மு.க.அழகிரி கட்சி துவங்கினால் திமுக அவுட் – முதலமைச்சர் பழனிசாமி

17
0

அழகிரி கட்சி துவங்கினால் திமுக அவுட்டாகி விடும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், திமுகவின் சாதனைகளை எந்த துண்டுச்சீட்டு மின்றி விவாதிக்க திமுக தலைவர் ஸ்டாலின் தயாரா எனக் கேள்வி எழுப்பினார். ஏரிகள், குளங்கள், குட்டைகள் அனைத்தும் நீர் நிறைந்து பசுமை நிறைந்த மாவட்டமாக கோவை உள்ளது எனவும், தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதால் புதிய தொழிற்சாலைகள் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

திமுக என்றாலே மக்கள் பயப்படுகிறார்கள் எனவும், அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால் ரவுடிசம் தலைதூக்கிடும் எனவும் அவர் குற்றம்சாட்டினார். மாநிலத்தையே பட்டா போட ஸ்டாலின், உதயநிதி என குடும்பத்துடன் கிளம்பிவிட்டனர் எனவும், பிரபல திரைப்பட நடிகருக்கு கூடும் கூட்டத்தை விட அதிகமான கூட்டம் சாதாரண எனக்கு கூடுகிறது என்றால் அதற்கு காரணம் அதிமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தான் என அவர் தெரிவித்தார்.

இதையடுத்து துடியலூர் பகுதியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, சோதனைகள் அனைத்தையும் சாதனைகளாக மாற்றி உள்ளது அதிமுக அரசு எனத் தெரிவித்தார். ஸ்டாலின் மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் நாடகங்களை அரங்கேற்றி வருகிறார் எனவும், அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது எனவும் அவர் கூறினார். திமுக மூத்த நிர்வாகிகளின் அனுபவம் தான் உதயநிதியின் வயது, ஆனால் கே என் நேரு போன்ற மூத்த நிர்வாகிகள் உதயநிதிக்கு கார் கதவைத் திறந்து கொண்டு உள்ளனர் எனவும், நமக்குள் இருந்து ஒருவர் வந்தால் தான் நம்முடைய கஷ்டம் தெரியும் எனவும் அவர் கூறினார்.


இதையடுத்து சாய்பாபாகாலணி பகுதியில் பேசிய அவர், அதிமுகவின் ஆட்சியைக் கலைக்க எத்தனையோ அவதாரங்களை ஸ்டாலின் எடுத்துப் பார்த்தார். அனைத்தும் முறியடிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார். ஸ்டாலினின் அனைத்து அவதாரங்களையும் தவிடு பொடியாக்கியது அதிமுக எனவும், அதிமுகவை உடைக்க வேண்டும் என்ற எண்ணம் இனி ஸ்டாலினுக்கு எழக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் திமுக உடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை எனவும், ஸ்டாலின் ஆட்சிக்கு வரமுடியாது என அவரது அண்ணன் அழகிரியே தெரிவித்துள்ளார் எனவும் கூறிய அவர், அழகிரி கட்சி ஆரம்பித்தால் திமுக அவுட்டாகி விடும் எனத் தெரிவித்தார்.

திமுக என்ற கட்சி முளைத்த பிறகுதான் ஊழல் என்பதே தமிழகத்தில் முளைத்தது எனவும், பொய் பேசுவதில் மு.க. ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் எனவும் அவர் கூறினார். காவல்துறை அதிகாரியிடம் 3 மாதத்தில் ஆட்சிக்கு விடுவோம் என உதயநிதி ஸ்டாலின் மிரட்டுகிறார் என்றால் அவர்கள் நாட்டு மக்களை நிம்மதியாக வாழ விடமாட்டார்கள் எனவும், ஆட்சியில் இல்லாதபோதே திமுகவினர் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் தாக்குகிறார்கள் என்றால், ஆட்சிக்கு வந்தால் எண்ணிப் பாருங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here