மேற்கு வங்க மாநிலம் 1977 ம் ஆண்டு முதல் ஒரு தனித்தீவு போலவே செயல்பட்டு வந்திருக்கிறது. மத்திய அரசின் எந்த ஒரு நலத்திட்டங்களும் இங்கே முழுமையாக சென்றடைந்ததில்லை. ஆனால் மாநிலத்தில் பா.ஜ.கவிற்கு கிடைத்து வரும் மிகப்பெரிய எழுச்சி உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சுற்றுப்பயணத்தில் எதிரொலித்தது. கடந்த டிசம்பர் 10ம் தேதி பா.ஜ.க தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அவரது வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினர். தேசிய அளவில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது போன்ற கோழைத்தனமான தாக்குதலுக்கு நாங்கள் பயந்துவிடமாட்டோம் என்று சவால்விடும் வகையில் டிசம்பர் 19 ம்தேதியே உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கு வங்கத்திற்கு சென்றார். அங்கு மதினிப்பூரில் நடந்த மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். இது திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டத்தில் பேசிய அமித்ஷா, வாகனங்கள் மீது, தொண்டர்கள் மீது கோழைத்தனமாக தாக்குதல் நடத்தி பா.ஜ.கவை யாரும் பயமுறுத்த முடியாது. இதன் பின்னர் தான் எங்கள் சுயரூபத்தை திரிணாமுல் காங்கிரஸ் பார்க்கப்போகிறது என்று கர்ஜித்தார். அவரது வருகைக்கு பின்னர் மேற்கு வங்கத்தில் வரலாறு காணாத மாற்றம் ஏற்பட தொடங்கியுள்ளது. ஒரு லோக்சபா எம்பி, திரிணாமுல் 7, இடதுசாரி 2, காங்கிரஸ் 1 என்று 10 எம்எல்ஏக்கள், 2 முன்னாள் எம்பி, 60 கவுன்சிலர்கள், ஜில்லா பரிஷத், பஞ்சாயத்து சமிதி உறுப்பினர்கள் என்று அலை அலையாக பா.ஜ.க நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். பா.ஜ.க குறித்து பல அவதூறுகளை திரிணாமுல், இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பரப்பினாலும், அவை மக்களிடையே எடுபடவில்லை என்பது மேற்காணும் சம்பவங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அவரது அரசியல் வாரிசான உறவினர் அபிஷேக் ஆகியோர் மீது பா.ஜ.க நேரடி எதிர்ப்பு அரசியலை துவக்கிவிட்டது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை, மேற்கு வங்கத்தில் மம்தா அரசியல் ஆதிக்கத்திற்கு எழுதப்படும் முடிவுரையாகவே பலராலும் பார்க்கப்படுகிறது.
மூத்த தலைவர்களை இழந்த திரிணாமுல் கட்சி, போர்ப்படை தளபதியை இழந்த சாம்ராஜ்ஜியத்தை போல் வாடி இருக்கிறது. அதோடு, மற்ற திரிணாமுல் கட்சியினரும் பா.ஜ.க-வில் விரைவில் சேர்வார்கள் என எச்சரித்த அமித்ஷாவின் வார்த்தையினால் மேலும் ஆட்டம் கண்டு போய் இருக்கிறது மம்தாவின் படை.
மீதமுள்ளவர்களை கட்சி தாவாமல் தடுக்க, பதவிகளை அளித்து பாதுகாக்க முயன்று வருகிறார் மம்தா. ஆனால் அவருக்கு நெருக்கமாக இருந்த பலரும் பா.ஜ.கவை நோக்கி செல்வதை தடுக்க முடியவில்லை. கடந்த தேர்தலில் 10 சதவீத ஓட்டுக்களுடன் 3 எம்எல்ஏக்களை பெற்றிருந்த பா.ஜ.க, கடந்த லோக்சபா தேர்தலில் 18 எம்.பிக்களை பெற்றது. தற்போது 40 சதவீதத்திற்கும் மேலாக வாக்குகளை பெறும் என்று கருத்துக்கணிப்புகள் கூறி வருகின்றன. மேற்கு வங்கம் விரைவான மாற்றத்திற்கு தயாராகி வருகிறது. பல தேசிய தலைவர்களை அளித்த அந்த மாநிலம் விரைவில் தேசிய நீரோட்டத்தில் இரண்டற கலக்கும் என்றே அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.