிக் கொண்டிருக்கிறது.
கரோனா தடுப்பூசிக்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு என்ற அறிவிப்பை பெரு நிறுவனங்களின் சிஎஸ்ஆர் எனப்படும் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தில் இணைத்துவிடலாம் என்பது அரசின் இன்னும் ஒரு செயல்பாட்டு நடவடிக்கையில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில், தனிநபர் வருமான வரி வரம்பில் மேலும் சலுகை எதிர்பார்ப்பு என்பது, சாத்தியம் இல்லாத ஒன்றாகவே உள்ளது. எனினும், இந்த பட்ஜெட் தொடரி்ல இதற்கான விளக்கம் விரிவாகவே கிடைக்கலாம்.