மிகக்குறைந்த விலையில் பாதுகாப்பான தடுப்பூசி – பிரதமர் மோடி

மிகக்குறைந்த விலையில் பாதுகாப்பான தடுப்பூசி கிடைக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு குறித்து அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடந்த இந்த கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பங்கேற்றனர். காங்கிரஸ் சார்பில், குலாம்நபி ஆசாத், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் , மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவகவுடா உள்ளிட்ட பல கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஆலோசனையில் பிரதமர் மோடி பேசியதாவது:
கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதில், நமது விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் உள்ளனர். குறைந்த விலையில், பாதுகாப்பான மருந்தை உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. இதனால் தான் உலக நாடுகள் இந்தியாவை கவனித்து வருகின்றன. கொரோனா தடுப்பூசி இன்னும் சில வாரங்களில் தயாராகிவிடும் என நிபுணர்கள் நம்புகின்றனர். விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்தவுடன், இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி துவங்கும்.

கொரோனா தடுப்பூசியை யாருக்கெல்லாம் முன்னுரிமை :
சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும். இந்தியாவில் 8 தடுப்பூசிகள் 3ம் கட்ட பரிசோதனையில் உள்ளன. இதனால் மிக குறைந்த விலையில், பாதுகாப்பான தடுப்பூசி கிடைக்கும்.

தடுப்பு மருந்து விலைநிர்ணயம் குறித்த முடிவு தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்திவருகிறது . பொது மக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு, முடிவு எடுக்கப்படும். கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து, மத்திய மாநில அரசுகள் இணைந்து பணியாற்றி வருகிறது. தடுப்பூசி விநியோகத்தில் இந்தியாவுக்கு அனுபவம் உள்ளது.

தடுப்பூசி களத்தில், இந்தியாவுக்கு பெரிய மற்றும் அனுபவம் வாய்ந்த தொடர்புகள் உள்ளது. அதனை, முழுவதும் பயன்படுத்துவோம். அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், தங்களின் கருத்துகளை எழுத்துப்பூர்வமாக அனுப்பி வைக்கும்படி கேட்டு கொள்கிறேன். அவை தீவிரமாக பரிசீலனை செய்யப்படும் என உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here